
மிஸ்டர் மியாவ்
• சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில், பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜனுடன் ‘பேராண்மை’, ‘கபாலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த சாய் தன்ஷிகாவும் பங்கேற்று யோகா செய்தார்.
• முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிக்கும் ‘தர்பார்’ படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் நடிக்கவிருக்கிறார். இவர், ஏற்கெனவே சில பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்.

• தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் ஸ்ருதி ஹாசன், அடுத்து அமெரிக்கா செல்கிறார். சி.ஐ.ஏ உளவு அமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கும் ‘ட்ரெட் ஸ்டோன்’ என்ற டி.வி சீரிஸில் ஹோட்டல் பணிப் பெண்ணாக நடிக்கிறார்.
• தமிழ் சினிமாவில் நடிக்க வந்து, பத்து வருடங்களை நிறைவு செய்துள்ள நடிகை அஞ்சலி, சமீபத்தில் திருமணம் குறித்த கேள்விக்கு, ‘சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. இப்போதைக்கு நோ ஐடியா’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
• பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தில் அவருக்கு ஜோடியாக அனு இமானுவேல், தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு எம்.ஜி.ஆரின் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ தலைப்பை வைக்கலாமா என்று ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

• சண்முக பாண்டியன் நடிக்கவிருக்கும் புதியப் படத்தை அறிமுக இயக்குநர் பூபாலன் இயக்குகிறார். படத்தில் ஹீரோவின் அம்மா கதாபாத்திரத்துக்கு அர்ச்சனா கமிட் ஆகியிருக்கிறார். படத்தில் இவரின் கேரக்டர் சண்முக பாண்டியனின் நிஜ அம்மா பிரேமலதாவின் கேரக்டரைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.

• வெள்ளாவி நடிகையின் படம் ஒன்று சமீபத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இது நம்பர் நடிகைக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கிறதாம். இதனால், தன் மார்க்கெட் சரிந்துவிடுமோ எனப் பயத்தில் இருக்கும் அவர், இப்போதைக்குக் கதைகள் கேட்பதைத் தள்ளிவைத்து விட்டு, உச்ச நட்சத்திரத்தின் படத்தில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்.
• பக்கத்து மாநிலத்தின் நட்சத்திரக் குடும்பத்துக்கு வாக்கப்பட்ட தமிழ் நடிகை, ‘என் திறமை யாருக்கும் புரியவில்லை’ எனப் புலம்பிக் கொண்டிருக்கிறாராம். திருமணத்துக்குப் பிறகு சரியான வாய்ப்புகள் அமையாததே இதற்குக் காரணமாம்.
• மன்னர் பெயர் கொண்ட நடிகர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதில் உற்சாகமாக இருக்கிறார்கள், அவரது போட்டியாளர்கள். ‘உங்க படத்தால எங்களுக்குத் தியேட்டர் கிடைக்காம போனப்போ, இப்படித்தான் இருந்திருக்கும்!’ எனக் காதுபடவே பேசியிருக்கிறார்களாம்.