நடப்பு
Published:Updated:

விரால் ஆச்சார்யா ராஜினாமா... முடிவுக்கு வருகிறதா ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்?

விரால் ஆச்சார்யா ராஜினாமா... முடிவுக்கு வருகிறதா ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்?
பிரீமியம் ஸ்டோரி
News
விரால் ஆச்சார்யா ராஜினாமா... முடிவுக்கு வருகிறதா ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்?

நிகழ்வுஆர்.மோகனப் பிரபு, CFA

னது பதவிக் காலம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்குமுன்னரே ராஜினாமா செய்வதாக மத்திய வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா அறிவித்தது முற்றிலும் எதிர்பார்க்காத நிகழ்வல்ல. கடந்த டிசம்பர் 2018-ல் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, விரால் ஆச்சார்யாவும் பதவி விலகுவார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அப்போது ராஜினாமா செய்யாமல், இப்போது செய்திருக்கிறார் ஆச்சார்யா. 

விரால் ஆச்சார்யா ராஜினாமா... முடிவுக்கு வருகிறதா ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்?

தொடர்கதையான மோதல்

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்படுவது புதிதல்ல. காங்கிரஸ் காலத்தில் ஓரளவுக்கு இருந்த இந்தக் கருத்து வேறுபாடு, கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகமாகவே செய்தது. பணமதிப்பு நீக்கம் தொடர்பாக ரகுராம் ராஜனுடன் கருத்து வேறுபாடு, வட்டி விகிதம் குறைப்பது தொடர்பாக உர்ஜித் பட்டேலுடன் கருத்து வேறுபாடு எனத் தொடர்ந்ததன் இன்னொரு சம்பவம்தான் விராலின் ராஜினாமா.

யார் இந்த விரால் ஆச்சார்யா?

ரிசர்வ் வங்கியில் நான்கு துணை ஆளுநர்கள் மத்திய அரசினால் நியமிக்கப்படுகின்றனர். இதில் இருவர் மத்திய வங்கியில் பணியாற்றியவராகவும், ஒருவர் வணிக வங்கி பின்புலம் இருப்பவராகவும், மற்றொருவர் பொருளாதார நிபுணராகவும் இருப்பது மரபு. உர்ஜித் பட்டேல், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராகப் பதவியேற்றது பொருளாதார நிபுணர் என்ற வகை யில்தான். ரகுராம் ராஜன் பதவிக் காலத்திற்குப்பிறகு, உர்ஜித் பட்டேல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட வுடன், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவந்த விரால் ஆச்சார்யா பொருளாதார நிபுணர் என்ற முறையில் இளம் வயதிலேயே துணை ஆளுநராகப் பதவியேற்றார். உர்ஜித் மற்றும் விரால் ஆகிய இருவரும் பொருளாதாரப் பின்புலம் கொண்டவர் கள் என்பதனால், இருவருக்குமிடையே நல்ல புரிந்துணர்வு இருந்ததுடன், வாராக் கடன் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர ரகுராம் ராஜன் தொடங்கிவைத்த நடவடிக்கைகளை அதிரடியாகத் தொடர்ந்தனர்.

விரால் ஆச்சார்யா ராஜினாமா... முடிவுக்கு வருகிறதா ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்?



பிரச்னைக்கு வழிவகுத்த பேச்சு

மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமையில், மத்திய அரசு அளவுக்கு மீறி தலையிடுவது  நாட்டின் பொருளாதாரத் திற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று விரால் ஆச்சார்யா  ஏ.டி.ஷெராஃப் உரையில் அதிரடியாகப் பேசினார். அர்ஜென்டினாவில் நடந்த சில  நிகழ்வுகளை  அதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டினார். விராலின் இந்தப் பேச்சு மத்திய அரசுக்கு மிகப் பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதுடன், உர்ஜித்  பட்டேலின் ராஜினாமாவிற்கும் வித்திட்டது.

பெருமுதலாளிகளின் அதிருப்திக்கு உள்ளான அறிக்கை

கடந்த 2017 பிப்ரவரியில் இந்திய வங்கிகள் கழகத்தில் விரால் ஆச்சார்யா நிகழ்த்திய உரை, வாராக் கடன்கள் மீதான உர்ஜித்-விரால் பார்வையை வெளிக்கொணர்ந்தது. உடனடியாக, மிகப் பெரிய 12 வாராக் கடன்கள், தீர்வுக்காகத் தேசிய சட்ட தீர்வாணையங் களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த நடவடிக்கை ‘நினைத்ததைச் செய்து முடிப்பவர்கள் இவர்கள்’ என்ற அச்சத்தைப் பெரும் கடனாளிகளுக்கு அளித்தது. அதிக வாராக் கடன்கள் கொண்ட பொதுத்துறை வங்கிகள்மீது கடும் நடவடிக்கைகள் தொடங்கப் பட்டன. ரூ.2,000 கோடிக்குமேல் கடன் வாங்கியுள்ள வாராக் கடன் நிறுவனங் களின் புனரமைப்பு முயற்சிகள் 180 நாள்களுக்குள் வெற்றி பெறாவிடில், தீர்வாணையத்திற்குத் தீர்வுக்காகப் பரிந்துரைக்க வேண்டும் என்று பிப்ரவரி 2018-ல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை, பெரும் முதலாளிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

20-20 மேட்சும் டெஸ்ட் மேட்சும்

பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும்  விரால்-உர்ஜித் கூட்டணிக்கும் இடையே இருந்த இன்னுமொரு பெரிய முரண்பாடு, வட்டி விகிதம் குறித்து ரிசர்வ் வங்கி கொண்டிருந்த பார்வைதான். பணவீக்கம் குறைவதைத் தொடர்ந்து, வட்டி விகிதங்களும் குறைக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை மறுத்த விரால் ஆச்சார்யா, உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள் நீங்கலான இதர பொருள்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். நிச்சயமற்ற சர்வதேச நிலவரங்கள் மற்றும் பருவமழையின் போக்கு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு வட்டி விகிதங்களை நிர்ணயிக்கவேண்டும் என்றும் வாதிட்டார். 

விரால் ஆச்சார்யா ராஜினாமா... முடிவுக்கு வருகிறதா ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்?

அரசியல்வாதிகள் அடிக்கடி தேர்தல் களத்தைச் சந்திக்க வேண்டியிருப்பதால், அவர்களின் (பொருளாதாரம் சார்ந்த) முடிவுகள் டீ -20 மேட்சைப்போல, அவசர கதியில் அமைந்துவிடுவதாகவும், ரிசர்வ் வங்கியோ டெஸ்ட் மேட்சைப்போல நீண்ட கால நோக்குடன் செயல்பட வேண்டியிருப் பதாகவும் விரால் குறிப்பிட்டதற்கு அரசுத் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

சக்தி கொடுக்கும் தாஸ்

பணமதிப்பு நீக்க  நடவடிக்கை யின்போது, பொருளாதாரத்துறை செயலாளராக இருந்த சக்தி காந்த தாஸ், உர்ஜித் பட்டேல் ராஜினாமாவைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி கவர்னராகப் பொறுப்பேற்றார். இதன்பிறகு மத்திய அரசு - ரிசர்வ் வங்கி உறவில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

கொள்கைரீதியான ரெப்போ வட்டி விகிதங்கள் மூன்றுமுறை குறைக்கப்பட்டன. வாராக் கடன் அதிகமுள்ள வங்கிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பெரும் மோதலுக்கு வித்திட்ட பிப்ரவரி 2018 ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் திருத்தங்கள் கொண்டுவரபட்டன. 

விரால் ஆச்சார்யாக்களின் அவசியம்

விரால் ஆச்சார்யாவின் ராஜினாமாவை பங்குச் சந்தைகள் பெரிய விஷயமாகப் பார்க்கவில்லை. அவர் ராஜினாமா செய்த அன்று, சென்செக்ஸ் 311 புள்ளிகள் உயர்ந்தது.அடுத்து வட்டி விகிதக் குறைப்புக்கான வாய்ப்பிருக்கும் என்பதால், அது அதிகக் கடன் பெற்றுள்ள பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு நன்மை அளிக்கும் என்று சிலர் நினைத்ததன் விளைவுதான் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்குக் காரணம். எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் இனி வட்டி விகிதங்கள் வேகமாகக் குறைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்ததன் மூலம் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சிக்கு நடந்த போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இது நமது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. நீண்ட கால நோக்கில் இந்தியாவிற்குக் கண்டிப்பாக பல ஆச்சார்யாக்கள் அவசியம் தேவை.

விமர்சனக் குரல்களை உதாசீனப்படுத்துவது  ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய ஆபத்தாகவே முடிந்திருப்பதாக வரலாறு சொல்கிறது. இனி, விராலின் இடத்துக்கு வரவிருக்கிறவர், அவரைப்போல ரிசர்வ் வங்கியின் தன்னாட்சிக்காகப் போராடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்! 

குறிப்பு: இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளவை கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே!

விராலின் இடத்தை நிரப்பப்போவது யார்?

ரி
சர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவியைத் திடீரென ராஜினாமா செய்து, மத்திய அரசுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறார் விரால் ஆச்சார்யா.    தற்போது இந்தப் பதவிக்கு யாரை நியமிப்பது என்று நிதி அமைச்சகம் தீவிரமாக யோசித்து வருகிறது. கடந்தமுறை இந்தப் பதவிக்கான விளம்பரம் வெளியிடப்பட்டபோது, 90-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்தன. இப்போதும் அதேபோல விளம்பரம் செய்து, இந்தப் பதவிக்குப் பொருத்தமான ஒருவரைத் தேர்வு செய்ய மத்திய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. இந்த நிலையில், தற்போது நிதி அமைச்சகத்துக்கு முதன்மைப் பொருளாதார ஆலோசகராக இருக்கும் சஞ்சீவ் சன்யால் இந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாகப் பேச்சு கிளம்பியிருக்கிறது. இவர் தவிர, நிர்வாக இயக்குநராகவும் நிதிக் கொள்கை கமிட்டியின் உறுப்பினராகவும் இருக்கும் மைக்கேல் பத்ராவின் பெயரும் பலமாக அடிபடுகிறது!