டி.எம்.எஸ் - அரைநூற்றாண்டுக் காலம் தமிழ்த் திரையுலகையும் பக்தி இசை உலகையும் தன் காந்தக் குரலால் கட்டிப்போட்ட மாபெரும் கலைஞன். திரையிசைப் பாடல்கள் என்பதைத் தாண்டி பெரும் அரசியல் மாற்றங்களை உருவாக்கிய பாடல்களுக்குச் சொந்தக்காரர். பக்தி இசையில் வடமொழிக்கு இருந்த செல்வாக்கையும் மீறித் தமிழிசைக்குப் பெரும் புகழை ஏற்படுத்திய பாடகன் டி.எம்.எஸ்.
1923 -ம் ஆண்டு மார்ச் 24 -ம் தேதி பிறந்தவர் டி.எம்.சௌந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ். தமிழ்த் திரையுலகில் டி.எம்.எஸ் அடியெடுத்து வைத்த காலகட்டம், மாபெரும் பாடகர்களான தியாகராஜபாகவதர், கே.பி.சுந்தராம்பாள் போன்ற இசைமேதைகள் பிரசித்தி பெற்றுத் திகழ்ந்த காலம். டி.எம்.எஸ் அவர்களையெல்லாம் தனது இசையுலகின் குருவாக மதித்துப் போற்றி வந்தவர். மதுரை சோமு மீது அவருக்கு பக்தியே இருந்தது. இவர்களின் பாடல்களைப் பாடியே தன் இசைப் பயிற்சியை டி.எம்.எஸ் செய்வதும் உண்டு.
ஒருமுறை திருச்சிக்குத் தியாகராஜ பாகவதர் வந்தபோது, சிறுவனாக இருந்த டி.எம்.எஸ், பாகவதர் பாடிய பாடல் ஒன்றை அவர் முன்பாகப் பாடிக்காட்டி அவரின் பாரட்டையும் பெற்றார். ``சென்னைக்கு வா, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்று ஆசீர்வதித்தார் பாகவதர். பாகவதரின் அந்த வாக்கு விரைவிலேயே மெய்யானது. 1950 -ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் முதல் பாடலைப் பாடி தன் இசைப் பயணத்தைத் தொடங்கினார் டி.எம்.எஸ். அதன்பின் 50 ஆண்டுகள் திரை இசையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கினார்.
டி.எம்.எஸ்.ஸின் சிறப்பு அவருடைய குரல். ஒரே குரல்தான், ஆனால் வெவ்வேறு தன்மையில் வெளிப்படும் சிறப்பு கொண்ட குரல். டி.எம்.எஸ்ஸின் சிறப்பு `அவர் பாடலைக் கேட்கும் எவருக்கும் அதற்கு வாயசைத்த நடிகர்களின் முகமே நினைவுக்கு வரும்' என்பதுதான். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், சிவகுமார், ரவிச்சந்திரன், ஜெயசங்கர், நாகேஷ், ஆர்.எஸ்.மனோகர், எம்.ஆர்.ஆர். வாசு என, யாருக்குக் குரல் கொடுத்தாலும் அவர்களின் குரல்தன்மைக்கு ஏற்ப அவர் தன் குரலில் மாற்றங்களைச் செய்துகொள்வார். இது ஏதோ மிமிக்ரி போல குரல் மாற்றும் வித்தையில்லை. நடிகரின் குரல் தன்மையை அறிந்து அதற்கேற்ப தன் குரலை ஒலிக்கச் செய்யும் தனித் திறன்.
எம்.ஜி.ஆர், டி.எம்.எஸ், கண்ணதாசன் கூட்டணியில் உருவான பாடல்கள் இன்றைக்கும் தமிழகத்தின் பட்டிதொட்டிகள் எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. டி.எம்.எஸ் போன்ற பாடகர்களுக்கு எழுதுவதென்பது கண்ணதாசன் போன்ற மாபெரும் கவிஞர்களுக்கு ஒரு பெரிய வரம். காரணம் தாங்கள் எழுதும் மொழியின் அழகைச் சிதைக்காமல் ஆகச் சிறந்த உச்சரிப்பை வெளிப்படுத்திப் பாடுவதில் டி.எம்.எஸ் க்கு நிகர் டி.எம்.எஸ்தான்.
கண்ணதாசனுக்காகவும் டி.எம்.எஸ் பாடியிருக்கிறார். `பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது', `ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு' ஆகிய இரு பாடல்களையும் பாடியவர் டி.எம்.எஸ்.தான். ஆனால், இரண்டு பாடல்களிலும் ஒலிக்கும் குரல் மாறுபட்டதுபோலத் தோன்றும். இரண்டு பாடல்களும் மேடைப்பாடல்களாகத்தான் திரையில் தோன்றும். இரண்டிலும் கண்ணதாசனே நடித்திருப்பார். ஆனால் இரண்டும் வெவ்வேறு மனநிலையில் பாடப்படும் பாடல்களாக இருக்கும். அந்தக் காட்சியின் பொருள் உணர்ந்து அதற்கேற்ப டி.எம்.எஸ் தன் குரலைப் பயன்படுத்தியிருப்பார்.
சிவாஜி கணேசனுக்கு டி.எம்.எஸ் பாடிய பாடல்கள் அற்புதமானவை. பாடல்காட்சிகளில் சிவாஜி நடிப்பதற்கான ஒரு கோட்டுச் சித்திரத்தை வரைந்தது போல டி.எம்.எஸ்ஸின் பாடல் அமைந்துவிடும். உயர்ந்த மனிதன் படத்தில், சிவாஜி கணேசனுக்காக அவர் பாடிய பாடல்கள் `வெள்ளிக்கிண்ணம்தான் தங்கக் கைகளில்...' பாடலும் `அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...' பாடலும் இருவேறு உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கும். அதே படத்தில் சிவகுமாருக்காக அவர் பாடிய, `என் கேள்விக்கென்ன பதில்...' பாடல் முற்றிலும் மாறுபட்ட ஓர் இளைஞனின் குரலைக் காட்டும். இவற்றையெல்லாம் ஒரே குரலில் நிகழ்த்த தெரிந்த ரசவாதி டி.எம்.எஸ்.
திரைப்படங்களில் பரிச்சயம் இல்லாதவர்களுக்குக்கூட அவருடைய பக்திப் பாடல்களை அறிந்திருப்பர். பெரும்பாலான பக்திப் பாடல்களுக்கு அவரே இசையும் அமைத்திருப்பார். அவர் இசையமைத்துப் பாடிய `உள்ளம் உருகுதையா...' பாடல் கண்களை மூடியபடி கேட்கும் எவருக்கும் இறைவனின் சந்நிதியில் நின்றுகொண்டிருப்பது போன்ற ஓர் உணர்வைத் தரவல்லது.
மயிலாப்பூர் கற்பகாம்பாளைப் போற்றி டி.எம்.எஸ் இசையமைத்துப் பாடிய `கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்...' என்னும் பாடல் தனித்துவம் வாய்ந்தது. அந்தப் பாடலின் சரணங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு ராகத்தின் பெயர் வரும். டி.எம்.எஸ் அந்த அந்தச் சரணங்களை அந்த அந்த ராகத்திலேயே இசையமைத்துப் பாடியிருப்பார்.
டி.எம்.எஸ் ஒருமுறை மகாபெரியவரை தரிசிக்கச் சென்றிருந்தபோது இந்தப் பாடலைப் பாடச் சொல்லி ரசித்துக் கேட்டிருக்கிறார். பாடி முடிந்ததும், தான் அணிந்திருந்த சிவப்பு சால்வையை டி.எம்.எஸ்ஸுக்கு அளித்து ஆசீர்வதித்திருக்கிறார்.
இன்று டி.எம்.எஸ்ஸின் 96 வது பிறந்தநாள். இன்று அநேகர் அவர் பாடலைக் கேட்டு மகிழ்கிறோம். ஆனால் அவர் குறித்த நினைவாக எந்த ஆவணத் தொகுப்பும் இல்லாதிருந்தது. டி.எம்.எஸ். ரசிகர்களுக்கும் சரி, இசையுலகுக்கும் சரி இது ஒரு பெரும்குறை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் விஜயராஜ் என்னும் இயக்குநர், டி.எம்.எஸ் குறித்த ஆவணப்படம் ஒன்றை இயக்குவதிலேயே தன் வாழ்க்கையில் 13 ஆண்டுகள் செலவிட்டு, `இமயத்துடன்’ என்ற பெயரில் 154 பகுதிகள் கொண்ட பிரமாண்டமான ஆவணப் படம் ஒன்றைத் தயார் செய்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த ஆவணப்படம் நிச்சயம் டி.எம்.எஸ்ஸின் புகழை காலம் முழுவதும் நிலைத்திருக்கச் செய்யும் என்று நம்புகிறோம்.