சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

மதுரை... மைக்ரோசாஃப்ட்... தமிழ்சினிமா!

மதுரை... மைக்ரோசாஃப்ட்... தமிழ்சினிமா!
பிரீமியம் ஸ்டோரி
News
மதுரை... மைக்ரோசாஃப்ட்... தமிழ்சினிமா!

மதுரை... மைக்ரோசாஃப்ட்... தமிழ்சினிமா!

த்தடிக்குப் பறந்தடிக்கும் மாஸ் ஹீரோ இல்லை, கமர்ஷியல் கன்டென்ட்டுக்கு இதெல்லாம் தேவை என்று சேர்க்கப்படும் இரட்டை அர்த்த வசனங்களோ பாடல்களோ இல்லவே இல்லை. இத்தனை இல்லைகள் இருந்தும் இருக்கையுடன் நம்மைக் கட்டிப்போடுகிறது சமீபத்தில் வெளிவந்த ‘வெள்ளைப் பூக்கள்’ திரைப்படம். அமெரிக்க நகர் ஒன்றில் நிகழும் தொடர் கடத்தல், கொலைகளில் ஈடுபடும நபர் யார் என்பதை ஓய்வுபெற்ற இந்தியக் காவல்துறை அதிகாரி எப்படிக் கண்டறிகிறார் என்பதே இதன் கதை. இந்தப் பட இயக்குநர் விவேக் இளங்கோவன், ஓர் அமெரிக்க வாழ் தமிழர். பட ரிலீஸுக்காகச் சென்னை வந்துவிட்டு மீண்டும்  அமெரிக்கா புறப்பட்டுக்கொண்டிருந்தவரைச் சந்தித்தேன்.

“அம்மாவுக்கு மதுரை, அப்பாவுக்குத் திருச்சி. 10-வது வரை திருச்சியில் படிச்சிட்டு சென்னைக்கு வந்தேன். இங்க காலேஜ் முடிச்சிட்டு மாஸ்டர் டிகிரி படிக்க சிகாகோ போயிட்டேன். எழுத்து மேல எனக்கு ஆர்வம் அதிகம். படிச்சு முடிச்சதும் சியாட்டில் மைக்ரோசாஃப்ட்ல வேலை கிடைச்சது. வேலைக்குச் சேர்ந்த பிறகு எழுதுறதையே விட்டுட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு ‘இண்டஸ் கிரியேஷன்ஸ்’னு ஒரு நாடகக் குழுவின் அறிமுகம் கிடைச்சது. அவங்களுக்காக மறுபடியும் எழுத ஆரம்பிச்சேன். சில நாடகங்கள், குறும்படங்களுக்கு எழுதினேன். பிறகு, ‘நாம ஏன் சினிமா பண்ணக்கூடாது’ன்னு ஸ்க்ரிப்ட் எழுத ஆரம்பிச்சேன். அப்படி எழுத ஆரம்பிச்சது, இப்போ ‘வெள்ளைப்பூக்கள்’ல கொண்டு வந்து விட்டிருக்கு.”

மதுரை... மைக்ரோசாஃப்ட்... தமிழ்சினிமா!

“ ‘வெள்ளைப்பூக்கள்’ கதைக்கருவை எங்க பிடிச்சீங்க?”

“ரெண்டு விஷயங்களால இந்த ஐடியா எனக்குக் கிடைச்சது. அம்மாவும் அப்பாவும் என்னைப் பார்க்க அடிக்கடி அமெரிக்கா வருவாங்க. ரொம்ப போர் அடிக்கும்போது வாக்கிங் போறது, அக்கம்பக்கத்துல உள்ளவங்களோட பழகுறதுன்னு எதையாவது பண்ணிட்டிருப்பாங்க. அப்படி இவங்க வரும்போது அங்க ஒரு பிரச்னை நடந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சேன். அடுத்து, படத்துல பேசின மாதிரியே சியாட்டில் பக்கத்துலயே சில சம்பவங்கள் நடந்தது. அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வை ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருத்தர் கண்டுபிடிச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சதன் விளைவுதான் இந்த வெள்ளைப்பூக்கள்.”

“கதாபாத்திரங்களை எப்படித் தேர்வு பண்ணுனீங்க?”

“இவங்களை வெச்சுதான் படம் பண்ணணும்னு எந்தத் திட்டமிடலும் இல்லை. கதைக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுத்து முதல்ல எழுதி முடிச்சேன். ஹீரோவுடைய அப்பாதான் படத்தின் முக்கியமான கதாபாத்திரம். அதுக்கு மட்டும் ஒரு பரிச்சயமான முகம் வேணும்னு யோசிச்சேன். 90-கள்ல பிறந்த எனக்கு விவேக் சார்தான் நினைவுக்கு வந்தார். நகைச்சுவை நடிகர் என்பதைத் தாண்டி அவர் நல்ல குணச்சித்திர நடிகர். ஸ்க்ரிப்டை முடிவு செய்த பிறகு நண்பர் உதவியோட அவர்ட்ட பேசும் வாய்ப்பு கிடைச்சது. ஒரு பக்கத்துக்கு ஸ்க்ரிப்ட்டை சுருக்கி அனுப்பினேன். ‘எனக்கு முழு ஸ்க்ரிப்டும் வேணும்’னு கேட்டார். அனுப்பினேன். ‘ரொம்ப நல்லா இருக்கு.  இதுல காமெடியே இல்லையேப்பா. நான்தான் பண்ணணுமா’ன்னு கேட்டார். ‘கண்டிப்பா நீங்கதான் சார் பண்ணணும்’னு சொன்னேன். ‘சார்லிகூட வேலை செஞ்சு ரொம்ப நாளாச்சு, அவரை இந்த ரோல் பண்ணச் சொல்லலாம்’னு அவர்தான் சார்லி சாரை ஃபிரெண்டு ரோலுக்குக் கேட்கச் சொன்னார். மற்ற எல்லாக் கதாபாத்திரங்களையும் ஆடிஷன் வெச்சுதான் தேர்வு பண்ணினோம்.”

“ஷூட்டிங்குக்கு சிறப்புத் திட்டமிடல் ஏதும் இருந்ததா?”

“ ‘விவேக் சார் காமெடி பண்ணுவார்’ங்கிறதுதான் எல்லோருடைய மனநிலையாவும் இருக்கும். அதை உடைக்கணும்னா அவரோட இன்ட்ரோ ஸீன் புதுசா இருக்கணும்னுதான் அவர் கொலை பண்ற மாதிரி ஸீன் வெச்சோம். அடுத்து அவருடைய மனநிலை எப்படி இருக்கும் என்பதை மக்களுக்குக் கடத்தணும். அதனால் அவருக்குன்னு ஒரு மைண்ட் ரூம் ரெடி பண்ணினோம். அங்க அவர் தனக்குத்தானே பேசிப்பார். அப்படிப் பேசிப்பேசி ஒவ்வொரு விஷயத்தையும் கண்டுபிடிப்பார். படத்துல நிறைய இங்கிலீஷ் ஆட்கள் வர்றதுனால ஹாலிவுட் வாடை வந்துடக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்தேன். விஷுவலிலும் அதைக் கொண்டுவந்தேன்.”

“படம் டெக்னிக்கலா இன்னும் நல்லா இருந்திருக்கலாமோனு சொல்றாங்களே?”

“அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகுள்னு பல நிறுவனங்களில் வேலை பார்த்தவங்கதான் படத்துல வொர்க் பண்ணியிருக்கோம். யாருக்குமே முன்னனுபவம் இல்லை. எல்லாருமே யூடியூப் வீடியோக்களைப் பார்த்துதான் கத்துக்கிட்டோம். அதே சமயம் படத்துடைய பட்ஜெட்டும் குறைவு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி பண்ணினோம். இதுதான் எங்களுடைய முதல் படம். அடுத்தடுத்த படங்கள்ல கண்டிப்பா திருத்திப்போம்.”

“அமெரிக்காவில் தமிழுக்கும் தமிழ் சார்ந்த கலைகளுக்குமான இடம் எப்படி இருக்கு?”

“தமிழ் மக்கள் இருக்கிற எல்லா இடங்களிலும் ஒரு சங்கம் இருக்கும். பொங்கல், தீபாவளின்னு எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவாங்க. கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள்னு எல்லாமே நடக்கும். பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு முதல் நாள் முதல் ஷோ போய்ப் பார்ப்போம். இப்போ நடந்திட்டிருக்கிற ஐ.பி.எல் கூட கும்பலா தமிழ் ஆட்களோடதான் பார்ப்போம். இப்படி அங்க இருக்கிற தமிழ் ஆளுங்க எல்லோரும் ஒற்றுமையாதான் இருக்கோம். இந்தப் படத்துல கிடைச்ச லாபத்தைக்கூட அங்க இருக்கிற உதவும் கரங்கள், ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்கான சேரிட்டிகளுக்குத்தான் நிதியா கொடுத்திருக்கோம். அமெரிக்க மக்கள், இந்திய சினிமான்னாலே பாலிவுட் படங்களைத்தான் நினைச்சிட்டிருக்காங்க. இப்போதான் தமிழ்ப் படங்களுக்கு சப்டைட்டில் வெச்சு வெளியிடுறாங்க. அங்க இருக்கிற மக்களும் இதை வரவேற்கிறாங்க. இது இன்னும் அடுத்த லெவலுக்குப் போனா நல்லா இருக்கும்.”

-தார்மிக் லீ

படம்: க.பாலாஜி