
என் ஒரு படம் ஹிட்டானா, புதுசா பல பட வாய்ப்புகள் வருமேனு வருத்தப்படுவேன்...
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக்கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், நளினி.

சினிமா துறையே பிடிக்காமல் நடிக்கவந்தாலும், 1980-களில் முன்னணி நடிகையாகப் புகழ்பெற்றவர் நளினி. அதே சினிமாதான் இன்று தன் மகிழ்ச்சிக்குக் காரணம் என்கிறார். இந்த மாற்றத்துக்கு இடையே வாழ்க்கையில் பல ஏமாற்றங்களையும் வலிகளையும் கடந்து வெற்றிபெற்றது குறித்து மனம்திறந்து பேசுகிறார் நளினி.
எம்.ஜி.ஆர் பாசம்... அரசுப் பள்ளிப் படிப்பு...
எனக்கு நாலு அண்ணன்கள், ரெண்டு தம்பி, ஒரு தங்கை. அப்பா வைக்கம் மூர்த்தி, புகழ்பெற்ற சினிமா டான்ஸ் மாஸ்டர். கல்யாணத்துக்கு முன்பு வரை அம்மா பிரேமாவும் டான்ஸ் மாஸ்டர்தான். வசதியான குடும்பம்.

வீட்டுல சினிமாவைப் பத்தி பேசமாட்டோம்; பெற்றோரும் அதை விரும்பமாட்டாங்க. அபூர்வமா, குழந்தைகளுக்கான படங்களுக்கு மட்டுமே எங்களைக் கூட்டிட்டுப்போவாங்க. எட்டுப் பேரும் ஒண்ணா சேர்ந்து அரட்டையடிக்கிறது, கூட்டாஞ்சோறு சாப்பிடுறதுனு சந்தோஷத்துக்குக் குறைவில்லாம இருந்தோம்.
எம்.ஜி.ஆர் - ஜானகி எங்க தூரத்துச் சொந்தம். வீட்டில் ரொம்பவே கட்டுப்பாடுகளுடன் வளர்ந்தேன். அவசியமில்லாம, என்னைத் தனியா எங்கேயும் போகவிட மாட்டாங்க. நான் நுங்கம்பாக்கம் அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். டீச்சராகணும், ஸ்கூல் நடத்தணும்னு ஆசைப்பட்டேன்.
சினிமா வாய்ப்பு... ரஜினியின் தங்கை!
நான் எட்டாவது படிக்கும்போது எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது. அப்பா மறுத்தார். ஆனா, அம்மா சம்மதம் சொல்லிட்டாங்க. அந்த முடிவில் எனக்கு விருப்பமில்லை. பல நாள்கள் அழுதேன். `படிச்சுக்கிட்டே நடி’னு அம்மா சொல்ல, `இடவேளா’ (1979) மலையாளப் படத்துல ஹீரோயினா அறிமுகமானேன். ராணிங்கிற என் பெயரை, நளினினு மாத்தினாங்க. என்னைச் சுத்தி நாலு பேர் இருந்தாலே பயந்துடுவேன். ஷூட்டிங்ல அத்தனை பேருக்கு மத்தியில மிரட்சியோடும் அழுகையோடும் நடிச்சேன். அம்மா நிழல்போல எனக்குத் துணையிருந்தாங்க.
முதல் படம் ஹிட். தமிழ் உட்பட, தொடர்ந்து பல மொழி வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. ‘தமிழில் நடிச்சா ஸ்கூல்ல எல்லோருக்கும் தெரிஞ்சுடும்’ என்பதுதான் அப்போதைய என் பெரும் கவலை. அதனால, தமிழில் என் முதல் படமான ‘ராணுவ வீரன்’ல ரஜினிக்குத் தங்கையா சின்ன ரோல்ல நடிச்சேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் சார்கிட்ட, `என் பொண்ணுக்கு ஸ்பெஷல் கவனிப்பு கொடுங்க’னு எம்.ஜி.ஆர் சேச்சா சொன்னார்.
`உயிருள்ளவரை உஷா'... தனிமை... வெளிநாட்டு கார்!
மலையாளத்தில் பல வெற்றிப் படங்கள்ல நடிச்சு, முன்னணி நாயகியாகிட்டேன். அப்போ தமிழ்ப் பத்திரிகை ஒன்றின் அட்டைப் படத்துல வெளியான என் போட்டோவைப் பார்த்த உஷா, டி.ராஜேந்தர் சார்கிட்ட என்னைச் சிபாரிசு பண்ணியிருக்கார். உடனே டி.ஆர்.சார், என்னை ஹீரோயினா நடிக்கக் கேட்டார். நான் மறுத்தாலும், தினமும் எங்க வீட்டுக்கு வந்து வலியுறுத்தினார். `படிப்புக்குப் பாதிப்பு வராத மாதிரி பார்த்துக்கிறேன்’னு அவர் சொல்ல, நடிக்க ஒப்புக்கிட்டேன். அவர் இயக்கத்தில் `உயிருள்ளவரை உஷா’ படத்தில் ஹீரோயினானேன்.

ஒன்பதாவது படிக்கிறப்போ, அந்தப் படம் ரிலீஸாச்சு. என்னையும் என் நண்பர்களையும் அம்மா தியேட்டருக்குக் கூட்டிட்டுப்போனாங்க. அடுத்தநாள் என் வகுப்புக்கு வெளியே, `உஷா’னு மத்த கிளாஸ் பசங்க கத்தினாங்க. அதனால் அதிர்ச்சியான தலைமை ஆசிரியர், `இது சரிவராது. உடனே நீ டி.சி வாங்கிக்கோ’ன்னு சொல்ல, அன்றுடன் என் படிப்பு டிராப்ஆகிடுச்சு. வருத்தப்பட்டு அழுதேன்.
அப்போ கைவசம் நிறைய படங்கள் இருந்தன. `இந்தப் புகழ் எல்லோருக்கும் கிடைக்காது. அதைப் பயன்படுத்திக்கோ’ன்னு அம்மா வலியுறுத்தினாங்க. வேண்டா வெறுப்பா சினிமாவை என் கரியரா ஏத்துக்கிட்டேன். வெளியூர் ஷூட்டிங்குகளால், நான் வீட்டிலிருப்பதே குறைஞ்சுபோச்சு.
வீட்டுக்கு வரும்போது, என்கூடப்பிறந்த எல்லோரும் எனக்கு ஆளுக்கு ஒரு வாய் சாப்பாடு ஊட்டிவிடுவாங்க. ஏழு பேரும் ஒரே இடத்துல தூங்க, வழக்கத்துக்கு மாறா எனக்கு மட்டும் தனி ரூம் கொடுத்திருந்தாங்க. அது எனக்குப் பிடிக்கவேயில்ல. ஒருமுறை ஊட்டியில் ஷூட்டிங்கில் இருந்தப்போ, வீட்டுல எல்லாரையும் பார்த்தாதான் நடிப்பேன்னு நான் அடம்பிடிச்சேன். உடனே அம்மா என்கூடப்பிறந்தவங்க எல்லோரையும் ஊட்டிக்கு வரவெச்சாங்க.
நான் எது கேட்டாலும் உடனே எங்கம்மா வாங்கிக்கொடுத்திடுவாங்க. அப்போ சிரஞ்சீவி, ஸ்ரீதேவி மட்டுமே பயன்படுத்திய டாட்சன் வெளிநாட்டு கார் எனக்கும் வேணும்னு ஒருநாள் கேட்டேன். சாயந்திரம் வீட்டுக்கு வருவதற்குள், எங்கம்மா அந்த காரை வாங்கி வெச்சிருந்தாங்க.
ஏழு வருஷம்... நான்கு மொழிகள்... 120 படங்கள்!
தூக்கமே இல்லாம, 24 மணி நேரம் தொடர்ந்து, அஞ்சு ஷிஃப்ட்டெல்லாம் நடிச்சேன். வருஷத்துக்கு 20 படங்களுக்கு மேல் நடிச்சேன். `நூறாவது நாள்’ படம் பெரிய ஹிட்டானபோது, அந்தப் படத்தை தியேட்டர்ல பார்த்தேன். மற்றபடி என் படங்களை அப்போ நான் தியேட்டரில் பார்க்கவேயில்லை.
`தங்கைக்கோர் கீதம்’, `மனைவி சொல்லே மந்திரம்’, `ஓசை’, `பாலைவன ரோஜாக்கள்’, `நல்ல நாள்’னு நிறைய ஹிட் படங்கள் அமைஞ்சது. விஜயகாந்த் (13), மோகன் (20), சுரேஷ் (15) ஆகியோருடன் அதிக படங்கள்ல நடிச்சேன். ரஜினி சாருடன் ‘கை கொடுக்கும் கை’ மற்றும் ‘மாவீரன்’ படங்கள்ல சில நாள்கள் நடிச்சேன். நேரமின்மையால், அந்தப் படங்கள் மற்றும் ‘தங்கமகன்’, ‘தம்பிக்கு எந்த ஊரு’ படங்கள்லயும் ரஜினி சாருக்கு ஜோடியா என்னால நடிக்கமுடியலை.
புகழ், பணம், அந்தஸ்து, பல வேலையாள் கள்னு இருந்தாலும், அதெல்லாம் என் மனசுக்கு நிறைவாயில்லை. சொன்னா நம்பமாட்டீங்க. என் ஒரு படம் ஹிட்டானா, புதுசா பல பட வாய்ப்புகள் வருமேனு வருத்தப்படுவேன். ஆனா, இயக்குநர் எதிர்பார்க்கிறபடி முழு ஈடுபாட்டுடன் நடிப்பேன். அதனால, என் நடிப்பைப் பற்றி இயக்குநரும் தயாரிப்பாளரும் குறைசொன்னதே கிடையாது. முன்னணி நடிகைங்கிற உணர்வே எனக்கு ஏற்பட்டதில்லை. ஏழு வருஷத்துல நாலு மொழிகளில் 120-க்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சுட்டேன்.
திடீர் கல்யாணம்... எம்.ஜி.ஆரின் கோபம்!
ராம நாராயணன் சார் இயக்கத்துல 18 படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். அவரின் உதவி இயக்குநரான ராமராஜன் சார் அந்த 18 படங்கள்லேயும் வேலை செய்தார். நல்ல மனிதர். அவர் கதை மற்றும் டயலாக் சொல்றது, வேலை செய்கிற விதம் எல்லாமே சிறப்பா இருக்கும். எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுச்சு. அவர்தான் முதலில் காதலை வெளிப்படுத்தினார். நானும் ஏத்துக்கிட்டேன்.
அப்போ போன் வசதி கிடையாது. அம்மா எந்நேரமும் என்கூடவே இருந்ததால, நாங்க பேசிக்கவும் முடியாது. அதனால, டயலாக் பேப்பர்ல லவ் லெட்டர் மற்றும் முக்கியமான செய்தியை எழுதி, என் டச்அப் பொண்ணுகிட்ட கொடுப்பார். என் அம்மா உட்பட பல செக்போஸ்ட்டுகளைக் கடந்து யாருக்கும் தெரியாம, பாத்ரூம்ல அந்த லெட்டரைப் படிப்பேன். இப்படி அஞ்சு வருஷமா எங்க காதல் வளர்ந்த காலம், ரொம்ப த்ரில்லிங்கானது.
ராமராஜன் சார் சார்பில், ராம நாராயணன் சார் மற்றும் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் சார் எங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டாங்க. `அவர் இன்னும் டைரக்டராகக்கூட ஆகலை. அவர் பெற்றோர் வராம, நீங்க வந்து பொண்ணு கேட்கறீங்களே... இதெல்லாம் சரிவராது’னு எங்கம்மா அவங்களைத் திட்டி அனுப்பிட்டாங்க.
அதனாலயே ராமராஜன் சார் இயக்குநராகி, ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்துல என்னை ஹீரோயினாக நடிக்கக் கேட்க, அம்மா மறுத்தாங்க. அப்புறம் பலரும் பேசி, கடும் பாதுகாப்புக் கெடுபிடிகளுடன் அந்தப் படத்துல கெஸ்ட் ரோல்ல நடிச்சேன். திறமைசாலியான அவர், எதிர்காலத்தில் பெரிய ஆளா வருவார்; என்னை நல்லா பார்த்துப்பார்னு நம்பினேன்.

1987-ம் ஆண்டு, ‘குங்குமக்கோடு’ பட ஷூட்டிங். ஒரு கல்யாணத்துக்காக எங்கம்மா ஊருக்குப் போயிருந்தாலும், என்னைக் கண்காணிக்க ஆட்களை நியமிச்சிருந்தாங்க. அதையெல்லாம் மீறி, அன்னிக்கு மதிய உணவு இடைவேளையில் அவர் யாருக்கும் தெரியாம என்னைக் கூட்டிட்டுப்போனார். வழியில் உளுந்தூர்பேட்டையில சாப்பிடும்போதுதான், அவர் வயசு, படிப்பு, ஊர், குடும்பம் உள்ளிட்ட விஷயங்களைக் கேட்டேன். அந்த அளவுக்கு அவர்மேல நம்பிக்கை வெச்சிருந்தேன். பிறகு, கல்யாணம் செய்துகிட்டோம்.
`என்கிட்ட சொல்லியிருக்கணும்ல. நீயே முடிவெடுத்து, ஓடிப்போனது தப்பு’னு அப்பா ஸ்தானத்துல எம்.ஜி.ஆர் சேச்சா என்மேல ரொம்பவே கோபப்பட்டார். பிறகு சமாதானமாகி, எங்க திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார். `கடமை கண்ணியம் கட்டுப்பாடு’தான் என் கடைசிப் படம். ‘அப்பாடா! இனி நடிக்க வேண்டியதில்லை’னு சினிமாவிலிருந்து சந்தோஷமா பிரேக் எடுத்தேன்.
விவாகரத்து... புது வாழ்க்கை...
திருமணத்துக்குப் பிறகு, அவர் பெரிய ஹீரோவானார். `உங்க படத்தை ரிலீஸ் பண்றீங்களா? என் படத்தை ரிலீஸ் பண்றேன்’னு ரஜினி, கமல்கூட எங்ககிட்ட தனிப்பட்ட முறையில் கேட்ட காலம் அது. நான் அவர் சினிமா விஷயத்தில் தலையிடவும் மாட்டேன்; தொந்தரவும் கொடுக்க மாட்டேன். நான் இல்லத்தரசியா, அம்மாவா ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன். அவரும் என்னை ரொம்ப நல்லா பார்த்துகிட்டார்.
அவர் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். அதனாலதான் எங்களுக்குள் பிரிவே உண்டாச்சு. அதுவும் எங்க இரட்டைக் குழந்தைகளை மையப்படுத்திய காரணம் என்பதால், என்னால அதை ஏத்துக்கவே முடியலை. எங்க இல்லற வாழ்க்கையில விரிசல் பெரிசாச்சு. வெளிநபர்கள் யார்கிட்டயும் மனம்விட்டுப் பேச முடியாம, கூண்டுக்கிளிபோல என் வாழ்க்கை மாறிச்சு. குழந்தைகள் மட்டுமே எனக்குத் துணையா இருந்தாங்க. இந்த நிலையில அவர் வேண்டுகோள்படி, 2000-ம் ஆண்டு விவாகரத்து பெற்றேன்.
கல்யாண வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போனதால் வேதனையில் தவிச்சேன். என் குழந்தைகளுடன் தற்கொலைக் குப் பலமுறை முயன்றேன். ஒருகட்டத்துல குழந்தைகளுக்காக வாழ்ந்தாகணும்னு தீர்க்கமா முடிவெடுத்தேன். நான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டதால், அப்போதும் என் பெற்றோர் தரப்பில் கோபமாகவே இருந்தாங்க. ஆதரவுன்னு யாருமேயில்லை. சென்னையில் ஆழ்வார் திருநகர் பகுதியில வாடகைக்கு வீடு பிடிச்சேன். ஜீரோ நிலையிலிருந்து புது வாழ்க்கையைத் தொடங்கினேன்.
சிங்கிள் பேரன்ட்... மீண்டும் நடிப்பு...
அதுவரை என் பெயருக்கு ஏற்ப ராணி மாதிரி இருந்தவ, அதுக்கு அப்புறம் படாத கஷ்டமில்லை. எனக்குச் சமைக்கவே தெரியாது. கேஸ் அடுப்பை பத்தவெச்சா வெடிச்சுடுமோனு பயத்துல, பல நாள்கள் பிரெட்தான் எங்களுக்கு மூணுவேளை உணவு. வீட்டுக்குப் பக்கத்துல ரோடு போடுறவங்க, நடிகை சீமா அக்கா ஆகியோர் எங்களுக்குச் சாப்பாடு கொடுத்து உதவினாங்க. முதலில் பருப்பு சாதம் செய்ய கத்துகிட்டதும், அதுவே பல நாள்கள் மூணு வேளைக்கும் உணவாச்சு. படிப்படியா சமைக்கக் கத்துகிட்டேன். அந்தச் சமையல் ருசியா இருக்குமான்னு தெரியாது. ஆனா, `நல்லா இல்லைம்மா; இது வேண்டாம்மா’னு ஒருநாளும் என் குழந்தைகள் சொன்னதில்லை.
கொஞ்சம் கொஞ்சமா வெளியுலகத்தைக் கத்துக்கிட்டேன். கார்ல ஸ்கூலுக்குப் போன குழந்தைகளை, நடந்துபோகப் பழக்கினேன். பஸ்ல, டிரெயின்ல குழந்தைகளை மாறு வேடத்தில் கூட்டிட்டுப்போய், `இனி இதுலதான் போகணும்’னு சொல்லிக்கொடுத்தேன். பெரிய தனியார் ஸ்கூல்ல படிச்சவங்களை, மடம் சார்ந்த ஒரு ஸ்கூல்ல சேர்த்தேன். அங்க செருப்புகூடப் போடக்கூடாதுங்கிற விஷயத்தையெல்லாம் பிள்ளைங்க ஏத்துக்கிட்டாங்க.
இந்த நிலையில, நடிகை குட்டி பத்மினி என்னைக் கண்டுபிடிச்சு ‘கிருஷ்ணதாசி’ சீரியல்ல நடிக்கவெச்சாங்க. அப்போதைய என் வாழ்வாதாரத் தேவை மற்றும் என் நடிப்புப் பயணத்தில் அந்த சீரியல் மிக முக்கியமானது. என் நிலையை அறிந்து, அழுது ஆறுதல் கூறிய டி.ராஜேந்தர் சார், ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க வெச்சார். குழந்தைகளைக் கவனிக்கிறதுதான் என் முதல் வேலை. அதனால், நிறைய பட வாய்ப்புகளை மறுத்தேன். மிக எளிமையான வாழ்க்கைத் தேவைக்காக, செலக்டிவா நடிச்சேன்.
பிள்ளைகள் ப்ளஸ் டூ முடிக்கிற வரை எங்க வீட்டுல டி.வி கிடையாது. அவங்களுக்கு போன் கிடையாது. போராட்ட குணத்துடன் கஷ்ட சூழல்லயிருந்து மீண்டு வந்தோம். நான் அனுபவிச்ச துயரங்கள் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. இப்போ என் அம்மா, கூடப்பிறந்தவங்க எல்லோரும் முன்புபோல அதிக அன்புடன் இருக்காங்க. செகண்டு இன்னிங்ஸில் ஆர்வத்துடன் நடிக்கிறேன். சினிமாவும், சினிமா துறையினரும் என்னைக் கைவிடலை. வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தா, அதோடு மோதி ஜெயிச்சுட்ட மாதிரி ஒரு வெற்றியுணர்வு கிடைக்குது. இக்கட்டான சூழலில், வாழணும்னு நினைச்சத்தான் சரியான முடிவு. இப்போ ரொம்ப சந்தோஷமாயிருக்கேன்!
இப்படி இருக்கவே விரும்புறேன்!
இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கும்போது, `இனி, எல்லா விதமான ரோல்லயும் நடிக்கணும்’னு முடிவெடுத்தேன். அதனாலதான், வடிவேலுவுக்கு ஜோடியா ‘லண்டன்’ படத்துல நடிச்சேன். காமெடி, வில்லி, குணச்சித்திரம்னு பலதரப்பட்ட ரோல்லயும் மகிழ்ச்சியுடன் நடிக்கிறேன்.
சின்ன வயசுல இருந்தே ரொம்பக் குண்டாக ணும்னு ஆசைப்படுவேன். ஹீரோயினா நடிச்சபோது டயட்ல இருக்கவேண்டிய கட்டாயம். இப்போ அந்தத் தேவையில்லை. குண்டாக இருக்கவே விரும்புறேன். நமக்கு என்ன பிரச்னைகள் இருந்தாலும், அதை வெளியிடத்துல காட்டிக்கக் கூடாது. அதனாலதான், எப்போதும் பட்டுப்புடவையில உற்சாகமா இருக்கேன்.
பெற்றோராக இணைந்து செயல்படுகிறோம்!
என் கணவருடன் என் குழந்தைங்க இருந் திருந்தால், சினிமா துறையில் போயிருப்பாங்க. அப்படி ஒரு சூழலை ஒருபோதும் நான் ஏத்துக்க மாட்டேன். என் பிள்ளைங்க படிச்சு நல்ல நிலைக்கு வரணும்னு நான் போராடினேன். பையன் அருண் சாட்டர்டு அக்கவுன்ட்டன்ட், பொண்ணு அருணா வழக்கறிஞர். சொந்தத் திறமையால் முன்னேறியிருக்காங்க. என் குழந்தைகளை நல்ல நிலைக்குக் கொண்டுவந்ததுதான் என் வாழ்க்கையின் பெரிய வெற்றி.
கணவன் மனைவியாக எங்களுக்குள் பிரிவு இருந்தாலும், எங்க பிள்ளைகளின் திருமணம் உள்ளிட்ட அவங்க நலன் சார்ந்த விஷயங்களில் மட்டும் நாங்க பெற்றோராக இணைந்து செயல்படுறோம்.
எனக்கு ரொம்ப பயம்!
மொசுமொசுனு சாஃப்ட்டா இருக்கிற எந்தப் பொருள்னாலும் எனக்கு ரொம்ப பயம். அம்பரீஷ் சாருக்கு ஜோடியா நடிச்ச `கண்டந்த்ரே கண்டு’ங்கிற கன்னடப் பட ஷூட்டிங். அதில், நான் குதிரை சவாரி பண்ற காட்சி. குதிரையின் முடியெல்லாம் பார்த்துட்டு பயந்துபோய் நடிக்க மறுத்தேன். படக்குழுவினர் என்னை நடிக்க வைக்க முயற்சி செய்ய, பயத்துல ஃபிட்ஸ் வந்து மயங்கிட்டேன். அப்புறமும் விடாம என்னை எங்கம்மா நடிக்கவெச்சாங்க.
`நன்றி’ படத்துல நாய்கூட நடிக்க பயந்து, மயங்கிட்டேன். என்கிட்ட சொல்லாமலேயே, திடீர்னு `வேங்கையின் மைந்தன்’ படத்துல சிங்கத்துடன் என்னை நடிக்க வெச்சாங்க. ஹார்ட் பீட் வேகமா துடிக்க எப்படியோ நடிச்சு முடிச்சுட்டு, நான் ஓடின ஓட்டம் இருக்கே... அப்பப்பா!
-கு.ஆனந்தராஜ், படங்கள்: பா.காளிமுத்து