
சினிமா விமர்சனம்: GAME OVER
பாலியல் வன்கொடுமைகள் பற்றிய திரைப்படங்கள் தமிழில் ஏராளம். எல்லாமே கெடுத்தவனை வதம் செய்யும் பழிவாங்கல்களோடு முடிந்துபோகும். ஆனால் பாதிப்புக்குள்ளான பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்னைகள் பற்றிப் பேசிய படங்கள் குறைவு. `கேம் ஓவர்’ அந்தவகையில் வரவேற்கத்தகுந்த படம். இயக்குநர் அஸ்வின் சரவணனுக்குப் பாராட்டுகள்.

ஒரு புத்தாண்டு தினத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார் கேம் டெவலப்பர் டாப்ஸி. குற்றவாளி சிறைக்குச் சென்றுவிட, ஒரு வருடத்திற்குப் பிறகும் இருட்டைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறார் டாப்ஸி. ஒற்றை அறைக்குள் தன்னை அடைத்துக்கொண்டு கேம் ஆடியும் உருவாக்கியும் அந்தச் சம்பவத்திலிருந்து மீள முடியாமல் போராடுகிறார். டாப்ஸிக்குத் துணையாக இருந்து தாயைப்போல கவனித்துக்கொள்கிறார் பணிப்பெண் வினோதினி. அடுத்தடுத்து பெண்களைக் கொல்லும் சீரியல் கில்லரும், அவனால் கொல்லப்பட்ட இன்னொரு பெண்ணும் டாப்ஸியின் வாழ்க்கைக்குள் வர... ஆட்டம் தொடங்குகிறது. தன் அச்சங்களையும் கொலைகாரனையும் எப்படி டாப்ஸியும் வினோதினியும் எதிர்கொண்டு கேமில் ஜெயிக்கிறார்கள் என்பது மிச்சக்கதை.
டாப்ஸி, ஸ்பெஷல் காளான்களை அள்ளித்தின்ற சூப்பர் மேரியோபோல நடிப்பில் விஸ்வரூபமெடுத்து நிற்கிறார். டாப்ஸி மேரியோ என்றால் வினோதினிதான் மேரியோவின் சகோ லூய்ஜி. நாயகிக்கு நிகராக பாயின்ட்ஸ் அள்ளுகிறார்.
படத்தின் திக் திக் தன்மைக்கு வலுச் சேர்க்கிறது, ரான் ஈதன் யோகனின் இதயத்துடிப்பை எகிற வைக்கிற இசை. முதல் பாதியில் பொறுமையாக நகரும்போதும் சரி, இரண்டாம்பாதி யின் பாய்ச்சலிலும் சரி, ரிச்சர்ட் கெவனின் எடிட்டிங் தரம். பெரும்பாலான நேரங்களில் டாப்ஸியின் வீட்டுக்குள்ளேயே நடக்கிற கதையை சலிப்பூட்டாதபடி விறுவிறுப்பாகப் படமாக்கியிருக்கிறது ஏ.வசந்தின் கேமரா.

சீரியல் கில்லர் எதற்காகக் கொலைகள் செய்கிறான்... டாப்ஸிக்கு நடந்தது என்ன... இறுதிக்காட்சியில் நடப்பது கற்பனையா... தேஜா வூவா, இல்லை அமானுஷ்யமா என ஏகப்பட்ட புதிர்கள். ஆனால், அதையெல்லாம் அவிழ்க்கும்படி குறைந்தபட்ச க்ளூக்களையாவது கொடுத்திருக்கலாம். இரண்டாம் பாதிதான் கேம் என்பதால் முதல் பாதி முழுவதும் டிரையல் மோடிலேயே செல்வதும் பலவீனம்.
அறிவுரைகள் நிறைந்த கதைதான் என்றாலும் அதை எங்குமே சலிப்பூட்டாமல் பதறவைக்கிற த்ரில்லராகச் சொன்னதில் கவர்கிறது இந்த உளவியல் விளையாட்டு!
- விகடன் விமர்சனக் குழு