சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

@வடபழனி ஆர்.கே.எஸ்.மகேஷ், சென்னை.

சர்ச்சைக்குரிய கருத்து சொன்ன கமலைவிட, அதற்கு எதிர்வினையாற்றிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிறைய எதிர்ப்பு கிளம்புவது ஏன்?

‘கொடுத்த காசுக்கு’ மேல ஓவராக கூவியதற்காக இருக்கலாம். யாகாவாராயினும் நா காக்க...

வி.சண்முகம், திருவாரூர்.

கோட்சேவை ‘தீவிரவாதி’ என்கிறார் கமல்ஹாசன். ‘தேசபக்தர்’ என்கிறார் பி.ஜே.பி சாமியார் பிரக்யா. உண்மையில் கோட்சே யார்?

கழுகார் பதில்கள்!

‘தேசபக்தி’  என்கிற வெறி கொஞ்சம் ‘தீவிர’மாக ஊட்டி விடப்பட்டதால், ‘தேசப் பிதா’வையே கொன்ற கொலைகாரர்!

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

‘ராகுல் காந்தி பிரதமர் ஆவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை’  என்று இப்போது மம்தா பானர்ஜி சொல்கிறாரே?

பி.ஜே.பி படுத்தி எடுப்பதால், பயத்தில் உளற ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது.

‘மேட்டுப்பாளையம்’ மனோகர், கோவை-14.

‘இந்தியப் பிரதமர் பதவியை மாநில வாரியாக, சுழற்சி முறையில் வழங்கவேண்டும்’ என்கிற சீமானின் கருத்து சாத்தியமா?

மிகச் சரியான கருத்து. பலதரப்பட்ட இனம், மொழி பேசும் நாடு என்பதால் எல்லா மாநிலத் தவருக்கும் ஆளும் உரிமை இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்புள்ள கருத்து. இதன் மூலமாக இந்தியாவின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த முடியும். ஆனால், துக்ளக் தர்பாராக மாறவும் சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. ஏனெனில், ஒவ்வொரு தலை மாறும் போதும் காட்சிகளும் மாறும்... தொடர்ச்சி?

@ஜி.ஆர்.மாதேஸ்வரன், புளியம்பட்டி, ஓமலூர்.

பணமே செலவழிக்காமல், அரசியல் மூலமாக மக்களுக்கு உழைக்க முடியாதா?

அரசியல் மூலமாக என்றால் கொஞ்சம் கஷ்டம். கைக்காசைப் போட்டு எவ்வளவுதான் உழைக்கமுடியும்? அல்லது பிறரிடம் இருந்து எவ்வளவுதான் நிதியை எதிர்பார்க்க முடியும். ஆனால், அரசு இயந்திரம் மூலமாக நிச்சயம் உழைக்கலாம். சொந்தப் பணத்தையோ, பிறரின் நிதி உதவியையோ துளிகூட எதிர்பார்க்கவே தேவையில்லை. அரசாங்கத்துக்கு அபரிமிதமாக வருவாய் வந்துகொண்டிருக்கிறது. அதேசமயம், தேவையில்லாத செலவுகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை எல்லாம் அடையாளம் கண்டு அணைகள் போட்டாலே... மக்களுக்குத் தேவையான அனைத்தையும் அழகாகச் செய்யமுடியும். என்ன, ‘புறங்கையை நக்கும் ஆசை’ இல்லாதிருக்கவேண்டும்.

எம்.டி.உமாபார்வதி, சென்னை.

பெரும் பணக்காரர்கள்தானே பெரும்பாலும் மூடநம்பிக்கைகளில் வீழ்ந்துகிடக்கிறார்கள்?

பெரும் பணத்தைக் கொட்டி, மூடநம்பிக்கை களுக்கு முதலில் விளம்பரம் கொடுக்கிறார்கள் பணம் படைத்த பலரும். அதைப் பார்த்துவிட்டு ஏழை பாழைகளும்கூட அதேவழியில் பயணப்பட ஆரம்பித்து, கையிருப்பைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘புளிச்ச ஏப்பக்காரனுக்கும் பசி ஏப்பக்காரனுக்கும்’ உள்ள வேறுபாட்டை ஏழைகள் அறியச் செய்யவேண்டும். வகைதொகை யில்லாமல் வந்து கொட்டும் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் கண்டபடி அள்ளி விடுபவர்களைப் பார்த்து, ஏழை வர்க்கம் சூடுபோட்டுக்கொள்வதைத் தவிர்க்கவேண்டும்.

எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்.

இரண்டெழுத்து நாடாளுமன்றத் தொகுதியில், தனக்கு வாக்களிக்காதவர்களிடம் பணத்தைத் திருப்பிக் கேட்கிறாராமே மூன்றெழுத்து முக்கியப் புள்ளியின் மகன்?

தொகுதி மூன்றெழுத்து, பணம் மூன்றெழுத்து, புள்ளி மூன்றெழுத்து, மகன் மூன்றெழுத்து, தோல்வி மூன்றெழுத்து, வெற்றி மூன்றெழுத்து, பதவி மூன்றெழுத்து, ஆட்சி மூன்றெழுத்து, ஆயுள் மூன்றெழுத்து, பாவம் மூன்றெழுத்து. பல்பு மூன்றெழுத்து... ஏதாவது புரிகிறதா?

கழுகார் பதில்கள்!மு.மதிவாணன், காஞ்சிபுரம்.

பி.ஜே.பி தலைவர் அமித் ஷா, ‘அடியாட்களை வேட்பாளர்களாக நிறுத்தினால், தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியாது’ என்று பேசியிருப்பது எதைக் காட்டுகிறது?


இதை அமித் ஷா சொல்லக்கூடாது. அவருடைய பி.ஜே.பி-யின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களில் 40 சதவிகிதம் பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களே!

ஆர்.ராஜேந்திரன், கவுண்டன்பாளையம்.

‘அயோக்யா’ படத்தில், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 24 மணி நேரத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. இது சாத்தியம்தானா?

‘சினிமா போதை’ அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இத்தகையச் சூழலில், கற்பனையான விஷயங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால், மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துகிடக்கும் சட்டம், நீதி போன்ற விஷயங்களை நடைமுறைக்கு ஒவ்வாத வகையில் காண்பிப்பது சரியானதல்ல. சம்பந்தப்பட்ட நபரே ‘நான்தான் கொலையாளி’ என்று சொன்னால்கூட உடனடியாகத் தூக்கு என்பது சட்டப்படி சாத்தியமே இல்லை. இது, அபத்தத்தின் உச்சம்.

பா.சு. மணிவண்ணன், திருப்பூர்-4.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றில், பொய்யான தகவல்கள்தான் அதிகமாக வருகின்றன. இதைத் தடுக்க வழியே இல்லையா?

உங்களிடமே இருக்கிறது அதற்கான எளிமையான வழிகள். ஒரு தகவல் உங்களுக்கு வந்ததுமே, ‘யாருக்காவது ஃபார்வர்ட் செய்தாக வேண்டுமே’ என்று உங்கள் கை பரபரக்க ஆரம்பிப்பதை முதலில் தடுத்து நிறுத்துங்கள், பாதி பிரச்னை தீர்ந்துவிடும். நம்பகமான செய்தி நிறுவனங்களை மட்டுமே பின்தொடருங்கள்... மீதிப் பிரச்னையும் தீர்ந்துவிடும்.

@ஞானப்பிரகாஷ், தொம்பன்குளம்.

ஊடகத்தில், காவிரி டெல்டா பிரச்னை குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. ஆனால், வானம் பார்த்த பூமிகளான விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை பற்றியெல்லாம் பேசப்படுவதில்லையே?

காவிரி, பக்கத்து மாநிலத்துடனான வாய்க்கால் தகராறு. பேசியேதான் ஆகவேண்டும். நீங்கள் சொல்வது இயற்கையுடனான தகராறு. இதற்கு யாரைப் பஞ்சாயத்துக்கு அழைப்பது?

@அ.குணசேகரன். புவனகிரி.

‘இந்துக்கள் திருடர்கள்’ என்று சொன்ன கருணாநிதி, ‘இந்துதான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி’ என்று சொன்ன கமல்ஹாசன்... ஒப்பிடுங்கள் பார்க்கலாம்?

கழுகார் பதில்கள்!

இருவருக்கும் நிறையவே ஒற்றுமைகள் உண்டு. கருணாநிதி களத்தில் விளையாடுவார்... கமல் திரையில் விளையாடுவார். தேவை என்றால், ‘ராமானுஜர் நம்மவர்’ என்று கதை எழுதும் கருணாநிதி, தேவையில்லை என்றால், ‘திருடர்கள்’ என்று திருப்பிப்போடுவார். ‘அடியேன் ராமானுஜ தாசன்’ என்று குடுமி வைத்துக்கொண்டு கும்பிட்டு விழும் உலக நாயகன், தேவையில்லை என்றால், ‘அப்பா பெயர் ராமசாமி நாயக்கர்’ என்று அந்தர்பல்டி அடிப்பார்.

@இ.முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.

மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றதுபோல, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்ற அரசியல்வாதிகள் இருக்கிறார்களா?

கழுகார் பதில்கள்!

அந்த ஆச்சர்யமும் நடந்திருக்கிறதே! கர்நாடக மாநிலத்தில் 2004-ம் ஆண்டு நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்தேமார ஹள்ளி (தனி) தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் துருவநாராயணா பெற்ற வாக்குகள் 40,752. ஜனதா தள் (எஸ்) வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி பெற்ற வாக்குகள் 40,751. ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றதால், கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்புக்காக இன்றுவரை காத்துக் கிடக்கிறது. தற்போது இருவருமே காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

மல்லிகா அன்பழகன், சென்னை-78. 

கி.பி 11-ஆம் நூற்றாண்டில் மறைந்த ராஜராஜ சோழனின் சமாதியை, 21-ம் நூற்றாண்டில் ஆய்வு செய்தால் என்ன கிடைக்கும்?

கழுகார் பதில்கள்!

பிரமிடுகளின் தேசமான எகிப்தில் எப்போது தோண்டினாலும் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறும் வாழ்க்கை முறையும் கண்முன்னே காட்சிகளாக விரிகின்றன. சமீபத்தில் தோண்டியபோதுகூட, மம்மி (பாடம் செய்யப்பட்ட மனித உடல். இது, மன்னர் பரம்பரையினருடையது என்று சொல்லப்படுகிறது) கிடைத்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் தோண்டுமிடம் தோறும் (ஆதிச்சநல்லூர், கீழடி) நான்காயிரம், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நம்முடைய வரலாறு காணக்கிடைக்கிறது. இப்படிக் கிடைப்பவற்றை எல்லாம் வைத்து, பெருமைப்படலாம். அவற்றின் மூலமாக இன்றைய உலகுக்கு ஏதாவது பயன்கள் கிடைக்கும் என்றால் கொண்டாடலாம். ஆனால், ‘‘ராஜராஜ சோழன் எங்க சாதிடா... நாங்கள்லாம் ‘அருவா’னு சொன்னாலே ஆயிரம்பேர் தலை உருளும்டா’ என்றெல்லாம் பீற்றிக் கொண்டால், எந்தப் பலனும் இருக்காது. வெற்றுப் பெருமையும் வேண்டாத சண்டையும்தான் உருவாகும்!

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:


கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!