விகடன் வரவேற்பறை
வரலாற்றுச் சுவடுகள்
வெளியீடு: தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, சென்னை-7 .
பக்கங்கள்: 864 விலை:

300

இரண்டாம் உலகப் போர் முதல், இலங்கை - ஈழப் போர் வரை வரலாற்றின் அச்சு வடிவ மாக வந்திருக்கிறது 'வரலாற்றுச் சுவடுகள்’. தினத்தந்தி இதழில் வெளியாகி அனைவரையும் ஈர்த்த இந்நூலின் சிறப்பே அதன் எளிய தமிழ்தான். இந்திய, தமிழக, உலக வரலாறுகள் அனைத்தும் மக்கள் மொழியில் வசீகரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய இப்போதைய நடப்புகளும் அழுந்தப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்துபோன வரலாற்றை நின்று நிதானித்து, நெருங்கிச் சென்று வாசிக்க இந்நூல் இருளின் கைவிளக்கு!
படப் பதிவுகள் http://www.nikon.com/about/feelnikon/thisday/main.htm

புகழ்பெற்ற நிக்கான் கேமராவின் இணையதளம். வரலாற்றில் நடந்த முக்கியமான சம்பவத்தை அரிய புகைப்படங்களோடு அறிமுகப்படுத்துகிறார்கள். போர்கள், ஜனனம், மரணம், ஆட்சி மாற்றம், புரட்சி, பிரிவு, கண்ணீர், தூக்கம் என தினமும் இவர்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு புகைப்படமும், அதை ஒட்டிய நாலு வரிச் செய்தியும் வரலாற்றைக் கண்ணாடியாகப் பிரதிபலிக்கிறது. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும் அபூர்வ வாய்ப்பு!
அப்பாவி இயக்கம்: ராஜேஷ் வெளியீடு: வி.ஜே.எஸ் மீடியா

காமர்ஸ் படிக்கும் ரமேஷ§க்குக் காதலில் தோற்பதுபோலக் கனவு வருகிறது. சாலையில் ரமேஷைப் பார்க்கும் அதே பெண் புன்னகைத்து, மாலையில் சந்திக்கக் கூப்பிடுகிறாள். மாலையில் ரமேஷிடம் தன் காதலைச் சொல்கிறாள் அந்தப் பெண். இது கனவா என்று தன்னைதானே ரமேஷ் கிள்ளிப் பார்க்கும்போது உடைகிறது ரகசியம். கனவுக்கும் நிஜத்துக்கும் இடையில் உல்டா விஷயங்களே க்ளைமாக்ஸ். சென்னைப் பையனின் வாழ்க்கையை ஜாலியாக, கவனிக்கும்படி சொல்லியிருக்கிறார் ராஜேஷ்!
செய்திகள்... அலசல்கள்... www.vimalavan.wordpress.com

ஒரு குறிப்பிட்ட செய்தியை எடுத்துக்கொண்டு, சமூகப் பார்வையில் அது தொடர்பான அலசலை முன்வைக்கும் வலைப்பூ. காஷ்மீர் ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்ட குலாம் ரசூல் ஷாவின் மகன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆனது, இந்தியாவின் கடனில் ஒவ்வொரு குடிமகனின் தலைக்கும் மேல் 14,353 ரூபாய் கடன் உள்ளது போன்ற செய்திகளுக்குப் பின்னுள்ள பல்வேறு கோணங்களைப் பதிவுகள் அலசுகின்றன. சுற்றுச் சூழல், வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு, விளையாட்டு எனப் பல துறைகள் குறித்தும் பேசும் கட்டுரைகள் அடங்கிய வலைப்பூ!
தூங்கா நகரம் இசை: சுந்தர்.சி.பாபு வெளியீடு: திங்க் மியூஸிக் விலை:

99

ஆல்பம் முழுக்கவே 'மதுர புகழ்’தான். 'வைகை சிரிச்சா..’ பாடலின் வரிகள் தூங்கா நகரத்துக்குச் சமர்ப்பணம். காதல் சிறகால் காது வருடும் 'கூரான பார்வைகள்’ பாடல். தாமரையின் மெல்லிய வரிகளுக்கு 'வலிக்குமோ’ என்ற ரீதியில் ஒலிக்கிறது ஹரிஹரன், சின்மயி குரல்கள். சந்திரபாபுவின் குரலில் 'கல்யாணம் கல்யாணம்’ என்று துவங்கி ரீ-மிக்ஸ் தடத்தில் பயணிக்கும் பாடலில்.. கல்யாண குதூகலம். 'நீ சிரிச்சா கொண்டாட்டம்’ பாடலில் லோக்கல் ஃப்ளேவர் கும்மாங்குத்து. 'ரிதம் ஆஃப் தூங்கா நகரம்’ என்று பரவும் இசையில் அதிர்வேட்டு உற்சாகம்!