மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 15: சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடிக்க ஆசை! - கீதா

1980s evergreen Heroins - Actress Geetha
பிரீமியம் ஸ்டோரி
News
1980s evergreen Heroins - Actress Geetha ( Aval Vikatan )

இப்போதைய முன்னணி ஹீரோக்களுக்கும் அம்மாவா நடிக்க ஆசை...!

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில் கீதா.

கே.பாலசந்தரால் பட்டை தீட்டப்பட்ட நட்சத்திரம். திறமையான நடிப்பால் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தவர். மலையாள சினிமாவில் முத்திரை பதித்த நாயகியாக நீடித்த புகழ்பெற்றவர். இப்போதும் நடிப்பைத் தொடர்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேட்டியளிப்பவர், தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

ரஜினியின் தங்கை... படிப்புக்குத் தடை!

என் பூர்வீகம், சென்னை. நடுத்தரக் குடும்பம். அப்பாவின் வேலை காரணமா சில ஆண்டுகள் மட்டும் பெங்களூரில் வசிச்சோம். அம்மா, பெரியம்மா ரெண்டு பேரும் சினிமா பிரியர்கள். அவங்கதான் எனக்கு சினிமா விஷயங்களைத் திரைக்கதை மாதிரி ஆச்சர்யப்படும் வகையில் சொல்லுவாங்க. நான் ஸ்கூலுக்குப்

போகும்போதெல்லாம் சினிமா நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் என்னைப் பின்தொடர்ந்துகிட்டே இருந்தார். ஒருநாள் என் வீட்டு அட்ரஸ் கேட்டார். சென்னை தி.நகர்ல இருக்கும் என் பெரியம்மா வீட்டு அட்ரஸைக் கொடுத்துட் டேன். அங்கே போனவர், பெரியம்மாகிட்ட என்னை சினிமாவில் நடிக்கக் கேட்டிருக்கார்.

 `நினைத்தாலே இனிக்கும்' படத்தில் ரஜினியுடன்...
`நினைத்தாலே இனிக்கும்' படத்தில் ரஜினியுடன்...
Aval Vikatan

எங்க வீட்டு சினிமா பிரியர்கள் எல்லோரும் சேர்ந்து, `இந்த ஒரு படத்துல மட்டும் நடி... பிடிக்கலைன்னா விட்டுடலாம்’னு சொன்னாங்க. அப்படி, எட்டாவது படிக்கிறப்ப `பைரவி’ படத்துல டைட்டில் ரோல்ல நடிச்சேன். கலகலன்னு சிரிக்கிறதுதான் என் முதல் சீன். ஹீரோவாக ரஜினிக்கு முதல் படம் அது. அந்தப் படத்தில் அவருக்குத் தங்கையா நடிச்சேன். அவரும் சுருளிராஜன் சாரும்தான் எனக்கு நடிக்கச் சொல்லிக்கொடுத்தாங்க. காமெடி, அரட்டைன்னு கலகலப்பா நடிச்சோம். அந்தப் படம் முடியுற தருணம், `மன ஊரி பண்டாவுலு’ங்கிற தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி சிரஞ்சீவியுடன் நடிச்சேன். பிறகு, தொடர் சினிமா வாய்ப்புகளால் எட்டாம் வகுப்புடன் என் படிப்பு தடைபட்டுடுச்சு.

புகழை உயர்த்திய `நக்சலைட்’

ஆரம்பக்காலத்துல தமிழ் சினிமாவில் மட்டும் எனக்கு கேரக்டர் ரோல்களே அதிகம் வந்தன. இதற்கிடையே பாலசந்தர் சார் இயக்கத்தில் கன்னடத்துல `இரடு ரேக்கேகலு (`இரு கோடுகள்’ ரீமேக்) படத்தில் தமிழில் ஜெயந்தி அம்மா நடிச்ச ரோலில் நானும், செளகார் ஜானகி அம்மா நடிச்ச ரோலில் சரிதாவும் நடிச்சோம். படம் பெரிய ஹிட். அதனால, மலையாளத்துல `பஞ்சக்னி’ படத்தில் ஹீரோயினானேன். `மலையாளம் தெரியாது, நான் நடிக்கலை’ன்னு மறுத்தும் மோகன்லால் சாரும் திலகன் சாரும் என்னை வலியுறுத்தி நடிக்கவெச்சாங்க. ‘நக்சலைட் இந்திரா’ ரோலில் துணிச்சலுடன் நடிச்சேன். படம் பெரிய ஹிட்டாகி, மலையாளத்தில் என் புகழும் உயர்ந்துச்சு. இப்பவரை மலையாள சினிமாவில் முக்கியமான பெண் கதாபாத்திரங் களில் ஒன்றாக ‘இந்திரா’ ரோலை சொல்றாங்க.

கருணாநிதியின் பாராட்டு!

`உங்க திறமைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்’னு கமல்ஹாசன் சார் ஒருமுறை ஊக்கப்படுத்தினார். அவர் சொன்னதுபோலவே மலையாளத்தில் பெரிய ஹீரோயினானேன். கன்னடத்துலயும் புகழ்பெற்றேன். என் பூர்வீக மான தமிழ் சினிமாவில் வலுவான ரோல்கள் அமையலையேன்னு ஆதங்கப்பட்டேன். கிடைக்காத விஷயத்துக்காக வருத்தப் படறதைவிட, கிடைச்சதுக்காக சந்தோஷப் படுறதுதான் நியாயம். அதனால, காலம் போனதே தெரியாம ஐந்து மொழிகளில் நடிச்சிட்டிருந்தேன். இந்த நிலையில் நானே ஆச்சர்யப்படுகிற அளவுக்குத் தமிழ் சினிமாவிலும் எனக்கு வெற்றிப் பாதையை வகுத்துக்கொடுத்தார் கே.பாலசந்தர் சார். `புதுப்புது அர்த்தங்கள்’, `அழகன்’, `கல்கி’ன்னு பல வெற்றிப் படங்களில் என்னை நடிக்கவெச்சார். `புதுப்புது அர்த்தங்கள்’ படத்தைப் பார்த்த மறைந்த கருணாநிதி ஐயா, என் நடிப்பை ரொம்ப பாராட்டியிருந்தார். அதைப் பத்திரிகைகளில் படிச்சப்பவும், கே.பாலசந்தர் சார் சொல்லக் கேட்டப்பவும் ரொம்ப பெருமையாயிருந்தது.

தாயான பின்பு... மக்களின் அன்பு!

`மனிதனின் மறுபக்கம்’ படத்தில் ரஜினி சாரும் நானும் ஜோடியா நடிச்சோம். அந்தப் படம் பாதியிலேயே நின்னுடுச்சு. பிறகு அதே பெயரில் வேறு கதையில் ஒரு படம் ரிலீஸாச்சு. பாரதிராஜா சாரின் ஒரு படத்தில் ஹீரோயினா கமிட்டானேன். அந்த கிராமத்து சப்ஜெட் படத்துக்கு என் நிறம் பொருந்தாததால என்னால அதில் நடிக்க முடியலை.

சிவாஜி சாருடன் `சுமங்கலி’ படத்தில் நடித்தது பெருமையான விஷயம். பின்னர் `கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, `கேளடி கண்மணி’, `சேலம் விஷ்ணு’, `தளபதி’, `ஜீன்ஸ்’னு பல வெற்றிப் படங்கள்ல நடிச்சேன். குறிப்பா, `கேளடி கண்மணி’ படம் ரிலீஸான நேரம், `கற்பூரப் பொம்மை ஒன்று’ பாடலைச் சொல்லி எங்க போனாலும் மக்கள் கொண்டாடுவாங்க. நான் தாயான பிறகு, என் மகனுக்கு நான் அடிக்கடி பாடின தாலாட்டு அதுதான்!

மலையாள சினிமாவில், நக்சலைட், தாசி, கேரளாவில் பெண் அமைச்சராகப் புகழ்பெற்ற கே.ஆர்.கெளரி அம்மா ரோல் உட்பட சவாலான பல ரோல்களில் துணிச்சலுடன் நடிச்சேன்.

 `விருதம்' மலையாளப் படத்தில் கமலுடன்...
`விருதம்' மலையாளப் படத்தில் கமலுடன்...
Aval Vikatan

5,000 ரசிகர்கள் என்னைத் தேர்ந்தெடுத்து, `நந்தினி ஓபோல்’ படத்துல நடிக்கவெச்சாங்க. மலையாளம் சினிமாவும் கன்னட சினிமாவும்தான் என் நடிப்புத் திறனை நல்லா பயன்படுத்திக்கிச்சுன்னு சொல்வேன். மலையாளத்தில் 80 படங்களுக்கு மேல் நடிச்சதில், முக்கால்வாசி ஹீரோயின் ரோல்தான். மம்முட்டியுடன் 16 படங்களில் நடிச்சேன். `சாரதா அம்மாவுக்குப் பிறகு, நீங்க பவர்ஃபுல் கேக்டர்களில் அதிகம் நடிச்சிருக்கீங்க’ன்னு கேரள மக்கள் இன்னும் பாராட்டுறாங்க. இதுபோன்ற மக்களின் அன்பு மட்டுமே போதும். இதுவரை இந்தி உட்பட ஐந்து மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருக்கேன். அதில், 130-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயின்.

ஹீரோக்களின் அம்மா... மாறாத சினிமா!

1997-ம் ஆண்டு எனக்குக் கல்யாணமாச்சு. கணவர் வாசன், சாட்டர்ட் அக்கவுன்ட்டன்ட். மகன் பிறந்த பிறகு, 2000-ம் ஆண்டிலிருந்து மீண்டும் நடிக்க ஆரம்பிச்சேன். இந்த முறையும் மலையாளத்துலதான் அதிக வாய்ப்புகள் வந்துச்சு. தமிழில் பெரிய இடைவெளிக்குப் பிறகு, `சிவகாசி’ படத்துல விஜய்க்கு அம்மாவா ரீ-என்ட்ரி கொடுத்தேன். தொடர்ந்து அஜித், ஜெயம் ரவி, விஷால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவா நடிச்சுட்டேன். சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட இப்போதைய முன்னணி ஹீரோக்களுக்கும் அம்மாவா நடிக்க ஆசை!

1980s evergreen Heroins - Actress Geetha
1980s evergreen Heroins - Actress Geetha
Aval Vikatan

1980-களில், தெலுங்கு சினிமாவுல டான்ஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப் பாங்க. எனக்கு டான்ஸும் தெலுங்கும் சரியா வராது. அதனால தெலுங்குப் பட வாய்ப்புகள் குறைஞ்சது. பிறகு டான்ஸ் மற்றும் பல மொழிகளையும் கத்துக்கிட்டேன். இப்போ தெலுங்கில் நல்ல கேரக்டர் ரோல்கள் வருது. நானே டப்பிங் கொடுக்கிறேன்.

ஹீரோயினா நடிச்ச காலத்துக்கும், இப்போ நடிக்கிறதுக்கும் எனக்கு எந்த ஒரு மாற்றமும் தெரியலை. எங்க காலத்துல ஷூட்டிங் பிரேக்ல பல நடிகர்களும் சேர்ந்து மனம்விட்டுப் பேசுவோம். அந்த ஆரோக்கியமான சூழலை, செல்போனும் கேரவனும் இப்போ குறைச்சுடுச்சு. தொழில்நுட்பங்கள் வளர்ந்

துட்டதால, இதுபோன்ற சில மாற்றங்கள் வந்துடுச்சே தவிர, சினிமா உலகம் எப்போதும்போலத்தான் இருக்கு.

எங்க புகழுக்குக் காரணம்!

சினிமாவுல நிறைய நல்ல விஷயங்களும் நடக்கும்; கசப்பான விஷயங்களும் நடக்கும். ஆரம்பம் முதலே நாம எப்படி நடந்துக்கிறோம் என்பதில்தான் எல்லாமே அடங்கியிருக்கு. நான் நடிப்புல மட்டும் கவனம் செலுத்தினேன். யாருடனும் போட்டிபோடாம, எனக்கு வரும் வாய்ப்புகளை மட்டும் ஏற்று நடிச்சேன். அதனால சினிமாவில் எனக்கு இப்போவரை திருப்தியான, மகிழ்ச்சியான அனுபவங்கள் மட்டும்தான் கிடைச்சிருக்கு. இந்தக் காலத்து நடிகைகள் நல்ல முன்திட்டமிடலுடன் சினிமாவுக்கு வர்றாங்க. சில காலம் நடிச்சாலும் பெயர், புகழ், பணம் சம்பாதிச்சுடுறாங்க. இந்த மெச்சூரிட்டி அப்போ எங்களுக்கு இல்லைன்னுதான் சொல்லணும்.

கல்யாணமான பிறகு ஒருசில நாயகிகளுக்கு மட்டும்தான் லீட் கேரக்டர் வாய்ப்புகள் வருது. இந்த நிலையை ஒரு சிலரால் மாத்திட முடியாது. எனக்குப் பல மொழிகளிலும் அம்மா ரோல்கள் வருது. அதில் பிடிச்ச படங்களில் நடிச்சுக்கிட்டிருக்கேன். நான் கேட்கிற சம்பளத்தைக் கொடுத்திடுறாங்க; நல்ல மரியாதை கொடுக்கிறாங்க. `நாய் வேஷம் போட்டாலும் நல்லபடியா குரைக்கணும்’னு சொல்லுவாங்க. அப்படியான ஒரு நடிகையா இருக்கிறதைதான் இப்பவும் விரும்புறேன். இப்போகூட தெலுங்கில் வெங்கடேஷுக்கு அம்மாவா நடிக்கிறேன். நான் ஜோடியா நடிச்ச ஹீரோக்கள் மற்றும் என்னைவிட வயசுல மூத்த ஹீரோக்களுக்கு அம்மாவா நடிக்கிறதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இதுல கதாபாத்திரம், நடிப்பு, அதை மக்கள் ஏத்துக்கிறாங்களான்னுதான் முக்கியமா பார்க்கணும். நடிச்சது போதும் என்கிற எண்ணம் இதுவரை எனக்கு வரலை. இனியும் வராதுன்னு நினைக்கிறேன். என் குடும்பத்தினரும் என் நடிப்புக்கு ஊக்கம் கொடுக்கறாங்க. நெஞ்சமெல்லாம் நிறைவு!

- நாயகிகள் பேசுவார்கள்!

வருத்தமில்லை... ஆதங்கம்!

திறமையுடன் அதிர்ஷ்டமும் இருந்தால்தான் சினிமாவில் நீடித்த புகழ் பெற முடியும் என்பது என் கருத்து. எனக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. குடும்பத்தை கவனிச்சுக்கிற நேரம் தவிர, மீதி நேரங்களில் பல மொழிப் படங்களையும் பார்த்துடுவேன். சினிமா உலகத்தோடு தொடர்பிலேயே இருக்கேன். தமிழ் சினிமாதான் என் முதல் சாய்ஸ். ஆனா, நான் மலையாளத்தில் நடிச்சதுபோல தமிழிலும் வலுவான ரோல்கள் அமைஞ்சிருந்தால் தமிழ்ப் பொண்ணா ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பேன். அதனால இப்போ எந்த வருத்தமும் இல்லை. ஆனா, முன்பு ஆதங்கப்பட்டிருக்கேன்.

எங்கேயும் போகலை!

நான் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துக்கிறதில்லை. அரிதாகத்தான் பேட்டியும் கொடுப்பேன். அதனால, `நீங்க எங்க போயிட்டீங்க?’, `நடிக்க விருப்பமில்லையா?’, `வெளிநாட்டில் செட்டிலாகிட்டீங்களா?’ன்னு பலரும் கேட்கிறாங்க. நான் அமெரிக்காவில் வசிக்கிறேன். ஆனா, அடிக்கடி சென்னை வந்துட்டுதான் இருக்கேன். நான் தொடர்ந்து நடிப்பேன். நல்ல வாய்ப்புகள் வந்தால், நான் எங்க வசிச்சாலும் நிச்சயம் வந்து நடிச்சுக்கொடுப்பேன்.