
சாயப் பட்டறை முதல் அணு உலை வரை எதை எடுத்துக்கிட்டாலும் அதுல கிடைக்கிற நல்லதைவிட பிரச்னை கள்தான் நிறைய இருக்கும்.
சமூகத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த ஒரு பிரச்னையும் தராத ஒரே தொழில் விவசாயம்தான். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து எடுக்கிற படம் இது” என்கிறார், இயக்குநர் லக்ஷ்மன். ஜெயம் ரவியின் 25-வது படம் இது. ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ படங்களுக்குப் பிறகு, மீண்டும் ஜெயம் ரவியை வைத்துப் படம் இயக்கிக்கொண்டிரு க்கிறார்.

“ரவிக்கும் உங்களுக்குமான நட்பைப் பற்றி?”
“ரவி சார் என் மனசுல மரியாதையான இடத்துல இருக்கிற ஒரு மனிதர். ‘ரோமியோ ஜூலியட்’ கதையைப் பலபேர்கிட்ட சொன்னேன். ஆனா, யாரும் அதைக் கண்டுக்கவே இல்லை. அவர் மட்டும்தான் அந்தப் படம் ரசிகர்களை ஈர்க்கும்னு புரிஞ்சுகிட்டார். என் வீட்டுல சாமி படமிருக்கு; அதுக்குக் கீழே ரவி சார் படம் இருக்கு!”
“ ‘ஜெயம்’ ரவிக்கு 25-வது படம். என்ன ஸ்பெஷல்?”
“எங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான எண்ண ஓட்டம் இருக்கும். அதனால, ஷூட்டிங் ஸ்பாட் ரொம்ப ஜாலியா இருக்கும். நான் ஏதாவது மொக்கையான சீன் பண்ணிட்டா, என்னைக் கலாய்ச்சுத் தள்ளிடுவார். அவர் நடிப்புல நமக்கு ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தா, அதைக் கேட்டு மாத்திப்பார். அந்தளவுக்கு ரெண்டுபேருக்கும் திறந்த மனப்பான்மை உண்டு. இந்தப் படம் உண்மையிலேயே அவருக்கு ஸ்பெஷல்தான்.
இந்தப் படத்தோட கதையை ஒரு வரியில அடக்க முடியாது. இந்தச் சமூகத்துல நாம எல்லோரும் நல்லா இருக்கிறதா நினைச்சுக்கிட்டிருக்கோம். ஏதாச்சும் தப்பா இருந்தா அதுக்கு அதிகாரிகளும் அரசாங்கமும் அரசியல்வாதிகளும்தான் காரணம்னு சொல்றோம். நாம எல்லோரையும் ஒரு வட்டத்துக்குள்ள வெச்சு இதையெல்லாம் இயக்குறது, ஒரு சிஸ்டம்தான். ஒருத்தன் அதைத் தகர்த்துக்கிட்டு எப்படி முன்னேறு றான்ங்கிறதுதான், படத்தோட மையம்.
படத்துல நாங்க விவசாயிகளின் அவலங்களை மட்டும் பேசலை. சில பிரச்னைகளுக்குத் தீர்வுகளாகத் தோணுற விஷயங்களைப் பேசியிருக்கோம். இன்னைக்குத் தண்ணீருக்கு இவ்ளோ கஷ்டப்படுறோம். சுவாசிக்கிற ஆக்ஸிஜனைக் காசு கொடுத்து வாங்குற நிலைக்குப் போயிட்டோம். இதையெல்லாம் யதார்த்தமா, உண்மையா பேச நினைச்சுப் படத்தை உருவாக்கியிருக்கோம். இந்தப் படம் மூலமா நாலு பேர் திருந்தினாகூட எங்களுக்கு சந்தோஷம்தான்.”

“காதல், கூடுவிட்டுக் கூடு பாய்தல்னு படமெடுத்த நீங்க, என்ன திடீர்னு சமூக அக்கறைப் படங்கள் எடுக்க ஆரம்பிச்சிட்டீங்க?”
“எனக்கு மணிவண்ணன் சாரை ரொம்பப் பிடிக்கும். அவருடைய ஒவ்வொரு படமும் வேறு வேறு ஜானரில் இருக்கும். ஒரு படம் அரசியல் நையாண்டின்னா இன்னொரு படம் த்ரில்லர். மணிவண்ணன் சார் பாணியை நான் பின்பற்றணும்னு நினைக்கிறேன். அதனால்தான் மூன்று படங்களையும் மூன்று ஜானர்களில் உருவாக்கியிருக்கிறேன்.
இயற்கையை எதிர்த்துப்போராடி உருவானதுதான் மனித வாழ்க்கை. இப்போ மனிதர்கள் அனுபவிச்சுக்கிட்டிருக்கிற பல வசதிகள் இயற்கையை எதிர்த்து உருவானது. இயற்கை நமக்கு எவ்வளவோ வளங்களைக் கொடுத்திருக்கு. எந்தளவுக்கு எடுத்துக்கிறோமோ, அந்தளவுக்குத் திரும்ப இயற்கைக்குக் கொடுக்கணும். ஆனா, நாம இயற்கைகிட்ட இருந்து எடுத்துக்கிட்டே இருக்கோம். எதுவும் திருப்பிக் கொடுக்கலைனாகூடப் பரவாயில்லை; அளவுக்கு மீறிய பாதகத்தைப் பண்றோம். இயற்கையை அதோட சமநிலையில் இருந்து தவற வெச்சுக்கிட்டே இருக்கோம். இப்படியே இருந்தா, அடுத்த தலைமுறை என்ன பண்ணும்?!
எனக்கு இரண்டு மகள்கள். அவங்க வளர்ந்து வரும்போது இந்த நிலைமை இன்னும் மோசமா இருக்கும். அதை மாற்றணும்; நாட்டு நடப்பை மக்களுக்குப் புரியவைக்கணும். அதனாலதான், இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தேன். ரவி சார் இந்தக் கதையைக் கேட்டு, ‘எங்கடா இதைப் பிடிச்ச’ன்னு ஆச்சர்யமா கேட்டார். 25-வது படமா, அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை இந்தப் படம் கொடுக்கும். அவரும் இந்தக் கதையில ரொம்ப ஆர்வமா இருக்கார். படத்துக்காக ஒரு உதவி இயக்குநர் மாதிரி வேலை பார்த்துக்கிட்டிருக்கார்.”
“புதுசா ஒரு அகர்வாலை அறிமுகப்படுத்துறீங்க போல...?”
“ ஆமா, நிதி அகர்வால். தமிழுக்குப் புதுசு. ஏற்கெனவே இரண்டு இந்திப் படத்துல நடிச்சிருக்காங்க. புது ஹீரோயின்கூட வேலை செய்றது ஒரு புதுமையான அனுபவமாதான் இருக்கு. இந்தப் படத்துக்குப் பிறகு, தமிழ் சினிமாவுல ஒரு ரவுண்டு வருவாங்க நிதி.”
“அரசியல் பேசுறது இப்போ ஒரு டிரெண்ட் ஆகிடுச்சு. இந்தப் படமும் அதைப் பற்றித்தான் பேசப்போகுதா?”
“நிச்சயமா, இது அரசியல் படமாதான் இருக்கும். நாம் நமக்காகத் தேர்ந்தெடுக்கிற ஆள்தான் நம்மளை ஆள்றாங்கன்னு நினைக்கிறோம். ஆனா, நடக்கிறது அப்படி இல்லை. அதனால, லோக்கல் அரசியல்ல இருந்து சர்வதேச அரசியல் வரை... எல்லாமே படத்துல இருக்கு.”

“இமான், ஜெயம் ரவி, லக்ஷ்மன் கூட்டணி இந்தப் படத்திலும் இருக்கே?!”
“ஆமா. ஆனா, ஹன்சிகாவைத்தான் மிஸ் பண்ணிட்டோம். இந்தக் காம்போவை விடக்கூடாதுன்னு நினைக்கிறேன். ‘தூவானம் தூவத் தூவ’, ‘செந்தூரா’ மாதிரி இந்தப் படத்துக்கும் எனர்ஜியான காதல் பாட்டை இமான் சார்கிட்ட இருந்து வாங்கியிருக்கேன். ‘கடைக்கண்ணாலே’ன்னு தொடங்குற ஒரு பாடலை ஷூட் பண்ணி முடிச்சுட்டோம்.”
“ஸ்டில்ஸ்லாம் பார்த்தா, சமுதாயக் கருத்து பேசுற படத்துல நிறைய காதல் காட்சிகளும் இருக்கும்போல இருக்கே?”
“நான் காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆண் - பெண் உறவின் சுவாரஸ்யமே அன்புதான். படம் காரசாரமா இருந்தாலும், இனிமைக்குக் காதல் தேவைன்னு நினைக்கிறேன். தயாரிப்பாளரா தோற்ற என்னை இன்னைக்கு இயக்குநரா ஜெயிக்க வெச்சது, காதல்தான். அதனால, காதல் இல்லாம படம் இருக்காது.”
“உங்க சினிமாப்பயணம் சுவாரஸ்யமா இருக்கும்போல?!”
“பிறந்தது, வளர்ந்தது சௌகார்பேட்டை. டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் வீட்டுலதான் குடியிருந்தோம். காலையில 4 மணிக்கு டான்ஸ் பிராக்டீஸுக்கு அவர் போடுற 1,2,3,4 கவுன்ட்தான் எங்க அலாரமே! சினிமாதான் நமக்குத் தொழில்னு முடிவு பண்ணி, ‘நியூ’ படத்துல எஸ்.ஜே.சூர்யா சாருக்கு உதவி இயக்குநரா வேலை செஞ்சேன்.
அந்தப் படத்தை நானும், ‘ரோமியோ ஜூலியட்’ தயாரிப்பாளர் நந்தகோபால் சாரும் சேர்ந்துதான் விநியோகம் பண்ணினோம். ரெண்டுபேரும் படம் தயாரிக்கலாம்னு முடிவு பண்ணி, நான் ‘கள்வனின் காதலி’ எடுத்தேன். அவர் ‘கலாபக் காதலன்’ எடுத்தார். யுவன், நயன்தாரா, எஸ்.ஜே.சூர்யா இருந்தும் படம் செம அடி வாங்குச்சு. அதிலிருந்து நான் மீள ஆறு வருடமாச்சு. இந்தச் சமயத்துல என்னைத் தாங்கிப் பிடிச்சது என் மனைவிதான். பிறகு, மீண்டு வந்து இயக்குநர் ஆகிட்டேன்.”