
“விஜய், அஜித்தோடு நடிக்கறதுன்னா ஓகேதான்!”
‘கரகாட்டக்காரன்’ வெளியாகி, இந்த ஜூன் மாதத்துடன் 30 ஆண்டுகள் ஆகின்றன. அந்தப் படம் குறித்த நினைவுகளையும் இன்றைய சினிமா, அரசியல் சூழல் குறித்தும் நம்முடன் நிறையவே பகிர்ந்துகொண்டார், 80-களின் வசூல் சக்கரவர்த்தி ராமராஜன்.

ராமராஜன்
“ ‘கரகாட்டக்காரன்’ 30 ஆண்டுகள், எப்படி இருக்கு?”
“இப்போதான் படம் வந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள 30 வருடமான்னு மலைப்பாதான் இருக்கு. என் குரு இராம.நாராயணன் சார்கிட்ட நான் உதவி இயக்குநரா இருந்தப்போ, கங்கை அமரன் அண்ணன் எங்க படங்களுக்கு மியூசிக் போட்டுக்கிட்டிருந்தார். அப்போதிருந்தே அவருக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது. பிறகு நான் இயக்கிய ஐந்து படங்களுக்கும் அவர்தான் மியூசிக். நான் ஹீரோவான பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படம் பண்ணினோம். அப்போ, ‘அடுத்ததா என்ன பண்ணலாம்’னு பேசிக்கிட்டு இருந்தப்போ, ‘கரகாட்டத்தைப் பின்னணியா வெச்சு ஒரு கதை பண்ணுங்க’ன்னு கங்கை அமரன்கிட்ட சொன்னேன். அதை மனசுல வெச்சு அவரு உருவாக்கினதுதான், ‘கரகாட்டக்காரன்.’
அந்தப் படத்துல வர்ற என் கேரக்டருக்கு எந்த ரெஃபரென்ஸும் இல்லை. நான் தியேட்டர்ல வேலை பார்த்த காலத்துல ரிலீஸான ஒரு படத்துல ஜெய்சங்கர் தன் தலையில கரகத்தை வெச்சுக்கிட்டு இருக்குற மாதிரி வெளியான ஒரே ஒரு போஸ்டர் மட்டும்தான் மனசுல இருந்துச்சு. மத்தபடி, ஊர்ல நிறைய கரகாட்டங்களைப் பார்த்திருக்கேன். அதை மனசுல வெச்சுக்கிட்டு நடிச்சேன். கங்கை அமரன் அண்ணன் ஒரு மிகப்பெரிய கலைஞர். அவரோட நகைச்சுவை உணர்வு எனக்கு ரொம்பப் பிடிக்கும். எதையுமே ஹியூமரா சொல்றதுல அவரு கில்லாடி. அப்படித்தான் ‘கரகாட்டக்காரன்’ கதையை வடிவமைச்சார். அவரு எதுக்குமே டென்ஷனாக மாட்டார். ‘நந்தவனத்தில் ஒரு ராஜகுமாரி’ பாட்டு அப்போ ரெடியாகல. கங்கை அமரன் ஸ்பாட்லேயே டியூன் போட்டு நாகராவுல பாடி ரெக்கார்டு பண்ணி, அதைப் போட்டுவிட... அதுக்குத்தான் நாங்க டான்ஸ் ஆடினோம். பிறகு, சென்னைக்கு வந்துதான் பாட்டை ரெக்கார்டு பண்ணுனாங்க. இப்படித்தான் அந்த படம் மொத்தமும் நடந்து முடிஞ்சுது.
இந்தப் படத்தை ரிலீஸுக்கு முன், விநியோகஸ்தர்களுக்குன்னு ஸ்பெஷல் ஷோ போட்டுக் காட்டினோம். எல்லோரும் பேரமைதியா அமர்ந்து பார்த்தாங்க. ‘என்னடா இது காமெடிக்குக்கூட சிரிக்க மாட்டேங்கிறாங்க’ன்னு எங்களுக்கு ஆச்சர்யம். ‘படம் ரொம்ப காமெடியா இருக்கு. ரொம்ப சிரிச்சுப்புட்டோம்னா புரொடியூசர் ரேட்டை ஏத்திடுவாரு’ன்னு பேசி வெச்சு அமைதியா படம் பார்த்திருக் காங்கன்னு பிறகுதான் தெரியவந்தது. ரசிகர்களுக்குத்தான் இப்படி எந்தக் கணக்கும் கிடையாதே. கொண்டாடித் தீர்த்தாங்க. ஆனா, 450 நாள்களுக்குமேல ஓடி, இவ்வளவு பெரிய பெயரை வாங்கும்னு நாங்க யாருமே நினைக்கல. இன்னைக்குக் கட்சிக் கூட்டங்களுக்குப் போனா, ‘மாங்குயிலே’ பாட்டைப் பாடச் சொல்வாங்க. நானும் ரெண்டு வரி பாடிட்டு, மீதி ரெண்டு வரியை மாத்திப்பாடி ஓட்டு போடச்சொல்லிக் கேட்பேன்.”
“கனகா அறிமுகம், வாழைப்பழ காமெடி... இந்த அளவுக்குப் பேசப்படும்னு எதிர்பார்த்தீங்களா?”
“நான் இரண்டாவதா இயக்கிய ‘மருதாணி’ படத்துக்குத் தயாரிப்பாளர் பாரதிராஜா. அவரோட பாணியிலயே ஒரு பிரபலத்தோட வாரிசை ஹீரோயினா நடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணி, நடிகை தேவிகாவோட மகளான கனக மகா லெட்சுமியை நடிக்கக் கேட்டேன். ஆனா, அப்போ அந்தப் பொண்ணு நடிக்கத் தயாராகல. பிறகு, நாலைஞ்சு வருடம் கழிச்சு என் மூலமாவே அறிமுகப்படுத்துற மாதிரி ஆச்சு. அந்தக் கனக மகாலெட்சுமியைத்தான் ‘கனகா’ங்கிற பெயர்ல ‘கரகாட்டக்காரன்’ படத்துல நடிக்க வெச்சேன்.
‘வாழைப்பழ’ காமெடி சீன் ஷூட் பண்ணும் போது நான் இல்லை. டப்பிங் பேசும்போதுதான் பார்த்தேன். ‘இது நிச்சயம் வொர்க் அவுட் ஆகும்’னு நினைச்சேன், ஆனா இந்தளவுக்குக் காலம் கடந்து நிற்கும்னு எதிர்பார்க்கல. அந்த சீன் மட்டுமல்ல, மொத்தப் படமுமே காமெடியாதான் போகும். இன்னைக்கும் அதைவெச்சு மீம்ஸ், ஜோக்ஸ் வந்துகிட்டி ருக்கு. இதுக்கெல்லாம் காரணம், கங்கை அமரனும், கவுண்டமணி அண்ணன் – செந்தில் நடிப்பும்தான். கவுண்டமணி கேரக்டருக்கு முதல்ல எஸ்.எஸ்.சந்திரனைத் தான் நடிக்க வைக்கிறதா இருந்துச்சு. நான் உதவி இயக்குநரா இருந்த காலத்திலிருந்தே அவர் எனக்குப் பழக்கம். இராம.நாரயணன் சார்கிட்ட சொல்லி அவருக்கு எங்க படத்துல முதன்முதலா ஒரு பெரிய ரோல் வாங்கிக் கொடுத்ததே நான்தான். பின்னாடி, அவர் தி.மு.க-வுல தீவிரமா செயல்பட ஆரம்பிச்சார். சரி, எதுக்குத் தேவையில்லாத மனவருத்தத்தை ஏற்படுத்திக்கிட்டுன்னு அவருக்குப் பதிலா இதில் கவுண்டமணியை நடிக்க வெச்சோம்.”
“ ‘கரகாட்டக்காரன் 2’ எடுக்கப்போறதா கங்கை அமரன் சொல்லியிருக்காரே... அதுல நீங்க நடிப்பீங்களா?”
“என்கிட்டேயும் கங்கை அமரன் பேசினார். ஆனா, எனக்கு அதுல உடன்பாடு இல்லை. ஏன்னா, சில விஷயங்களைத் திரும்பத் தொடக்கூடாது. கரகத்தை எடுத்தாச்சு, வெச்சாச்சு, ஆடியாச்சு, ஓடியாச்சு... அவ்வளவுதான்; விட்டுடணும். திரும்பத் தொட்டா சரியா வராது. இப்போ இவங்க சொல்ற ‘கரகாட்டக்காரன் 2’ படம் ‘கரகாட்டக்கார’னைவிட 500 நாள் அதிகமா ஓடப்போற படம்னாலும் நான் பண்ணமாட்டேன். பொதுவா, இந்த ‘பார்ட் டூ’-ல எனக்கு உடன்பாடு கிடையாது. முருகனோட அறுபடை வீடு இருக்குன்னா, பழநி, திருச்செந்தூர்னு வேற வேற பெயர்லதான் இருக்கு. ஏன், ‘பழநி 1’, ‘பழநி 2’-னு அது இல்லைன்னு யோசிக்கணும். அதுமாதிரிதான் இதுவும். சில விஷயங்களை ‘பார்ட் டூ’ பண்ணக்கூடாது.”
“இன்னும் ஹீரோவாகத்தான் நடிப்பேன்னு உறுதியா இருக்கீங்கன்னு சொல்றாங்களே?”
“நான் எங்கே அப்படிச் சொன்னேன்?! ‘இன்னும் ஹீரோவாத்தான் நடிப்பேன்’னு 2001-ல சொன்னேன். ஆனா, ‘இவர் என்ன எம்.ஜி.ஆரா’ன்னு அதையே இன்னும் எழுதிக்கிட்டிருக்காங்க. நடிச்சா ஹீரோவாத்தான் நடிப்பேன்னு இன்னமும் சொல்றதுக்கு நான் என்ன பைத்தியமா... 44 படங்கள்ல சிங்கிள் ஹீரோவா நடிச்சிருக்கேன். நானும் யார் படத்திலேயும் காம்பினேஷன் போட்டு நடிக்கல. என் படத்திலும் யாரும் வந்து நடிக்கல. நடிச்ச எல்லாப் படமுமே நேரடிப் படம்தான். ஒருபடம்கூட ரீமேக் கிடையாது. ஐ.வி.சசி மாதிரியான எத்தனையோ பிரபல வேற்றுமொழி இயக்குநர்கள் கூப்பிட்டும், நான் போய் நடிக்கலை. இப்படி யாருக்கும் அமையாத ஒரு கொடுப்பினை எனக்குக் கிடைச்சது. அதைக் கெடுத்துக்க நான் விரும்பல. இப்படியே ஒரு 50 படம் ஹீரோவா நடிச்சுட்டு, அதுக்கப்புறம் நடிப்புல இருந்து ஒதுங்கிக்கலாம்னு நான் அப்பவே நினைச்சிருந்தேன். அதனால, அப்போ அப்படிச் சொன்னேன். இப்போ அப்படிச் சொல்லமுடியாதில்லையா... 2010-ல நடந்த அந்தப் பெரிய விபத்துல இருந்து நான் உயிர் தப்பிச்சு, இன்னைக்கு உடம்புல அத்தனை பிரச்னையோட இருக்கிறப்போவும் ஹீரோவாதான் நடிப்பேன்னு எப்படிச் சொல்லமுடியும்.
ஆனா, எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. அந்த இமேஜ் கெடாம நடிக்கணும்னு நினைக்கிறேன், அவ்வளவுதான். இதோ சமீபத்துல ‘எல்.கே.ஜி’ படத்துக்காக பாலாஜி வந்து கேட்டாரு. அந்தப் படத்துல அவருதான் ஹீரோன்னு தெரிஞ்சுதான் கதையைக் கேட்டேன். ஆனா, எனக்கு அவர் சொன்ன கேரக்டர் செட்டாகல. நான் அ.தி.மு.க-வுல இருக்கேன். என்னால மத்திய அரசையும், மாநில அரசையும் கிண்டலடிக்கிற படங்கள்ல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். எனக்கு வெங்கட் பிரபுவை குழந்தையா இருந்ததுலேருந்து தெரியும். ‘பார்ட்டி’ படத்துல நடிக்கக் கூப்பிட்டார். அந்தக் கேரக்டர் ஒரு பாக்ஸர்னு சொன்னார். ‘இல்ல பிரபு, என் உருவத்துக்கும் இமேஜுக்கும் செட் ஆகாது’ன்னு சொல்லிட்டேன். ‘அயோக்யா’ படத்துல கே.எஸ்.ரவிக்குமார் பண்ணுன கேரக்டர்ல என்னைக் கேட்டாங்க. விஷால் இன்ஸ்பெக்டராகவும், என்னை ஏட்டாகவும் ஒரே ஃப்ரேம்ல என்னால கற்பனை பண்ணிப் பார்க்கவே முடியல. `முடியாது’ன்னு சொல்லிட்டேன். ஒரு புதுப் பையன் வந்தான். நல்லா கதை சொன்னான். ஆனா, அதுல என் கேரக்டர் கொடூரமான ஒரு தாதா. நான் தாதான்னா ரசிகர்கள் ஏத்துப்பாங்களா சொல்லுங்க?! நாளைக்கே விஜய் படத்திலோ, அஜித் படத்திலோ நடிக்கக் கேட்டா ரெடிதான். ஆனா, அதே படத்துல ஒரு சீன்ல விஜய்யை நோக்கித் துப்பாக்கியைக் காட்டணும்னு சொன்னா, நான் பண்ணமாட்டேன். `ஒரேயொரு ஷாட்தான், ஒரு கோடி தர்றேன்’னு சொன்னாக்கூட நான் பண்ணமாட்டேன். ஹீரோவா யார் வேணும்னாலும் இருக்கட்டும். என்னோட ரோல், எனக்குப் பொருத்தமானதா, அதுல முழு மனசோட நடிக்கக்கூடியதா இருக்கணும், அவ்வளவுதான். ஏன்னா, இன்னும் எனக்கான ரசிகர்கள் அப்படியே இருக்காங்க. அது எனக்குக் கிடைச்ச பாக்கியம். தருமபுரி பக்கத்துல பாலவாடிங்கிற கிராமத்துல இன்னும் என் பெயர்ல மன்றம் நடத்தி நல்லது பண்ணிக்கிட்டிருக்காங்க. கிராமத்துப் பெண் ரசிகைகள்தான் என் பலம். அவங்க திரும்ப என்னைத் திரையில பார்க்கிறப்போ, ‘இதுலயா நடிச்சாரு... இதுக்கு அவரு வீட்டுலயே இருந்திருக்கலாமே’ன்னு சொல்லிடக் கூடாது. அதனால என் 45-வது படத்தை நானே இயக்கி, நடிக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு. பார்க்கலாம்.”
“நடந்து முடிஞ்ச நாடாளுமன்றத் தேர்தல்ல அ.தி.மு.க சந்தித்த தோல்வி பற்றி உங்க கருத்து என்ன?”
“தோல்வி இருக்கத்தானே செய்யும். ஏன், அண்ணா தோற்கலையா, கலைஞர் தோற்கலையா, ஏன், அம்மா பார்க்காத தோல்வியா?! அரசியல்ல வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரத்தான் செய்யும். அந்தப் பக்கம் தி.மு.க-வோட வலிமையான கூட்டணியும், இன்னொரு பக்கம் கமல், சீமான்னு ஓட்டைப் பிரிச்சதும்தான் அ.தி.மு.க-வின் தோல்விக்குக் காரணம். ஆனா, ஆட்சியைத் தக்கவெச்சுக்கிட்டாங்க இல்ல!”
“அப்போ, 2021 தேர்தல்ல?”
“அதை 2021-ல கேளுங்க, சொல்றேன்.”
“எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா தலைமையை ஏத்துக்கிட்ட உங்களுக்கு, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தலைமை எப்படி இருக்கிறதா நினைக்கிறீங்க?”
“வெறும் ஆறு படம் நடிச்சுட்டு, எந்தப் பின்னணியும் இல்லாம எம்.ஜி.ஆருக்காக அ.தி.மு.க-வுல சேர்ந்தேன். அம்மா இருந்தவரைக்கும் நானா அவங்ககிட்ட எதையும் கேட்கல. எனக்கும் தேவைப்படல.
1998-ல அவங்களாதான் கூப்பிட்டு எம்.பி சீட்டு கொடுத்தாங்க. நின்னு ஜெயிச்சேன். அம்மா இறந்த பிறகு, எவ்வளவோ குழப்பம் வந்துச்சு. எத்தனையோ பேர் போனாங்க, வந்தாங்க. ஆனா, நான் தலைமைக்குக் கட்டுப்பட்டு இருந்தேன். ஆனா, இப்போ எனக்குக் கட்சியில ஒரு அடையாளம் தேவைப்படுது. கட்சியில ஏதாவது பொறுப்பு கொடுங்கன்னு ஓ.பி.எஸ் கிட்டேயும், இ.பி.எஸ் கிட்டேயும் கேட்டேன், கொடுக்கல. அதனால, நான் சிவனேன்னு இருக்கேன். அதுக்காக என்னைக்கும் அ.தி.மு.க-வை விட்டுக்கொடுக்கமாட்டேன்.
“சமீபமாக அ.தி.மு.க-வுல ஒற்றைத் தலைமை வேண்டும்னு குரல்கள் எழுப்பப்படுதே?”
“இது என்ன வடகொரியாவா ஒற்றைத் தலைமைன்னு சர்வதிகாரம் பண்றதுக்கு?! இனிமே ஒற்றைத் தலைமைங்கிற பேச்சுக்கே இடமில்லை. அதனால, எல்லோருமே எம்.ஜி.ஆர், அம்மா விசுவாசி கள்னு சொல்லிக்கிட்டு போய்க்கிட்டேயிருக்கணும், அவ்வளவுதான். அ.தி.மு.க-காரங்களும் இருக்கிற தலைமைகளை முழுமனதோட ஏத்துக்கணும்.”

“அரசியலைப் பொறுத்தவரைக்கும் ரஜினியும் கமலும் உங்களுக்கு ஜூனியர்கள். அவங்களோட அரசியல் வருகையை எப்படிப் பார்க்கிறீங்க?”
“ரெண்டுபேர் மேலேயுமே ஒரு சினிமாக்காரனா எனக்குப் பெரிய மரியாதை உண்டு. கமல் இப்போ அரசியலுக்கு வந்து சில சதவிகித ஓட்டு வாங்கியிருக்காரு. ஆனா, பத்துப் பதினைந்து வருடத்துக்கு முன்னாடியே அவரு அரசியலுக்கு வந்திருந்து, இந்த ஓட்டுகளை வாங்கியிருந்தார்னா நல்லா இருந்திருக்கும். இது ரொம்ப லேட். ரஜினி கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொல்லியிருக்காரு. ஆரம்பிச்சா பார்க்கலாம்.”
“நளினியையும் உங்க பிள்ளைகளையும் பார்ப்பீங்களா?”
“குடும்ப விழாக்களுக்குப் போனா, நளினியைப் பார்க்கிறதுண்டு. பெருசா எந்தத் தொடர்புமில்லை. பிள்ளைங்க அடிக்கடி வந்துட்டுப் போவாங்க. ரெண்டு பிள்ளைங்களுமே கல்யாணம் ஆகி செட்டில் ஆகிட்டாங்க. அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துக்கிறாங்க. நான் யாரையும் தொந்தரவு பண்றதில்லை.”
“இளம் ஹீரோக்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?”
“இப்போ உள்ள ஹீரோக்கள்ல விஜய்யும், அஜித்தும் ஒரு நிலையான இடத்தைப் பிடிச்சுட்டாங்க. விஜய்யை எனக்குச் சின்ன வயசுல இருந்து தெரியும். சாலிகிராமத்துல நான் இருந்த வீட்டுக்கும், எஸ்.ஏ.சி வீட்டுக்கும் ஒரே காம்பவுண்டு சுவர்தான். அப்போ, அவங்க வீட்டுக்குள்ளேயிருந்து டம் டம்னு சத்தம் கேட்கும். என்னன்னு கேட்டா, விஜய் டான்ஸ் பயிற்சி பண்ணிக்கிட்டிருக்குன்னு சொல்வாங்க. அப்படிச் சின்ன பையனா பார்த்த விஜய்யை, இன்னைக்கு இவ்வளவு பெரிய இடத்துல பார்க்கிறதுல ரொம்ப சந்தோஷம்தான்.”
- தாட்சாயினி; படம்: பா.காளிமுத்து