
“நாயை வைத்து மனிதம் பேசியிருக்கிறோம்!”
“மனிதர்கள் மறந்து போன மனிதத்தை, ஒரு நாயை முன் வைத்து வலியுறுத்தும் படம் தான் ‘டேனி’ ’’ - இயக்குநர் சற்குணத்திடம் உதவி யாளராக இருந்து, தன் முதல் படத்தை இயக்கும் சந்தானமூர்த்தி உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார்.

“ஒரு க்ரைம், அதன் பின்னணிகள், அதனூடாகப் பெண்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்னைகள், கிராமத்தில் பணிபுரியும் ஒரு பெண் காவல்துறை அதிகாரி சந்திக்கும் சவால்கள் - இதுதான் ‘டேனி.’ முக்கியமா பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழல், இந்தக் கதையின் பின்னணியில் இருக்கும்.படத்தின் முதன்மைப் பாத்திரம் வரலெட்சுமி சரத்குமார். அவருடன் வேல.ராமமூர்த்தி, அனிதா சம்பத் என, பலர் நடிச்சிருக்காங்க.
என் முதல் கதை ‘டேனி’ இல்லை. நான் முதல்ல ஒரு கதை எழுதி, அதைப் பல பெரிய ஹீரோக்கள்கிட்ட சொல்லி அதுக்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை. யாருகிட்ட கதை சொல்லப்போனாலும், ‘எனக்கான ஒரு கதையைச் சொல் லுங்க’ன்னுதான் சொல்றாங்களே தவிர, சொல்ற கதையில இருக்கிற கதா பாத்திரத்துக்குள்ள அவங்களைப் பொருத்திப்பார்க்கத் தயாரா இல்லை. அப்படியிருக்கும் போதுதான், ‘டேனி’ கதையை ரெடி பண்ணினேன். ரெண்டு வருடம் இதுக்காகப் பல ஆராய்ச்சிகள் செஞ்சு திரைக்கதையை எழுதினேன்.
சற்குணம் சார்கிட்ட ‘சண்டிவீரன்’ படத்துல உதவியாளரா இருக்கும் போது, அதுக்கு ஒளிப்பதிவு செய்த பி.ஜி.முத்தையா சார் எனக்குப் பழக்கம். பிறகு, அவர் இயக்கிய ‘மதுரவீரன்’ படத்துல அவரோட உதவியாளரா இருந்தேன். இப்போ என் முதல் திரைப்படத்தை அவரே தயாரிக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவாளர் ஆனந்த்குமார், படத்தொகுப்பாளர் ஃபாஸில்... இப்படி நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டணி அமைந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்.”

“வரலெட்சுமிதான் இந்தக் கதையின் மையமா?”
“ஆமாம். ‘டேனி’யின் கதை தஞ்சாவூரில் நிகழ்கிறது. தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் காவல்துறையில் பணிபுரியும் ஒரு பெண் அதிகாரிக்கு எப்படியெல்லாம் உயர்மட்டத்திலிருந்து அழுத்தம் தரப்படும், அதை ஒரு எளிய பெண்ணாக இருந்து எப்படி அவர் எதிர்கொள்கிறார், இந்தத் தடைகளை யெல்லாம் கடந்து எப்படி அவர் அந்த வழக்கை வெற்றிகரமாக முடிக்கிறார் என்பதை வரலெட்சுமி அழகா பிரதிபலிச்சிருக்கார்.”
“ஹாலிவுட்ல மட்டுமல்ல, விலங்குகளை மையப்படுத்தி நிறைய படங்கள் கோலிவுட்டிலும் வருகின்றன. அவற்றிலிருந்து ‘டேனி’ எப்படி வேறுபடும்?”
“ஹாலிவுட்ல அனிமல் ஜானர் படங்களின் அரசியல் வேறு. மக்களின் அன்றாடப் பிரச்னையைச் சிந்திக்கவிடாம, அவங்களைத் திசை திருப்பும் ஒரு ஃபேன்டஸி உலகத்தை உருவாக்குவதுதான், அவங்க நோக்கமாக நான் பார்க்கிறேன். தமிழில் வரும் விலங்குப் படங்களில் பெரும்பான்மையானவை வெறும் வித்தைகாட்டும் படங்கள். ‘டேனி’ முழுக்க முழுக்க உணர்வுகளைப் பற்றிப் பேசும் ஒரு க்ரைம் படம்.

வரலெட்சுமி ஓர் அதிகாரி, அதேபோல டேனி, டாக் ஸ்குவாடில் இருக்கும் ஒரு சாமர்த்தியமான நாய். இருவரின் அணுகுமுறையிலும் ஒரு விசாரணை நடத்தப்படும். இருவரின் புத்திசாலித்தனமும், அனுபவமும் எப்படி ஒரு வழக்குக்குப் பயன்படுதுன்னு என் படத்துல பார்ப்பீங்க.
இதற்காகவே ஒரு லேப்ரடார் வகை நாயை வாங்கி நான்கு மாதங்களுக்கும்மேலாகப் பழக்கினோம். இந்தப் படத்தின் முக்கியமான அம்சமே மோப்ப நாய்கள் பற்றிய டீட்டெய்லிங் தான். நிச்சயமா இந்த விவரங்கள் பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தும்.”
நம்பிக்கை தொனிக்கிறது சந்தானமூர்த்தியின் வார்த்தைகளில்.
- சந்தோஷ் மாதேவன்