
ஹாலிவுட் இயக்குநர் வில்லியம் க்ரீவ்ஸ் என்னை இயக்குநர் பாலு மகேந்திராவிடம் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்கள் வெற்றிக்கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், அர்ச்சனா.

`யதார்த்த சினிமா'க்களின் நாயகி, அர்ச்சனா! பாலு மகேந்திராவின் இயக்கம் அர்ச்சனாவை சிறந்த நடிகையாக்கியது. நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கிய சவாலான ரோல்களில் அநாயாசமாக நடித்தார். புறக்கணிப்புகளைப் புறந்தள்ளி, உயரிய விருதுகள் பல வென்று இந்திய அளவில் சிறந்த நடிகைகளில் ஒருவராகப் புகழ்பெற்றார். இன்று வரை தனித்துவத்துடன் நடித்துவருகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு பிரத்யேகமாகப் பேட்டியளிக்கும் `ஊர்வசி’ அர்ச்சனா, தன் வெற்றிப் பயணம் குறித்து மனம் திறக்கிறார்.
அம்மாவின் சினிமா ஆர்வம்... புறக்கணிப்புகள்!
பூர்வீகம் ஆந்திரா. நான் 11 மாதக் குழந்தையா இருந்தப்போ சென்னை வந்துட்டோம். அம்மா தனியாளாகவே என்னை வளர்த்தாங்க. படிச்சுட்டு இருக்கிறப்பவே, கதக், பரத நாட்டியம் கத்துகிட்டு அரங்கேற்றம் முடிச்சேன்.இதுக்கிடையே ஸ்கூல் முடிக்கிறதுக்குள்ளயே பலரும், `பொண்ணோட கண்ணு நல்லா இருக்கு; சிரிச்சா நல்லா இருக்கு’ன்னு அம்மா கிட்ட சொன்னாங்க. பிறகுதான் நடிகையாகும் எண்ணம் எனக்கு வந்துச்சு. 1983-ம் ஆண்டு, தரமணி பிலிம் இன்ஸ்டிட்யூட்ல ஆக்டிங் கோர்ஸ் படிச்சேன். நடிகர் நாசர் என் கிளாஸ்மேட். அங்க படிச்ச மாணவர்கள் எடுத்த குறும்படங்களில் என்னை நடிக்க வலியுறுத்தவே நடிச்சேன். சினிமாவில் நடிக்கவும் வாய்ப்புகள் தேடினேன். சினிமா போட்டோகிராபர் சிவம் என் குடும்ப நண்பர். நான் நிச்சயம் பெரிய நடிகையா வருவேன்னு நம்பினார் அவர். என்னை போட்டோ எடுத்து, அவருக்குத் தெரிஞ்ச இயக்குநர்கள்கிட்ட கொடுத்தார். ஆனா, நிறைய ஏமாற்றங்களைத்தான் சந்திச்சேன்.
பாலு மகேந்திராவுடன் சந்திப்பு... மறுக்கவே முடியாது!
ஹாலிவுட் இயக்குநர் வில்லியம் க்ரீவ்ஸ் என்னை இயக்குநர் பாலு மகேந்திராவிடம் அறிமுகப்படுத்தினார். பாலுவுடனான அந்தச் சந்திப்பில் எனக்குப் பெரிய நம்பிக்கை கிடைச்சுது. அவர் வீட்டுக்கு அழைத்தார். நான் போனதும், `மொட்டை மாடியில் இருக்கார். போய் பாரு’ன்னு அவர் மனைவி அகிலா அம்மா சொன்னாங்க. என்னை போட்டோ எடுத்துட்டு அனுப்பிட்டார். அதன்பிறகு 15 வருஷங்கள் கழிச்சு ஒருமுறை அகிலா அம்மாவைச் சந்திச்சப்போ, ``இந்தப் பொண்ணோட கண்ணும் முடியும் அழகா இருக்கு. உங்க படத்துக்கு இவளை ஹீரோயினா நடிக்க வெச்சா நல்லா இருக்கும்னு நான்தான் சிபாரிசு பண்ணினேன்’னு அவங்க சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

ஆர்ட் படங்களே எடுத்துட்டிருந்த நிலையில பலருக்கும் சவால்விடுற மாதிரி பாலு இயக்கிய `நீங்கள் கேட்டவை’ படத்துல நான் ஹீரோயின் ஆனது இப்படித்தான். பாலு சார் கதை சொல்லி முடிக்கிறப்பவே, அந்தப் படத்துல நடிச்சு முடிச்ச உணர்வு கிடைக்கும். அவர் கதை சொல்லி நான் மறுத்த படங்களே இல்லை. சுதாங்கிற என் நிஜப்பெயரை `அர்ச்சனா’ன்னு மாத்தினார். `ஓ வசந்த ராஜா’ பாடல்ல நிறைய காஸ்ட்யூம்ஸ்ல என்னைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருப்பார்.
சவாலான ரோல்... அன்புச் சண்டைகள்!
அந்தக் காலத்துல பாதி படம் முழுக்கவும் கர்ப்பிணியா நடிக்கிறது சவாலானது என்றாலும், `ரெட்டைவால் குருவி’ படத்துல துணிஞ்சு நடிச்சேன். காமெடியான அந்த கமர்ஷியல் படத்தையும், தன் யதார்த்த சினிமா வரையறையிலிருந்து மீறாத வகையில்தான் பாலு இயக்கியிருப்பார். என் குருநாதரின் படம், சவாலான வேடம், இயற்கையை பிரமாண்டமாகக் காட்டிய விதம் ஆகியவற்றால் பாலு சார் மீது முழு நம்பிக்கைவெச்சு `நிரக்ஷனா’ படத்துல நடிச்சேன். மலைவாழ் பெண்ணாக படம் முழுக்கவே பிளவுஸ் இல்லாம வெறும் புடவையை மட்டுமே உடுத்தியிருப்பேன். அந்தப் படத்துக்காகத்தான் ஆந்திர அரசின் சிறந்த நடிகைக்கான விருது பெற்றேன். `ஆர்ட் பிலிம் நடிகை’ங்கிற பெயர் அப்போதுதான் எனக்குக் கிடைச்சுது. பிறகு, ராஜ்குமார் சார் ஜோடியாக ரெண்டு கன்னடப் படங்கள்ல நடிச்சேன். பாலு இயக்கத்துல மூணு படங்கள்ல நடிச்சதுமே, என்னை, அவர் பிராண்டு நடிகைன்னு முத்திரை குத்திட்டாங்க. அதனால, தமிழில் சொல்லிக்கிற அளவுக்கு வாய்ப்பு எதுவும் வரலை. `திறமையான நடிகைக்கு உரிய பட வாய்ப்புகள் வரலையே’ன்னு நினைச்சுதான், பாலு `வீடு’ படத்துல என்னை நடிக்கவெச்சார். தொடர்ந்து பல படங்கள்ல என் ஜோடியா நடிச்ச பானுசந்தர், என்கூட பிறக்காத அண்ணன் மாதிரி.
புகழை உயர்த்திய தேசிய விருதுகள்... என் எதிர்பார்ப்பு ஒன்றுதான்!
`வீடு’ படத்துக்காக எனக்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டதும் என் உதவியாளர் மூலம் பாலு சாருக்குச் சொல்லி அனுப்பினேன். உடனே முதல் ஆளாக என் வீடு தேடிவந்து வாழ்த்தினார். `சுதா, உனக்கு இன்னொரு தேசிய விருதுகூட கிடைக்கும்’னு சொன்னார். 1988-ம் ஆண்டு, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமல்ஹாசன் சாரும், சிறந்த நடிகைக்கான விருதை நானும் பெற்றோம். அதுகூட தமிழ் சினிமாவில் சாதனையாச்சு. பிறகு, தன் அப்பாவுக்குச் சமர்ப்பணம் செய்யுற வகையில `சந்தியா ராகம்’ படத்தை உணர்வுபூர்வமாக இயக்கிய பாலு, அதிலும் யதார்த்தமான ரோலில் என்னை நடிக்கவெச்சார்.
பொதுவா, ஒரு படத்தில் கமிட் ஆகிட்டா, இயக்குநர் என்ன சொல்றாரோ அதை தட்டாம செய்துட்டு வந்திடுவேன். ஒரு விஷயத்தை உணர்ந்து பார்த்து நடிக்கிற Stanislavski முறையை பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிக்கிறப்போ கத்துகிட்டேன். அதை என் சினிமா பயணத்துக்குச் சிறப்பா பயன்படுத்தினேன். அதற்கு ஓர் உதாரணம், `தாசி’ படம். ஒவ்வொரு காட்சியிலும் மனதளவில் பதைபதைப்புடன் நடிச்ச அந்தப் படம், இரண்டாவது முறையாக எனக்குத் தேசிய விருது வாங்கிக் கொடுத்துச்சு.

கே.பாலசந்தரின் பாராட்டு... ரீ-என்ட்ரி!
தேசிய விருது வென்ற இரு முறையும், சினிமா ஆளுமைகள் பலரும் என்னைப் பாராட்டினாங்க. அதில், `இயக்குநரின் பங்களிப்பைத் தாண்டி, நடிக்கும் படங்களில் உன் அர்ப்பணிப்பும் அதிகம் இருக்கு’ என்று கே.பாலசந்தர் சார் பாராட்டியதை மறக்கவே முடியாது. இந்த நிலையில, `பாலு மகேந்திராவின் படங்களுக்குத்தான் அர்ச்சனா செட் ஆவாங்க. அவர் படங்களுக்குத்தான் முதலில் முன்னுரிமை கொடுப்பாங்க. விருது வாங்கும் படங்கள்லதான் நடிப்பாங்க’ன்னு திரையுலகில் பலரும் அவங்களாவே முடிவெடுத்துப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. இதனால்கூட நிறைய பட வாய்ப்புகளை இழந்தேன். அதைப்பற்றி நான் கவலைப்படலை. காரணம், `தாசி’, `மட்டி மனசுலு’, `பிறவி’, `யமனம்’, `சம்மோகனம்’னு தனித்துவமான இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்கள் படங்கள்ல நடிச்சேன். அம்மா - மகனுக்கான உறவை அழுத்தமாக வெளிப்படுத்திய `பரட்டை என்கிற அழகு சுந்தரம்’ படத்துல அம்மா ரோல்தான் கதையின் நாயகி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்தப் படத்துல நடிச்சேன்.

என்றும் தமிழ்ப் பெண்... இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம்!
90-களில், நடிகை ரேவதி தயாரிச்ச சீரியலில் `நிறங்கள்’, `உணர்வுகள்’ என்ற ரெண்டு வாரங்களுக்கான எபிசோடுகளை நான் இயக்கினேன். தொடர்ந்து சினிமா இயக்குநராகணும்கிற எண்ணம் எனக்குள் இருந்துட்டே இருக்கு. இதுவரை இந்தி, ஒடியா உட்பட ஆறு மொழிகளில் 30 படங்கள்ல நடிச்சிருக்கேன். அதில் சில படங்களைத் தவிர எல்லாமே ஹீரோயின் ரோல்தான். எனக்கு ஏற்ற வாய்ப்புகள் வராததால, கடந்த 30 வருடங்களாகத் தமிழ் சினிமாவில் ரொம்பவே செலக்டிவாதான் நடிக்கிறேன். ஆனாலும், தமிழ்ப் பெண் அடையாளத்துடன் சென்னையிலதான் வாழ்கிறேன்.

பணம், புகழ் இரண்டுக்காக மட்டும் நான் நடிப்புத்துறையைத் தேர்ந்தெடுக்கலை. கமர்ஷியல் படங்கள்ல மட்டும் நடிச்சா போதும்னு நான் நினைச்சிருந்தா, நூற்றுக்கணக்கான படங்கள்ல நடிச்சிருக்கலாம்; நிறைய பணம் சம்பாதிச்சிருக்கலாம். ஆனா, இப்போ எனக்கிருக்கும் தனித்துவமான பெயர் கிடைச்சிருக்காது. `ஆர்ட் பிலிம் நடிகை’ங்கிற அடையாளம் இப்போதும் எனக்கு உண்டு. எனவே, `ஒருநாளைக்கு ரெண்டு லட்சம் ரூபாய் சம்பளம் தர்றோம். நடிக்க வாங்க’ன்னு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தாலும், என் அடையாளத்தை இழக்காம, நல்ல கதைகளில் மட்டுமே நடிக்கும் முடிவில் உறுதியா இருக்கேன். அதன்படி எந்த இயக்குநரின் படைப்பிலும் நடிக்கத் தயாராக இருக்கேன்!
- நாயகிகள் பேசுவார்கள்!
அமைதியான வாழ்க்கை ஏன்?
நானே நடிச்சிருந்தாலும் எனக்குப் பிடிக்காத திரைப்படங்களைப் பார்க்க மாட்டேன். பிடிக்காத மனிதர்களைப் பார்க்க மாட்டேன், பேச மாட்டேன்.
எனக்குள் காயங்கள் இருந்தாலும்கூட, நான் யாரையும் காயப்படுத்தினதில்லை. இதனால 30 ஆண்டுக்கால திரைப்பயணத்துல எந்தச் சர்ச்சை களுக்கும் நான் இடம் கொடுக்கலை.
நான் சினிமாவில் நடிக்கிறப்போ மட்டும்தான் அர்ச்சனாவா தெரிவேன். மற்றபடி நான் இருக்கிற இடம் தெரியாம சுதாவாகவே அமைதியா வாழ்ந்துகிட்டிருக்கேன்.
தனிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதில், நிறைய புது விஷயங்களைக் கத்துக்கிறேன்; சிந்திக்கிறேன். இப்போதும் டான்ஸ் பயிற்சி எடுக்கிறேன்.
வாழ்க்கையில் பல போராட்டங் களைத் தனியாகத்தான் நடத்தினேன். எந்தக் காலத்திலும் எதையும் இழக்காம, எனக்குப் பிடிச்ச வாழ்க்கையைத்தான் வாழ்ந்திட்டிருக்கேன். நிறைய கோயில் களுக்குப் போவேன். காசிக்குப் போகணும்னாலும் தனியாவே போயிட்டு வந்திடுவேன். தனிமை, இயற்கை, இசை... இவையே என்னை இயக்கிட்டிருக்கு.

பாலு மகேந்திராவுக்கு என் சமர்ப்பணம்!
ஷூட்டிங்ல யாரும் இல்லாத தனிமையில் குழந்தையைப்போல தன் கேமராவைக் கொஞ்சுகிட்டிருப்பார், பாலு மகேந்திரா. தன் படைப்புகளில் பிடிச்ச யதார்த்தமான படங்கள்னு, `வீடு’, `சந்தியா ராகம்’ படங்களை என்னிடம் பலமுறை சொல்லியிருக்கார். `வீடு’ படத்துக்காக நிஜமான வீடு கட்டப்பட்ட இடம்தான், பிற்காலத்துல `பாலு மகேந்திரா பயிற்சிப் பட்டறை’யாக உருவாச்சு. அதில் என்னைப் பகுதிநேர பேராசிரியரா வகுப்பெடுக்கச் சொன்னார், பாலு. நான் போகலை! தமிழ் சினிமாவில் நான் நடிக்காத இடைப்பட்ட காலங்கள்ல, நாங்க எப்பயாச்சும்தான் சந்திச்சுக்குவோம். உடல்நிலை சரியில்லாத காலத்துலயும் வைராக்கியத்துடன் `தலைமுறைகள்’ படத்தை இயக்கி நடிச்சவர், சிரமப்பட்டுப் படத்தை ரிலீஸ் பண்ணினார். அது, அவர் பட்டறையில் வளர்ந்த எனக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு. அதனால்தான், பாலுவுக்குச் சமர்ப்பணம் செய்ற மாதிரி `அழியாத கோலங்கள் 2’ படத்தை உருவாக்கினோம்.
பெண்ணுக்குள் இருக்கும் பெண்!
நல்ல மனைவி, சகோதரி, தோழி, அம்மான்னு குடும்ப உறவுகளை அழகாகவும் அழுத்தமாகவும் காட்டுகிற பெண் கதாபாத்திரங்கள் சினிமாவில் அதிகம் வந்திருக்கு. மகனுக்காகத் தாயும், கணவனுக்காக மனைவியும், சகோதரனுக்காகச் சகோதரியும் வாழ்ந்தே தீருவாள். ஆனா, இதையெல்லாம் தாண்டி பெண்ணுக்குள் வேற ஒரு பெண் இருக்கா. உறவுமுறைகளுக்குள் சிக்கித் தவிக்காம தனக்கான வாழ்க்கைக்குச் சுயமாக முடிவெடுக்கும் தனி அடையாளத்துடன் இருக்கும் பெண்களை, `அவள் அப்படித்தான்’, `அரங்கேற்றம்’, `நிழல் நிஜமாகிறது’, `அருவி’, `மொழி’ போன்ற சில படங்கள்ல பார்க்க முடிஞ்சது. இதுபோன்ற பெண்ணுக்குள் இருக்கும் பெண்ணாக நடிக்கவே நான் அதிகம் ஆசைப்படுவேன். இதுபோன்ற தனித்துவமான பெண்களை இந்தக் கால சினிமாவில் மிக மிக அரிதாகவே பார்க்க முடிவது மிகவும் வருத்தமளிக்குது.