Published:Updated:

`ஆரண்ய காண்டம்’ - `சூப்பர் டீலக்ஸ்’... 7 ஒற்றுமைகள்!

`ஆரண்ய காண்டம்’ - `சூப்பர் டீலக்ஸ்’... 7 ஒற்றுமைகள்!

`எது தேவையோ அதுவே தர்மம்' என்ற கருத்தியலைச் சுமந்து வந்த `ஆரண்ய காண்டம் படத்தின் நீட்சியாக `சூப்பர் டீலக்ஸ்' படைத்திருக்கிறார், தியாகராஜன் குமாரராஜா. இரு படங்களுக்குமான ஒற்றுமைகள் இவை.

Published:Updated:

`ஆரண்ய காண்டம்’ - `சூப்பர் டீலக்ஸ்’... 7 ஒற்றுமைகள்!

`எது தேவையோ அதுவே தர்மம்' என்ற கருத்தியலைச் சுமந்து வந்த `ஆரண்ய காண்டம் படத்தின் நீட்சியாக `சூப்பர் டீலக்ஸ்' படைத்திருக்கிறார், தியாகராஜன் குமாரராஜா. இரு படங்களுக்குமான ஒற்றுமைகள் இவை.

`ஆரண்ய காண்டம்’ - `சூப்பர் டீலக்ஸ்’... 7 ஒற்றுமைகள்!

2011- ம் ஆண்டு வெளியான `ஆரண்ய காண்டம்' படம் தாமதமான வரவேற்பைத்தான் பெற்றது. கொஞ்சம் கொஞ்சமாக, அது குறித்த செய்தி பரவி, அனைவரும் பார்க்க ஆசைப்பட்டபோது, பெரும்பான்மையான திரையரங்குகளில் ஏற்கெனவே காட்சிகள் குறைக்கப்பட்டிருந்தன. சுருக்கமாகச் சொன்னால், படத்தின் முதல் காட்சியில் காற்று வாங்கிய அதே திரையரங்கம், இறுதிக்காட்சியில் நிரம்பி வழிந்தது. அந்தச் சமயத்தில் படத்தைத் தவறவிட்ட அனைவரும் இப்பவோ அப்பவோ எனக் குமாரராஜாவின் அடுத்த படத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். அந்தக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தற்போது வெளியாகியுள்ளது `சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம்.

"எது தர்மம்?... எது தேவையோ, அதுவே தர்மம்!"

படத்தில் வரும் அற்புதம் கதாபாத்திரத்தைப் போலவே, முதல் படத்தைத் தவறவிட்டதற்காக `மன்னிப்பு... மன்னிப்பு... மன்னிப்பு...' என்று கூறியபடியே முதல் நாள் அனைத்துக் காட்சிகளிலும் அரங்கங்களை ஆக்கிரமித்துக்கொண்டனர், ரசிகர்கள். அப்படி வந்து பார்த்தவர்களுக்கு தியாகராஜன் குமாரராஜா தந்திருப்பது ஓர் அற்புதம்தான். `எது தேவையோ அதுவே தர்மம்' என்ற கருத்தியலைச் சுமந்து வந்த `ஆரண்ய காண்டத்'தின் நீட்சியாக `சூப்பர் டீலக்ஸை'ப் படைத்திருக்கிறார், குமாரராஜா. முதல் படம் சாதாரண வெர்ஷன் என்றால், இது சூப்பர் டீலக்ஸ் வெர்ஷன். இரண்டு படங்களுக்கும் அத்தனை பொருத்தம்!

`ஆரண்ய காண்டத்'தில் ஒருவர் செய்யும் செயல் மற்றொருவர் கண்ணோட்டத்தில் தவறாக இருந்தாலும், அது அந்தச் செயலைச் செய்தவருக்குத் தேவையாக இருந்தால், அதுதான் தர்மம் என்று சொல்லியிருப்பார், குமாரராஜா. அதையேதான் `சூப்பர் டீலக்ஸி'ல், கண்ணோட்டங்கள்தாம் ஒரு மனிதனைக் குறித்த பார்வையைத் தீர்மானிக்கின்றன என்று சொல்லியிருக்கிறார்.

படம் முழுக்க இந்தச் சமூகத்துக்கு இருக்கும் பொதுப்பார்வைதான் நன்மை, தீமையை முடிவு செய்கின்றன என்பதை மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டுகிறார். `திருநங்கைகளைச் சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை', `காதல், திருமணம் ஆகியவற்றின் இலக்கு வெறும் உடலுறவு மட்டுமல்ல', `உன் பார்வையில் அது கடவுள், எனக்கு வெறும் கல்தான்,' `ஆண், பெண், புழு, பூச்சி என இந்தப் பிரபஞ்சத்தில் பரவிக்கிடக்கும் எல்லா உயிர்களும் ஒன்றுதான்' இப்படிப் பல கருத்தியல் பரிமாற்றங்கள் `சூப்பர் டீலக்ஸி'ல் காட்டப்படுகிறன.

"அந்த மாதிரி படங்களைப் பார்க்க கோடிக்கணக்கான பேர் இருக்கும்போது, நடிக்க ரெண்டுபேராவது இருக்கணும்ல!"

இதை அப்படியே `ஆரண்ய காண்டத்'தில் பொருத்திப் பார்த்தால், `ஆண் - பெண் இருவருக்குமிடையே இருக்கும் வேறுபாடு', `துரோகம் என்பதே ஒரு மாயை', `தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்' போன்ற கருத்துகள் மீது தர்க்கம் செய்திருப்பார், குமாரராஜா.

இந்தக் கருத்தியல் பொருத்தங்கள் ஒருபுறமிருக்க, இரண்டு படங்களின் திரைக்கதையிலும் பல ஒற்றுமைகள் உள்ளன. மேலோட்டமாகப் பார்த்தாலே இரண்டு படங்களின் கதைகளும் ஒரு குறுகிய காலத்துக்குள் நிகழும் நிகழ்வுகளை உள்ளடக்கியவை. அந்தக் குறைவான நேரத்தில், வெவ்வேறு வகையான வாழ்க்கையை வாழும், தொடர்பில்லாத மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், அவை எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புபடுகின்றன என்றும் திரைக்கதை விரியும். இதை குமாரராஜாவே, `சூப்பர் டீலக்ஸ்' படத்தில் கேயாஸ் தியரியுடன் (ஒரு சம்பவம் எப்படி இன்னொரு நிகழ்வுக்குக் காரணமாகிறது) ஒப்பிட்டுச் சொல்லியிருப்பார்.

அதேபோல, இரண்டு படங்களில் வரும் முக்கியமான ஆண் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு. ஆண்கள் எதிலெல்லாம் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள் என்பதை தன் படத்தின் கருப்பொருளில் இணைத்துச் சொல்கிறார், குமாரராஜா. தன் ஆண்மைக் குறையை மறைக்க சுப்புவிடம் வீரத்தைக் காட்டும் சிங்கப்பெருமாள், முட்டாளாக இருக்கும் சப்பை, தன்னைக் காப்பாற்றும் அவசரத்தில் மனைவியைப் பறிகொடுக்கும் பசுபதி, பிழைக்கத் தெரியாத காளையன்... என `ஆரண்ய காண்டம்' முழுக்க குறைபாடுகளுடனேயே அத்தனை ஆண்களும் சித்திரிக்கப்படுகின்றனர்.

"சப்பையும் ஒரு ஆம்பளதான்... எல்லா ஆம்பளைங்களும் சப்பைதான்!"

அப்படியே `சூப்பர் டீலக்ஸ்' படத்தில் பார்த்தால், காமக் கொடூரனாகச் சித்திரிக்கப்படும் ஒரு காவல்துறை துணை ஆய்வாளர், மனைவியைக் காப்பாற்ற வழியில்லாமல் தவிக்கும் கணவன், கடவுள் மீது மூட நம்பிக்கையோடு இருக்கும் ஒரு தந்தை, தன் நண்பர்களின் கனவுத் தொழிலாக இருக்கும் ஒன்றை ரசித்துவிட்டு தன் தாய் அதையே செய்யும்போது அவளைக் கொல்ல நினைக்கும் மகன்... என இதிலும் குறையோடு இருக்கும் ஆண்கள் ஏராளம்.

இந்தக் குறையோடு இருக்கும் ஆண்களின் அழிவு அல்லது புரிதலே இரண்டு படங்களுக்குமான முடிவுரையாகக் குமாரராஜாவால் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கான காட்சி அமைப்புகளும், கதை சொல்லும் விதமும்கூட ஒரே மாதிரி இருக்கின்றன என்றும் சொல்லலாம். உதாரணமாக, இரண்டு படங்களுமே தொடங்கும்போது ரெட்ரோ காலத்து இந்தி இசையோடுதான் தொடங்குகின்றன. மேலும், இரண்டு படங்களுக்குமான யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை பல இடைக்காலத்துப் பாடல்களை இழையோடவிட்டுத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு காட்சிக்குமான கலர் பேலட் அமைப்பும் (வண்ணக் கலவை) இரண்டு படங்களிலும் ஒரே மாதிரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

சிங்கப்பெருமாளின் படுக்கையறையில் தீட்டப்பட்டிருக்கும் சுவரின் வண்ணங்களைப் போலவே, சூப்பர் டீலக்ஸிலும் பல இடங்களில் காணலாம். பொதுவாகக் கலர் பேலட் ஒரு காட்சியின் உணர்வுகளை அதிகரித்துக் காட்டும். அதை இந்த இரண்டு படங்களிலுமே தாராளமாகக் கையாண்டிருக்கிறார், குமாரராஜா.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இரண்டு படங்களும் ஒரே உலகத்தில் நடப்பவையாக இருக்கலாம் என்பதற்கும் `சூப்பர் டீலக்ஸி'ல் பல குறியீடுகள் ஒளிந்திருக்கின்றன. சிங்கப்பெருமாளுக்கு ஒட்டப்பட்டிருக்கும் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி, மயில் வாகனன் என்ற பெயர் கொண்ட காவலர், `சப்பை' என்று கேலி செய்யப்படும் காஜி எனப் படம் நெடுக தன் இரண்டு கதைகளுக்குமிடையே பல இணைப்புப் புள்ளிகளை வைத்துள்ளார், இயக்குநர். 

"டேய் சப்ப.. நீ ஏண்டா இவ்வளோ சப்பையா இருக்க?!" - ``டேய் காஜி... நீ ஏண்டா இவ்வளோ காஜியா இருக்க?!"

இரண்டு படங்களிலும் வெவ்வேறு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஒரே கதைக்களம், கதாபாத்திரங்களின் தன்மை, வண்ணக் கலவைகளின் ஒற்றுமை என எல்லா விதங்களிலும் பொருந்துவதால், இவை இரண்டையும் இணைத்து மூன்றாவதாக குமாரராஜா ஒரு படம் எடுப்பார் என்று நம்புவோம்!