விகடன் வரவேற்பறை
தாண்டவபுரம்
சோலை சுந்தரபெருமாள்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
பக்கங்கள்: 700விலை:

390

வைதீகக் கொடுமைகளான சாதி, தீண்டாமை, உயிர்ப் பலி ஆகியவற்றை மறுத்து உருவாகிய அவைதீக மதங்கள் சமணமும் பௌத்தமும். ஆனால், போகப் போக அரச மதமாக மாறிய சமணமும் பௌத்தமும் அதிகாரப் பசிக்கு இரையானது, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காத இறுக்கமான கட்டுப்பாடு கள், எந்த சாதியின் ஆதிக்கத்துக்கு எதிராகத் தோன்றியதோ அதே சாதியினரின் ஆதிக்கத்துக்கு ஆட்பட்டது - இந்தப் பின்னணியில் தமிழகத்தில் ஏற்பட்ட பக்தி இயக்க மறுமலர்ச்சியை விளக்குகிறது இந்த நாவல். திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய இரு சைவ ஆளுமைகளைப் பிரதானமாகக் கொண்டு ஏராள உழைப்பையும் கள ஆய்வையும் கொண்டிருக்கிறது ஒவ்வொரு அத்தியாயமும். அக்காலத்திய இனிய தமிழ் உரையாடல்கள், சமய மோதல்களின் ஊடாக நடைபெறும் தத்துவ விவாதங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ளப் படிக்க வேண்டிய முக்கியமான வரலாற்று நாவல்!
அ ம் மா
இயக்கம்: வினு அரவிந் வெளியீடு: v touch

'ஜீவராசிகள் அனைத்துக்கும் உள்ளுணர்வு உள்ளது. தாய்மைதான் அதில் முதன்மையானது’ என்பதுதான் இந்தக் குறும்படத்தின் ஒன் லைன். கல்லூரி கலை நிகழ்ச்சியில் வாசிக்க, 'அம்மா’ என்ற தலைப்பில் கவிதை எழுது கிறான் மகன். அம்மா என்கிற மூன்றெழுத்தைச் சுருக்கி, தாய் என்று இரண்டு எழுத்து ஆக்கி யோசித்துக்கொண்டு இருக்கும்போது, தடுமாறி விழுந்து 'ஆ’ என்று கத்துகிறான். உள்ளுணர்வு உந்தப்பட்டு அம்மா தேடி வருகிறார். இதையே கவிதையாக்கி பரிசும் பெறுகிறான். 'இதெல்லாம் ஒரு கவிதையா? 'ஆ’ன்னு கத்தினா அப்பா, அண்ணாலாம் வருவாங்க’ என்று கலாய்க்கிறார்கள் நண்பர் கள். ஆனால், அந்த க்ளைமாக்ஸ்... ஆச்சர்ய அதிர்ச்சி!
நலம்... நலமறிய ஆவல்!
www.hainallama.blogspot.com

மருத்துவத் தகவல்களைத் தாங்கி வரும் வலைப்பூ. 'திடீர் மயக்கங்கள் ஏன்?’, 'மூட்டுவலியைக் குணமாக்கப் பத்தியங்கள் உதவுமா?’ என்பன போன்ற பல பிரச்னைகளுக்கு விளக்கம் தருகிறது. சைஸ் ஜீரோ விரும்பும் பெண்கள் 'குளறுபடியான உண்ணல் நோய்’ எனும் பதிவைப் படிப்பது அவசியம்!
பிறந்த வருடத்தில் நடந்தது என்ன?
http://whathappenedinmybirthyear.com

நீங்கள் பிறந்த வருடத்தின் உலக நடப்புகளைச் சொல்லும் தளம்! உங்கள் பிறந்த வருடத்தைத் தட்டினால் அந்த வருடத்தில் வெளியான திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், போர்கள், நோபல் பரிசு வெற்றியாளர்கள், கண்டுபிடிப்புகள் எனத் தகவல் மழை பொழிகிறது!
அட்டகத்தி இசை: சந்தோஷ் நாராயணன்
வெளியீடு: திங்க் மியூஸிக் விலை: 99

இரண்டு மெலடி... ஐந்து அதிரடி என வெரைட்டி விருந்து படைத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். கபிலன் எழுதி 'கிடாரிஸ்ட்’ பிரதீப் மற்றும் கல்யாணி பாடியிருக்கும் 'ஆசை ஒரு புல்வெளி... ஆண் பெண் அதில் பனித் துளி’ தேன் மெலடி. பாடலின் ஊடாக வரும் 'ஐரிஷ் விசில்’ குழல் இசை சூப்பர்ப். 'கிடாரிஸ்ட்’ பிரதீப்பே எழுதிப் பாடி வாசித்திருக்கும் 'விழி பார்த்திருந்தேன்’ கொண்டாடப்பட வேண்டிய முயற்சி! கபிலனின் வரிகளில் வட சென்னையின் குரலாக ஒலிக்கும் 'கானா’ பாலா வின் 'ஆடி போனா ஆவணி...’ கும்மாங்குத்து. பறை, தாரை, தப்பட்டைகளோடு அயிஞ்சிவாக்கம் முத்துவின் குரலில் ஒலிக்கும் 'அடி என் கான மயில்...’ பக்கா சல்பேட்டா. காதல் காயத்துக்குக் களிம்பு பூசுகிறது 'கானா’ பாலாவின் 'நடுக்கடல்ல கப்பல நீயும்’ பாட்டு!