தொடர்கள்
Published:Updated:

N G K - சினிமா விமர்சனம்

N G K - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
N G K - சினிமா விமர்சனம்

N G K - சினிமா விமர்சனம்

ஐ.டி படித்தாலும் ஆர்கானிக் விவசாயம் பார்த்து, மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் சூர்யாவை, சந்தர்ப்பச் சூழல் அரசியலுக்குள் இழுக்கிறது. சாக்கடையைச் சுத்தம் செய்யப்போனவர், சாகசங்கள், தந்திரங்கள் செய்து தமிழகத்தின் முதல்வரானால்... என்.ஜி.கே.

N G K - சினிமா விமர்சனம்

மேலே உள்ள பத்தியைப் படிக்கும்போது உங்களுக்குக்கூட ‘நல்ல கதைதானே’ என்று தோன்றும். ஆனால் ‘படம் நல்லாருக்கும் என்றா எதிர்பார்க்கிறீங்க? நல்ல கதை!’ என்கிறார் செல்வராகவன்.
ஜாலி ரகளை, ஆத்திரம், ஆற்றாமை, காதல் என நவரசங்களையும் காட்டி ஏராளமாக நடித்துத் தள்ளியிருக்கிறார் சூர்யா. பலவீனமான காட்சியமைப்புகள், சுவாரஸ்யமற்ற காட்சிகள் நல்ல நடிப்பையும்கூட நகைச்சுவை நடிப்பாக மாற்றிவிடுகின்றன.

 செல்வராகவன் படங்களின் சிறப்பம்சங்களில் ஒன்று, ஆளுமைமிக்க தனித்துவமான பெண்கள். ஆனால் இந்தப் படத்தில்... ஹூம்! சாய் பல்லவி ஏதாவது பேய்ப்பட ஷூட்டிங் பிரேக்கில் வந்து நடித்துக்கொடுத்தாரா என்று தெரியவில்லை. அப்படி ஓர் உடல்மொழி. ரகுல் ப்ரீத் பாத்திரத்தை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.

 சூர்யாவிற்குப் பின் திரையை ஆட்கொள்வது இளவரசுவும் பாலா சிங்கும். இலக்கில்லாமல் அலையும் கதையில் இரட்டை ஆறுதல். சக்கையாக உறிஞ்சப்பட்டுப் துப்பப்படும் கடைமட்டத் தொண்டனைக் கண்முன் நிறுத்துகிறார் பாலாசிங். ஆனால் அவருக்கும், அதிகம் வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை!

தேவராஜ், பொன்வண்ணன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், வேல.ராமமூர்த்தி எனத் திறமையான நடிகர்கள் நிறைய இருக்கிறார்கள். வெறுமனே இருக்கிறார்கள்.

செல்வாவுக்கென பிரத்யேகமாகச் சுரக்கும் யுவனின் இசை இதிலும் பிரவாகம் எடுக்கிறது. சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு தொடக்கத்தில் சுவாரஸ்யம் கூட்டி, பின்னர் வலுவிழக்கிறது. இருப்பதை எடுத்துத் தொகுத்துக் கோத்தது போல இருக்கிறது பிரவீன் கே.எல்-லின் எடிட்டிங்.

அரசியல் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாத கதை, லாஜிக் இல்லாத துண்டு துண்டான காட்சிகள், நாடகபாணி மிகை நடிப்பு.... ‘புதுப்பேட்டை’ என்ற மாஸ்டர் பீஸ் அரசியல் படம் கொடுத்த செல்வாவிடமிருந்து இப்படி ஒரு படமா?

கத்துக்க... ஸாரி, ஏத்துக்க முடியலை!

- விகடன் விமர்சனக் குழு