
‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ரெண்டு படமும் வெவ்வேற கோணம்.
டைட்டில் கார்டில் தங்கள் பெயரைக் கண்ட இளம் தலைமுறை இயக்குநர்களின் அனுபவத் தொடர்

“எங்க ஊர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை. சின்ன வயசுல நான் வீடு முழுக்கக் கிறுக்கி விளையாடாத இடம் இல்லைன்னு அம்மா சொல்வாங்க. அப்படி ரொம்பச் சின்ன வயசுல இருந்தே வரைய ஆரம்பிச்சுட்டேன். வீட்ல நிறைய பத்திரிகைகள் வாங்கிப் படிக்கிற பழக்கம் இருந்தது. அதனால, படிக்கிற ஆர்வமும் இயல்பிலேயே வந்திடுச்சு. வரைவது, படிப்பதுன்னு மூளைக்கு நிறைய வேலை கொடுத்ததனால, எதிர்காலத்துல கற்பனை சார்ந்த துறையிலதான் வேலை பார்க்கணும்னு நினைச்சேன். அப்பா தேவராஜ், டிரைவரா இருந்தார். சமீபத்துல தவறிட்டார். அம்மா, மல்லிகா. அண்ணன் குமார், திருப்பூர்ல பிரஸ் நடத்துறார். அப்புறம் நான்... இப்படி ஒரு அழகான மிடில் கிளாஸ் ஃபேமிலி. அண்ணனுக்குக் கல்யாணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கு. எனக்கு தீவிரமா பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்காங்க.”

‘முண்டாசுப்பட்டி’யில் மூட நம்பிக்கைகளைப் பகடி செய்த, ‘ராட்சச’னில் சைக்கோவின் அட்ராசிட்டியைப் பதிவு செய்து பதறடித்த இயக்குநர் ராம்குமாரின் பிளாஷ்பேக் இது.
“ஸ்கூல் படிக்கும்போதே ஓவியப்போட்டிகள்ல கலந்துக்குவேன். எட்டாம் வகுப்பு படிக்கிறப்போ ஓவியம், கவிதை... ஒரே சமயத்துல ரெண்டு விதமான படைப்புக்காகப் பரிசும் கைத்தட்டலும் வாங்கினப்போ கிடைச்ச சந்தோஷம், பெரிய உற்சாகம். புத்தகங்கள்ல வந்த ஓவியம், கார்ட்டூன்களைப் பார்க்கிறப்போ கார்ட்டூனிஸ்ட் ஆகிடலாம்னு தோணும். கவிதைக்கு வாங்கின பரிசுகளைப் பார்த்தா, பாடலாசிரியர் ஆகிடலாம்னு நினைப்பேன். சினிமாவுல வர்ற ஸ்டன்ட் காட்சிகளை வீட்டுல பிராக்டீஸ் பண்ணிப் பார்த்து, ஸ்டன்ட் மாஸ்டர் ஆகணும்னுகூட ஆசைப்பட்டிருக்கேன். ஆனா, பத்தாம் வகுப்பு படிக்கிறப்போ ஆனந்த விகடன்ல வர்ற சினிமா இயக்குநர்களின் பேட்டிகளைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு, எல்லாக் கலைகளையும் ஒன்றிணைக்கிற ஒரு வேலை இயக்கம்னு தெரிஞ்சது. அதுக்குப் பிறகுதான் ‘இயக்குநர் ஆகணும்’னு முடிவெடுத்தேன்.

திருப்பூர்லதான் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிச்சேன். அப்போ மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி ஒண்ணு நடந்தது. ‘2020-ல் இந்தியா’ங்கிற தலைப்புக்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்குப் பத்துக் கை கொடுத்து, பத்துக் கைக்கும் ஒரு பிரச்னையை வரைஞ்சேன். ‘அந்தப் பிரச்னைகள் இல்லாத இந்தியாதான் 2020-ன் கனவு’ங்கிற அந்த ஓவியத்துக்கு முதல் பரிசு கொடுத்தாங்க” என்பவரது முதல் சினிமா ஸ்பாட் விசிட்டிங் கதை அலாதியானது.
“ப்ளஸ் டூ முடிச்சுட்டு, பிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்து படிக்கலாம்; ஓவியக் கல்லூரியில சேர்ந்துடலாம்னு நிறைய முயற்சிகள். எதுவும் அமையல. உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி, நண்பரின் அண்ணன் ஒருவரைப் பார்க்கச் சென்னைக்கு வந்தேன். அவர் கொஞ்சம் பாசிட்டிவா பேசி, ஊருக்கு அனுப்பி வெச்சார். அவரைப் பார்த்துட்டு, சென்னையில இருந்து திருப்பூ ருக்குத் திரும்பிட்டி ருந்த சமயத்துலதான், ரயில்ல ஒரு பையனை சந்திச்சேன். அவன் கழுத்துல இருந்த டேக்ல ‘விருமாண்டி டீம்’னு இருந்தது. நான் தீவிர கமல் ரசிகன். என்ன ஏதுன்னு விசாரிச்சப்போ, ‘விருமாண்டி’ படத்துல ‘போட்டோ ஃபிளட்’ டிபார்ட்மென்ட்ல வேலை பார்க்கிறதா சொன்னான். நானும் ஆர்வமாகி, என் இயக்குநர் கனவை அந்தப் பையன்கிட்ட சொன்னேன். ‘சென்னைக்கு வாங்க; ஏதாச்சும் முயற்சி பண்ணலாம்’னு சொல்லி, ஒரு லேண்டு லைன் நம்பரைக் கொடுத்தான். செல்போன் இல்லாத காலம். நானும், என் நண்பன் கருப்புசாமியும் சேர்ந்து, அந்தப் பையனைப் பார்த்தோம். அவன்தான், யாருக்கும் தெரியாம ‘விருமாண்டி’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எங்களைக் கூட்டிக்கிட்டுப் போனான். என் ஸ்க்ரிப்டையும், கார்ட்டூன்களையும் கையோடு எடுத்துப் போயிருந்தேன். கமல் சார் பரபரப்பா அங்கிட்டும் இங்கிட்டும் வாக்கி டாக்கியில பேசிக்கிட்டு நடந்துகிட்டிருந்தார். நாசர், சந்தானபாரதி ரெண்டுபேர்கிட்டேயும் என் சினிமா ஆசையைச் சொன்னேன். ‘தொடர்ந்து முயற்சி பண்ணு, நிச்சயம் சினிமாவுக்கு வந்திடுவ’ன்னு பாராட்டினாங்க. பத்து நாள் நானும் நண்பனும் பல்லாவரத்துல இருந்த அந்தப் பையனோட பாட்டி வீட்டிலேயே தங்கிட்டு, ஊருக்குத் திரும்பினோம்.

இந்த இடத்துல என்கூட வந்த நண்பன் கருப்பசாமி பத்திச் சொல்லியே ஆகணும். என்கூட வரணும்னு அவனுக்கு எந்தத் தேவையும், அவசியமும் கிடையாது. ஆனா, வந்தான். தெரியாத ஊர்ல போய் நான் தனியா என்ன பண்ணுவேன்னு என்மேல அவனுக்கு அக்கறை. என் குறும்படத்துல நடிச்சிருக்கான். அந்தக் குறும்படத்தைப் பார்த்துட்டு, ‘டைரக்டர் ஆகிட்டா, நீ ‘காக்க காக்க’ மாதிரி ஒரு படம் பண்ணிடுவடா’ன்னு சொல்வான்.
முன்னப்பின்ன தெரியாத என்னை முதல்முறையா ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போய், அவ்ளோ அக்கறையா பார்த்துக்கிட்ட அந்தப் பையன் பெயர், சதீஷ்குமார்னு நினைக்கிறேன். அதுக்குப் பிறகு அவனைச் சந்திக்கிற வாய்ப்பே கிடைக்கல. திருப்பூருக்குத் திரும்பியபிறகு, எனக்கொரு முறை கடிதம் எழுதியிருந்தான். கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகிடுச்சு. அவன் முகம் மட்டும் கொஞ்சம் ஞாபகம் இருக்கு. நிபந்தனையற்ற அன்புன்னு சொல்வாங்கள்ல... அதை நான் அந்தப் பையன்கிட்டதான் பார்த்தேன்’’ என்றவர், கார்ட்டூனிஸ்ட் ஆன கதையைச் சொன்னார்.

“ஊருக்குத் திரும்புனா, வழக்கம்போல வீட்டுல திட்டு. என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டு நின்னப்போதான், சென்னையில அந்தப் பையன்கூட இருந்தப்போ விகடனுக்குப் போன் பண்ணி, மதன் சார் நம்பரை வாங்கி வெச்சுக்கிட்டது ஞாபகத்துக்கு வந்தது. உடனே, மதன் சாருக்கு போன் பண்ணி, சென்னைக்கு வந்து அவரைச் சந்திச்சுப் பேசினேன். கார்ட்டூன் களைப் பாராட்டினார். அவர்தான் ‘நிறைய குறும்படம் எடுத்துப் பழகு’ன்னு சொன்னார். குறும்படம்ங்கிற விஷயமே அவர் மூலம்தான் எனக்கு அறிமுகம். அவர், விகடன்ல ரா.கண்ணன் சாரை மீட் பண்ணச் சொன்னார். அவருக்கும் என் கார்ட்டூன்ஸ் பிடிச்சிருந்தது. என் கார்ட்டூன் அடுத்தவார ஆனந்த விகடன்ல ஒரு பக்கத்துக்கு வந்தது. பிறகு, தொடர்ந்து நிறைய வரைஞ்சேன். ஆனந்த விகடன்ல இருந்து கிடைச்ச சன்மானம்தான் கலைத்துறையில எனக்குக் கிடைச்ச முதல் சம்பளம்.

திருப்பூர் அரிமா சங்கம் சார்பாக, என் கார்ட்டூன்களையெல்லாம் கண்காட்சியா வைக்கச் சொன்னாங்க. அப்போதான், ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் எனக்குப் பழக்கமானார். ரெண்டுபேருக்குமே சினிமாதான் இலக்குன்னு தெரிஞ்சதும் நிறைய பேசினோம், பழகினோம், குறும்படங்கள் எடுத்தோம். என் குறும்படத்துல அவர் நடிச்சார். வாழ்க்கையில நாம சரியான பாதையிலதான் போய்க்கிட்டி ருக்கோம்னு நம்பிக்கை வந்தது.
சிம்புதேவன் சாரோட ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ வந்த சமயம். அவர்கிட்ட உதவி இயக்குநரா சேரலாம்னு முயற்சி பண்ணி, அவரும் ஓகே சொல்லிட்டார். ஆனா, அப்போ எனக்கு வீட்டுல ஒரு கமிட்மென்ட். வாய்ப்பா, ஃபேமிலி கமிட்மென்ட்டான்னு யோசனை. எல்லாப் பிரச்னைகளையும் முடிச்சுட்டு அவருக்கு ஒரு நீளமான மன்னிப்புக்கடிதம் எழுதினேன். படிச்சுட்டு நேர்ல வரச் சொன்னார். போன்ல திட்டு வாங்கிட்டு, நேர்லேயும் நல்லா திட்டு வாங்கினேன். வாய்ப்பு கேட்டு வர்ற ஒரு உதவி இயக்குநரை எப்படி நடத்தணும்னு அவர்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன்.
பிறகு, ‘நாளைய இயக்குநர் சீஸன் 2’ தொடங்கியிருந்தது. இதுல கலந்துக்கிற ஐடியாவை சிம்புதேவன் சார்கிட்ட சொன்னேன். ‘நல்லது தான். நீ நிறைய கத்துக்கலாம்’னு அனுப்பி வெச்சார்.

2டி அனிமேஷன்ல எடுத்த ஒரு குறும்படத்தை ‘நாளைய இயக்குநர் சீஸன் 2’க்கு அனுப்பி வெச்சேன். ‘வொர்க் நல்லாருக்கு; ஆனா, ஏதோ ஒண்ணு மிஸ்ஸாகுது’ன்னு சொல்லிட்டாங்க. வாய்ப்பு நழுவிடக்கூடாதேன்னு, நல்ல கேமராவுல ‘ஆயுதம்’னு வேறொரு குறும்படம் எடுத்து அனுப்பினேன். அது பிடிச்சுப்போய், என்னைச் சேர்த்துக்கிட்டாங்க. ஒட்டுமொத்த சீஸனுக்குமான சிறந்த குறும்படமா ‘முண்டாசுப்பட்டி’ தேர்வானது. ஒருவழியா சினிமாவுக்கு வந்துட்டேன்னு சந்தோஷம்.
அந்த சந்தோஷத்துல ‘முண்டாசுப்பட்டி’யைப் பெரிய படத்துக்கான திரைக்கதையா எழுதினேன். தயாரிப்பாளர் சி.வி.குமார் சார்கிட்ட கதையைச் சொன்னேன். ஆனா, அவர் பிடிக்கலைன்னு சொல்லிட்டார். அதனால, கதையில கொஞ்சம் மாற்றம் பண்ணி, மறுபடியும் சி.வி.குமார் சார்கிட்டயே போனேன். நான் கரெக்ஷன் பண்ணியிருந்த திரைக்கதை அவருக்குப் பிடிச்சுப்போச்சு. உடனே செக் கொடுத்து, ‘நாம படம் பண்றோம்’னு சொல்லிட்டார். அந்த நிமிடத்தை இப்போ நினைச்சாலும், புல்லரிக்கும். உடனே ஊருக்குக் கிளம்பி அம்மாகிட்ட போய் விஷயத்தைச் சொன்னேன். ‘மூணு கோடி பட்ஜெட்’னு சொன்னதும், ‘டேய்... பணத்தைக் கேட்டு வீட்டுக்கெல்லாம் வந்துடமாட்டாங்களே’ன்னு அம்மா பதறிட்டாங்க. ‘படம் ஜெயிச்சிடும்மா’ன்னு நான் சிரிச்சேன்.
‘முண்டாசுப்பட்டி’க்கு இன்னொரு ஹீரோன்னா, அது சி.வி.குமார் சார்தான். ஏன்னா, நான் யார்கிட்டேயும் உதவி இயக்குநரா வேலை பார்க்கல. ‘முண்டாசுப்பட்டி’ குறும்படத்தை மட்டும்தான் அவர் பார்த்திருந்தார். அவர் எங்களை நம்பிப் படம் பண்ணுனது, ஆச்சர்யம்தான். படம் பார்த்துட்டு, அவர் முகத்துல சிரிப்பைப் பார்த்ததும்தான் எனக்கு இயக்குநரா ஜெயிச்ச சந்தோஷம். படம் பார்த்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், என் நண்பர்கள், ஃபேமிலி என எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. சினிமாவே பிடிக்காத எங்க அப்பாகூட, யாருக்கும் தெரியாம ரெண்டுமுறை படத்தைப் பார்த்துட்டு வந்ததா எங்க அம்மா சொன்னாங்க. சிம்புதேவன் சாருக்கு ரொம்பவே சந்தோஷம். இனி எத்தனை படம் இயக்கினாலும், ‘முண்டாசுப்பட்டி’ மாதிரி ஒரு அனுபவம் கிடைக்காது” என்பவருக்கு, இரண்டாவது படம் கற்றுக்கொடுத்த பாடம் அதிகம்.
“முதல் படம் ஹிட் கொடுத்தா, அடுத்த படம் ஈஸியா அமையும்னு நினைச்சேன். ஆனா, ‘ராட்சசன்’ படத்துக்கான முயற்சிகளில்தான் சினிமாவோட மோசமான இன்னொரு முகம் எனக்குத் தெரிஞ்சது. ‘முண்டாசுப்பட்டி’க்கு நாலு தயாரிப்பாளர்களைப் பார்த்தேன். நாலு பேரும் தயாரிக்கிறேன்னுதான் சொன்னாங்க. ஆனா, ‘ராட்சசன்’ படத்துக்கு 40 தயாரிப்பாளர்களைப் பார்த்தும், வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அவ்வளவு மெனக்கெட்டு ஒரு நல்ல கதையை உருவாக்கி வெச்சிருந்த எனக்கு, ‘இந்தக் கதையைப் படமா பண்ண முடியலைன்னா சினிமாவே வேண்டாம்’ங்கிற சிந்தனை வந்திடுச்சு. நல்லவேளையாக டில்லி பாபு சார் தயாரிப்பில் படம் வெளியாச்சு, பெரிய ஹிட். எல்லாத் தரப்பு ஆடியன்ஸுக்கும் படம் பிடிச்சிருந்தது.

எனக்கு ஹாலிவுட் இயக்குநர்கள் ‘கோயன் பிரதர்ஸ்’ படங்கள் ரொம்பப் பிடிக்கும். ரொம்ப சீரியஸா ஒரு படம் எடுத்தா, அடுத்ததா ஒரு எவர்கிரீன் காமெடிப் படத்தை எடுப்பாங்க. ரெண்டு படங்களையும் பார்க்கிறப்போ, ‘இவங்ககிட்ட இருந்து இப்படி ஒரு படைப்பா’ன்னு நாம எதிர்பார்த்திருக்கவே மாட்டோம். எனக்கும் அப்படி ஒரு இயக்குநரா வளரணும்னுதான் ஆசை. ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ரெண்டு படமும் வெவ்வேற கோணம். இப்போ, நான் ரெண்டு ஹிட் கொடுத்துட்டதனால, ‘எந்த ஜானரிலும் அடுத்த படத்தை எடுக்கலாம்’ங்கிற சுதந்திரம் எனக்கு என் மூணாவது படத்துல சாத்தியமாகியிருக்கு. தனுஷ் நடிக்க, நான் இயக்கப்போற அந்தப் படத்தை ஃபேன்டஸி ஜானர்ல எடுக்கிறேன். இந்தப் படத்துல கமிட் ஆனபிறகு, சினிமாமேல நம்பிக்கை அதிகமாகியிருக்கு.
நான் வரைஞ்சேன், கதை, கவிதை எழுதினேன், எடிட்டிங் கத்துக்கிட்டேன், குறும்படம் எடுத்தேன்... இதுக்கெல்லாம் எங்கெங்கே களம் கிடைக்குதோ எல்லாத்தையும் பயன்படுத்திக்கிட்டேன். டிரெயின்ல பார்த்த அந்தப் பையன், மதன் சார், சிம்புதேவன் சார், தயாரிப்பாளர்கள் சி.வி.குமார் சார், டில்லிபாபு சார்... எல்லோரும் வெவ்வேறு துருவங்கள்ல இருக்கிற மனிதர்கள். சரியான நபர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சதால்தான் எனக்கு இந்த இடம் கிடைச்சிருக்கு. சினிமாவுக்கு பயந்து, திருப்பூர்ல பிரஸ் வேலையைக் கவனிச்சுக்கிட்டு நிம்மதியா இருந்தி ருக்கலாம்தான். ஆனா, ஆறேழு வருடம் கழிச்சு, ‘நாம சினிமாவுக்கு முயற்சி பண்ணாமலே அதை விட்டுட்டோமே’ங்கிற நினைப்பு எனக்கு வந்துடக் கூடாது. இத்தனை முயற்சிகளும் அதுக்காகத்தான்.”
- கே.ஜி.மணிகண்டன்; படங்கள்: ரமேஷ் கந்தசாமி