Published:Updated:

கபாலி, காலா பட பெண் இயக்குநரின் அனுபவங்கள்!

கபாலி, காலா பட பெண் இயக்குநரின் அனுபவங்கள்!

பா.இரஞ்சித்தின் அசிஸ்டென்ட் ஜெனி டாலி. சிஷ்யையின் குறும்படத்தைப் பார்த்துவிட்டு குரு என்ன சொன்னார் என்று ஜெனியிடம் கேட்டோம்.

Published:Updated:

கபாலி, காலா பட பெண் இயக்குநரின் அனுபவங்கள்!

பா.இரஞ்சித்தின் அசிஸ்டென்ட் ஜெனி டாலி. சிஷ்யையின் குறும்படத்தைப் பார்த்துவிட்டு குரு என்ன சொன்னார் என்று ஜெனியிடம் கேட்டோம்.

கபாலி, காலா பட பெண் இயக்குநரின் அனுபவங்கள்!

ந்தக் குறும்படத்தின் பெயர் `ஷேர் ஆட்டோ'. நெரிசலான ஒரு ஷேர் ஆட்டோவில் புதிதாக ஏறுகிறார் ஒரு பெண்மணி. பக்கத்தில் துடைப்பத்துடன் ஒரு பெண் சுகாதார ஊழியர். அவர் மேல் தன் உடல் பட்டுவிடக் கூடாது என்கிற அதீத ஜாக்கிரதை உணர்வில் ஆட்டோவின் ஓரத்தில் உட்காருகிற அந்தப் பெண்மணி, ஒரு பிரேக்கில் ஆட்டோ கம்பியில் முட்டி, வலியுணர்வில் தன்னையறியாமல் அந்தப் பெண் சுகாதார ஊழியருடன் ஒட்டி அமர்கிறார். இந்தக் குறும்படம் ஜஸ்ட் இரண்டு நிமிடம்தான் பயணிக்கிறது. ஆனால், அதற்குள் அது சொல்கிற நீதி, நிஜமாகவே ஆட்டோ கம்பியில் முட்டிக்கொண்டதுபோலவே வலிக்கிறது. நீலம் ஃபவுண்டேஷனும் இயக்குநர் பா.இரஞ்சித்தும் இணைந்து வெளியிட்டுள்ள இந்தக் குறும்படத்தை இயக்கியிருப்பவர், இரஞ்சித்தின் அசிஸ்டென்ட் ஜெனி டாலி. சிஷ்யையின் குறும்படத்தைப் பார்த்துவிட்டு குரு என்ன சொன்னார் என்று ஜெனியிடம் கேட்டோம். 

``தன்கிட்டே வேலை பார்த்தவங்க வெளியே போய் படம் எடுக்கணும்னு எங்க டைரக்டருக்கு நிறைய ஆசை உண்டுங்க. நான், இந்த ரெண்டு நிமிஷ குறும்படம் எடுத்ததுக்கே அவ்வளவு சந்தோஷப்பட்டார். `எனக்கு ஸ்கிரிப்ட்டெல்லாம் காட்டாதே. நீ ஷூட் பண்ணி எடுத்துட்டு வா'ன்னு சொன்னார். அவருக்கு எங்க மேலே அவ்வளவு நம்பிக்கை. தன்னைப்போல சமூக நீதி பேசுகிறவர்களையும் பெண்களையும் சினிமாத்துறையில் வளர்த்துவிடணும்கிறதுதான் அவருடைய லட்சியம். அந்த வகையில, ரெண்டு நிமிஷம்னாலும் நான் ஒரு படம் பண்ணிட்டேங்கிறது அவருக்குப் பெரிய பெருமைதான். இந்த ஸ்கிரிப்ட்டை ரொம்ப நாளா நான் யோசிச்சு இருந்தேன். ஒடுக்கப்படுறவங்களும், ஒடுக்குறவங்களும் இருக்குற உலகத்துல, தன்னை ஒடுக்கிறவங்கள திருத்துறதும், திருத்தும் போது அவங்க மனசு கோணாம, வலிக்காம பாத்துக்குறதும்  ஒடுக்கப்படுறவங்களோட  வேலையா பார்க்கப்படுது. ஒடுக்குறது நீங்கன்னா, திருந்துறது உன்னோட வேலை. இததான் `ஷேர் ஆட்டோ' படத்துல நான் சொல்ல நினைச்சேன்'' என்றவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.  

``என்னோட ஊர் போடி பக்கத்துல சிந்தலைச்சேரி. மதுரையில ஆங்கில இலக்கியம் படிச்சுட்டு எம்.ஏ சோஷியல் ஒர்க் படிக்கிறதுக்காகச் சென்னைக்கு வந்தேன். அப்புறம் ஒரு காலேஜில் டீச்சிங் வேலை, நெட் எக்ஸாமை க்ளியர் செஞ்சது, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராட்டம், மீடியாவில் வேலைன்னு வாழ்க்கை ரொம்ப வேகமாகப் போயிக்கிட்டு இருந்துச்சு. அப்பதான் அந்த ட்விஸ்ட் நடந்துச்சு. அந்த வருஷம் வந்த `சென்னை டே'வையொட்டி, மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கிய ரஞ்சித்தைப் பேட்டி எடுத்தேன். நான் ஏற்கெனவே எங்க டைரக்டரோட `அட்டக்கத்தி' படத்தைப் பார்த்திருந்தேன். என் லைஃபில் அந்தப் படத்தைத்தான் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன். தியேட்டரே ஒரே கொண்டாட்டமா இருந்துச்சு. அந்தப் படத்துக்கு ஆரம்பம், முடிவுன்னு எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. யாருடா இந்த டைரக்டர்,  இப்படிப் படம் பண்ணியிருக்கார்னு அவர் மேலே பயங்கர இம்ப்ரஸாகி இருந்தேன். இந்தப் பேட்டிக்கு அப்புறம் அந்த மரியாதை இன்னமும் அதிகமாகிடுச்சு. அந்தப் பேட்டியை இன்னிக்கும் என்னால மறக்க முடியாது. நேரில் பார்க்கிறப்போ ரொம்ப சின்னப் பையனா இருந்தார். ஆனா, அவ்வளவு தெளிவா தன்னோட பாயின்ட்ஸை முன் வைச்சார். மத்தபடி செம்ம ஜாலியா, ஃப்ரண்ட்லியா பேசினாரு. அப்புறம் பார்த்தா, அவரோட டீமே அவரை மாதிரியே ஜாலியா இருந்துச்சு. அதுக்கப்புறம் நான் மீடியா வேலையைவிட்டுட்டேன். அவர்கிட்ட அதைச் சொன்னப்போ `சேர்ந்து வேலை பார்க்கலாம்' வாங்கன்னு சொன்னார். அப்படியே சினிமாவுக்குள்ள வந்துட்டேன். கபாலி, காலா ரெண்டு படத்துலேயுமே முழுசா ஒர்க் பண்ணியிருக்கேன். இப்ப இயக்கிட்டு இருக்கிற இந்திப் படத்துலேயும் ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கேன்.

எங்க இயக்குநர்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டர்னா இந்த வேலைதான் பார்க்கணும்; அசோஸியேட் டைரக்டர்னா அந்த வேலை மட்டும்தான் பார்க்கணும்கிற கட்டுப்பாடெல்லாம் கிடையவே கிடையாது. நல்லா வேலை பார்க்கணும் அவ்வளவுதான். அதே மாதிரி, ஆண், பெண் வித்தியாசமும் அவர்கிட்டே கிடையாது. 

அவரை நாங்க தோழர்னுதான் கூப்பிடுவோம். ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் அன்னிக்குத்தான் வந்து சேர்ந்திருந்தாலும், `தோழர் இது தப்பாயிருக்கு'ன்னு சொன்னா, அதுல விஷயமிருந்தா எடுத்துப்பாரு. தமிழ் சினிமாவில் வேறு எந்த டைரக்டருடன் நான் வேலை பார்த்திருந்தாலும் சினிமா பற்றி, அரசியல் பற்றி, ஒடுக்கப்பட்டவர்கள் பற்றி இத்தனை புரிதல் எனக்குக் கிடைத்திருக்காது...'' பா.இரஞ்சித்தின் சிஷ்யையின் குரலில் அத்தனை உற்சாகம், அத்தனை தன்னம்பிக்கை!

வாழ்த்துகள் ஜெனி டாலி!