
“நான் நடிப்பையே இன்னும் முழுசா கத்துக்கல!”
மம்மூட்டி, சினிமா உலகில் காலடி வைத்து 36 வருடமாகிவிட்டது. இன்னமும் துடிப்பாகப் புதுமுக இளைஞர்களோடு போட்டி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். மெகா பட்ஜெட்டில் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள ‘மாமாங்கம்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் மம்மூட்டியைச் சந்தித்துப் பேசினோம்.

“ ‘மாமாங்கம்’ என்ன மாதிரி படம்?”
“கேரளாவுல சேர மன்னர்கள் ஆட்சி செய்தபோது, மாமாங்கம் விழா கொண்டாட ஆரம்பிச்சதா சொல்றாங்க. 12ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்துல சேர மன்னர்களோட ஆட்சி முடிந்துவிட்டது. அதுக்கப்புறம் குறுநில மன்னர்கள் உருவானார்கள். அப்படி உருவான வள்ளுவநாட்டு ராஜ்யத்தில் உள்ள திருநாவாயா என்ற இடத்தில்தான் 12 வருடங்களுக்கு ஒருமுறை மாமாங்கம் விழாவைக் கொண்டாடியிருக்காங்க.
மாமாங்கம் திருவிழாவின்போது அரபுக் காரர்கள் குதிரை கொண்டு வருவாங்க, சீனர்கள் பட்டாடைகள் எடுத்துட்டு வருவாங்க. கேரளாவிலிருந்து மிளகு, கிராம்பு போன்ற உணவுப் பொருள்களைக் கொண்டு வருவாங்க. அந்த இடமே வியாபார பூமியாக மாறிவிடும். உலகத்துல உள்ள சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், கலைஞர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் கூடுவாங்க.
அப்படி 15ஆம் நூற்றாண்டுல இந்த மாமாங்கம் திருவிழாவை வள்ளுவ நாட்டின் அரசனாக இருந்த வள்ளுவக்கோ நடத்திவந்திருக்கார்.
அதே சமயத்துல வேறொரு பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னன் சாமூதிரி, அரேபியர்களிடம் தொழில் செய்து, அதன் மூலமாக நிறைய பணம் சம்பாதித்து, ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கிறான். எந்நேரமும் பக்கத்துல உள்ள பகுதிகளில் சண்டை போட்டு, அந்த நிலங்களையெல்லாம் அபகரித்துக் கொள்கிறான். சாமூதிரி எவ்வளவு செல்வாக்காக இருந்தாலும், மக்கள் யாரும் அவனை மதிக்கலை. வள்ளுவக்கோவுக்கு மட்டும் ராஜமரியாதை கொடுக்குறாங்க. இதனால் கோபம் கொண்ட சாமூதிரி வள்ளுவநாட்டின் மேல படையெடுத்து, வள்ளுவக்கோவைக் கொன்னு அந்த நாட்டையும் அபகரித்துவிடுகிறான்.
வள்ளுவக்கோ வம்சாவளியில் சேனாதிபதிகளாக இருந்த நான்கு குடும்பத்தினர் மட்டும் சாமூதிரியை மன்னனாக ஏற்றுக்கொள்ள மறுக்குறாங்க.
மீண்டும் மாமாங்கம் நடத்தும் காலம் வருது. அப்போது, சாமூதிரி மாமாங்கம் விழாவை நடத்த முயற்சி எடுக்குறான். ‘உங்களை மாமாங்கம் நடத்த விடமாட்டோம். எங்கள் வம்சத்தில் ஒரு ஆண்மகன் உயிரோடு இருக்கும்வரை, நீங்கள் மாமாங்கம் கொண்டாட முடியாது’ என்று சண்டை போடுகின்றனர் வள்ளுவக்கோ வம்சத்தினர்.
சாமூதிரி படைக்கும், வள்ளுவக்கோ வம்சத்துக்கும் நடக்கும் போரில் யார் ஜெயிக்கிறாங்க... இதுதான் ‘மாமாங்கம்’ படம் சொல்லப்போற கதை. இந்தப் படத்துல வர்ற சரித்திரக் காட்சிகளை பிரமாதமாக இயக்கியிருக்கிறார், எம்.பத்மகுமார். என் கதாபாத்திரம் என்னன்னு மட்டும் கேட்காதீங்க. அது சஸ்பென்ஸ்!”
“நீங்க மூன்று தேசிய விருது வாங்கியிருக்கீங்க. அமிதாப் பச்சன் நான்கு வாங்கியிருக்கார்... இந்த முறை விருது யாருக்கு?”
“எனக்கு நாலாவது தேசிய விருது கொடுத்தா வேணாம்னா சொல்லப்போறேன். என்ன கெட்டுப்போச்சு, நேரடித் தமிழ்ப்படத்துல நடிச்சு, தமிழை என் குரல்லேயே பேசி நடிச்ச ‘பேரன்பு’ படத்துக்கு தேசிய விருது கொடுங்க, சந்தோஷமா வாங்கிக்கிறேன். மகிழ்ச்சிதான்.”
“அடிப்படையில் நீங்கள் ஒரு வழக்குரைஞர். அப்போதைய சட்டதிட்டங்கள், இப்போதைய சட்டதிட்டங்கள்... என்ன வேறுபாடுகளை உணர்றீங்க?”
“சட்டங்கள் எதுவும் மாறவில்லை. பயிற்சியிலேயும் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் முன்பைவிட குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டிருக்கு. அப்போதும், இப்போதும் நீதிமன்றமும், சட்டமும் அப்படியேதான் இருக்கு. நீதிமன்றத்துக்கு வருகிற விதவிதமான வழக்குகளின் வடிவம் மட்டும்தான், தினுசு தினுசா மாறிக்கிட்டே இருக்கு.”
“ ‘அம்பேத்கர்’, ‘யாத்ரா’ மாதிரியான ‘பயோபிக்’ படங்களில் நடித்த அனுபவம்?”
“இந்திய அளவுல சமூகப்புரட்சியை உண்டாக்கியவர் அம்பேத்கர். அவர் கேரக்டர்ல நான் நடிச்சது எனக்குப் பெருமை. ஆந்திர மாநிலத்துல இருந்த பாமர மக்கள் முன்னேறணும்னு
கனவுகண்டு, அதுக்காகக் கடுமையாகப் பாடுபட்டவர், முன்னாள் முதல்வர் ராஜசேகர். அவர் கேரக்டரி லும் நான் நடிச்சது, மறக்க முடியாத அனுபவம்.”
“இந்தியில் ‘அம்பேத்கர்’, தெலுங்கில் ‘யாத்ரா’, தமிழில் ‘பேரன்பு.’ எப்படி அந்தந்த மாநில மொழி மாடுலேஷனில் சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறீர்கள்?”
“பிறமொழிப் படங்களில் நடிக்கும்போது, அந்தந்த மாநில மொழிகளின் இயல்புத் தன்மை கெடாமல் பேசுறது முக்கியம். இப்பவும் தமிழ், தெலுங்குன்னு பிற மொழிகளில் பின்னணி பேசுவதற்காகக் கஷ்டப்பட்டு அந்தந்த மொழியில் பயிற்சி எடுத்துக்கிறேன். என் உச்சரிப்பு, மாடுலேஷன் சரியாக இருக்கிறதா... என்மீது எனக்கு முழுசா நம்பிக்கை வருதா... அதெல்லாம் பார்த்துதான் சொந்தக் குரலில் பேசுறேன். ‘அம்பேத்கர்’ படத்துல ஆங்கிலத்துல வசனம் பேசணும், டப்பிங் குரல் கொடுக்கலாம்னு சொன்னாங்க. வேண்டாம்னு மறுத்து, நானே ஆங்கிலத்தில் பேசினேன். ஆந்திராவுல ராஜசேகர ரெட்டியின் பயோபிக்கான ‘யாத்ரா’வுல நடிச்சிருக்கேன். அதுக்காக, தெலுங்கு மொழியைக் கரைச்சுக் குடிச்ச ஒருத்தர்கிட்ட தெலுங்கு பேசுறதுக்கான பயிற்சியைக் கடுமையா எடுத்தேன். படத்தைப் பார்த்த இயக்குநர், என்கூட நடிச்ச சக நடிகர் நடிகைகள் எல்லோரும் ‘ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர் மாதிரியே பேசியிருந்தீங்க’ன்னு சொல்லிப் பாராட்டியபோது சந்தோஷமா இருந்தது.”
“ஒரு நடிகராக உங்களைப் பண்படுத்திய இயக்குநர்கள் யார்?”
“உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்றேன் ஆரம்பத்துல நான் ஒரு மட்டமான நடிகர். ஒவ்வொரு படத்திலும் எனக்கு வெவ்வேற கேரக்டரை நம்பிக் கொடுத்தது, கொஞ்சம் கொஞ்சமா நடிப்பைச் சொல்லிக் கொடுத்தது, என்னை ஒரு நடிகனா வளர்த்தது... எல்லாமே என் இயக்குநர்கள்தான். அந்த லிஸ்ட்டுல நிறைய இயக்குநர்கள் இருக்காங்க. சிலரை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னா, அது தப்பாகிடும். மலையாளப் பட்டியல் ரொம்பப் பெரிசு... தமிழில் முதல்முறையா ‘மெளனம் சம்மதம்’ படத்துல நடிச்சேன். அப்புறம், கே.பாலசந்தர் சார் ‘அழகன்’ படத்துல என்னை நடிக்க வெச்சார். மணிரத்னம் சார் இயக்கிய ‘தளபதி’யில் நடிச்சேன், அதுல தொடங்கி இப்போ சமீபத்துல ராம் இயக்கத்துல ‘பேரன்பு’ வரை இப்படி நான் நடிச்ச எல்லாப் படங்களுமே என் சினிமா வாழ்க்கையில மறக்க முடியாத, பெருமையான தருணங்கள்தான். அதை எனக்குக் கொடுத்தவர்கள் இந்த இயக்குநர்கள்தான்.”

“கமல் அரசியலுக்கு வந்துவிட்டார்.. உங்களுக்கு அரசியல் ஆசை இருக்கா?”
“நான் எதுக்கு புதுசா அரசியலுக்குள்ள குதிக்கணும். அரசியலுக்கு நடுவுலதானே வாழ்ந்துகிட்டிருக்கேன்.”
“தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களின் அபார வளர்ச்சியை எப்படிப் பார்க்குறீங்க?”
“தமிழ்ல மட்டுமல்ல... தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தின்னு எல்லா மொழிகளிலும் திறமையான இயக்குநர்கள் வந்துகிட்டே இருக்காங்க. பிரமாதமா படம் பண்ணி, ஸ்கோர் பண்ணிட்டுப் போய்க்கிட்டே இருக்காங்க. இப்போ வர்ற இளம் இயக்குநர்களின் புத்திசாலித் தனத்தை மனம் திறந்து பாராட்டணும். நான் பாராட்டுறேன்.”
“ஒரு காலத்தில் மெகா ஸ்டார் மம்மூட்டி பீடி பிடிப்பது ஃபேமஸ்... இப்போ?”
(சத்தமாகச் சிரிக்கிறார்) ‘`நான் பீடி பிடிக்கிறதை விட்டு ரொம்ப வருஷமாச்சே! உடம்புக்கு ஒத்துக்காம எல்லாம் அதை நிறுத்தல. திடீர்னு ஒருநாள் நிறுத்திட்டேன். அதுக்குப் பிறகு அதை நினைக்கிறதே இல்லை.”
“யதார்த்த சினிமாமீது ஆர்வம் கொண்ட மலையாள ரசிகர்கள், சமீப காலமாக மற்ற மொழி கமர்ஷியல் படங்களையும் கொண்டாடுகிறார்களே?”
“யதார்த்த சினிமாவைப் பார்க்கிற ரசனையாளர்களோட எண்ணிக்கை குறைவு. ஆனாலும் எல்லா மொழிகளிலும் யதார்த்த சினிமாக்கள் வந்துகிட்டேதான் இருக்கு. நீங்க சொன்ன மாதிரியான படங்களை வெகுஜன மக்கள் விரும்பிப் பார்க்குறாங்க... அதுல தப்பில்ல. திரைத்துறைக்கு இரண்டுமே அவசியம்தான்.”
“நடிப்பைத் தவிர, வேற எதைக் கத்துக்கிறதுல ஆர்வம் அதிகம்?”
“எனக்கு நடிப்பு மட்டும்தான் தெரியும். அதைத்தவிர வேற ஒண்ணும் தெரியாது. அதையே நான் இன்னும் முழுசா கத்துக்கல!”
“பையன் துல்கரும் ஒரு நடிகர். அவருக்கு நடிப்பு டிப்ஸ் கொடுப்பீங்களா?”
“அவர் என்கிட்ட கேட்டா நடிச்சார். நான் அவரை நடிக்கச் சொல்லலையே! அவராவே நடிக்க வந்தார். அதனால, நடிப்புல இருக்கிற சிரமத்தையெல்லாம் அவரே பார்த்துக்குவார்.”
- எம்.குணா