விகடன் வரவேற்பறை
துயில் எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18
பக்கம்: 530 விலை:

350.

ஆக்கர் பம்பரமாகக் காயங்களுடன் சுழலும் மனித வாழ்க்கையில் நோய்கள் என்பது அவிழ்க்கப்படா முடிச்சு என்கிறது இந்த நாவல். நோய் இல்லாத மனிதர்கள் இல்லாததுபோல் நோய்மைகுறித்து பயங்கொள்ளாத மனிதர்களும் இல்லை என்ற எளிய உண்மையே நாவலின் சாராம்சம். தெக்காடு என்னும் ஒரு கடற்கரைக் கிராமத்தை மையமாகவைத்துப் புனையப்பட்ட நாவலில் நிறைய தத்துவ விசாரங்களைப் பேசி இருக்கிறார் எஸ்.ரா. ரயில் பயணம் ஒன்றில் தொடங்கும் கதை வெவ்வேறு களங்களிலும்... காலங்களிலும் பயணித்து ரயில் பயணம் ஒன்றிலேயே முடிவடைகிறது. நோய்மை தரும் பாதுகாப்பின்மையையும் அது தரும் மரணம் குறித்த பயத்தையும் மனதுக்கு அருகில்வைத்துப் படைக்கப்பட்டு இருப்பதால் வாசிப்பு அனுபவம் எளிதில் கைகூடுகிறது!
நான் கடவுளாகப் போறேன்!
இயக்கம்: வை.சரவணகுமார் வெளியீடு: சதிரா திரைப் பட்டறை

குழந்தை மனம் பேசும் குறும்படம். வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தண்டிக்கிறார். கடவுளுக்குப் படைக்காமல் சாப்பிடக் கூடாது என்று அம்மா அடிக்கிறார். தான் சிறுவனாக இருப்பதால்தானே அடிக்கிறார்கள். இவர்களைவிட பெரிய ஆள் ஆகிவிட்டால்? என்ற சிந்தனை வளர்ந்து 'கடவுள்’ ஆக ஆசைப்படுகிறான் சிறுவன். அதற்காக விபரீத முடிவை எடுக்கிறான். குழந்தைகள் உலகில் சின்னச் சின்ன விஷயங்களும்கூட பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்று உணர்த்தி இருக்கிறார்கள். வித்தியாசமான முயற்சி!
ஆன்லைன் அலாரம்! http://sleep.fm

உங்களுக்குப் பிடித்த இசை, பஞ்ச் டயலாக், வீடியோ போன்றவற்றை அலாரம் ட்யூனாக செட் செய்து உங்களுக்கு நினைவூட்டும் தளம். முக்கியமான சந்திப்புகள், நண்பர்களின் பிறந்த நாட்கள் என, உங்கள் தினசரி நடவடிக்கைகளை நீங்கள் விரும்பும் விதத்தில் நினைவுப்படுத்துவதால் அந்த வேலைகளை உற்சாகத்துடன் தொடங்குவீர்கள்!
அதிரடி வலை http://subavee-blog.blogspot.in

சுப.வீரபாண்டியனின் வலைப்பூ. அதிரடிப் பேச்சு, ஆழமான எழுத்து என்று இயங்குபவரின் அரசியல், இலக்கியம், சமூகம் சார்ந்த சிந்தனைகள் இங்கே காணக்கிடைக்கின்றன. இவர் ஆற்றிய உரைகளின் காணொளிகளோடு 'கருஞ்சட்டைத் தமிழர்’ சிற்றிதழ்களை வாசிப்பதற்கான இணைப்பையும் கொடுத்து இருப்பது சிறப்பு!
கிருஷ்ணவேணி பஞ்சாலை இசை: என்.ஆர்.ரகுநந்தன்
வெளியீடு: மின்வெளி மியூஸிக் விலை

99

ரகுநந்தன் முதலில் இசை அமைத்த படம் இது. ஆனால், 'தென்மேற்குப் பருவக் காற்று’ முந்திக்கொண்டு பெயர் வாங்கிவிட்டது. ஹரிஷ் ராகவேந்திரா-சித்தாரா குரல்களில் 'ஆத்தாடி ஒரு பறவை பறக்குதா...’வைக் கேட்கும்போதே மனசு லேசாகிப் பறக்கத் தொடங்கிவிடுகிறது. ஆல்பத்தின் இளமை ஊற்று தாமரையின் வரிகளில் ராமன் மஹாதேவன், ஸ்ரேயா கோஷல், ரெனினா ரெட்டியின் குரல்களில் ஒலிக்கும் 'உன் கண்கள்...’ பாடல். இதில் ஹிட் காலர் ட்யூன் அந்தஸ்து பெறுவதற்கான அறிகுறிகள் நிறைய தெரிகின்றன. ஆயுத பூஜை சூழலில் தாளம் போடவைக்கும் மெட்டு 'ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி’ பாடல். ஜாஸி கிஃப்ட்டின் உருமிக் குரலில் 'ரோஜா மலையே...’ வரிகளை விழுங்காத வசீகர மெட்டு!