மார்வெல் நிறுவனத்தின் அடுத்த படைப்பாக 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' வெளியாக உள்ளது. இந்தப் பகுதியோட அவெஞ்சர்ஸ் படம் முடிவுக்கு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், படத்தில் வரும் ஒரு கதாபாத்திரமான அயர்ன் மேனுக்கு விஜய் சேதுபதி டப்பிங் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். 'இவரின் குரல் அயர்ன் மேனுக்கு செட்டாகவில்லை. பழைய டப்பிங் குரல்தான் நன்றாக இருந்தது'. என்று ரசிகர்கள் பலரும் இணையத்தில் கமென்ட் செய்து வரும் வேளையில், பல வருடங்களாக அயர்ன் மேனுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து வரும் ரவிசங்கரிடம் பேசினேன்.
``கடந்த சில நாள்களாக பலரும் என்னைத் தேடி வருகின்றனர். இது சந்தோஷமாக இருக்கு. என்னுடைய தாத்தா காலம் தொடங்கி இன்னைக்கு என்னுடைய காலம் வரைக்கும் பரம்பரை பரம்பரையாக டப்பிங் ஆர்டிஸ்டாக வேலை செய்து வருகிறோம். இங்கிலீஷ் படங்கள் தமிழில் டப்பிங் ஆகுறப்போ முதன்மையான கேரக்டர்கள் எல்லாத்துக்கும் பெரும்பாலும் டப்பிங் கொடுத்திருவேன்.
டாம்க்ரூஸ் கேரக்டருக்கு தமிழில் என்னுடைய குரல்தான் டப்பிங். அதேபோலே ஹிரித்திக் ரோஷன் படங்களை இந்தியிலிருந்து தமிழில் டப் செய்யும்போது அவருக்கு என்னுடைய குரலைதான் பயன்படுத்துவாங்க. `சங்கமம்' படத்துல ரஹ்மான் சாருக்கு நான்தான் டப்பிங் குரல் கொடுத்தேன். வினித், அப்பாஸுக்கு நிறைய படங்களில் டப்பிங் கொடுத்திருக்கேன்.
முக்கியமா, 'பாட்ஷா' படத்துல வரக்கூடிய ஒரு டயலாக்ஸ் ரொம்ப ஃபேமஸ். இப்போதுகூட நிறைய மீம்ஸ்களில் இந்த வசனத்தை பார்க்கலாம். `சொல்லுங்க சொல்லுங்க நீங்க யார்'னு தம்பி கேரக்டர் ரஜினியைப் பார்த்து இந்த வசனத்தைப் பேசுவார். அந்தத் தம்பியின் குரலுக்குச் சொந்தகாரர் நான்தான். இப்போதுதான் என்னுடைய முகம் மக்களுக்குத் தெரியவந்திருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்றவரிடம் `அயர்ன் மேன்' டப்பிங் ஆர்டிஸ்ட் சீரியல் நடிகர் அபிஷேக் எனவும் ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறதே என்றால்,
சிரித்துக்கொண்டே, `அபிஷேக்குக்கு எப்போதும் நான்தான் டப்பிங் கொடுப்பேன். `அபிஷேக்குக்கு டப்பிங் கொடுத்தவர்தான் அயர்ன் மேனுக்கு டப்பிங் கொடுப்பார்' என்று சொல்றதுக்குப் பதிலா, அயர்ன் மேனுக்கு டப்பிங் கொடுப்பவர் அபிஷேக்குனு தவறா இணையத்தில் செய்தி பரவிருச்சு. நானும், அபிஷேக்கும் பல வருடங்களாக நண்பர்கள். அவரை சொன்னதில் எனக்கு மகிழ்ச்சிதான்'' என்று முடித்தார் ரவிசங்கர்.