
“மனிதர்களைக் கவனி!”
நாடகங்களில் நடிக்கத் தொடங்கி கே.பாலசந்தரின் ‘பட்டினப் பிரவேசம்’ படம் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானவர் டெல்லி கணேஷ். 43 ஆண்டுகளாக சினிமா, தொலைக்காட்சி, குறும்படங்கள், வெப் சீரிஸ் என்று எல்லாத் திரைகளிலும் நடிப்புப் பயணம் தொடர்பவர். அவர் மகன் மஹா, ‘என்னுள் ஆயிரம்’ படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி, தற்போது விஷால் படத்தில் வில்லன், இரண்டு வெப் சீரிஸ்களில் முதன்மைக் கதாபாத்திரம் எனத் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். இவர்களுடைய அன்றாட உரையாடலில் ஒருநாள் நாமும் இணைந்துகொண்டோம்.

“உங்க அப்பா, வில்லன், காமெடியன், குணச்சித்திரம்னு பல வகையான பாத்திரங்களை மூன்று தலைமுறை ரசிகர்களுக்கு அள்ளித் தந்திருக்கார். நடிக்க வரும்போது, அவர்கிட்ட இருந்து நீங்க எதை எடுத்துக்கிட்டீங்க?” என மஹாவிடம் கேட்டேன். “உள்வாங்கிக்கிற திறமைதான். அப்பா எப்போவுமே சுத்தி இருக்கிற எல்லோரையும் பார்த்துப் பார்த்து அவங்க பேச்சு வழக்கு, மேனரிசம்னு எல்லாத்தையும் கவனிச்சு உள்வாங்கிப்பார். அதைத்தான் நான் கத்துக்கணும்னு ஆசைப்படுறேன். உதாரணத்துக்கு, ஒருமுறை சென்னையில இருந்து சொந்த ஊருக்குப் போகும்போது பஸ்ல போர் அடிக்குமேன்னு அப்பாகிட்ட புலம்பிக்கிட்டிருந்தேன். அப்போ, ஒரு விஷயம் சொன்னார். ‘ஏன்டா, பஸ்ல எத்தனை பேர் ஏறுவாங்க, இறங்குவாங்க. எப்படியெல்லாம் பேசுவாங்க, நடப்பாங்க. இத்தனை விஷயம் இருக்குல்ல. இதெல்லாம் கவனிச்சுப் பாரு. நேரம் போறதே தெரியாது!’ன்னு சொன்னார். அப்போ இருந்து, இப்போவரைக்கும் கவனிக்கிறேன்” என்றார்.
டெல்லி கணேஷிடம், “நீங்க பல வட்டார வழக்குகளைப் பேசுறதுக்குக் காரணம், இந்தக் கவனிப்புதானோ?!” எனக் கேட்டோம்.
“கண்டிப்பா! எங்க ஊரு வழக்கு எனக்கு இயல்பாவே வரும். ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘இரும்புத்திரை’ன்னு சில படங்கள்ல பேசியிருக்கேன். ‘எப்போ வந்தீய. எத்தன நாள் தாமசம்’ இப்படி ரொம்ப சுலபமா பேசிடுவேன். மதுரை வழக்கும் அப்படித்தான். கொஞ்சம் கெத்தா, திமிரா, ‘என்ன பேசுறவ... பாத்து பேசு’ இப்படி! அதேமாதிரி கொங்குநாட்டு பாஷை, ‘ஏனுங்... எப்போ வந்தீங்.. சரீங்’ இதுமாதிரி எல்லா வழக்கு மொழியோட அடித்தளமும் எனக்கு ஓரளவுக்குத் தெரியும். ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்துல, ‘ஏய்.. என்ன இது. மீனை சாம்பார்ல போட்டுட்டாய்.. நான் பாலக்காட்டு மணி ஐயராக்கும்’னு பாலக்காட்டு பாஷை பேசுனதுதான் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது” என இரண்டு நிமிட இடைவெளியில் நான்கு ஊர்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.
“சினிமான்னு மட்டுமே இருந்த சமயத்துல ஒருமுறை ‘புட் சட்னி’ யூடியூப் சேனல்ல இருந்து ‘பேட்மென் இன் சென்னை’ ஸ்பூஃப் வீடியோல நடிக்கக் கேட்டாங்க. அப்போ, மஹா எனக்கு கிறிஸ்டோபர் நோலன் எடுத்த ‘பேட்மேன்’ படத்தைப் போட்டுக்காட்டினான். எல்லாப் படத்தையும் காட்டி, அதுல ஆல்ஃபிரெட் கேரக்டர்தான் நீங்க நடிக்கப்போற ரோல்னு சொன்னான். நான் அப்டேட்டா இருக்க இவன்தான் காரணம்” என்றார்.
“ஆனா, அதுல வேடிக்கை என்னனா” எனத் தொடர்ந்த மஹா, “முதல்ல அது ஸ்பூஃப் வீடியோன்னு எனக்கும், அப்பாவுக்கும் தெரியாது. நான் ‘பேட்மேன் இன் சென்னை’ன்னு சொன்னதும் ஏதோ சீரியஸான சூப்பர் ஹீரோ குறும்படம்னு நினைச்சேன். அப்பா நடிச்சதுக்குப் பிறகு, ‘டேய் நீ சொன்னமாதிரியெல்லாம் அங்கே ஒண்ணும் நடக்கல. சும்மா காமெடியா ஷூட் பண்றாங்க’ன்னு சொன்னார். யூடியூப்ல ரிலீஸானப்போதான், அது ஸ்பூஃப் வீடியோன்னு தெரிஞ்சது” எனச் சிரித்தார்.
“ஆனா, ‘ஸ்பூஃப்’ல உங்க அப்பா நடித்தது அது முதல்முறை இல்லைதானே” எனக் கூறி, மற்றொரு நினைவைக் கிளறினேன். “நீங்க ‘தமிழ்ப்படம்’ மர்டர் சீனைத்தானே சொல்றீங்க? ஆக்சுவலா, அந்தப் படத்துல ஒரிஜினல் கேரக்டரை ஸ்பூஃப்லேயும் பண்ணுன ஒரே ஆள் அப்பா மட்டும்தான். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்துல கமல் சார் உயரம் கம்மியா காட்டுனது மட்டும் சிக்கலான டெக்னாலஜி இல்லை. அப்பா கேரக்டரை கொலை செய்ற சீனும்தான். ஒரு மர்டரை ரொம்ப சுவாரஸ்யமா காட்டிய காட்சி அது. அதனால, அது எப்போவுமே அப்பாவுக்கு ஸ்பெஷல்” என மஹா கூற, “ஆனா, இந்தமுறை அது ‘ஸ்பூஃப்’தான்னு தெரிஞ்சே நடிச்சேன். அதோட மட்டுமல்லாம, முதல்லயே நான் அந்தக் காட்சி சிங்கீதம் னிவாச ராவ் சாரையோ, கமல் சாரையோ நோகடிக்கிற மாதிரி இருந்தா நடிக்கமாட்டேன்னு இயக்குநர் அமுதன்கிட்ட சொல்லிட்டேன்” என டெல்லி கணேஷ் விளக்கினார்.
“நடிகரா மூன்று தலைமுறைகளைப் பார்த்துட்டீங்க. அந்தக் காலத்து இயக்குநர்களையும், இந்தக் காலத்து இயக்குநர்களையும் எப்படிப் பார்க்கிறீங்க?” என்றேன்.
“முன்னாடியெல்லாம் ஒரு நடிகர் ஒரு டைப் கதாபாத்திரத்துல நடிக்கிறார்னா, கடைசிவரை அதேமாதிரி கேரக்டர்கள்தான் அவருக்கு வரும். இப்போ அப்படியில்லை. ஒரு நடிகரை வெச்சுப் பல மாதிரியான படங்களை எடுக்க இப்போ இருக்கிற பசங்க தயாரா இருக்காங்க” என்றார்.
மஹாவிடம், “உங்க அப்பா நிறைய கேரக்டர் பண்ணியிருக்கார். ஆனா, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘இரும்புத்திரை’ படங்கள்ல அவர் நடிச்ச சென்டிமென்ட் காட்சிகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதைப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருந்தது?” என்றேன்.
“அப்பா நடிச்ச பல கேரக்டர்களைப் பார்த்து பிரமிச்சுப் போயிருக்கேன். அதுவே ஒரு பெரிய பட்டியல். ஆனா, ‘கேடி பில்லா...’ படத்துல வேற ஒரு அனுபவம் இருந்தது. படம் ரிலீஸானப்போ, நண்பர்களுடன் படத்தைப் பார்த்தேன்.
முதல் பாதியில இவர் அடிக்கிற கூத்து, பெட்டுக்கு மேல ஏறி நின்னு ‘கலாசலா’ பாட்டுக்கு ஆடுறதெல்லாம் பாத்துட்டு, நண்பர்கள் எல்லோரும் ‘என்னடா அப்பா இப்படி நடிச்சிருக்கார்’னு கேட்டாங்க. ஆனா, இரண்டாம் பாதியில் படத்தோட போக்கே மாறும். க்ளைமாக்ஸ்ல மொத்தக் கதையும் அப்பாவோட கேரக்டராலதான் ஆழமாகும். முதல்ல அப்படிப் பேசுன எல்லா நண்பர்களும், படம் முடிஞ்சு வேறமாதிரி ரியாக்ட் பண்ணுனாங்க. ரொம்பப் பெருமையா இருந்தது” எனக் கூறி நெகிழ்ந்தார்.
“அப்பாதான் உங்கள ரஜினி, அஜித் ரெண்டுபேரையும் சந்திக்கக் கூட்டிக்கிட்டுப் போனாராமே?!” என மடைமாற்றினேன்.

“அதை ஏன் கேட்குறீங்க. அப்பா ‘பாபா’ ஷூட்டிங்கிற்காக மைசூருக்குப் போனப்போ அடம்பிடிச்சு சூப்பர் ஸ்டாரைப் பார்க்கணும்னு கேட்டேன். இவரும் மைசூருக்குப் போய், ஷூட்டிங் பரபரப்பெல்லாம் கம்மியான பிறகு என்னை ஒருநாள் வரச் சொன்னார். அப்போதான் தலைவரை முதல்முறையா நேர்ல பார்த்தேன். அவர்கூட போட்டோ எடுக்க நான் ஒரு மொக்கையான கேமராவை எடுத்துட்டுப் போனேன். அவரும் அந்தக் கேமராவைப் பார்த்துட்டு எதுவும் சொல்லாம, ‘இந்தக் கேமராவுலேயும் எடுப்போம். அந்தக் கேமராவுலேயும் எடுப்போம்’னு சொல்லி, அங்கே இருந்த ஸ்டில் போட்டோகிராபரைக் கூப்பிட்டுப் படம் எடுக்கச் சொன்னார். அந்தப் படம் இன்னும் என்கிட்ட பத்திரமா இருக்கு” என்றவர், அஜித்தை சந்தித்த கதையையும் விவரித்தார்.
“சமீபத்துல ‘நேர்கொண்ட பார்வை’ ஷூட்டிங்ல நடந்த சம்பவம். அந்தப் படத்துல என் கதாபாத்திரத்துக்குப் பெருசா வசனம் எதுவும் இருக்காதுன்னு சொல்லித்தான் கூப்பிட்டாங்க. முதல்ல யோசனையா இருந்தது. இவன்தான், ‘என்ன இருந்தாலும் இது தல படம். கண்டிப்பா நீங்க நடிக்கணும்’னு சொல்லி ஹைதராபாத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனான்.” என டெல்லி கணேஷ் சொல்ல, “அங்கேதான் ‘தல’யைப் பார்த்தேன். ரெண்டு நாள், கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் அவர்கூட பக்கத்துல இருந்து பார்த்தேன்” என்று மஹா சிலாகிக்க, வாஞ்சையுடன் தட்டிக்கொடுக்கிறார் டெல்லி கணேஷ்.
- சந்தோஷ் மாதேவன்; படம்: க.பாலாஜி