சினிமா
தொடர்கள்
Published:Updated:

சினிமா விமர்சனம் - ஜீவி

சினிமா விமர்சனம் - ஜீவி
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா விமர்சனம் - ஜீவி

சினிமா விமர்சனம் - ஜீவி

சினிமா விமர்சனம் - ஜீவி

றிவியலும் அறவுணர்வும் கலந்து புதுவகைக் கதை சொல்கிறான் இந்த `ஜீவி.’

வெற்றிக்குத் தெரியாததைத் தெரிந்து கொள்வதில் அதீத ஆர்வம். டீக்கடையில் உடன் வேலை செய்யும் நண்பன் கருணாகரன் வாடகை அறை நண்பனும்கூட. தற்செயலாக வீட்டு உரிமையாளர் பீரோ சாவி இவர்கள் கையில் கிடைக்க, ஒரு திருட்டு அரங்கேறுகிறது. அடுத்தடுத்து சரவணன் வாழ்வில் நிகழும் சம்பவங்கள் ஹவுஸ் ஓனரின் வாழ்க்கையில் அச்சுப் பிசகாமல் நடந்தவை எனத் தெரிய வருகிறது. எப்படி சாத்தியம் என்பதைக் கொஞ்சம் அறிவியலும் நிறைய அமானுஷ்யமும் கலந்து விடை சொல்கிறது படம்.

சினிமா விமர்சனம் - ஜீவி

நாயகன் சரவணனாக, `எட்டு தோட்டாக்கள்’ வெற்றி. நடிப்பில் நல்ல முன்னேற்றம். டீ மாஸ்டர் மணியாக வரும்  கருணாகரன்தான் படத்தின் இரண்டாவது ஹீரோ. அப்பாவி முகமும் டைமிங் காமெடிகளும் சிரிப்புக்கு கியாரன்டி. “இப்பத்தானேடா ஓடிப்போ னாங்க?” என்ற காமெடிக்கு தியேட்டரே சிரிக்கிறது. வீட்டின் உரிமையாளராக ரோகிணி, வெற்றியின் அம்மாவாக ரமா, ரோகிணியின் தம்பியாக மைம் கோபி, நாயகிகள் அஸ்வினி மற்றும் மோனிகா சின்னக்கோட்லா அனைவரின் நடிப்பும் சிறப்பு.

நாயகனின் கதாபாத்திர வடிவமைப்பு படத்தின் மிகப்பெரும் ப்ளஸ். அதை இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்.. `ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்’ டைப் கதைதான். அதைத் தொடர்பியல், முக்கோண விதி எனும் சுவாரஸ்யமான தத்துவங்களைக் கொண்டு திரைக்கதை அமைத்திருப்பது மிகச்சிறப்பு. என்ன, நிஜத்தில் இந்தத் தத்துவங்கள் நிரூபிக்கப்படாததுதான் இப்படத்தை ஃபேன்டஸி படமாக மாற்றுகிறது. நாயகன் பேசும் வசனங்கள், பல இடங்களில் `நறுக்.’ “நாம பண்ற தப்ப எல்லாம் கடவுள் மேல இருந்து பார்த்துட்டுதான் இருக்கார்” எனக் கருணாகரன் சொல்ல, “அப்போ நாம கஷ்டப்பட்டதையும் அவர் பார்த்துட்டுத்தானே இருந்தார். இதையும் பார்க்கட்டும்” என்று வெற்றி சொல்வது ஒரு சாம்பிள். முதல் இருபது நிமிடங்கள் இழுவையாக இழுக்கும் திரைக்கதை, அதன்பிறகு ஜிவ்வெனப் பறக்கிறது.

சினிமா விமர்சனம் - ஜீவி

இரண்டு திருடர்கள், திருடப்பட்ட இடத்தின் அருகிலேயே அமர்ந்துகொண்டு, கதவைக்கூட மூடாமல் அவ்வளவு சத்தமாக அதைப்பற்றி விவாதித்துக்கொண்டிருப்பார்களா, சரவணனின் காதலி கதாபாத்திரம் இந்தக் கதைக்கு என்ன பங்களிப்பு செய்திருக்கிறது எனச் சில கேள்விகள் இருக்கின்றன.

சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையும், பிரவீன் குமாரின் ஒளிப்பதிவும் போதுமானதாக இருக்கிறது.

சின்னச் சின்ன பிசிர்களைத் தவிர்த்திருந்தால் இன்னும் அழுத்தமான வெற்றியைப் பெற்றிருக்கலாம் என்றாலும், திரைக்கதை முடிச்சுகளுக்காகவும் சுவாரஸ்ய வசனங்களுக்காகவும் எழுத்தாளர் பாபுதமிழுக்கும், இயக்குநர் வி.ஜே.கோபிநாத்துக்கும் வாழ்த்துகள்.

திரைக்கதையிலும் சொன்னவிதத்திலும் ஈர்க்கிறான் ஜீவி.

- விகடன் விமர்சனக் குழு