
இன்பாக்ஸ்
• திருமணத்திற்குப் பிறகு பாலிவுட் இடத்தைத் தக்கவைக்க வெரைட்டியான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், கரீனா கபூர். அக்ஷய் குமாருடன் ‘குட் நியூஸ்’ படத்தில் நடித்துவரும் கரீனா, அதைத் தொடர்ந்து இர்ஃபான் கான் நடிக்கும் ‘அங்ரேஸி மீடியம்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இது கரீனா போலீஸாக நடிக்கும் முதல் படம். கரீனா ஐபிஎஸ்!

• சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் குத்தாட்டம் போட்ட அதா ஷர்மா, தமிழில் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, இந்திப் படங்களில் பிஸியானவர் தமிழ் சினிமாப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. ஆணாக இருந்து திருநங்கையாக மாறுகிற கதாபாத்திரத்தில் இந்தியில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘மேன் டு மேன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அபிர் சென்குப்தா இயக்கும் இந்தப் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அடடா ஷர்மா
• இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலைச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி நடத்த அழைப்பு விடுத்திருந்தது தேர்தல் ஆணையம். அதை மற்ற மாநிலங்கள் எல்லாம் பொருட்படுத்தாதபோது, கேரளா மட்டும் பக்காவாக ஃபாலோ செய்திருக்கிறார்கள். மார்ச் மாதம் கேரள உயர்நீதிமன்றம் தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த முழுமையான தடை விதித்து உத்தரவிட... கட்சிகளும் பிளாஸ்டிக் பேனர்கள், கட் அவுட்டுகள், பிளாஸ்டிக் கொடிகள் என அனைத்தையும் தவிர்த்து, சுவர் விளம்பரங்கள், துணி பேனர்கள் என மாறியது கேரளம். சபாஷ் கேரளா!

• உலக சுகாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மலேரியா நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் சுமார் நான்கு லட்சம் மக்கள் மலேரியாவால் இறக்கிறார்கள். இந்நிலையில், உலகின் முதல் மலேரியா தடுப்பூசியை இரண்டு வயதுக் குட்பட்ட குழந்தைகளுக்குச் செலுத்தித் தடம் பதித்திருக்கிறது ஆப்பிரிக்காவிலுள்ள மலாவி தேசம். இது நாற்பது சதவிகிதம் வரை இறப்பு விகிதத்தைக் குறைக்கும் என நம்பப்படுகிறது. வாழ்த்துகள் மலாவி!

• சர்ச்சைப் பேச்சுகளால் அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறவர் பா.ஜ.க-வின் சாத்வி பிரக்யா. இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் போபால் தொகுதி பா.ஜ.க வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதானவர். தன்னுடைய மார்பகப் புற்றுநோய் சிகிச்சையைக் காரணம் காட்டித் தற்போது பெயிலில் வெளிவந்திருக்கிறார். பிரசாரத்தில் இவர் பேசுபவை எல்லாமே வெடிகுண்டுகள். முதலில் ``பாபர் மசூதியில் ஏறி நானே இடித்தேன்’’ என்றார். ‘`அப்போ உங்களுக்கு 4 வயசும்மா...’’ என்று கலாய்த்தனர் நெட்டிசன்கள். அடுத்து ‘`நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது பசுவின் சிறுநீரைக் குடித்து குணமானேன்’’ என்று கருத்து சொல்ல... ‘`அப்படீனா இந்தியா முழுக்க கேன்சர் இன்ஸ்டிட்யூட்களை மூடிடுங்க, கோமூத்ரா மையங்கள் திறந்திடுங்க’’ என்றும் ``அதான் குணமாகிடுச்சுல்ல, மறுபடியும் ஜெயிலுக்குப் போங்க’’ என்றும் நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளிவிட்டார்கள். வாய்ல கண்டம்!
• பிரியங்கா சோப்ரா சர்வதேச அளவில் சீரியல், படங்கள் எனத் தன்னை பிஸியாக வைத்துள்ளார். பிரியங்காவைக் கதாநாயகியாகக் கேட்கவரும் பாலிவுட் தயாரிப்பாளர்கள் டேக் டைவர்ஷன் போட்டு அவரது போட்டியாளர்களில் ஒருவரான கத்ரீனா கைஃபை அணுகுகிறார்கள். அப்படி கத்ரீனாவுக்குக் கிடைத்ததுதான், சலமான்கானின் ‘பாரத்’ படம். அதேபோல அடுத்து பி.டி.உஷாவின் பயோபிக் படத்திலும் பிரியங்காவுக்கு முயற்சி செய்து கடைசியில் கத்ரீனாவில் முடித்திருக்கிறார்கள். அவருக்கு பதில் இவர்!

• சமீபத்தில் நிலாவும், சனிக்கிரகமும் ஒரே நேர்க்கோட்டுக்கு வந்துள்ளது. இந்த இரு கிரகங்களும் ஒன்றை ஒன்று கடக்கும் முன்பு இரண்டும் மோதுவது போலப் படமெடுத்திருக்கிறார் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கிரான்ட் பீட்டர்சன். இந்தப் படத்தின் சிறப்பே இதை விண்வெளிக்குச் சென்றெல்லாம் எடுக்கவில்லை, தன் வீட்டின் மொட்டைமாடியில் வெறும் டெலஸ்கோப்பில், ஸ்மார்ட்போனைப் பொருத்திப் படம்பிடித்துள்ளார் என்பதுதான். கிரகமும், கிரகமும் மோதும் இந்தப் படத்தை ட்விட்டரில் பதிவிட்டுப் பல நாள்களாக ட்ரெண்டிங் பட்டியலில் வலம்வருகிறார் பீட்டர்சன். நிஜமாவே சனிதானா?

• கதாநாயகிகளை மையமாகக்கொண்ட படங்கள் இந்தியாவில் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. பிரபல ஹாலிவுட் படமான ‘டாம்ப் ரைடர்’ படத்தைத் தழுவி இந்தியில் ஒரு படம் உருவாகவிருக்கிறது. இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளார். விபரீத விளையாட்டு