சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“இது கலைஞனுக்கான காணிக்கை!”

“இது கலைஞனுக்கான காணிக்கை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இது கலைஞனுக்கான காணிக்கை!”

“இது கலைஞனுக்கான காணிக்கை!”

“எனக்குன்னு ஒரு காசு ஒதுக்கி வெச்சிருப்பல்ல, சம்பளமா கொடுக்க. அதைப் படத்திலேயே போட்டுரு” - மறைந்த ஓவியர் வீரசந்தானம், திரையுலகில் தன் தடத்தைப் பதிக்கத் துடிக்கும் ஓர் இயக்குநரிடம் உதிர்த்த நம்பிக்கை வார்த்தைகள் இவை. “இந்த ஒரு வார்த்தைதான் எங்க படத்தை இவ்வளவு தூரம் கொண்டு வந்தது. இப்போ இருக்கிற எந்த நடிகர் இப்படிச் சொல்வாங்க?” என்கிறார், ‘ஞானச்செருக்கு’ படத்தின் இயக்குநர் தரணி ராஜேந்திரன்.

வீரசந்தானம் தமிழின் முக்கியமான ஓவியராகவும் சமூகப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்கும் கலைஞனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். பல திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த வீர சந்தானம், முழுமையாக ஒரு படத்தில் கதை நாயகனாக நடித்தது ‘ஞானச்செருக்கு’ படத்தில். பல உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் வென்றிருக்கும் இந்தப் படம் திரையிடலுக்காகக் காத்திருக்கும் சூழலில் தரணி ராஜேந்திரனைச் சந்தித்துப் பேசினேன்.

“இது கலைஞனுக்கான காணிக்கை!”

“அதென்ன, ஞானச்செருக்கு?”

“எல்லாக் கலைஞர்களுக்கும் வெற்றி ஒரு இலக்கா இருக்காது. ஒரு இயக்குநருக்கு எந்தப் படமும் ஒரு முழுநிறைவைத் தராது. அப்படி ஒரு நிறைவைக் கொடுத்துட்டா, அவனால அதுக்குமேல ஒரு படம் பண்ண முடியாது. அப்படிப் பல படங்களை எடுத்து, ஒரு முதிர்ந்த பருவத்துல இருக்கிற ஒரு இயக்குநரோட கதை இது. ‘இனி இவரால் சிறந்த படங்களை எடுக்க முடியாது’ என்று தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் ‘இதுவரை எடுத்ததெல்லாத்தையும்விடச் சிறந்த ஒரு படைப்பைக் கொடுக்க முடியும்’னு நம்புற ஒரு கலைஞர் அவர். அந்தப் படத்தை அவர் எடுத்தாரா, இல்லையா என்பதுதான் படம்.”

“இந்தக் கதையை வேறு தயாரிப்பாளர்கள்கிட்ட சொன்னீங்களா?”

“2015-ல இந்தக் கதையை முதல்ல குறும்படத்துக்குத்தான் எழுதினேன். அப்போ என் தாய்மாமா அவரோட நண்பர்கள் மூலமா ஒரு தயாரிப்பாளரைக் கூட்டிக்கிட்டு வந்தார். அதுதான் அவருக்கு முதல் தயாரிப்பும்கூட. அதைப் பெரிய படமா எடுக்கிறதுக்குக் கதை கேட்டார். குறும்படத்துக்கு எழுதிய கதையை டெவலப் பண்ணினேன். அந்தக் கதை அவருக்குப் பிடிச்சிருந்தது. ‘எவ்ளோ செலவாகும்’னு கேட்டதுக்கு, ஒரு கோடி ரூபாய்னு சொன்னேன். சரின்னு கதையை முடிக்கச் சொன்னாங்க. அவங்க கொடுத்த ஒரு மாதம் டைம்ல மழை, வெள்ளம்னு பல பிரச்னை. ரெண்டு மாசத்துக்குப் பிறகு திரும்ப அவங்களைத் தொடர்புகொண்டு பேசினப்போ, சில சிக்கல்களால இப்போ பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அந்த விரக்தியில இருந்தப்போ என் மாமா, ‘நாமளே இந்தப் படத்தைப் பண்ணிடலாம், பட்ஜெட் கம்மியா  எவ்ளோ செலவுல முடிக்க முடியும்’னு கேட்டார். நான் 40 லட்ச ரூபாய்னு சொன்னேன். வங்கியில் அவர் ஒரு பர்சனல் லோன் போட்டார். எங்க அப்பாவும், அண்ணனும் அவர்கள் பங்குக்கு ஒரு பர்சனல் லோன் போட்டாங்க. என் நண்பர்களோட மாதச் சம்பளத்தை எடுத்துக்கிட்டேன். இப்படி உருவானதுதான், ‘ஞானச்செருக்கு’ படம்.”

“இது கலைஞனுக்கான காணிக்கை!”

“ஹீரோவா நடிக்க ஓவியர் வீரசந்தானம் எப்படி ஒப்புக்கிட்டார்?”

“முதல்ல யோசனையாதான் இருந்தார், ‘எனக்குன்னு ஒரு அடையாளம் இருக்கு. அதைக் கெடுத்துக்க முடியாது’ன்னு சொன்னார். பிறகு, இந்தக் கதையைச் சொன்னேன். பிடிச்சுப்போய் நடிச்சார். குறும்படத்துக்கான கதையைத்தான் அவர்கிட்ட சொல்லியிருந்தேன். முழுநீள சினிமாவா எழுதுனப்போ, ‘வேண்டாம்’னு நிராகரிச்சுட்டா என்ன பண்றது... அதனால, கொஞ்சநாளைக்குப் பிறகு அவர்கிட்ட சொன்னேன். ‘இவ்ளோ செலவு பண்ணி என்னை ஹீரோவா போட்டுப் படமெடுத்தா, போட்ட காசு திரும்பக் கிடைக்குமா?’ன்னு கேட்டார். நான் என் முடிவை மாத்திக்கல. ஆனாலும், ‘யோசிச்சுச் சொல்லு’ன்னு ரெண்டு வாரம் டைம் கொடுத்தார். ரெண்டு வாரம் கழிச்சும் அவர் முன்னாடி போய் நின்னோம். நடிக்க வந்துட்டார்.”

“மறைவுக்கு முன் வீரசந்தானம் படத்தைப் பார்த்துட்டாரா... உங்களுக்கும் அவருக்குமான உறவைச் சொல்லுங்களேன்?!”

“அவருக்கான காட்சிகளுக்கு டப்பிங் பேசிக்கொடுத்து முடிச்ச ரெண்டுநாள்ல அவர் இறந்துட்டார். முழுப்படத்தையும் அவர் பார்க்கல. அவர் இல்லைன்னா, இந்தப் படம் இல்லை. படத்தை வியாபாரம் பண்ண, அவருக்குத் தெரிஞ்ச டிஸ்ட்ரிபியூஷன் கம்பனிகள்கிட்ட பேசி உதவி பண்றதாவும் சொல்லியிருந்தார். ஆனா, திடீர்னு ஒருநாள் எங்களை விட்டுட்டுப் போயிட்டார். விகடன் ‘தடம்’ முகநூல் பக்கத்துலதான் அவர் இறந்த செய்தியைப் பார்த்தேன். அதுக்கு முந்தைய நாள் ராத்திரி வரைக்கும் அவர்கூடதான் இருந்தேன். அந்தச் செய்தி பொய்யா இருக்கணும்னு நினைச்சேன். அன்னைக்கு அவர் வீட்டுக்குப் போகும்போது, வாசலுக்குப் பக்கத்துல தண்ணி லாரிகிட்ட மக்கள் தண்ணிக்காக சண்டை போட்டுக்கிட்டிருந்தாங்க. உள்ளே ஒரு பெரும் கலைஞன் இறந்துகிடக்கிறான், வெளியே குழாயடிச் சண்டை. இவ்வளவுதான் இந்தச் சமூகம்னு நினைச்சுக்கிட்டேன்.”

“அவருடைய இல்லாமை எப்படியான தாக்கத்தை உங்களுக்குக் கொடுத்துச்சு?”

“எங்கிருந்து தொடங்குனோமோ, மறுபடியும் அங்கேயே வந்துட்டமாதிரி இருந்தது. படத்துல வொர்க் பண்ணுன பலரும், அவர் இல்லைன்னு நம்பிக்கை இழந்து விட்டுட்டுப் போயிட்டாங்க. திரும்ப புதிய கலைஞர்களை வெச்சு போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளை முடிச்சோம். அதுக்கே ஒரு வருடம் ஆகிடுச்சு. மூணு மாசம் முன்னாடி படத்துக்கான எல்லா வேலைகளும் முடிஞ்சது. பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் ‘ஞானச்செருக்கு’ திரையிடப்பட்டு, ஆறு சர்வதேச விருதுகளை வாங்கியிருக்கு. ஆனா, ஓவியர் இல்லாதது, இல்லாததுதானே... அதை மாத்த முடியாதில்லையா?!”

-சந்தோஷ் மாதேவன்