
“தமிழ்நாடும் உலகத்துலதான் இருக்கு, அப்போ இங்கே எடுக்கிற சினிமாவும் உலக சினிமாதான்!” - கலகலப்பாகப் பேசத் தொடங்குகிறார், இயக் குநர் ராஜபாண்டி. ‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ படங்களுக்குப் பிறகு தற்போது அர்விந்த் சுவாமி, ரெஜினா நடிக்க ‘கள்ளபார்ட்’ படத்தை இயக்கி வருகிறார்.
“பொதுவா, ‘கள்ளபார்ட்’ங்கிற பெயரை நாடகத் துறையிலதான் பயன்படுத்துவாங்க. ஆனா, இந்தப் படத்துக்கும், நாடகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. படத்தோட கதாநாயகன், ஒரு காரணத்துக்காகத் திருடனா வேஷம் போட வேண்டிய சூழ்நிலை வரும். அதனால இப்படி ஒரு தலைப்பு. படம் தொடங்கி ஒவ்வொரு அரை மணிநேரத்துக்கும் ஒரு சஸ்பென்ஸ் இருக்கும்!” என்கிறார் ராஜபாண்டி.

“படத்தோட கேரக்டர்களைப் பற்றி?”
“படத்துல ரொம்பக் குறைவான கேரக்டர்கள் தான். வெளி உலகத்தையே பார்க்காம தன்னை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள அடக்கி வெச்சுக்கிற நாயகன். அவனை அந்த வட்டத்துக்குள்ள இருந்து வெளியே கொண்டுவர முயற்சி செய்ற நாயகி. ஒரு குழந்தை, வில்லன் கூட்டம். இவ்வளவுதான் படத்தோட முக்கியக் கதா பாத்திரங்கள். வீட்டிலிருந்தே வேலை பார்க்கிற ஹார்டுவேர் இன்ஜினீயர், ஹீரோ. ஹீரோயின் அதுக்கு நேரெதிர். ரொம்ப மார்டனான ஒரு ஜூம்பா நடனக் கலைஞர்.”
“ஹார்டுவேர் இன்ஜினீயர், ஜூம்பா டான்ஸர்... என்ன தொடர்பு?”
“ஹீரோவோட வேலைக்கும், திரைக்கதைக்கும் நிறைய தொடர்பு இருக்கு. அதுதான் கதையை நகர்த்தும். ஆனா, நாயகி ஜூம்பா கலைஞராக இருக்கிறது அவங்க கதாபாத்திரத்தின் நீட்சிதான். ரொம்பப் புதுமையான, தன் எண்ணங்கள வெளிப்படுத்த எந்தவிதத் தயக்கமும் இல்லாத சுதந்திரமான பெண்ணா இருக்கணும்னு, ‘ஜூம்பா’வைத் தேர்ந்தெடுத்தோம்.”
“அர்விந்த் சுவாமி ‘தனி ஒருவன்’, ‘போகன்’, ‘செக்கச் சிவந்த வானம்’னு எதிர்மறை பாத்திரங்களிலேயே நடிச்சுக்கிட்டு வர்றார். அதிலிருந்து இந்தப் படம் எப்படி வேறுபடும்?”
“ஒண்ணு மட்டும் கண்டிப்பா சொல்ல முடியும். இந்தப் படத்துல மக்கள் இதுவரை பார்க்காத அர்விந்த் சுவாமியைப் பார்ப்பாங்க. அவருடைய கேரக்டர், உடலளவுலேயும், மனதளவிலேயும் பல வேறுபாடுகளைக் காட்டும். உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட காலம்வரை புகை பிடிச்சுக்கிட்டே இருப்பார். திடீர்னு அது வேண்டாம், தப்புன்னு அவருக்கு விளங்கும். அதோட அந்தப் பழக்கத்தையே விட்டுடுவார். இப்படிப் படத்துல அவரோட கதாபத்திரத்தைப் பற்றி அத்தனை விஷயம் இருக்கு.”

“மணிரத்னம், பாலகுமாரன்கூட வேலை பார்த்திருக்கீங்களாமே?!”
“ ‘திருடா திருடா’ பட சமயத்துல அவருக்கு உதவியாளரா ஏழு மாசம் வேலை பார்த்தேன். அப்போ ஒருநாள் அவர் ‘பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சுட்டு ஏன் நீ உதவியாளரா சேரணும்னு வர்ற... ஸ்க்ரிப்ட் எழுது. அதுல உனக்கு ஏதாவது உதவி செய்றேன். அதை விட்டுட்டு, இப்போ உதவியாளரா இருந்தா, நீ படிச்ச விதமும், இங்கே இருக்கிற விதமும் மாறும். என்னைத் திட்டிக்கிட்டே வேலை பார்ப்ப, அப்படியே விட்டுட்டும் போயிடுவ’ன்னு சொன்னார். அவர் சொன்னமாதிரிதான் நடந்தது. பிறகு, பாலகுமாரன் சாரோட ‘மெர்க்குரிப் பூக்கள்’ நாவலை ஒரு தொடரா பண்ணலாம்னு முடிவு செய்தேன். அப்போதான் அவர்கூட வேலை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது. அந்தத் தொடர் இன்னும் ஆரம்பமாகவே இல்லை.”
“மணிரத்னத்துடன் இருக்கும்போதுதான் அர்விந்த் சுவாமி பழக்கமா?”
“இல்லை. அவரை எனக்கு அதுக்கு முன்னாடியே தெரியும். நான் தி.நகர் போக் ரோடுல பேச்சுலரா இருக்கும்போது, அவர் ‘ரோஜா’ படத்துல நடிச்சு முடிச்சிருந்தார். அப்போ, எங்க ரூம்ல இருந்த சீனியர் ஒருத்தரைப் பார்க்க அடிக்கடி வருவார். அப்போ நிறைய பேசியிருக்கோம். இந்தப் படத்துக்காக அவரைச் சந்திக்கும்போது 25 வருடத்துக்கு முன்னாடி நாங்க சந்திச்சது, பேசுனது எதுவும் ஞாபகமில்லை. ஆனா, படத்தோட கதையை முழுசா கேட்டு, நல்லா உள்வாங்கி, ரசிச்சு நடிக்க ஒப்புக்கிட்டார்.”
“மணிரத்னம்கிட்ட இருந்து நீங்க கத்துக்கிட்ட விஷயம்?”
“அவருடன் இருந்த அந்தக் கொஞ்ச நாள்ல நான் கத்துக்கிட்டது, பர்ஃபெக்ஷன்தான். தனக்கு இதுதான் வேணும்னு தெரிஞ்சா, அது கிடைக்கிற வரை விடமாட்டார். என் முதல் ரெண்டு படங்களில் நிறைய காம்ப்ரமைஸ் இருந்தது. படத்தோட ஓட்டத்தைக் கெடுக்குற மாதிரி பாட்டு சேர்க்கிறது, கமர்ஷியலா மாத்துறதுன்னு நிறைய பண்ணினேன். ‘கள்ளபார்ட்’ல ஒரே ஒரு பாட்டுதான். அதுவும் நான் திரைக்கதை எழுதும்போதே சேர்த்தது. கொஞ்சம் கொஞ்சமா மணிரத்னம் சாரோட பர்ஃபெக்ஷன் லெவலை நோக்கிப் போய்க்கிட்டிருக்கேன்.”

“இதுக்கு முன்னாடி என்ன மாதிரியான காம்ப்ரமைஸ்களை சந்திச்சீங்க?”
“இங்கே ஒரு பெரிய சிக்கல் இருக்கு. முன்னாடி யெல்லாம் சினிமா தெரிஞ்ச தயாரிப்பாளர்கள் இருந்தாங்க. கலையை ரசிக்கவும் செய்வாங்க, பணம் சம்பாதிக்கவும் செய்வாங்க. ஒரு படத்தோட மொத்த வணிகக் கட்டுப்பாடும் தயாரிப்பாளர் கையிலதான் இருக்கும். அதே போல, படத்தோட களம், கதை மீது இருக்கிற கட்டுப்பாடு இயக்குநர்கிட்ட இருந்தது. அப்போவரை சினிமா நல்லாதான் இருந்தது. இப்போ அப்படியில்லை. வணிகக் கட்டுப்பாடு தயாரிப்பாளர்கிட்டேயும் இல்லை, கதைமீதான கட்டுப்பாடு இயக்குநர்கிட்டேயும் இல்லை. யார் யாரோ அவங்க நினைக்கிறதைச் செய்ய வைக்கிறாங்க. ஒரு முகத்தைக் காட்டி, அந்த முகத்துக்குக் கதை எழுதச் சொல்றாங்க. அப்படியிருந்தா, அது எப்படி நல்ல சினிமா ஆகும்? கறுப்பு - வெள்ளை காலத்திலேயே ‘அந்த நாள்’னு பாட்டே இல்லாம ஒரு படம் எடுக்க ஏவி.எம் மாதிரி தயாரிப்பாளர்கள் இருந்தாங்க. அவங்க வெற்றிப் படமும் எடுத்தாங்க. இப்போ அந்தமாதிரி நல்ல தயாரிப்பாளர்கள் கம்மிதான். புது முயற்சிகளுக்குத் தயங்குறாங்க, கலை ஆர்வம் இல்லை, சம்பாதிக்கவும் தெரியல. எல்லாத்துக்கும் மேல சினிமாவும் அவங்க கட்டுப்பாட்டுல இல்ல.”

“படம் எப்போ ரிலீஸ்?”
“படத்தோட பெரிய பலமே டெக்னீஷியன்கள் தான். ஒளிப்பதிவு, அரவிந்த் கிருஷ்ணா. பொதுவா அவர் படத்துல நிறைய கலர் இருக்கும், வெளிச்சமா இருக்கும். இந்தப் படம் ரொம்ப இருட்டா இருக்கும். எடிட்டர் இளையராஜாவும், இசையமைப்பாளர் நிவாஸ்.கே.பிரசன்னாவும் போட்டி போட்டு வேலை செஞ்சிருக்காங்க. இன்னும் ஒரு பாட்டும், சில காட்சிகளும் ஷூட் பண்ணவேண்டி இருக்கு. சீக்கிரமே ஒரு நல்ல த்ரில்லர் படத்தைப் பார்க்கப்போறீங்க!”