சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சொல்லப்படுவது எல்லாம் உண்மையில்லை!

சொல்லப்படுவது எல்லாம் உண்மையில்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்லப்படுவது எல்லாம் உண்மையில்லை!

சொல்லப்படுவது எல்லாம் உண்மையில்லை!

“2015 டிசம்பர் மழை, வெள்ளத்தைச் சென்னை மறக்குமா? அந்த வெள்ளம் எத்தனையோ பாடங்களை உணர்த்திட்டுப் போச்சு. ஆனா, அதே மழை, வெள்ளம் தந்துட்டுப்போன இன்னொரு விஷயம், அன்பு.  ஒரே வீட்டுக்குள்ள இருந்தாலும், பேசிப் பழகிக்காத இயந்திரத்தனமான வாழ்க்கையில இருந்தவங்களை ஒரு உலுக்கு உலுக்குச்சு இல்லையா... பகலும் இருண்டு கிடந்த அந்த மழை நாள்ல, நான் பக்கத்துல இருந்து பார்த்த ஒரு அந்நியோன்யத் தம்பதியே இந்தக் கதைக்கு இன்ஸ்பிரேஷன். சுருக்கமா சொல்லணும்னா, 2015 வெள்ளப் பின்னணியில் ஒரு காதல் கதை” - பரவசமாய்ப் பேசுகிறார் லஷ்மி ராமகிருஷ்ணன்.

 ‘ஆரோகணம்’ படத்தில் விஜி சந்திரசேகரைக் கதை நாயகியாக்கியவர், இப்போது விஜியின் மகள் லவ்லினைக் கதாநாயகியாக்கி ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

சொல்லப்படுவது எல்லாம் உண்மையில்லை!

“ஒரு வீடு; அது முக்கால்வாசி உயரம் தண்ணீருக்குள் இருக்கணும். அதுக்கு, ஒரு நாளைக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் வேணும். சென்னைக்குள்ளே எங்கிருந்து கிடைக்கும்?! பத்து நாள் க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கிற்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் தேவையா இருந்தது. தவிர, அவ்ளோ தண்ணீரைத் தேக்கி வைக்கிறப்போ பாதுகாப்பு ரொம்ப முக்கியம். பயன்படுத்திட்டு அவ்வளவு நீரையும் வேஸ்ட் ஆக்கினாலும் ஏத்துப்பாங்களா... அதனால, மறுபடியும் பயன்படுத்தி ஆகணும்.

பிறகு அதை எப்படிப் பண்ணலாம்னு யோசிச்சப்போதான், விஜியோட பண்ணையும், பம்ப்செட் கிணறும் ஞாபகத்துக்கு வந்தது. அங்கே ஷூட்டிங் பண்றப்போ, விஜியின் கணவர் சந்திரசேகர் எங்களுக்கு அவ்வளவு ஆதரவா இருந்தார். மகாபலிபுரம் பக்கத்துல இருக்கிற அந்தப் பண்ணையில 1500 சதுர அடியில ஒரு வீட்டைக் கட்டினோம். வீடு தண்ணீருக்குள்ளேயே இருக்கணும்கிறதால, அண்டர்கிரவுண்ட்ல டேங்க் கட்டித் தண்ணீரைத் தேக்கி, அதைச் சுத்தி வீடு கட்டப்பட்டுச்சு. தினமும் தண்ணீரை மாத்திக்கிட்டே இருப்போம். முதல்நாள் பயன்படுத்திய தண்ணீரை மறுநாள் டியூப் மூலமா வெளியேத்தி, பக்கத்துல இருக்கிற வயலுக்குப் பாய்ச்சினோம். மொத்தத்துல, என் முந்தைய படங்கள்ல சந்திக்காத புது அனுபவம் ‘ஹவுஸ் ஓனர்’ ஷூட்டிங்ல கிடைச்சது.  முகநூல்ல லவ்லின் அவங்க அம்மாகூட சேர்ந்து ஒரு போட்டோ போட்டிருந்தாங்க. அதைப் பார்த்துட்டுதான் நான் விஜிகிட்ட பேசினேன். செம டைமிங்கான பொண்ணு. அமேஸிங்கா நடிச்சாங்க. கிஷோருக்கு ஜோடியா, ‘அந்நியன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்கள்ல நடிச்ச ஸ்ரீரஞ்சனி நடிச்சிருக்காங்க.”

“லஷ்மி ராமகிருஷ்ணன் என்றால் இன்னமும்கூட ’சொல்வதெல்லாம் உண்மை’தான் ஞாபகத்துக்கு வருது...”

“ ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை இயக்குறதுக்கு முன்னாடி ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை மையமா வெச்சு நானே ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிக்கிட்டிருந்தேன். அந்த நிகழ்ச்சியை மோசமா சித்திரிச்ச படம் மாதிரி இல்லாம, அந்த ஷோவுல எதெல்லாம் உண்மை, பொய்னு புட்டுப் புட்டு வைக்கிற மாதிரி ஒரு படமா அதை உருவாக்கினேன். அந்தச் சமயத்துலதான் அந்த நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை விதிச்சது. அதனால, அந்த முயற்சியை அப்படியே விட்டுட்டேன். மத்தபடி, ‘சொல்வதெல்லாம் உண்மை’ எனக்குக் கத்துக்கொடுத்த விஷயங்கள் அதிகம். நிறைய வலிகளையும் கொடுத்தது. மக்கள் என்னைக் குறை சொல்லலை; ஒருசிலர் எல்லை தாண்டி விமர்சனம் பண்ணினாங்க. தவிர, அது ஒரு நிகழ்ச்சி. தீர்ப்பு தர்றதுக்கு நாங்க நீதிமன்றம் கிடையாது. அதை, சிலர் புரிஞ்சுக்கலை. ஒரு தொலைக்காட்சி எந்நேரமும் டி.ஆர்.பி-யைக் கணக்கு பண்ணியே நிகழ்ச்சிகளைப் பண்ணாது. என் மனசாட்சியைத் தொட்டுச் சொல்றேன்... அந்த நிகழ்ச்சிக்காக உட்கார்ந்த ஒருநாளும் நான் டி.ஆர்.பி-யை மனசுல வெச்சுக்கிட்டு நிகழ்ச்சியை நடத்தல. அதேசமயம், இந்த நிகழ்ச்சி என்னை அதிகமா பிரபலப்படுத்தியதும் உண்மை.”

- அய்யனார் ராஜன்