பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஒரு செருப்பு... ஒரு கொலை... ஒரு படம்!

ஒரு செருப்பு... ஒரு கொலை... ஒரு படம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு செருப்பு... ஒரு கொலை... ஒரு படம்!

ஒரு செருப்பு... ஒரு கொலை... ஒரு படம்!

‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்கள் வெற்றி பெறும்போது, ‘என்னால ஏன் இப்படிப் பண்ண முடியலை’னு தோணும்; பொறாமையா இருக்கும். ஏதாவது விருது நிகழ்ச்சியில ‘ஜூரி விருது’ வாங்குறப்போ, கோபம் வரும். சினிமாவுல கொஞ்சம் காலம் கடந்துட்டா, ‘இவர் சீனியர்’னு ஒதுக்க ஆரம்பிச்சிடுறாங்க. அப்படி ஒதுக்காம இருக்க என்ன பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சிடுவேன். சாதாரண கமர்ஷியல் வெற்றி எனக்குப் போதாது. ஏதாவது ஒரு விஷயத்தைத் தனித்துவமாப் பண்ணணும்னு யோசிச்சிக்கிட்டே இருப்பேன். அப்படி உருவானதுதான், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம்.” - உற்சாகமாகப் பேசுகிறார் பார்த்திபன்.

ஒரு செருப்பு... ஒரு கொலை... ஒரு படம்!

“ `ஒத்த செருப்பு’ எப்படி உருவானது?”

“ஒரு சோலோ ஆக்டரா இந்தப் படம் பண்ணலாம்னு 15 வருஷத்துக்கு முன்னாடியே யோசிச்சேன். ‘ஒரு கைதியைக் காலையில் தூக்குல போடப் போறாங்க’ - இப்படி ஒரு லைன் யோசிச்சுவெச்சிருந்தேன். அதுதான், கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி, வேறொரு தளத்துக்கு வந்திருக்கு. ஒரு கதையின் விசாரணை, அதன் மூலமா கிடைக்கிற துப்புகள்தான், படத்தோட களம். இந்தக் கதை பண்ண பெரிய தைரியம் வேணும்.”

“ ‘ஒத்த செருப்பு’ ஓகே...  ‘சைஸ் 7’ எதுவும் குறியீடா?”

“படத்துல முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கு. ஒரு கொலை... அதை செஞ்சது நான்... இப்படித்தான் படம் ஆரம்பிக்கும். என் செருப்பு சைஸ் 11, தடயமா இருக்கிற செருப்போட சைஸ் 7.
இந்த ரெண்டு நம்பருக்கும் இடையில இருக்குற நாலு வித்தியாசம்தான் திரைக்கதை. உலக சினிமாக்களைப் பார்க்கிறப்போ, உலகத்துல ஏதோ ஒரு மூலையில இருக்கிற ஒருத்தன் எடுக்கிற படத்தை சப்-டைட்டில்லதான் நாம பார்க்கணுமானு தோணும். அந்த மாதிரியான படங்களை எடுக்க, கூடுதல் உழைப்பும் அர்ப்பணிப்பும் வேணும். அதைப் பண்ணுவோம்னுதான், ‘ஒத்த செருப்பு’ எடுத்திருக்கேன். படத்துல ஒரே ஒரு கேரக்டர்லதான் நடிக்கணும்னு முடிவு பண்ணினேன். இந்த நிமிடம்வரைக்கும் எல்லாருக்கும் இருக்கிற ஆச்சர்யம், ‘ஒருத்தன் மூஞ்சியை மட்டும் வெச்சுக்கிட்டு ரெண்டு மணிநேரப் படத்தை எப்படிப் பார்க்க முடியும்?’ங்கிறதுதான். ஷங்கர் சார்கூட, ‘நான் பிரமாண்டம் பிரமாண்டம்னு ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஆடியன்ஸுக்குப் பிரமிப்பைக் கொடுக்கிறதுனு யோசிக்கிறப்போ, ஒரே ஒரு ஆள், ஒரு ஹால்... எப்படி சாத்தியம் ஆச்சு?’னு கேட்டார். ஒரே ஒரு ரூம்ல கிட்டத்தட்ட 700 ஷாட்ஸ் எடுக்க முடியுமானு எங்களுக்கும் சந்தேகம் இருந்தது. ஆனா, என்ன எடுக்கப் போறோம்னு தெரியாமதான் நானும் கேமராமேன் ராம்ஜியும் போனோம். படத்தை முடிச்சுப் போட்டுப் பார்க்கிறப்போ ஒரு மேஜிக்கை உணர்ந்தோம். எங்களுக்கு இப்போ பயமில்லை!”

ஒரு செருப்பு... ஒரு கொலை... ஒரு படம்!

“டெக்னிக்கல் டீம்?”

“சந்தோஷ் நாரயணன் இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்கிட்ட இருக்கிற கிறுக்குத்தனங்கள் அவர்கிட்டேயும் இருக்கு. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துலருந்தே கேமராமேன் ராம்ஜி சார்கூட வொர்க் பண்ணணும்னு நினைப்பேன், இதுல சாத்தியமாச்சு. இந்தப் படத்தோட ஐடியாவைச் சொன்னப்போ, ‘சம்பளமே வேணாம்; வாங்க ஷூட்டிங் போகலாம்’னு சொன்னார். சவுண்டு டிசைனுக்கு பல பேரை பரிசீலனை பண்ணினோம். ஏன்னா, இந்தப் படத்துல அது ரொம்ப முக்கியம். ஆறேழு லட்சத்துல பெஸ்ட்டா முடிக்கலாம். ஆனா, இந்தப் படத்துக்கு சவுண்டு டிசைனுக்காக மட்டும் 40 லட்ச ரூபாய் செலவு பண்ணினோம். இத்தனைக்கும் ரசூல் பூக்குட்டியும் சம்பளம் வேண்டாம்னு சொன்னார். ஆனா, படத்தைப் பார்த்துட்டுதான் வொர்க் பண்ணுவேனா, மாட்டேனானு சொல்வேன்னு சொன்னார். பார்த்தார்; பிடிச்சிருந்தது; பண்ணிக்கொடுத்தார்.”

“ஒரு அரசியல் மேடையில மு.க.ஸ்டாலினுக்கு மஞ்சள் துண்டைப் பரிசாகக் கொடுத்தீங்களே... என்ன காரணம்?”

“அந்த மேடைதான் காரணம். அங்கே வந்திருந்தவங்களையெல்லாம் பார்த்தேன். சிவகுமார் சார் ரொம்ப நேரம் பேசி கைதட்டல் வாங்கிடுவார், சத்யராஜ் சார் சொல்லவே வேணாம்... அப்படி இருக்கிறப்போ, நாம என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். கலைஞர் மறைவுக்குப் பிறகு அந்த இடத்துக்கு ஸ்டாலின்தான். அதை நான் முதல் ஆளா சொல்லணும்னுதான், மஞ்சள் துண்டைப் பரிசாகக் கொடுத்தேன். `ஒத்த செருப்பு’ இசை வெளியீட்டு விழாவுல கமல்ஹாசனுக்கு டார்ச் லைட் பதிச்ச செங்கோலைப் பரிசாகக் கொடுத்தேன். அரசியலில்
எம்.ஜி.ஆருக்குப் பிறகு, எம்.ஜி.ஆர் நிறத்தில் அரசியல்ல இருக்கிற ஆள் கமல் சார். அடுத்து ரஜினி சார் வருவேன்னு சொல்லியிருக்கார். யார் வந்தாலும், நான் முதல் ஆளா வரவேற்கணும்னு நினைப்பேன்.”

“இசை வெளியீட்டு விழாவுல மோகன்லால், சிரஞ்சீவி, அமீர் கான்... இப்படிப் பல பிரபலங்கள் வாழ்த்துச் சொல்லி வீடியோ அனுப்பியிருந்தாங்க. அவங்களுடனான உறவை எப்படிக் கையாளுகிறீர்கள்?”

“சினிமாவுல எல்லாரும் என் சொந்தம். யார் வீட்டு நிகழ்ச்சியா இருந்தாலும், முதல் ஆளா நிப்பேன். படம் பண்ணினாலும் பண்ணாட்டியும் எல்லாரோடயும் நட்போட இருப்பேன். ‘இளையராஜா 75’ மேடையில் ராஜாவையும், ரஹ்மானையும் சேர்த்துவைக்க முடிஞ்சதுக்குக் காரணம், எல்லாருடனும் நட்பு பாராட்டுறதை வழக்கமா வெச்சிருக்கிறதாலதான்!”

ஒரு செருப்பு... ஒரு கொலை... ஒரு படம்!

“ ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ எல்லா தரப்பு ரசிகர்களும் எதிர்பார்க்கிற படம். அது நடக்கும்பட்சத்தில் நீங்க நடிப்பீங்களா?”

“ ‘ஆயிரத்தில் ஒருவன்’ல நடிக்கக் கேட்டப்போ, ‘க்ளைமாக்ஸ்ல கார்த்தி தூக்கிட்டுபோற சின்னப் பையனும், நீங்கதான்’னு சொல்லித்தான் இரண்டாவது பாகத்துக்கும் சேர்த்தே கமிட் பண்ணினார் செல்வராகவன். சொன்ன வார்த்தையை அவர் காப்பாத்துவார்னு நினைக்கிறேன். தவிர, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ வரணும்னா, ‘என்.ஜி.கே’ பெரிய ஹிட் ஆகணும்.”

“நடிகர் வடிவேலுவை மிஸ் பண்றீங்களா?”

“நான் மட்டுமில்லை; சினிமாவே மிஸ் பண்ணுது. சினிமாவுல சிலருடைய இடம் அப்படியேதான் இருக்கும். வடிவேலு இடமும் அப்படித்தான் இருக்கு.” 

“தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைகள் எப்படி இருக்குனு நினைக்கிறீங்க?”

“தெரியாம தயாரிப்பாளர் சங்கத்துக்குள்ளே போயிட்டு வந்துட்டேன். விஷாலுக்கு ஆதரவா இருக்கணும்னு உள்ளே போனேன்; ஆனா, என்னால பெருசா எதையும் பண்ண முடியலைங்கிற துக்கத்தோட வெளியே வந்துட்டேன். சங்கத்துக்குள்ளே பல பிரச்னைகள், ஈகோ... அதெல்லாம் தீர்ந்தாதான் சினிமா நல்லாயிருக்கும். விஷால் வந்ததுக்குப் பிறகு ஃபெஃப்சி அமைப்புக்கும், சங்கத்துக்கும் இடையே இருந்த பிரச்னை கொஞ்சம் சரியாகியிருக்கு.

- சனா