
அரசியல் நிகழ்ச்சிகளைக் கவனிச்சுக்கிட்டிருக்கேன். நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், அம்பிகா.
தமிழ், மலையாளம் மற்றும் கன்னட சினிமாக்களில் 80-களில் கனவுக்கன்னியாக வலம்வந்தவர், அம்பிகா. அப்போதைய சூப்பர் ஸ்டார்கள் பலரும் இவரின் கால்ஷீட்டுக்குக் காத்திருந்தனர். பலதரப்பட்ட வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றார். இப்போதுவரை சினிமா பயணத்தைத் தொடரும் அம்பிகா, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.
இளம் விவசாயி... குழந்தை நட்சத்திரம்!
வீட்டில் மூத்த பெண்ணான எனக்கு, ரெண்டு தங்கை மற்றும் ரெண்டு தம்பி. கேரளாவில் எங்க கல்லற கிராமத்துல விவசாயம் செய்தோம். நாத்து நடுறது முதல் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிப்பது வரை எல்லா விவசாய வேலைகளையும் செய்வேன். அரசுப் பள்ளியில் படிச்சேன். படிப்பில் நாட்டமில்லாத எனக்கு, டான்ஸ் மற்றும் நடிப்பில்தான் அதிக ஆர்வம். ஸ்கூல் `கட்'டடிச்சுட்டு, அடிக்கடி சினிமாவுக்குப் போவேன்.
திருவனந்தபுரத்துல `சோட்டானிக்கர அம்மா’ பட ஷூட்டிங் நடந்தது. அப்போ காய்ச்சல்ல கிடந்த நான், எங்கம்மாகிட்ட அடம்பிடிச்சு, என்னை அந்த ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க கூட்டிட்டுப் போகச் சொன்னேன். அழுது அடம்பிடிச்சு, அந்தப் படத்துல ஒரு சின்ன சீன்ல நடிச்சேன். படத்தின் ஒளிப்பதிவாளர் தாரா சார், `வைராக்கியமா நடிச்சுட்ட. நல்ல முக அம்சம் உனக்கு. எதிர்காலத்துல பெரிய ஹீரோயினா கலக்குவே’ன்னு பாராட்டினார். அவர் சொன்னதுபோலவே நடந்துச்சு.
ஹீரோயின் என்ட்ரி... கனவு நாயகனுடன் ஜோடி!
தொடர்ந்து பல மலையாளப் படங்கள்ல குழந்தை நட்சத்திரமா சின்னச்சின்ன வேடங்கள்ல நடிச்சுட்டிருந்தேன். அப்போ, எங்க ஸ்கூல் கல்ச்சுரல் நிகழ்ச்சிகளுக்கு, பெரிய சினிமா பிரபலங்கள் விருந்தினர்களா வருவாங்க. அப்படி ஒருமுறை வந்திருந்த நடிகர் மது சார்கிட்ட, நான் பரிசு வாங்கிய மூணு முறையும், `சார், உங்க படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுப்பீங்களா?’ன்னு கேட்டுக்கிட்டே இருந்தேன். ஒருகட்டத்துல, `சரி, ஷூட்டிங் வந்திடு’ன்னு சொல்லிட்டார். அவரின் `தீர சமீரே யமுன தீரே’ படத்துல நடிச்சேன். என் எதிர்காலம் சினிமாதான்னு முடிவெடுத்தேன். முதன்முதலா `சீதா’ங்கிற மலையாளப் படத்தில்தான் ஹீரோயினா கமிட்டானேன். ஆனா, அதற்கு முன்னதா ரிலீஸான `நீலதாமரா’ படம் பெரிய ஹிட். தொடந்து ஹீரோயினா நிறைய மலையாளப் படங்களில் நடிச்சேன்.
அப்போ மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமான பிரேம் நசீரின் படங்களைப் பார்த்துட்டுவந்து, அவர்கூட டூயட் பாடுற மாதிரி கனவு காண்பேன். அவர் மேல அப்படியொரு மயக்கம் எனக்கு. நான் குழந்தை நட்சத்திரமா நடிச்ச காலத்தில், `பெரிய பொண்ணானதும் உங்ககூட ஜோடியா நடிப்பேன்’னு சொல்வேன். ஹீரோயினானதும், `மாமாங்கம்’ படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறிச்சு. பிற்காலத்துல அவருடனும் அவர் பையன் ஷாநவாஸ் கூடவும் ஜோடியா பல படங்கள்ல நடிச்சேன்.

ரஜினி, கமலின் ஹிட் நாயகி... சிவாஜியுடன் நடிக்க பயம்!
மலையாள சினிமாவில் புகழ்பெற ஆரம்பிச்சதும் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் வந்துச்சு. தமிழில் ஒரே நேரத்துல `சக்களத்தி’, `தரையில் வாழும் மீன்கள்’ மற்றும் ஸ்ரீதர் சார் இயக்கத்தில் கமல்ஹாசன் சாருக்கு ஜோடியா `நானும் ஒரு தொழிலாளி’ன்னு மூணு படங்கள்ல நடிச்சேன். அதில் முதல் இரண்டு படங்கள் ரிலீஸாகி பெரிசா ஹிட்டாகலை. இந்நிலையில், `அந்த ஏழு நாட்கள்’ படம்தான் ஹீரோயினா தமிழ் சினிமாவில் எனக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்துச்சு. அந்தப் படத்துல மலையாளி ரோல்ல நடிச்ச பாக்யராஜ் சார், மலையாளம் தெரிஞ்ச நடிகையா இருந்தா மொழியில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்டுக்கலாம்னு நினைச்சுதான் என்னைத் தேர்வுசெய்தார். வலிமையான அந்த கேரக்டரும், படத்தின் ஹிட்டும் என் கரியர்ல பெரிய ஏற்றம் கொடுத்துச்சு. அப்போ, கன்னட ஹீரோ ஸ்ரீநாத் அழைப்பு விடுக்க, `கருட ரேகே’ படத்தில் அவருக்கு ஜோடியா நடிச்சேன். பிறகு, கன்னடத்திலும் பிஸி.
அடுத்து, கிளாமரா நடிச்ச `சகலகலா வல்லவன்’ படமும் ஹோம்லியா நடிச்ச `தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ படமும் பெரிய ஹிட். அதனால, ஹோம்லி, கிளாமர்னு ரெண்டு ஜானர்லயும் எனக்கு பல வெற்றிப் படங்கள் வரிசையா வந்துட்டே இருந்துச்சு. ரஜினி, கமலுடன் நிறைய படங்கள்ல ஜோடியா நடிச்சேன். `அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் அம்மா ரோல்ல நடிக்க ரொம்பத் தயங்கினேன். `கருடா சவுக்கியமா’ படத்துல சிவாஜி சாருக்கு மகளா நடிச்சுட்டு, பிறகு `வாழ்க்கை’ படத்தில் அவருக்கு ஜோடியா நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. 20 வயசுகூட ஆகாத நிலையில், அந்தப் படத்துல எனக்கு 55 வயது ரோல். தொடந்து அம்மா ரோல்களே வர ஆரம்பிச்சுடும்னு ரொம்ப பயம் எனக்கு. குழப்பத்துக்கு மத்தியில், சிவாஜி சாருடன் நடிக்கும் ஆசையில், அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கிட்டேன். படம் ஹிட்டானதுடன், தொடர்ந்து ஹீரோயின் ரோல்கள் வருவதும் குறையலை. பிறகும் சிவாஜி சார்கூட சில படங்கள்ல ஜோடியா நடிச்சேன். பலதரப்பட்ட ரோல்களிலும் மக்கள் என்னை ஏத்துக்கிட்டாங்க.
எம்.ஜி.ஆரின் அறிவுரை... விஜயகாந்த்தின் கோபம்!
எம்.ஜி.ஆரின் பெரிய ரசிகையான நான், ஒருமுறை விமானப் பயணத்துல, பாதுகாவலர்களின் கெடுபிடிகளையும் மீறி அவர் பக்கத்துல போனேன். `சினிமாவுல இருந்து எதுக்கு சார் விலகினீங்க? உங்ககூட நடிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்’னு சொன்னேன். சிரிச்சவர், `சரியான நேரத்துக்கு ஷூட்டிங் போயிடணும். பெரிய நடிகையா வரணும்’னு வாழ்த்தினார். அவர்கூட நடிக்காவிட்டாலும், அவர் குடும்பத்துடன் எனக்கு நல்ல நட்பு இருந்துச்சு. எம்.ஜி.ஆர் சார் சொன்னதுபோல சரியான நேரத்துக்கு ஷூட்டிங் போயிடுவேன். பொறுப்பான நடிகைனு பெயர் வாங்கினேன். அந்த நம்பிக்கையில்தான், `விக்ரம்’ படத்துல வேறு ஒரு நடிகைக்குப் பதிலா என்னை நடிக்க வெச்சார் கமல் சார். அதேபோலத்தான், `ஸ்ரீராகவேந்திரர்’ படத்துல `ஆடல் கலையே’ பாடலிலும் என்னை நடிக்க வெச்சார் ரஜினி சார்.
`எங்கேயோ கேட்ட குரல்’, `காக்கிசட்டை’, `நான் சிகப்பு மனிதன்’, `படிக்காதவன்’, `மனக்கணக்கு’, `மிஸ்டர் பாரத்’, `காதல் பரிசு’ன்னு எக்கச்சக்க ஹிட் படங்கள்ல நடிச்சேன். அப்போ, ஒரே நாள்ல நாலு கால்ஷீட்ல நடிப்பேன். ரெண்டு நிமிஷத்துக்குள் அவசரமா சாப்பிட்டுட்டு ஷூட்டிங்குக்கு ஓடுவேன். `சகோதரி, பாடல் ஷூட்டிங் இருக்கு’ன்னு இராம.நாராயணன் சார் கேட்க, `நேரமே இல்லை சார்’னு சொல்வேன். அதனால, இரவு 9 மணிக்கு மேல ஷூட்டிங் நடக்கும். என் மேல் கடுப்பில் உட்கார்ந்திருக்கும் விஜயகாந்த் சார், `நேரமில்லைன்னு உறுதியா சொல்லவேண்டியதுதானே? உன் தூக்கத்தையும் கெடுத்து, என் தூக்கத்தையும் கெடுக்கறியே’ன்னு செல்லமா கோபப்படுவார். ஆரம்பகால சினிமாவில் பல அவமானங்களை எதிர்கொண்டிருக்கேன். அதனால, தூக்கம், உணவு உட்பட பல இழப்புகளையும் சந்தோஷமா எடுத்துக்கிட்டேன். தமிழ் தவிர, மலையாளம் மற்றும் கன்னட சினிமாவிலும் நிறைய ஹிட்ஸ் கொடுத்தேன். முன்னணி ஹீரோயினா மூணு மொழிகளிலும் புகழ்பெற்றேன். இதுக்கிடையே பள்ளிப் படிப்பு பாதியிலேயே நிற்க, நடிச்சுக்கிட்டே கரஸ்ல டிகிரி முடிச்சேன்.
எனக்கு அரசியலில் அதிக ஆர்வம் உண்டு. தொடர்ந்து அரசியல் நிகழ்ச்சிகளைக் கவனிச்சுக்கிட்டிருக்கேன். நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.
சூப்பர் ஸ்டார்களின் நாயகி... அமிதாப்பின் அழைப்பு!
`ராஜாதி ராஜா’, `மெல்லத் திறந்தது கதவு’, `சிறை’ உட்பட நான் நடிக்க முடியாமல் போன படங்களின் லிஸ்ட் பெரிசு. கால்ஷீட் உள்ளிட்ட பல காரணங்களால், நிறைய வெற்றிப்பட வாய்ப்புகளை இழந்தேன். கிடைக்காத வாய்ப்புகளுக்கு ஒருபோதும் நான் வருத்தப்பட்டதில்லை. ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், பிரபு, என்.டி.ராம ராவ், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார், ஸ்ரீநாத், அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன், மது, பிரேம் நசீர்னு அப்போதைய தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் எல்லோருடனும் நடிச்சுட்டேன். இவங்க எல்லோருமே, என் கால்ஷீட்டுக்காக பல படங்களுக்குக் காத்திருந்தாங்க. `வாழ்க்கை’ பட ஷூட்டிங் நேரம், ரெண்டு இந்திப் படங்களில் என்னை நடிக்கக் கூப்பிட்டார் அமிதாப் பச்சன் சார். தமிழ்ப் படங்களுக்காக நிறைய இந்திப் பட வாய்ப்புகளைத் தவிர்த்தேன். இதுவரை 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருப்பேன். அதில், 200 படங்களுக்கும் மேல் ஹீரோயின். குறிப்பா, இளையராஜா சாரின் ஹிட் பாடல்கள் எனக்கும் ராதாவுக்கும் அதிகம் கிடைச்சதில் ஸ்பெஷல் மகிழ்ச்சி.
தெலுங்கு சினிமாவில், ஆரம்பத்தில் என் படங்கள் சரியா போகலை. பிறகு, வாய்ப்பு கிடைச்ச பெரிய படங்கள் பலவற்றிலும் கால்ஷீட் பிரச்னையால் என்னால நடிக்க முடியலை. இதனால தெலுங்கில் குறைவா நடிச்சதால, அங்க பெரிசா புகழ் கிடைக்கலை. ஆனா, என் தங்கை ராதா தெலுங்கில் புகழ்பெற்றதால என் வருத்தம் நிவர்த்தியாகிடுச்சு. புகழின் உச்சத்தில் இருந்தப்பவும் சரி, இப்போதும் சரி... எனக்கு தலைக்கனம் இருந்ததில்லை. எந்த ஈகோவும் இல்லாம எல்லா நடிகர்கள்கிட்டயும் நானாவே இயல்பா போய்ப் பேசுவேன்; பழகுவேன்.
இரண்டாவது இன்னிங்ஸ்... என் பர்சனல் வாழ்க்கை!
முதல் இன்னிங்ஸ்ல `இவர்கள் வருங்காலத் தூண்கள்’தான் தமிழில் என் கடைசிப் படம். பிறகு, 1988-ம் ஆண்டு, கல்யாணம் முடிஞ்சு அமெரிக்காவில் குடியேறிட்டேன். ரெண்டு பசங்க எனக்கு. அவங்களைப் பார்த்துக்கவே நேரம் போதலை. இதற்கிடையே, `தர்மதுரை’ உட்பட பல படங்கள்ல ஹீரோயின் வாய்ப்பு வந்தும் மறுத்துட்டேன். 1997-ம் ஆண்டு, மீண்டும் முழு ஈடுபாட்டுடன் நடிக்க வந்தேன். அப்போ `அருணாசலம்’ பட வாய்ப்பு வர, `ரஜினி சாருக்கு அம்மாவா?’னு அதிர்ந்தேன். பிறகுதான், அப்பா ரஜினிக்கு ஜோடியா சின்ன ரோல்னு சொன்னாங்க. இரண்டாவது இன்னிங்ஸ்ல அதிக வாய்ப்புகள் வரலை. ஆனாலும், எனக்குப் பிடிச்ச சினிமா, சின்னத்திரை ரோல்களில் தொடர்ந்து நடிக்கிறேன். `அவன் இவன்’ படத்துல நடிச்ச மாதிரி வித்தியாசமான ரோல்களில் நடிக்க ஆசைப்படுறேன். சினிமாதான் என் உயிர். எழுந்து நடக்கிற அளவுக்கு என் உடலில் பலம் இருக்கிறவரை நடிப்பேன்.
எல்லோரையும்போல உண்மையான அன்புடன்தான் என் திருமண வாழ்க்கையைத் தொடங்கினேன். ஆனா, அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போச்சு. விவாகரத்து பெற்றேன். அதனால எனக்கு வருத்தமில்லைன்னு சொல்றது பொய். அந்த வருத்தம் எனக்குள் இருந்தாலும், என் பிள்ளைகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கினேன். துணிச்சலுடன் பிரச்னைகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறணும். அந்தக் குணம்தான் என்னை இயக்கிட்டிருக்கு. ஒரு சர்ப்ரைஸ் நியூஸ் சொல்றேன். எனக்கு அரசியலில் அதிக ஆர்வம் உண்டு. தொடர்ந்து அரசியல் நிகழ்ச்சிகளைக் கவனிச்சுக்கிட்டிருக்கேன். நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.
- நாயகிகள் பேசுவார்கள்!

ஒரு வீட்டில் இரண்டு புகழ்!
80-களில் `தவிர்க்க முடியாத நாயகிகள்’னு நானும் என் தங்கை ராதாவும் பெயர் வாங்கினோம். `முதல்ல அம்பிகா தங்கச்சி ராதான்னுதானே சொல்லுவாங்க... இப்போ, ராதாவோட அக்கா அம்பிகான்னு சொல்றாங்க’ன்னு பலரும் சூழ்ச்சி எண்ணத்துடன் பேசுவாங்க. `ரெண்டுமே உண்மையான விஷயம்தானே! எங்க ரெண்டு பேருக்கும் கிடைக்கிற பெயர், புகழ் எல்லாமே ஒரே வீட்டுக்குள்ளதான் வரப்போகுது’ன்னு நாங்க பதில் கொடுப்போம். ராதாவும் சினிமாவில் புகழ்பெறணும்னு ஆசைப்படுவேன். அவளுக்காக நேரம் ஒதுக்கி, டிரஸ் டிசைன் பண்ணிக்கொடுப்பேன். ஷூட்டிங் ஸ்பாட்ல என் குரல் கேட்டால் ராதாவுக்கு டென்ஷன் வந்திடும் என்பதால, அங்கே அவகிட்ட எதுவும் பேச மாட்டேன். எங்க காலத்து நடிகைகளில் சிறந்த டான்ஸர் ராதா!

பாரதிராஜா மீது எனக்குக் கோபம்!
சிவப்பா இருந்ததால, `அலைகள் ஓய்வதில்லை’ பட வாய்ப்பு எனக்கு வரலைன்னு கேள்விப்பட்டேன். அதன் பிறகும், பாரதிராஜா சாரின் இரண்டு படங்களில் நான் ஹீரோயினா கமிட்டாகியும் என்னால நடிக்க முடியலை. அதனால பாரதிராஜா சார் மேல அப்போ எனக்கு சின்னக் கோபம் இருந்ததுண்டு. அது அவருக்கும் தெரியும். பாலு மகேந்திரா சாரின் `ஓலங்கள்’ மலையாளப் படத்துல நடிச்சேன். ஆனா, அவர் மற்றும் கே.பாலசந்தர் சாரின் சில தமிழ்ப் படங்களில் நான் ஹீரோயினா கமிட்டாகியும் அந்த வாய்ப்புகளும் மிஸ் ஆகிடுச்சு. அந்த வருத்தம் எனக்கு உண்டு. மகேந்திரன் சார் இயக்கத்துல நடிக்கும் வாய்ப்பு வரலை. அதேநேரம் மணிரத்னம் சார் இயக்கத்துல `இதயகோயில்’ படத்தில் நடிச்சுட்டேன்.

`அவர்தான் தமிழ்நாட்டின் கடவுள்!’
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அறிஞர் அண்ணா வாழ்ந்த வீட்டின் பின்புற வாடகை போர்ஷன்லதான், நான் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பிச்ச காலகட்டத்துல குடியேறினேன். அண்ணாவின் மனைவி ராணி அம்மா என்கூட சகஜமா பேசுவாங்க; பலமுறை அவங்க வீட்டு சாப்பாட்டை எனக்குப் பரிமாறியிருக்காங்க. முதல் மூணு வருஷத்துல, ஒருமுறைகூட அவர் அண்ணா ஐயாவைப் பத்தி என்கிட்ட எதுவும் சொல்லலை. ஒருமுறை எம்.ஜி.ஆர் சார், `எங்க தங்கியிருக்கீங்க?’ன்னு என்கிட்ட கேட்டார். நான் சொல்ல, அவர் அதிர்ச்சியாகி, மேலதிக விவரங்களை என்கிட்ட கேட்டார். `அவர் யார்னு தெரியுமா? தமிழ் மக்களின் கடவுள்’னு சொன்னார். அதன் பிறகுதான் அண்ணா ஐயாவைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். பிறகு, ராணி அம்மாகிட்ட சிரிச்சுப் பேசவே தயங்கினேன். `இதுக்காகத்தான் நான் எதுவும் சொல்லலை. எப்போதும்போல எங்ககூட சகஜமா பழகு’ன்னு சொன்னார். பிறகு, ரெண்டு வருஷங்கள் அவங்க வீட்டுல வசிச்சேன்.