
மிஸ்டர் மியாவ்
*லைகா நிறுவனம் தயாரிப்பில் பரபரப்புடன் தொடங்கியது கமலின் ‘இந்தியன் 2’. ஷங்கர் இயக்க, ஹீரோயினாக காஜல் அகர்வால் கமிட் ஆனார். சில பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக, படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால், படத்தைத் தயாரிக்க வேறொரு தயாரிப்பு நிறுவனத்தை அணுகினார், ஷங்கர். ஆனால், மீண்டும் லைகா நிறுவனமே படப்பிடிப்பை நடத்த வேகம் காட்டுகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படலாம்.

*பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது நடித்துவருகிறார், சிவகார்த்திகேயன். இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சிவாவுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க, தங்கையாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். முக்கிய கேரக்டர்களில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, யோகி பாபு, சூரி, நட்டி ஆகியோரும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியிருக்கிறது. இதுதவிர இயக்குநர் மித்ரனின் ‘ஹீரோ’ படத்திலும் நடித்துவருகிறார் சிவா.

*தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர், ஸ்ரேயா. சிம்புவுடன் இணைந்து ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்தார். பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நரகாசூரன்’ படத்தில் நடித்தார். இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில், தற்போது நடிகர் விமலுடன் இணைந்து ‘சண்டக்காரி’ படத்தில் விமலுக்கு பாஸாக நடித்துக்கொண்டிருக்கிறார், ஸ்ரேயா.
*செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம், ‘என்.ஜி.கே’. சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள். இந்தப் படத்துக்கு கேரளத்தில் அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளன. சூர்யா மற்றும் சாய் பல்லவிக்குக் கேரளத்தில் அதிக ரசிகர்கள் இருப்பதே இதற்குக் காரணம்.
*தெலுங்குப் படத்தின் ரீமேக்கான ‘அயோக்யா’வில் நடிகை ராஷி கண்ணாவுக்குக் குரல் கொடுத்தவர், டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனா ரவி. ஆனால், டைட்டில் கார்டில் டப்பிங் கலைஞர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இந்த வருத்தத்தை ட்விட்டரில் தெரிவித்திருந்தார், ரவீனா ரவி. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக, ராஷி கண்ணா பதில் ட்வீட் தட்ட, ராஷியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

*40 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்கள் வரிசையில் இருக்கும் முன்னணி நடிகருக்கு, ஒரு படத்தை இயக்கவேண்டும் என்பது ஆசை. அதற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகிவிடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.
*`காதலுக்கும் தனக்கும் செட்டாகவே இல்லை’ எனப் புலம்பி வருகிறராம், வாரிசு நடிகர். இவர் காதலித்த நாயகிகள் எல்லோரும் செட்டில் ஆகிவிட்டனர். ஆனால், இவருக்கு இன்னும் அமையவில்லை. நடிகரின் இந்த நிலையைப் பார்த்து பெற்றோரும் நண்பர்களும் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.