
உறியடி II - சினிமா விமர்சனம்

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட முதலாளித்துவத்தைக் குறிவைத்து அடிக்கும் படமே இந்த ‘உறியடி 2.’
செங்கதிர்மலை என்ற களத்து மேட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக நச்சுக்காடாக மாற்றுகிறது ஒரு பூச்சிக் கொல்லி ஆலை. முதலாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு காட்டிக்கொடுக்கிறார்கள் ஒரு சாதிக்கட்சித் தலைவரும் ஆளுங்கட்சி பிரமுகரும். விஷவாயு காற்றோடு கலந்து ஊரே சுடுகாடாகிறது. இதற்குக் காரணமானவர்களைத் தேடித் தேடி அழிக்கிறார்கள் ஹீரோவும் அவர் நண்பர்களும்!
நடிகர், இயக்குநர் என்ற இரட்டைச் சவாரி. இரண்டிலும் வெற்றிகரமாகப் பயணிக்கிறார் விஜய்குமார். முதல் பாகத்தைவிட இதில் இரண்டிலுமே முதிர்ச்சி தெரிகிறது. நாயகி விஸ்மயாவின் கண்கள் அவ்வளவு அழகு! நடிக்கக் கிடைத்த கொஞ்சமே கொஞ்சம் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார். சுதாகர் அந்த அப்பிராணி கேரக்டருக்கு பக்கா பொருத்தம். ஜாதிக்கட்சித் தலைவராக வரும் சங்கர், தொழிலதிபராக வரும் துரை ரமேஷ் ஆகியோரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களை இதற்கு முன்னால் வந்த படங்களில் நிறையவே பார்த்திருந்தாலும் சில காட்சியமைப்புகள் ரொம்பவே புதிது. குறிப்பாக இடைவேளைக்குப் பின்னால் வரும் இருபது நிமிடங்கள். ஆலைகள் ஆபத்தானவை என இதற்கு முன்னால் வந்த ஹீரோயிச படங்கள் வார்த்தை களில் சொல்லிச் சென்றதை உருக்கமாகக் காட்சிப்படுத்திய வகையில் தனித்து நிற்கிறார் விஜய்குமார். மனதைப் பிழியும் அந்தக் காட்சிகளில் போபால் மண்ணில் புதைந்துபோன குழந்தையின் முகமும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ரத்தம் சிந்திய 13 பேரும் நினைவுக்கு வருகிறார்கள்.

‘ஏதோ நடக்கப்போகிறது’ என்ற பதற்றத்தையும் நடந்தபின்னான விளைவுகளின் பயங்கரத்தையும் நமக்குக் கடத்துவதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமாரும் எடிட்டர் லின்னுவும். கோவிந்த் வசந்தா வின் வயலின் இசை மேலும் கனம் கூட்டுகிறது. ‘நீங்க லாபம் பாக்குறதுக்கான வரி, எங்க உயிரா?’ என ஆங்காங்கே வரும் வசனங்கள் பளிச்சென ஈர்க்கின்றன.
முதல் பாகத்தின் பலமே அதில் வரும் சுவாரஸ்யமான திருப் பங்கள்தான். அது இந்தப் பாகத்தில் மிஸ்ஸிங். இரண்டாம் பாதியில் போகப் போக திரைக்கதை தேய்ந்து தேய்ந்து இறுதியில் ஒருவழியாக முடிவிற்கு வருகிறது. படம் பேசும் விஷயம் மிக முக்கியமான நிஜ வாழ்க்கை தொடர்பான பிரச்னை தான். ஆனால், அதற்கு முன்வைக்கும் தீர்வுகள் சினிமாத்தனம்.
மக்களுக்கான பிரச்னையைத் தாக்கம் ஏற்படுத்தும்படி படமெடுத்த இயக்குநர் விஜயகுமாருக்கும் சமரசம் செய்து கொள்ளாமல் இதைத் தயாரித்த தயாரிப்பாளர் சூர்யாவுக்கும் வாழ்த்துகள்.
- விகடன் விமர்சனக் குழு