
டைட்டில் கார்டில் தங்கள் பெயரைக் கண்ட இளம் தலைமுறை இயக்குநர்களின் அனுபவத் தொடர்
முதல் படத்திலேயே ஒட்டுமொத்தத் திரையுலகத்தையும் திரும்பிப்பார்க்க வைத்தவர் ‘96’ இயக்குநர் பிரேம்குமார். நிறைவேறாக் காதலின் உணர்வுகளைக் கொட்டித் தீர்த்தவர், நிறைவேறிய தன் திரையுலகப்பயணம் பகிர்கிறார்.

“பிறந்தது திருச்சி. அம்மா ஜீவசந்திராவுக்குச் சொந்த ஊர், கும்பகோணம். அப்பா சந்திரனுக்குக் காரைக்குடி. வேலைக்காகத் தஞ்சாவூருக்குக் குடிபெயர்ந்துட்டாங்க. நான் படிச்சு வளர்ந்ததெல்லாம் அங்கேதான். ஆக்ஸீலியம் ஸ்கூல்ல ஐந்தாம் வகுப்பு வரை... கமலா சுப்பிரமணியம் ஸ்கூல்ல பத்தாம் வகுப்பு வரை... என் வாழ்க்கையில மிக முக்கியமான நாள்கள் அவை. இப்போ நான் இருக்கிற இந்த நிலைமைக்கான இன்வெஸ்ட்மென்ட் கிடைச்சது அங்கதான். ஓரளவுக்குப் படிப்பேன். மூணு வருடம் கராத்தே கத்துக்கிட்டேன். ரன்னிங், ஹை ஜம்ப்ல கலந்துகிட்டேன். ஓவியம் வரைவேன், நீச்சல் கத்துக்கிட்டேன். கிரிக்கெட்ல மாவட்ட அளவிலான போட்டிகள்லகூட ஆடியிருக்கேன். இப்படி மாறி, மாறி எதையாவது பண்ணிக்கிட்டே இருப்பேன். தவிர, எல்லோருக்கும் நார்மலா நடக்கிற விஷயங்கள் எல்லாமே எனக்கு அப்நார்மலா நடக்கும். ஆனா, அந்த வயசுல எனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க, நல்ல ஆசிரியர்கள் கிடைச்சாங்க. அடிக்கடி மழை என்கூடவே ஸ்கூல் வரைக்கும் வந்தது. சொல்லிக்கிற மாதிரி நல்ல மார்க் எடுத்தேன். எங்க அண்ணன் சாலை வேதன், தஞ்சாவூர் டான் போஸ்கோ ஸ்கூல்ல படிச்சான். அந்த ஸ்கூல் ஸ்டூடென்ட்னு சொன்னாலே மரியாதை கிடைக்கும். அதனால, நானும் அங்கே கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன்” என்பவருக்கு, அதற்குப் பிறகான இரண்டு ஆண்டுகள் கண்போன போக்கில் காலும், கால்போன போக்கில் கண்ணும் போன கதைதான்!

“படிப்புல சுத்தமா ஆர்வமே இல்லை. அப்போதான், எனக்குப் போட்டோகிராபியில ஆர்வம் வந்தது. அங்கே இங்கேன்னு சுத்தித் திரிஞ்சு போட்டோ எடுத்தப்போ, நேஷனல் ஜியோகிராபியில வேலை பார்க்கணும்னு ஆசை வந்தது. நண்பர்கள் ராஜேஷ், வினோத், செந்தில், கதிரவன் இவங்கதான் எனக்கு உதவியா இருந்தாங்க. கதிரவன் மூலமா எனக்கு அறிமுகம் ஆனவன்தான், இப்போ என்கூட டிராவல் பண்ணிக்கிட்டிருக்கிற பக்ஸ். வினோத்தான், எங்க அப்பாகிட்ட எனக்கிருக்கிற போட்டோகிராபி ஆர்வத்தைச் சொல்லி, விஸ்காம் படிக்கக் காரணமா இருந்தான். அப்பா நிலத்தை வித்து, கோயம்புத்தூர்ல விஸ்காம் படிக்க சேர்த்துவிட்டார். விஸ்காம் படிச்சு முடிக்கிற சமயத்துல, அப்பாவுக்கு ஃபோர்டுல வேலை கிடைச்சு இங்கே வந்துட்டார். அண்ணனுக்கு சென்னையில நல்ல வேலை கிடைச்சதால், அவனுக்காக வீட்டுல எல்லோரும் சென்னைக்கு ஷிஃப்ட் ஆக முடிவெடுத்தாங்க. என் வாழ்க்கையில மிகப்பெரிய இழப்பு, அதுதான். நான் மரம்னா, தஞ்சாவூர்தான் என் வேர். அங்கிருந்து வீட்டைக் காலி பண்றப்போ, என்ன பண்றதுன்னு தெரியாம பெரிய கோயில்ல போய் படுத்துக்கிட்டேன்” என்கிறார், பிரேம்குமார். ஆனால், சென்னைக்கு வந்த பிறகுதான் வாழ்வின் அத்தனை திருப்புமுனைகளும்!

“அடையாறு பிலிம் இன்ஸ்டிட்யூட்ல டி.எஃப்.டெக் படிச்சேன். அங்கேதான் பாலாஜி தரணீதரன், ‘அசுரவதம்’ மருதுபாண்டியன் இவங்கெல்லாம் பழக்கம். பாலாஜி எடிட்டிங் படிச்சார். பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்ச மூணு வருடம் என் வாழ்க்கையில எவர்கிரீன் டைம். அந்தச் சமயத்துல ‘நான் வைல்டு லைஃப் போட்டோகிராபர் ஆகணும்’னு, எங்க புரொஃபஸர் ஒருத்தர்ட்ட சொன்னேன். அவருக்கு அந்த யோசனை பிடிச்சுப்போய், ‘எமி விருது’ வாங்கிய வைல்டு லைஃப் போட்டோகிராபர் அல்போன்ஸ் ராய் சாரைப் பற்றிச் சொன்னார். போய்ப் பார்த்தேன், என் போட்டோக்களைப் பார்த்து மனமுவந்து பாராட்டினார், அவர்கிட்ட யாரும் அவ்வளவு சீக்கிரம் சேரமுடியாதுன்னு சொன்னாங்க; நான் சேர்ந்தேன். நிறைய ஆவணப் படங்களுக்காக அவர்கூடப் பயணப்பட்டிருக்கேன். இப்போவரைக்கும், அல்போன்ஸ் சார்தான் எனக்கு மென்டார், குரு எல்லாம்!” - இது மட்டுமல்ல, பின்னாளில் பிரேம்குமாருக்கு மாமனார் ஆனவரும் அல்போன்ஸ் ராய்தான்.

“பிலிம் இன்ஸ்டிட்யூட்ல நல்ல பர்ஃபாமன்ஸ். கோல்டு மெடல். நான் ஒளிப்பதிவு பண்ணுன ‘பரமபதம்’ குறும்படத்துக்கு மாநில விருது கிடைச்சது. ஒளிப்பதிவாளர் ரத்னவேல் சார்கிட்ட உதவி ஒளிப்பதிவாளரா சேரணும்னு ஆசை. முயற்சி பண்ணினேன்; கிடைக்கலை. `ரவி.கே.சந்திரன்கிட்ட ட்ரை பண்ணலாமே’ன்னு நண்பன் ஒருத்தன் சொன்னான். சரின்னு போனேன். ‘இந்தக் காக்கா, குருவி, கெழவி, கோயில், குளம்னு வழக்கமான போட்டோக்களா இருந்தா, தூக்கி வீசிடுவேன்’னு சொன்னார். ‘நீங்க தூக்கி வீசுறதுக்கு முன்னாடி, நான் போயிடுவேன்’னு சொன்னேன். என்ன நினைச்சாரோ தெரியல, என் புகைப்படங்களைப் பொறுமையா வாங்கிப் பார்த்தார். ‘ரொம்ப நல்லாருக்கு’ன்னு சொல்லிப் பாராட்டி, என்னைச் சேர்த்துக்கிட்டார். உதவி ஒளிப்பதிவாளரா நான் வொர்க் பண்ணுன முதல் படம், ‘பாய்ஸ்.’ ரொம்ப உற்சாகமா இருந்தது. அதுக்கப்புறம்... வேறென்ன, வழக்கமான ‘அப்நார்மல்’ ஸ்டேஜ்தான்!” - பிரேம்குமாருக்கு முதுகுத்தண்டில் விபத்து!

“டாக்டர்கள் ‘முதுகுத்தண்டுல பல எலும்புகள் நழுவியிருக்கு; கட்டாய ஓய்வு எடுக்கணும்’னு சொல்லிட்டாங்க. பெரிய போராட்டத்துக்குப் பிறகு மீண்டு வந்தேன். மறுபடியும், சினிமா வாய்ப்புக்காக முயற்சி செஞ்சேன். இந்தமுறை, நான் முதல்ல சேரணும்னு ஆசைப்பட்ட ரத்னவேல் சார்கிட்ட சேர்ற வாய்ப்பே கிடைச்சது. ‘பேரழகன்’ தொடங்கி, ‘வாரணம் ஆயிரம்’ வரை ஆறேழு படங்கள்ல அவரோட வொர்க் பண்ணினேன். கல்யாணம் முடிஞ்சு, ஹனிமூனுக்குப் போயிருந்த சமயத்துலதான், `வர்ணம்’ பட வாய்ப்பு வந்தது. எனக்கு அந்த வாய்ப்பை ஏத்துக்கிறதா, மறுக்கிறதான்னு தெரியல. சென்னைக்கு வந்து ரத்னவேல் சார்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன். ‘தயவு செஞ்சு வாய்ப்பை மிஸ் பண்ணிடாத’ன்னு அனுப்பி வெச்சார். அதில்தான் விஜய் சேதுபதி எனக்கு அறிமுகம். ‘பசங்க’, ‘சுந்தரபாண்டியன்’ படங்களுக்குப் பிறகு, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துல வொர்க் பண்ணினேன். எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பாலாஜி நல்ல திரைக்கதையா எழுதியிருந்தார். அதுக்கப்புறம், ‘ரம்மி’, ‘எய்தவன்’னு நிறைய படங்கள்” என்றவர், இயக்குநராக அவதாரமெடுத்த ‘96’ பட அனுபவத்தைச் சொன்னார்.

“இயக்குநர் ஆகணும்னு நான் ஒருபோதும் நினைச்சதே கிடையாது. தனியா உட்கார்ந்து நிறைய கதை கவிதைகள் எழுதுவேன். என் கவிதைகளை ஒரு தொகுப்பாவே வெச்சிருக்கேன். பிரபஞ்சன் சார்கூட அதைப் படிச்சுட்டு, ‘நல்லாருக்கு; புத்தகமா கொண்டுவரலாமே’ன்னு சொன்னார். ‘நீங்களே நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்க, போதும்’னு விட்டுட்டேன். நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கேன். ஊர்ல ‘க பாஷை’ன்னு ஒரு விஷயம் சொல்வாங்க. நீங்களும், நானும் நமக்குப் பக்கத்துல இருக்கிற இன்னொருத்தருக்குப் புரியாதபடி பேச, ஒரு ஒரு வார்த்தைக்கு முன்னாடியும் விளையாட்டா ‘க’ போட்டுப் பேசுறது. ஒரு நாவல் எழுதி அதுக்கு, ‘கபி கரே கம்’னு என் பெயர் வெச்சிருக்கேன். 2014-ல தொடங்கி இன்னும் எழுதி முடிக்கப்படாத அந்த நாவல்ல ஒரு பகுதிதான், ‘96’ படம். விஜய் சேதுபதிகிட்ட இந்தக் கதையைச் சொன்னேன், பாதிக் கதையைக் கேட்டு எழுந்துபோனவர், ‘சப்பாத்தியும் மட்டனும் வேணும்; சமைச்சு வைங்க’ன்னு மறுநாள் வீட்டுக்கு வந்து மிச்சக் கதையைக் கேட்டார். மாஸ் ஹீரோ ஆகிட்ட அவர், ஆக்ஷன், காமெடி எதுவுமில்லாத இந்தக் கதையில நடிப்பார்னு எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனா, ‘நீங்க இயக்கினா, நான் நடிக்கிறேன்’னு சொல்லிட்டார். பாலாஜியும் ‘நீயே பண்ணு’ன்னு சொன்னான். பாண்டிராஜ், பிரபாகரன், பாலாஜி தரணீதரன்… இந்த மூணு பேரும் நான் ரசிக்கிற இயக்குநர்கள். அவங்ககிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட விஷயம் அதிகம். அந்த நம்பிக்கையில, நாமளே இந்தப் படத்தை இயக்கிடலாம்னு ஷூட்டிங் கிளம்பிட்டேன். நண்பர்கள் நிறைய உதவி செஞ்சாங்க. முக்கியமா, ‘96’ படத்துல பக்ஸ் கொடுத்த பங்களிப்பு ரொம்ப முக்கியமானது. இப்போ, ‘96’ படத்தைத் தெலுங்குல ரீமேக் பண்றோம். சமந்தா, ஷர்வானந்த் நடிக்கிறாங்க. அதுக்கான வேலைகள்தான் இப்போ பரபரப்பா போய்க்கிட்டிருக்கு.’’ எனத் தனிப்பெரும் தன்னம்பிக்கையோடு புன்னகைக்கிறார்.
- கே.ஜி.மணிகண்டன்