விகடன் வரவேற்பறை
ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - குட்டி ரேவதி
வெளியீடு: நாதன் பதிப்பகம், 72/43, காவேரி தெரு,
சாலிகிராமம், சென்னை-24 பக்கங்கள்: 200 விலை:

130

ஆண்களால் ஒருபுறம் போகப் பொருளாகவும் இன்னொருபுறம் அருவருப்புக்கு உரிய தீட்டு என்றும் விலக்கிவைக்கப்பட்ட பெண் உடலைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசுவதே பெரும்பாலான பெண் கவிஞர்கள் படைக்கும் கவிதைகளின் மையச் சரடாக இருக்கிறது. இந்த எழுத்து நிலைப்பாட்டில் இருந்து தமிழின் பல முக்கியமான பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்து ஆராய்கிறது இந்த நூல். இரா.மீனாட்சி போன்ற மூத்த பெண் எழுத்தாளர்களில் இருந்து சமகாலத்தில் எழுதிக்கொண்டு இருக்கும் பெண் எழுத்தாளர்கள் வரை கவனத்தில் எடுத்து இருக்கிறார் குட்டி ரேவதி. வெறுமனே பெண் எழுத்துகளைக் கொண்டாடுவது என்று இல்லாமல் அந்தக் கவிதைகளின் வரம்பு எல்லைகள், பேசத் தவறிய விஷயங்கள் குறித்தும் விமர்சனப் பார்வையுடன் முன்வைத்திருக்கிறார். ஆனால் அ.வெண்ணிலா, லீனா மணிமேகலை, பெண்ணியா போன்ற கவிஞர்களின் எழுத்துகள் விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாதது ஏனோ?
TOOL - இயக்கம்: பாலாஜி சண்முகம் வெளியீடு: பத்து

கருவிகளைச் சார்ந்து இயங்கும் மக்கள்தான் கதை நாயகர்கள். இளநீர் வெட்டுபவர், செருப்புத் தைப்பவர், கடிகாரம் சரிசெய்பவர் என விதவிதமான தொழில் செய்யும் மக்களை, அவர்கள் பயன்படுத்தும் கருவிகளைக் காட்டுகிறார்கள். கடைசியில் பள்ளி செல்ல வேண்டிய ஒரு சிறுவன் டாஸ்மாக்கில் பீர் புட்டியைத் திறப்பதைக் காட்டுகிறார்கள். அவன் சுவற்றில் எழுதும் கணக்குகள், அப்படியே கரும்பலகை எழுத்துகளாக மாறுகிறது. ஒரு வரி வசனம், கருவிகளின் ஒலிகளை மட்டும்வைத்து குழந்தைத் தொழிலாளர் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி இருப்பது நல்ல விஷயம்!
தொந்தியைக் குறைக்க... கரைக்கhttp://howtolosebellyfatsoon.com

தொப்பை குறைய எளிய பல வழிகளைச் சொல்லும் தளம். லெமன் டயட், ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள், எடை குறைக்கும் க்ரீன் டீ என எதிர்பார்க்காத பலப் பல ஐடியாக்கள் குவிந்துகிடக்கின்றன. தளம் ஒரு டயட்டீஷியனால் நடத்தப்படுவதால் செய்திகளை நம்பிப் பின்பற்றலாம்!
அறிந்துகொள்வோம் மனிதாhttp://gopalakrishanvelu.blogspot.com

தமிழ்நாடு வீட்டு வசதித் துறையின் முறைகேடான ஒதுக்கீடுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்த கோபாலகிருஷ்ணனின் வலைப்பூ. வீட்டுமனை ஒதுக்குவதில் தொடங்கி காவல் துறை உட்பட பல துறைகளில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்கள் அனைத்தையும் பதிவேற்றி இருக்கிறார் கோபாலகிருஷ்ணன். சமூக ஆர்வலர்களும், தகவல் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர்களுக்கும் உபயோகமான தளம்!
பாரிஇசை: அருள் தேவ் வெளியீடு: ஜங்லி மியூஸிக் விலை:

75

புனித நூலான பைபிளின் யோசுவா 1:5 அத்தியாயத்தின், 'நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை... கைவிடுவதும் இல்லை!’ வரிகளோடு தொடங்கும் 'வந்தாயோ...’ பாடல் ஆல்பத்தின் வசீகர ஈர்ப்பு. பாடியிருக்கும் மாதவி சுரேஷின் குரல் சித்ராவின் இளம்பிராயத்தை நினைவுபடுத்துகிறது. 'விடிந்ததும் பார்த்ததும்...’ பாடலை ஐஸ்க்ரீம் குரலில் பாடியிருக்கிறார் 'காதல்’ ஹரிச்சரண். இடையிடையே வரும் கஜல் வடிவம் மனதில் மழைத் துளி தெறிக்கிறது. ரஜினியின் வரிகளில், ரஞ்சித்-ஷாம் குரல்களில் ஒரு மருத்துவமனையின் அக-புறச் சூழலை அழகுற வெளிப்படுத்துகிறது 'தம்பி தம்பி...’ பாடல். ஹரிச்சரண் குரலில் ஒன்ஸ்மோர் ஒலிக்கும் 'வந்தாயோ...’ பாடல் இன்னும் அழகு!