பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

யுத்த சாட்சியம்!

யுத்த சாட்சியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
யுத்த சாட்சியம்!

ஒரு கட்டத்தில் 1,600 நபர்களைக் காக்கும் பொறுப்பு மொத்தமாய் வில் ஸ்காஃபீல்டு தலைமேல் விழுகிறது.

போர் குறித்த மயக்கங்கள் இன்னும் தெளியாத சூழலில், போர் எத்தனை கொடுமையானது என்பதைச் சொல்கிறது `1917’ படம்.

1914-ல் தொடங்கிய முதல் உலகப் போர் அதன் உச்சத்தில் இருந்த நேரம் நடந்ததுதான், இந்த `1917’ ஏப்ரல் மாத சம்பவம். முதலாம் உலகப்போரில் பிரான்ஸின் மேற்கு எல்லையிலிருந்து தன் ராணுவத்தைப் பின்வாங்கிக் கொள்கிறது ஜெர்மனி. தோல்வி பயம் என எண்ணி, ஜெர்மனியின் பின்வாங்கலைப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடும் இங்கிலாந்து 1,600 நபர்களை அனுப்பி, அந்த இடத்தைக் கைப்பற்ற எத்தனிக்கிறது.

உலகப்போர் சினிமா
உலகப்போர் சினிமா

ஆனால், அது ஜெர்மனியின் பதுங்கிப் பாயும் திட்டம் என்பது இங்கிலாந்தின் தலைமைக்குத் தெரிய வருவதற்குள், களத்திலிருக்கும் ராணுவக் குழு போருக்குப் புறப்பட்டு விடுகிறது. டெலிபோன் ஒயர்கள் அறுபட்டு நிற்க, தங்களின் மரணப்படுக்கைகளைத் தோண்டிக்கொண்டே செல்கிறார்கள் 1,600 போர் வீரர்கள். வேறு வழிகளற்று நிர்கதியாய் நிற்கிறது இங்கிலாந்து. இரண்டு நபர்களைக் குறுக்கு வழியில் அனுப்பி, இந்த விவரத்தைச் சொல்லக் கட்டளையிடுகிறார் ஜெனரல் எரின்மோர். முள்வேலிகளின் இடைவெளிகளில் நுழைந்து, தோட்டாக்கள் சிதறி, வழிநெடுகில் உள்ள எதிரிக் கூடாரங்களைக் கடந்து லான்ஸ் கார்ப்போரல்களான டாம் பிளேக்கும், வில் ஸ்காஃபீல்டும் இந்தத் துணிகரச் செயலை மேற்கொள்கிறார்கள். டாம் பிளேக் செல்ல மற்றுமொரு காரணம் அவரது அண்ணன் லெப்டினன்ட் ஜோசப் பிளேக்கும் அந்த 1,600 நபர்களில் ஒருவர் என்பதுதான்.

ஒரு கட்டத்தில் 1,600 நபர்களைக் காக்கும் பொறுப்பு மொத்தமாய் வில் ஸ்காஃபீல்டு தலைமேல் விழுகிறது. இறுதியில் நீர் வீழ்ச்சிகளையும், காட்டுப் பாதைகளையும், ஜெர்மன் துப்பாக்கிக்குண்டுகளையும் கடந்து வில் ஸ்காஃபீல்டு அந்த 1,600 நபர்களைக் காப்பாற்றிவிடுகிறார் என்பது வரலாறு. ஆனால், அதில் எட்டிப் பார்க்கும் மனிதமும், விரவிக் கிடக்கும் ஒளிச் சிதறல்களும், அழகியலுடன் சீராக இழைக்கப்பட்ட காட்சியமைப்பும் நம்மை ஆட்கொள்கின்றன.

யுத்த சாட்சியம்!
யுத்த சாட்சியம்!

உலகப்போர் சினிமாக்கள் ஆண்டுதோறும் வெளியாகுபவைதான். ஆனால், அவற்றை எல்லாம் கடந்து 1917 ஈர்க்கக் காரணம், அது பேசும் அரசியலும், அது தரும் காட்சி அனுபவமும்தான். நம்மையே அந்தப் போர்க்களத்துக்குள் இறக்கிவிட்டு, தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறது ரோஜர் டீக்கின்ஸின் ஒளிப்பதிவு. படம் நெடுக வரும் நீளமான ஷாட்களைக் கச்சிதமாக இணைக்கும் படத்தொகுப்பு, நல்ல அனுபவத்தை வழங்குகிறது.

இரு இளைஞர்களைப் பின்தொடரும் கேமரா, அவர்களுக்கு அருகில் வந்து, பின் சட்டென அவர்களை முந்திச் சென்று, அதில் ஒருவரை மட்டும் தொடரும் தருணம், திரைமொழியின் உச்சம். அதிலும் வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் வெடிக்கும் யுத்தக் களத்தினிடையே ஓடும் வில்லுக்கு முன்னால் ஓடும் கேமரா, இந்த தசாப்தத்தின் மகத்தான காட்சி. இந்தக் காட்சிகளை அதன் செழுமை குன்றாமல் இணைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் லீ ஸ்மித்.

குப்புறக் கவிழ்ந்துகிடக்கும் பீரங்கிகள்; வெட்டப்பட்ட மரங்கள், சிதிலமடைந்த கட்டடங்கள் எனப் போர் முடிந்த நிலத்தின் தடயங்களைக் கண் முன் கொண்டு வருகிறார்கள் கலை இயக்குநர்கள் டென்னிஸ் கேஸ்னரும், லீ சேண்டல்ஸும்.

உலகப் போர்
உலகப் போர்

தனது முதல் படமான ‘அமெரிக்கன் பியூட்டி’க்கே ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியவர் இயக்குநர் சாம் மெண்டிஸ். சட்டென கமர்ஷியல் `ஹை-பட்ஜெட்’ பல்லக்கில் ஏறி, `ஸ்பெக்டர்’ , ` ஸ்கைஃபால்’ என ஜேம்ஸ் பாண்டு சினிமாக்களை இயக்கியவர், தற்போது மீண்டும் உணர்ச்சிபூர்வமாகக் கதை சொல்ல போர்க்களத்துடன் வந்திருக்கிறார். இந்த முறை ஆஸ்கரில் 10 பரிந்துரைகளுடன் முதலிடத்தில் இருக்கிறது `1917.’

ராணுவ வீரரான சாம் மெண்டிஸின் தாத்தா ஆல்ஃபிரட் மெண்டிஸ் சொன்ன கதைகளின் ஒரு சொட்டுதான் இந்த `1917.’ முதலாம் உலகப் போரில் பணியாற்றிய ஆல்ஃபிரட், ஊர் திரும்பிய பின்னும் கைகளைக் கழுவிக்கொண்டே இருப்பாராம். குருதி தோய்ந்த அந்த மண், ஆல்ஃபிரட்டின் கைகளை விட்டு அகன்றதாய் அவரால் இறுதிவரை நம்பமுடியவில்லை. நிகழ்காலத்தில் நாம் இனி எவ்வித யுத்த அபாயத்தையும் நிகழ்த்திவிடக்கூடாது என்பதற்காகவே இறந்த காலத்தில் புதைய மறுக்கும் உலகப்போரின் மீதமிருக்கும் சாட்சியங்கள் இவை.

சினிமா என்பது நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என மொபைலுக்குள் சுருங்கிய ஒரு தருணத்தில், சினிமா என்பது பெரிய திரைகளில் கண்டு இன்புறவேண்டியது என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறது `1917.’