விகடன் வரவேற்பறை
சுந்தர ராமசாமி: ஒளியில் வழியும் படிமம்
புதுவை இளவேனில் - அரவிந்தன் பக்கம்: 48 விலை

200
வெளியீடு: கன்டென்ட் ஃபேக்டரி, பி1, ஆர்.இ.அபார்ட்மென்ட்ஸ்,
70, ஆர்யகவுடா ரோடு, சென்னை-33.

சுந்தர ராமசாமி என்கிற ஆளுமையை புதுவை இளவேனில் கறுப்பு - வெள்ளைப் படங்களுக்குள் செய்த பதிவு இப்போது புத்தகமாக. ஒவ்வொரு புகைப்படத்தையட்டியும் கவிதைபோல சு.ரா-வின் இலக்கிய வீச்சுகொண்ட வரிகள் பக்கங்களை அலங்கரிக் கின்றன. ஏகாந்த வெளியில் கைகளை இட வலமாக விரித்துப் புன்னகைக்கும் சு.ரா. புகைப்படத்தின் மேற்பரப்பில் 'எனினும் என்னை வெல்ல யாருண்டு? எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான்?’ என்ற வரிகள்... அடடா! எவ்வளவு பொருத்தம். இவ்வளவு சிறப்பான புத்தகத்துக்குச் சற்றே உறுத்தலாக எழுத்துப் பிழைகள். அடுத்த பதிப்பில் அவசியம் தவிர்த்துவிடுங்கள் இளவேனில்!
ஆயிரம் முத்தங்களுடன்... தேன்மொழி இசை: தாஜ்நூர்
வெளியீடு: வீனஸ் விலை:

99

மெட்டுக்கள் பழசு என்றாலும் குரல்கள் புதுசு. 'சத்தம் சத்தமின்றி...’ பாடலில் ஒலிக்கும் ஸ்வேதாவின் குரல் காதல் கஜல். 'ஒளித்துவைத்ததைத் தேட வா...’ எனுமிடத்தில் ஸ்வேதா வாய்ஸ் செம சாய்ஸ். காரைக்கால் பையன் ரமேஷ§க்கும் மாயவரம் பொண்ணு தேன்மொழிக்கும் இடையில் ஆறே முக்கால் மணிக்கு காதல் பூக்கவிருப்பதாக ஆரூடம் சொல்லும் 'காரைக்கால்...’ பாட்டு குறும்பு ஹைக்கூ. ஆல்பத்தின் ஹைலைட்... 'பாலோடு தேன்சேர...’ பாடல். திருக்குறளின் காமத்துப்பாலில் இருந்து எடுக்கப்பட்ட 18 குறள்களை வைத்து யுகபாரதி எழுதிய பாடலுக்கு ரஹீப் ஆலம்- ராஜலஷ்மி குரல் வளம் சேர்க்கிறது. 'உன் பெயர் என்ன...’ பாடலும் 'மை டியர் புருஷா...’வும் கேட்கலாம் ரகம். 'தீண்டாத தீயை...’ பாடலின் 'இதயம் உன்னிடம் தாவியது; வலியும் இனிக்கிறது... உயிரில் உன் முகம் பரவியது; செல்கள் சிரிக்கிறது!’ வரிகளில் கவனம் ஈர்க்கிறார் ஞானகரவேல்.
Saturday இயக்கம்: ராஜேஷ்

ஒரு சனிக் கிழமை இரவில் நடக்கும் தொடர் துர்மரணங்கள்தான் கதை. ஒரே இரவில் காதலி, தோழி, சாலையில் செல்பவன், திருடன் எனப் பலரின் மரணத்துக்கும் காரணமாக இருக்கிறான் கதாநாயகன். விடுதி அறையில் அனைவரின் ஆவிகளும் அவனைச் சுற்றி வளைக்கின்றன. க்ளைமாக்ஸில் அது சினிமா என்று காட்டுகிறார்கள். ''சனிப் பிணம் தனியே போகாது என்பது மூடநம்பிக்கை. பாசிட்டிவ் க்ளைமாக்ஸ் வைக்கலாம்'' என உதவியாளர் சொல்ல, யோசனையில் ஆழ்ந்தபடி வெளியே வரும் இயக்குநர் விபத்துக்குள்ளாகி இறக்கிறார். தொடர்ந்து ஹீரோவும் துர்மரணம் அடைகிறார். இப்போது நிஜமாகவே இந்தக் குறும்படத்துக்கு பாசிட்டிவ் க்ளைமாக்ஸ் வைத்தார்களா என்பது இரண்டாவது க்ளைமாக்ஸ். கேமரா கோணங்களும் திகில் இசையும் த்ரில் திகில் சேர்க்கிறது!
லஞ்சம் கொடுத்தேன்! http://ipaidabribe.com

ஏதேனும் ஒரு சமயம் யாருக்கேனும் லஞ்சம் கொடுத்திருக்கிறீர்களா? ஆம் என்றால், அந்தக் கணத்தின் வேதனையையும் கோபத்தையும் இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். 'இப்படி, இன்ன காரணத்துக்காக, இவர் லஞ்சம் கேட் கிறார்’ என்று நீங்கள் இந்தத் தளத்தில் பதிவு செய்தால், அதை எப்படி எதிர்கொள்வது, யாரிடம் புகார் அளிப் பது, சட்டரீதியாகஎதிர் கொள்வது எப்படி என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்தத் தளம்!
ஹ்யூமன் சாஃப்ட்வேரை அப்டேட் செய்ய... http://nathansenglish.blogspot.in

கார்ப்பரேட் உலகில் எதிர்பார்க்கப்படும் 'மென் திறன்’ களைக் கைக்கொள்ள உதவும் வலைப்பூ. ஆங்கில வார்த் தைகளை, இலக்கணப் பயன்பாடு களை விரிவாக, சுவாரஸ்யமாகச் சொல்கிறார். 'மேரேஜ்’ என்ற வார்த்தைக்கும் 'வெட்டிங்’ என்ற வார்த் தைக்குமான நுணுக்கமான வேறு பாடு... ஹைலைட்!