சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

எல்லாத்தையும் உடைக்கணும்... அதுதான் சினிமா!

எல்லாத்தையும் உடைக்கணும்... அதுதான் சினிமா!
பிரீமியம் ஸ்டோரி
News
எல்லாத்தையும் உடைக்கணும்... அதுதான் சினிமா!

எல்லாத்தையும் உடைக்கணும்... அதுதான் சினிமா!

“இந்த உலகத்திலேயே ரொம்பக் கஷ்டமான விஷயம், காதலை விளக்குவது. ஒவ்வொருத்த ரோட பார்வையிலேயும் அதோட அர்த்தம் மாறும்!”

விதவிதமான காதல்களைத் திரைக்களங்களாக மாற்றிய இயக்குநர் செல்வராகவன், காதல் குறித்த நம் கேள்விக்கு இப்படித்தான் பதில் சொன்னார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் அவரின் ‘என்.ஜி.கே’ ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. செல்வராகவனோடு நிறையவே உரையாடினோம்.

“சூர்யா, செல்வராகவன்... ரெண்டுபேருக்குமே தனி ரசிகர்கள் இருக்காங்க. ‘என்.ஜி.கே’ இருதரப்பையும் எப்படித் திருப்திப்படுத்தப்போகுது?”

“நான் வொர்க் பண்ண நினைச்ச, எனக்குப் பிடிச்ச நடிகர்களில் ஒருத்தர், சூர்யா. அவர் ரசிகர்களை மனசுல வெச்சு, நானும் ஒரு  ரசிகனாதான் இந்தக் கதையை எழுதினேன். என்னோட ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர்ல இருக்கணும்னு ஆசைப்படுவேன். இது அரசியல் படம். அதேசமயம், படம் என் ஸ்டைல்லதான் இருக்கும். ஆண்டாள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆண்டாள் பாடல்ல வர்ற ‘நந்த கோபாலன் குமரன்’ பெயரை சூர்யாவுக்கு வெச்சிருக்கேன். படத்துல அவர் அரசியல்வாதி. சாய் பல்லவி சூர்யாவுக்கு மனைவியா நடிச்சிருக்காங்க. மிக முக்கியமான கேரக்டர்ல ரகுல் ப்ரீத் சிங் வர்றாங்க. சாய் பல்லவி, ரகுல் ரெண்டுபேருமே திறமையான நடிகைகள். ரகுல் ப்ரீத் சிங்கை இப்படி ஒரு கேரக்டர்ல பார்த்திருக்க மாட்டீங்க. இந்தப் படம் அவங்களுக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கும்.”

எல்லாத்தையும் உடைக்கணும்... அதுதான் சினிமா!

“ட்ரைலர் பார்க்கும்போது ‘புதுப்பேட்டை’ சாயல்  இருந்த மாதிரி தெரியுதே..?”

“ ‘புதுப்பேட்டை’ அரசியலையும், ஒரு ரவுடியின் வளர்ச்சியையும் பேசிய படம். ஆனா, ‘என்.ஜி.கே’ அரசியல் மட்டும்தான் பேசப்போகுது. எல்லோருக்குள்ளும் இருக்கிற ஒரு அரசியல் மனநிலைதான் எனக்குள்ளும் இருக்கு. அதை, ‘என்.ஜி.கே’ படத்தில் பார்க்கலாம்.”

“ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். ஒன்லைன், கேரக்டர், சம்பவம்னு எதை அடிப்படையா வெச்சு உங்க திரைக்கதையை எழுத ஆரம்பிப்பீங்க?”

“நிறைய படிப்பேன், எழுதுவேன். ஏதாவது படம் பார்க்கும்போதோ, படிக்கும்போதோ பாதிக்கிற விஷயங்களையெல்லாம் நோட் பண்ணி வெச்சுக்குவேன். ஒரு கேரக்டரை வடிவமைக்கிறோம்னா, அது இப்படித்தான் இருக்கணும்; இதையெல்லாம் பண்ணணும்னு எழுதும்போதே முடிவு பண்ணிடுவேன். ஒரேமாதிரி படம் பண்ணிக்கிட்டு இருக்கக்கூடாதுங்கிறது என் கருத்து. காதல் படம்னா இப்படித்தான் இருக்கணும், சயின்ஸ் ஃபிக்‌ஷன், ஃபேன்டஸி படம்னா இப்படி இருக்கணும்னு இங்கேயிருக்கிற திரைக்கதை ஃபார்முலாவை உடைக்கணும். பிரேக் பண்றதுதான் சினிமா. ஒரு உண்மையான கலைஞன் இங்கிருக்கிற சாத்தியக்கூறுகளில் சிக்கிடக்கூடாது. தமிழ்சினிமாவுல எல்லாமே சாத்தியம்னு நினைக்க வைக்கிறதுதான் என் வேலை.”

“புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்... உங்களுடைய சில படங்களுக்கு, காலம் கடந்து கிடைக்கிற வரவேற்பை எப்படிப் பார்க்கிறீங்க?”

“எல்லாத்தையும் விரும்பித்தான் பண்றோம். ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ அப்படித்தான். ஏன், ‘இரண்டாம் உலகம்’ கதையும்கூட சிக்கலானதுதான். ஏன் ஆடியன்ஸுக்குப் பிடிக்காமப்போச்சுன்னு தெரியலை. மத்தபடி, இந்தப் பாராட்டு அப்போ கிடைச்சிருக்கலாமே, இப்போ கிடைக்குதேன்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்க முடியாது. அந்த நேரத்தில் ஆசைப்பட்டோம்; இப்போ கிடைக்குது. அவ்ளோதான்.”

எல்லாத்தையும் உடைக்கணும்... அதுதான் சினிமா!

“ ‘ஆயிரத்தில் ஒருவன்-2’ எப்போ வரும்னு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு... எப்போ வரும்?”

“ ‘சோழனின் பயணம் தொடரும்’னு போட்டதே இரண்டாம் பாகம் எடுக்கிற ஆசையிலதான். ஒரு ராஜா இப்படித்தான் இருப்பார்னு அதுவரை கேள்விப்பட்டதை உடைச்சு, ஒரு ராஜா இப்படியும் இருந்தார்னு காட்ட ஆசைப்பட்டு எடுத்த படம் இது. ஈஸியா பண்ணிடலாம்னு நினைச்சோம். எடுக்க ஆரம்பிச்சப்போதான் கஷ்டம் புரிஞ்சது. 23 கோடி ரூபாய் பட்ஜெட்ல எடுத்த படம். அப்போதைய சூழலுக்கு கிராஃபிக்ஸ் பெருசா பண்ண முடியல. இப்போ அதை எடுத்திருந்தா, இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம். லேட்டஸ்ட்டா இந்தப் படத்தைத் திரையிட்டப்போ, ஹவுஸ்ஃபுல்லா இருந்தது. ட்விட்டர்ல சிலர், ‘மன்னிச்சிடுங்க செல்வா. இந்தப் படத்தை அப்போ கொண்டாடாமப் போயிட்டோம்’னு எல்லாம் சொல்றாங்க. சினிமா நிறைய மாறியிருக்கு. இப்போ, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ பண்றது ஈஸி. நிச்சயம் பண்ணுவோம். தவிர, ‘புதுப்பேட்டை 2’ வருமான்னும் கேட்குறாங்க. தனுஷ்கிட்ட நான் பேசியிருக்கேன். ரசிகர்களுக்கு இருக்கிற எதிர்பார்ப்பைப் பூர்த்தி பண்ற அளவுக்குக் கதை அமைஞ்சிட்டா, அதையும் பண்ணலாம். கொஞ்சம் டைம் ஆகும்.”

“ ‘காதல் கொண்டேன்’ தனுஷ் தொடங்கி, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ டீஸர்ல எஸ்.ஜே.சூர்யா பேசுற வசனம் வரை... உங்க கதாபாத்திரங்களையும், அது பேசுற வசனத்தையும் பலரும் பொருத்திப் பார்த்துக்க முடியுதே?”

“நான் உள்வாங்கிய மனுஷங்களையெல்லாம் திரைக்கதைக்குள்ள புகுத்துறேன். அவங்களை வெச்சு வித்தியாசமான ஃபார்மேட்ல திரைக்கதை எழுதுறேன். ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்துல என்னுடைய  வாழ்க்கை இருக்கு. ஹீரோ என் கேரக்டர்தான். ஹீரோவுக்கு ஃபிரெண்டா வர்றவங்க என் ஃபிரெண்ட்ஸ்தான். சினிமாவுக்காக கொஞ்சம் மாத்தினோம், அவ்ளோதான். அந்த கே.கே.நகர் காலனியில இன்னும் பல அனுபவங்கள் இருக்கு, பல காதல்கள் இருக்கு. நாங்க காட்டுனது ஒரு காதல்தான். அதைக்கூட உண்மையா, முழுசா சொல்லல. திரைக்கதைக்காக காம்ப்ரமைஸ் ஆகிட்டோம். சுருக்கமா சொன்னா, அனிதா செத்துப்போனதோடு அந்த வாழ்க்கை முடியலை, ‘7ஜி ரெயின்போ காலனி 2’ எடுக்கலாம். அந்தப் பையன், அந்த அழகான அம்மா - அப்பா, இன்னும் முழுமையா காட்டப்படாத கே.கே.நகர் வாழ்க்கை இருக்கு. நான் ஆசைப்படுற ஒரு படைப்பு அது.”

“ ‘காதல் கொண்டேன்’ ஓப்பனிங் சீன்ல தொடங்கி, ‘இரண்டாம் உலகம்’ல ‘அம்மா’ கேரக்டர் வரை... கடவுளை விதவிதமா அணுகியிருக்கீங்க. கடவுள் நம்பிக்கை இருக்கா உங்களுக்கு?”

“கடவுள் நம்பிக்கை இல்லாம யாரும் இல்லைன்னுதான் நினைக்கிறேன். அது 40 வயசுக்குமேல புரியும். ஏன்னா, இளமையில நாம போடுற ஆட்டத்துல கடவுளைத் தேட நேரம் இருக்காது. 40 வயசுக்குப் பிறகு மனுஷனைத் தாண்டி ஒரு சக்தி இருக்குன்னு புரிஞ்சுக்குவோம். நமக்கு மீறி ஒரு சக்தி இருக்கு. அதுதான் கடவுள் நம்பிக்கையா எனக்குள் உருவாகியிருக்கு.”

எல்லாத்தையும் உடைக்கணும்... அதுதான் சினிமா!

“உங்களை வெளியே எங்கேயும் பார்க்க முடியலையே என்ன காரணம்?!”

“ஃபேமிலிமேன் ஆகிட்டேனே! எனக்கொரு பெண் குழந்தை பிறக்கணும், அவகூட நிறைய நேரம் செலவழிக்கணும்னு சின்ன வயசுல இருந்து ஆசைப்பட்டேன். இப்போ, அது சாத்தியமாகியிருக்கு. பொண்ணு லீலாவதி, பையன் ஓம்கார்... இவங்ககூட இருக்கவே நேரமில்லை. ஸ்டுடியோவுல வேலை முடிஞ்சா நேரா குழந்தைங்களைப் பார்க்கணும்னு மனசு துடிக்குது.”

“ ‘பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ பாடலைக் கேட்டு, மனைவி கீதாஞ்சலி என்ன கமென்ட் சொன்னாங்க?”

“தெரியாத்தனமா, அவங்க வீட்டுல எல்லோரும் இருக்கிறப்போ இப்படி ஒரு பாட்டு எழுதியிருக்கேன்னு சொல்லிட்டேன். கோபமாகிட்டாங்க. மணிரத்னம் சார் படத்துல ஜனகராஜ் ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ன்னு ஒரு காமெடி பண்ணியிருப்பார். அந்த இன்ஸ்பிரேஷன்ல எழுதுனேன்னு புரிய வெச்சேன். தவிர, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ கதைக்கும், ஹீரோவோட சிச்சுவேஷனுக்கும் அந்தப் பாட்டு தேவையா இருந்தது. மத்தபடி, எனக்கு பாட்டு எழுதவே பிடிக்காது.”

“விருதுகள் இதுவரை உங்களைத் தேடி வந்ததில்ல... அந்த வருத்தம் இருக்கா?”

“விருதுகள் எனக்கு இலக்கே கிடையாது. அதுக்காகப் படம் பண்றதும் இல்ல; அதுக்காகப் படம் பண்ணவும் கூடாது. எனக்கு ஒரு படத்தை இயக்குறது திருப்தி. நான் விரும்பினமாதிரி இயக்கி முடிச்சிட்டா, அதுவே பெரிய விருது.”

எல்லாத்தையும் உடைக்கணும்... அதுதான் சினிமா!

“ ‘மன்னவன் வந்தானடி’, ‘கான்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ செல்வராகவனுக்கும் அவரது படைப்புகளுக்கும் பிரச்னை இருந்துகிட்டே இருக்கே... யார்தான் காரணம்?”

“சந்தானத்தை ஒரு ரொமான்டிக் ஹீரோவா காட்டணும்னு ஆசைப்பட்டு, ‘மன்னவன் வந்தானடி’ பிளான் பண்ணினோம். எதுவும் நடக்க முடியலையேன்னு ஒரு வலி இருக்கு. ஏன் பண்ணமுடியலைன்னு சம்பந்தப்பட்டவங்கதான் சொல்லணும். ‘கான்’ டிராப் ஆகிடுச்சு. அதோட கதைக்களம் ரொம்பப் பெருசு. இதை நிச்சயம் வேறொரு வடிவத்துல பார்க்கலாம். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீக்கிரமே ரிலீஸ் ஆகும்னு நம்புறேன். மத்தபடி, பிரச்னைகள் என்னைச் சுத்துறதுக்குக் காரணம், ‘இப்படித்தான் படம் பண்ணணும்’ங்கிற என் நேர்மைதான்னு நினைக்கிறேன். ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கிறேன். இங்கே தயாரிப்பாளர்களுக்கு லாபம் வரணும்னுதான் படம் பண்றோம். யாரும் அவங்க நஷ்டமாகணும்னு நினைச்சுப் படம் பண்றதில்லை.”

“இங்கே ஒரு படைப்பாளிக்கு இருக்கிற மிகப்பெரிய சவால் எது?”

“ஒரிஜினல் கிரியேஷன். என் எல்லாப் படங்களிலும் அதைத்தான் நான் முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.”

-கே.ஜி.மணிகண்டன்