
சினிமா விமர்சனம் - ஹவுஸ் ஓனர்

முதுமையின் தனிமை, காலம் உறைந்துபோன நிலையில் பழைய நினைவுகளில் தன்னை மீட்டெடுத்துக்கொள்ளும் கணவர், ஒரு குழந்தையைப் போல் தன் கணவனைக் கவனித்துக் கையாளும் மனைவி, இவர்களின் வாழ்க்கைக்குள் வந்து புகும் வெள்ளம் - இவைதான் ‘ஹவுஸ் ஓனர்.’
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றபிறகு அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள் முடங்கிப்போகிறார் கிஷோர். அவருக்கு எல்லாமுமாய் இருந்து பார்த்துக்கொள்கிறார் மனைவி ஸ்ரீரஞ்சனி. இந்தத் தம்பதியின் வீட்டிற்குள் அழையா விருந்தாளியாய் வருகிறது அடைமழையினால் நிகழ்ந்த பெருவெள்ளம். உதவிக்கு யாரும் இல்லாமல் தம்பதிக்கு நிகழும் முடிவை, காதலும் சோகமுமாய்ச் சொல்லி முடிகிறது படம்.

அல்சைமர் மறதி பாடாய்ப்படுத்தும் முதியவர் கதாபாத்திரம் கிஷோருக்கு என்பதால் வசனங்களும் குறைவு. ஆனால் சின்னச் சின்ன உடல்மொழியில் அந்த முதுமையை நம் மனசுக்குள் இறக்கிவிடுகிறார் கிஷோர். இளமைக்கால ‘கிஷோர்’ - ‘பசங்க’ கிஷோர். குறைசொல்ல முடியாத நடிப்பு.
கோலிக்குண்டு கண்கள், பளிங்குச்சிரிப்பு என லவ்லின் சந்திரசேகர் (சின்ன வயது ஸ்ரீரஞ்சனி) அந்தக் காலத்து போட்டோ ஃப்ரேம்களில் தென்படும் குட்டிப்பெண்போல பளிச்சென இருக்கிறார். கதையில் அதிக முக்கியத்துவம் சீனியர் ஸ்ரீரஞ்சனிக்குத்தான்! அல்சைமரின் தாக்கங்கள் உணர்ந்து பொறுமையாக கிஷோருக்குப் பாடமெடுப்பது, சட்டென ஆத்திரம் கொண்டு அடுத்த நொடியே குற்றவுணர்ச்சியால் மன்னிப்பு கேட்பது என எங்கும் எதிலும் ஸ்ரீரஞ்சனி ராஜ்ஜியமே!
தன் பின்னணி இசை மூலம் மென்சோகத்தை கசியவிட நிறையவே பிரயத்தனம் செய்கிறார் ஜிப்ரான். டி.எஸ்.கிருஷ்ண சேகரின் ஒளிப்பதிவு ஒரே அறைக்குள் காட்சிகளைப் பதிவு செய்யும் சவாலை எதிர்கொள்கிறது.
இளமைக்காலத்தில் கூச்சமும் எல்லாவற்றுக்கும் பயப்படும் சுபாவமும் ஆங்கிலம் பேச அச்சப்படுவதுமான நாயகி, வயதான காலத்தில் தைரியமான பெண்ணாக, சரளமான ஆங்கிலம் பேசுபவராக மாற, ராணுவக் கணவனோ இருட்டுக்கு பயந்து மின்சாரம் போகும்போது மேஜைக்கு அடியில் அமர்ந்துகொள்வது போன்ற பல நுட்பமான காட்சிகள், லக்ஷ்மி ராமகிருஷ்ணாவின் முத்திரைகள்.

ஆனால், போதிய விறுவிறுப்பும் உணர்வுத்தாக்கமும் இல்லாமல் மெதுவாக நகரும் கதைப்போக்கு பலவீனம். அல்சைமரின் தாக்கத்தைப் பார்வையாளர்களுக்கு உணர்த்த தேவைக்கும் அதிகமாய் நேரம் எடுத்துக்கொள்வதால் நிறைய காட்சிகள் நீளமாக இருப்பதுபோன்ற உணர்வு.
குறைகளைத் தாண்டி ஒரு நல்ல முயற்சி இந்த ‘ஹவுஸ் ஓனர்.’
- விகடன் விமர்சனக் குழு