சினிமா
தொடர்கள்
Published:Updated:

பொம்மைகளே, குட்பை!

பொம்மைகளே, குட்பை!
பிரீமியம் ஸ்டோரி
News
பொம்மைகளே, குட்பை!

பொம்மைகளே, குட்பை!

ன்று அனிமேஷனில் பல சாதனைகள் நிகழ்த்தப்படலாம். மாஸ்டர்பீஸ்கள் பல வெளியாகலாம். ஆனா வெத...?  ‘டாய் ஸ்டோரி’ போட்டது!

அனிமேஷன் படங்களுக்கெல்லாம் முன்னோடியான ‘டாய் ஸ்டோரி’யின் நான்காவது பாகம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இதுவே கடைசி பாகம். அதனால், தங்கள் அபிமான கதாபாத்திரங்களுக்கு இப்போதே பிரியாவிடை கொடுத்துவருகின்றனர் டாய் ஸ்டோரி ரசிகர்கள்.

பொம்மைகளே, குட்பை!

1995 வரை அனிமேஷன் படங்கள் என்றாலே கைகளில் வரைந்துதான் எடுக்கவேண்டும். அதை டாய்ஸ்டோரி மூலம்தான் உடைத்தது அன்றைய `பிக்ஸார்.’ ஸ்டீவ் ஜாப்ஸின் கனவு நிறுவனங்களில் ஒன்று இந்த பிக்ஸார். தமிழ் இசையுலகில் ரஹ்மானின் வரவு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதையே பிக்ஸார், அனிமேஷன் பட உலகில் செய்தது. அன்று தொடங்கிய  பிக்ஸாரின் பயணம் இன்றுவரை தொடர்கிறது. தன் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது வகையில் அனிமேஷன் துறையில் புதுமைகளைக் கொண்டுவந்து கொண்டேயிருக்கிறது.

1995-ல் டாய்ஸ்டோரி தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல; கதையிலும் நாங்க கெத்துதான் என நிரூபித்தது. ஆனால் இந்த வெற்றிக்கென பிக்ஸார் சந்தித்த சவால்கள் சாதாரணமானவையல்ல.

உலகமே தொழில்நுட்பம் வளரத்தொடங்கியதைப் பார்த்து தங்கள் வேலைகள் பறிபோகப்போகிறது என அச்சம் கொள்ளத் தொடங்கிய காலம் அது. அனிமேஷன் துறையும் விதிவிலக்கல்ல. ஆனால், பிக்ஸாரின் நம்பிக்கை ஒன்றுதான்.  “Art challenges Technology, Technology inspires Art” என்பதே அது.

அன்றைய அனிமேஷன் ராஜாவான டிஸ்னியே இதை நம்பவில்லை. காசை மிச்சப்படுத்துவதற்குத்தான் தொழில்நுட்பம், அதை மட்டுமே வைத்துத் செய்யப்படும் புதிய முயற்சிகளுக்கு வீணாகச் செலவு செய்யமுடியாது என்றது. அங்கிருந்து நீக்கப்பட்ட ஜான் லஸ்ஸட்டர்தான் (John Lasseter) ‘டாய் ஸ்டோரி’யின் இயக்குநர்.

என்னதான் டயலாக் பேசினாலும் கலை கேட்கும் அந்தத் தொழில்நுட்பம் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அன்றைய தொழில்நுட்பத்தில் ஒரு ஃப்ரேமை ரெண்டர் செய்ய, குறைந்தது 45 நிமிடம் ஆகும். ஃப்ரேமில் என்ன இருக்கிறது என்பதை வைத்து இது 30 மணிநேரம் வரைகூட நீளலாம். அப்படி 77 நிமிட முதல் பாகத்திற்காக 1,14,240 ஃப்ரேம்கள் ரெண்டர் செய்யப்பட்டிருந்தன. இதற்காக 24 மணிநேரமும் இயங்கிக்கொண்டேயிருக்கும் 117 கணினிகள் பயன்படுத்தப்பட்டன. இவ்வளவு சிக்கலான பிராசஸைக் கையாளுவதற்காகவே ‘ரெண்டர்மேன்’ என்ற மென்பொருளை உருவாக்கியது பிக்ஸார். இப்படி அன்று போடப்பட்ட விதைகள்தான் இன்று தோப்பாக மாறி அவதார், பாகுபலி வரை மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன.

பொம்மைகளே, குட்பை!

இன்றிருக்கும் தொழில்நுட்பத்தில் ‘டாய் ஸ்டோரி’ முதல் பாகத்தை அந்தப் படம் ஓடிமுடிப்பதற்குள்ளே ரெண்டர் செய்துவிட முடியும். ஆனால் இன்றும் ஒவ்வொரு ஃப்ரேமிற்கும் அதே நேரத்தைச் செலவிடுகிறது பிக்ஸார். அவ்வளவு நுணுக்கமான தகவல்களை ஃப்ரேம்களில் சேர்க்கிறது.  பூனையின் ரோமம் வரை துல்லியம் காட்டும் இந்த அனிமேஷன் இந்த 24 வருடங்களில் பிக்ஸார் எடுத்த அத்தனை படங்களிலும் மேற் கொண்ட வித்தியாச முயற்சிகளாலும், முன்னெடுப்புகளாலும் மட்டுமே இன்று சாத்தியமாகியிருக்கிறது.

ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு சவாலைக் கையில் எடுக்கத் தவறவில்லை பிக்ஸார். அதில் கற்கும் பாடங்களை அடுத்த படங்களில் செயல்படுத்துகிறது.

 இப்படியான பல புரட்சிகளைத் தொடங்கிவைத்த இந்தத் தொடருக்கு ‘டாய் ஸ்டோரி 4’-ஐ விடத் தகுந்த முடிவு இருந்துவிட முடியாது.

இதில் இரவு ஒளியில் பொழியும் மழையைக் காண்கிறோம், அனிமேஷன் செய்யக் கடினமான ரோமங்களுடன் சுற்றும் விலங்கு களைப் பார்க்கிறோம், மனிதர்களைப் பார்க்கிறோம், ஆயிரம் விளக்குகள் மின்னும் கேளிக்கைப் பூங்காவிற்குள் செல்கிறோம். இவை அனைத்துமே துல்லியமான மெய்நிகர் அனிமேஷனில்.

வெறும் பொம்மைகளில் ஆரம்பித்த இந்தப் பயணம் இத்தனை வருடங்களில் எல்லாமும் ஆகி வேறு ஒரு உலகத்தையே நம் கண்முன் இன்று நிறுத்தியிருக்கிறது.  இதற்காகவே ஒரு ராயல் சல்யூட் சொல்லி இந்த பொம்மைகளை வழி அனுப்பி வைக்கலாம்!

ம.காசி விஸ்வநாதன்