
இழந்த தமிழ்ப் படங்களிலெல்லாம் நான் நடிச்சிருந்தால், நிச்சயம் தமிழிலும் பெரிய அளவில் புகழ்பெற்றிருப்பேன்...
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மலையாளத் தில் புகழ்க்கொடி நாட்டியவர், மேனகா. பிறகு, மலையாள சினிமாவிலேயே மையம்கொண்டவர், கேரளாவின் மருமகள் ஆனார். இவரின் மகள் கீர்த்தி சுரேஷ், இப்போது பல மொழிகளிலும் ஹீரோயினாகக் கலக்கிக்கொண்டிருக்கிறார். இங்கே, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார் மேனகா.
அன்பான குடும்பம்… எம்.ஜி.ஆரின் ஆசீர்வாதம்!
சென்னையில்தான் வளர்ந்தேன். சினிமாவுக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத குடும்பம். பெற்றோர் கணித ஆசிரியர்கள். அம்மா வேலைபார்த்த ஸ்கூல்ல நானும், அப்பா வேலைபார்த்த ஸ்கூல்ல மூணு தம்பிகளும் படிச்சோம். அப்போ, நாங்க ஆறு பேரும் காலையில வீட்டுலேருந்து நடந்தே போவோம். முதலில் அம்மாவையும் என்னையும் எங்க ஸ்கூல்ல விட்டுட்டு, பிறகு அப்பாவும் தம்பிகளும் அவங்க ஸ்கூலுக்குப் போவாங்க. வீட்டு மொட்டைமாடியில உட்கார்ந்து ஒண்ணா சாப்பிடுறது, புராணக் கதைகள் பேசுறது, அரட்டையடிக்கிறதுன்னு இருந்ததெல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.

ஸ்கூல் படிக்கிறப்ப ஒருமுறை புதுச்சேரிக்கு கல்விச் சுற்றுலா போனோம். திரும்பி வரும்போது எங்க பஸ் சென்னை ஈ.சி.ஆர் பீச் அருகே வந்தப்ப, அங்க ‘சூரியகாந்தி’ பட ஷூட்டிங் நடந்துட்டிருந்துச்சு. அதைக் கேள்விப்பட்டு எல்லா மாணவிகளும் ஷூட்டிங் பார்க்கப் போயிட்டாங்க. நான் பஸ்லேயே உட்கார்ந்திருந்தேன். அப்போ, ஷூட்டிங் முடிச்சுட்டு ஜெயலலிதா அம்மா அவங்க கார்ல காத்திருந்தாங்க. பஸ்ல உட்கார்ந்தவாறு, கார் கிளம்புறவரை அவங்களைப் பார்த்து ரசிச்சுக்கிட்டிருந்தேன்.
என் டான்ஸ் மாஸ்டர் ஒரு கோரிக்கை கடிதத்தை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்கிட்ட கொடுக்க நினைச்சார். அப்போ ஏழாவது படிச்சிக்கிட்டிருந்த நான், அந்தக் கடிதத்தைக் கொடுக்கிற துன்னு முடிவானது. அதன்படி ஏவி.எம் ஸ்டூடியோவில் நடந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் சாரின் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு, அந்தக் கடிதத்தைக் கொடுத்தேன்.
5,000 ரூபாய் சம்பளம்... அச்சமூட்டிய ரோல்!
ஒன்பதாவது படிக்கிறப்போ என் டான்ஸ் அரங்கேற்றம் நடந்துச்சு. மாதச் சம்பளம் வாங்கும் என் பெற்றோர், ரொம்ப சிரமப்பட்டு அந்த அரங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தினாங்க.
அப்போ, அப்பாவின் மாணவர் சுப்பிரமணி அண்ணா, இயக்குநராகும் முயற்சியில் இருந்தார். அவர் மூலமா `வியட்நாம் வீடு’ சுந்தரம் சார் எங்க குடும்பத்துக்கு அறிமுகமானார். நான் 10-ம் வகுப்பு முடிச்ச நேரம், அவர் இயக்கும் படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். திடீர்னு அந்தப் படம் டிராப் ஆகிடுச்சு. அதனால வருத்தப்பட்டவர், `ராமாயி வயசுக்கு வந்துட்டா’ பட ஹீரோயின் வாய்ப்புக்கு என்னை சிபாரிசு பண்ணினார். அந்தப் படத்தின் இயக்குநர் அழகப்பன் சார், பத்மாவதி என்கிற என் நிஜப் பெயரை `மேனகா'ன்னு மாத்தினார். பெருசா சிரமம் இல்லாம, இயக்குநர் சொல்லிக்கொடுக்கிறதை சரியா உள்வாங்கி யதார்த்தமா நடிச்சேன். அந்தப் படத்துக்கு 5,000 ரூபாய் சம்பளம் கிடைச்சது. `ராமாயி வயசுக்கு வந்தாச்சு, தாலிக்குத் தங்கம் எங்கே?’னு அரசியல் கட்சிகள் அந்தப் படத்தின் தலைப்பை வெச்சு பிரசாரங்கள் பண்ண, படத்துக்கு பப்ளிசிட்டி அதிகமாச்சு. படமும் சூப்பர் ஹிட்!
இதுக்கிடையே, ஸ்ரீவித்யா அக்கா மலையாளத்தில் பெரிய இயக்குநரான கே.ஜி.ஜார்ஜ் கிட்ட என்னை சிபாரிசு பண்ணினாங்க. அதனால், மலையாள `கோலங்கள்’ பட வாய்ப்பு கிடைச்சது. பிறகு, சேதுமாதவன் சார் இயக்கத்தில் நான் நடிச்ச `ஓப்போல்’ படம் மலையாளத்தில் முதலில் வெளியாகி பெரிய ஹிட்டாச்சு. இப்பவரை கேரளாவில் `ஓப்போலே (அக்கா)’ன்னு சொல்லி மக்கள் அன்பு காட்டுறாங்க. அடுத்து, பரதன் சார் இயக்கிய `பிரயாணம்’ என்கிற மலையாளப் பட தமிழ் ரீமேக்கான `சாவித்ரி’ படத்தில் நடிச்சேன். மலையாளத்தில் லட்சுமி அக்கா நடிச்ச ரோல் தமிழில் எனக்கு. அந்தப் பெரிய ரோலில் நடிக்க பயந்துபோய், சாமி முன்னாடி சீட்டு குலுக்கிப்போட்டுப் பார்த்த பிறகே சம்மதிச்சேன். அந்தப் படம் ரிலீஸான நேரத்தில் சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்தாலும் படம் ஹிட். அந்தப் படப் பிரச்னைகளை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்தான் தீர்த்துவெச்சார்.
அழுத தருணம்... ரஜினியின் சப்போர்ட்!
`நெற்றிக்கண்’ படத்துல ரஜினி சாருக்கு ஜோடியா நடிச்சேன். `ராமனின் மோகனம்’ பாடல் ஷூட்டிங் ஊட்டியில் நடந்தது. அந்தப் பாட்டுக்கு சரியா லிப் மூவ்மென்ட் கொடுக்கலைன்னு டான்ஸ் மாஸ்டர் கிரிஜா என்னைத் திட்ட, நான் அழுதுட்டேன். `என்னைகூட பலர் திட்டியிருக்காங்க; கிண்டல் செய்திருக்காங்க. இதுபோன்ற பேச்சுகளை நம்ம வளர்ச்சிக்கான படிகளா எடுத்துக்கணும்’னு ஊக்கம் கொடுத்தார் ரஜினி சார். அதோடு, ராகவேந்திரர் மந்திரத்தைச் சொல்லிக்கொடுத்து, பிரச்னை வரும்போதெல்லாம் அதை உச்சரிக்கச் சொன்னார். அதை இப்பவும் கடைப்பிடிக்கிறேன்.
அப்பாவின் திடீர் மரணம்!
1982-ல் ஒரு விபத்தில் சிக்கிய எங்கப்பா சிகிச்சை பலனின்றி இறந்துட்டார். அந்த வேதனையில் எனக்கு நடிக்கிற ஆர்வம் குறைஞ்சிடுச்சு. மலையாள இயக்குநர் சசிகுமார் சார், மீண்டும் நான் நடிக்க ஊக்கம் கொடுத்தார். அம்மாவை வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டு, நானே குடும்ப பாரத்தை ஏத்துக்கிட்டேன். அதனால மீண்டும் நடிச்சாகணும்கிற கட்டாயம். மலையாள சினிமாவில்தான் அதிக கவனம் செலுத்தினேன். பெரிய ரோல், பெரிய டீம், பெரிய ஹிட்டுன்னு அமைய... மலையாள சினிமாவில் என்னைக் கொண்டாடினாங்க. அதனால நடுவுல நேரம் கிடைக்கிறப்பதான், தமிழ்ப் படங்கள்ல நடிப்பேன். ‘பிரேம் நசீர் – ஷீலா’ ஜோடிக்குப் பிறகு, ‘சங்கர் – மேனகா’ ஜோடியும் மலையாளத்தில் ஃபேமஸ்.
மம்மூட்டியுடன் 18 படங்களில் ஜோடியா நடிச்சதுடன், மது மற்றும் மோகன்லால் உட்பட அப்போதைய உச்ச நடிகர்கள் எல்லோருடனும் ஜோடியா நடிச்சேன். மலையாளத்தில் 100 படங்களுக்கும் மேல் ஹீரோயினா நடிச்சேன். குறிப்பா, நான் நடிக்கிற படங்கள் எல்லா வயதினரும் ஒன்றாக உட்கார்ந்து முகம் கோணாம பார்க்கிறபடி இருக்கணும்னு, கிளாமர் ரோலில் நடிக்காமலிருந்தேன். அந்த ‘நோ கிளாமர் இமேஜ்’ என் மகள் கீர்த்திக்கும் இப்போ அமைந்திருப்பதில் சந்தோஷம்.

இழந்த வாய்ப்புகள்... கல்யாண வாழ்க்கை!
ஆறு வருஷங்களில், நான்கு மொழிகளில் 125-க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சேன். தமிழில் 16 படங்களில்தான் நடிச்சேன். அதில், `ஒளி பிறந்தது’, `சாவித்ரி’, `கீழ்வானம் சிவக்கும்’, `உறங்காத நினைவுகள்’னு பல வெற்றிப் படங்களும் அடக்கம். `முந்தானை முடிச்சு’ படத்தில் என்னை ஹீரோயினா நடிக்கவைக்க 78 நாள்கள் கால்ஷீட் கேட்டார் பாக்யராஜ் சார். `நீங்க கேட்கும் கால்ஷீட் நாள்களில் நான் நடிச்சுக்கிட்டிருக்கிற மூணு மலையாளப் படங்களை ரத்து செய்யணும். அதனால, உங்க மனைவியா கெஸ்ட் ரோல்ல நடிக்கிறேன்’னு கேட்டேன். `அந்த கேரக்டருக்கு ஏற்கெனவே பூர்ணிமா கமிட்டாகிட்டாங்க’னு சொன்னார் பாக்யராஜ் சார். பிறகும் அவரின் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியலை. `அலைகள் ஓய்வதில்லை’, `புதுக்கவிதை’, `சங்கராபரணம்’ உட்பட பல வெற்றிப்பட வாய்ப்புகளை கால்ஷீட் பிரச்னையால் இழந்தேன். ஒருவேளை இழந்த தமிழ்ப் படங்களிலெல்லாம் நான் நடிச்சிருந்தால், நிச்சயம் தமிழிலும் பெரிய அளவில் புகழ்பெற்றிருப்பேன்.
என் கணவர் சுரேஷ்தான், நான் நடிச்ச `பூச்சக்கொரு மூக்குத்தி’ மலையாளப் படத்தின் தயாரிப்பாளர். அந்தப் படத்தில் நடிக்கிறபோது அவர்மீது எனக்குப் பிரியம் உண்டாச்சு. எங்க கல்யாணத்துக்கு ரெண்டு வீட்டினரும் சம்மதிச்சாங்க. நாலு வருஷங்களா தொடர்ந்து நடிச்சுக்கிட்டேயிருந்த நிலையில், ஒரு வருஷம் என் குடும்பத்தினருடன் செலவிட்டேன். 1987-ம் ஆண்டு அவரைக் கல்யாணம் செய்து கிட்டு, நடிப்பை நிறுத்திட்டேன்.
என் கணவர் தயாரிச்ச `விஷ்ணுலோகம்’ படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியா நான் நடிக்க முடிவானது. அப்போ கைக்குழந்தையா இருந்த எங்க மூத்த பொண்ணு ரேவதி, என்னை விட்டு கொஞ்சநேரம்கூட அமைதியாயில்லை. அதனாலதான், சாந்தி கிருஷ்ணாவை அந்தப் படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கவெச்சோம். பொண்ணுங்க பெரியவங்களா வளர்ந்த பிறகுதான், செலக்டிவா சில படங்களிலும், சின்னத்திரையிலயும் நடிச்சேன். நடிப்புக்கு பிரேக் விட்டாலும் கல்யாணத்துக்குப் பிறகிலிருந்து தற்போதுவரை பத்மா சுப்ர மணியம் அக்காகிட்ட டான்ஸ் கத்துக்கிறேன்.
கீர்த்தியால் பெருமிதம்.... சினிமாவே கடவுள்!
`ராமாயி வயசுக்கு வந்துட்டா’ படம் ரிலீஸ் நேரம். தாவணியில் நான் இருக்கும் ஃப்ளெக்ஸ் ஒன்றை சென்னையில் அப்போ பிரபலமா இருந்த சஃபயர் தியேட்டருக்கு முன்னாடி வெச்சிருந்தாங்க. அதை என் பெற்றோர்கிட்ட பலரும் பெருமையா சொன்னாங்க. அதனால, ஒருநாள் இரவு 11.30 மணிக்கு மேல குடும்பமா ஆட்டோவில் போய் அந்த ஃப்ளெக்ஸைப் பார்த்தோம். அப்போ நான் இயல்பா அந்த ஃப்ளெக்ஸைப் பார்த்துக்கிட்டிருந்தேன். ஆனா, என் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் விட்டாங்க. அந்த உணர்வுதான், கீர்த்தி நடிகையா புகழ்பெற்றபோது எனக்கும் உண்டாச்சு.
தமிழ்ப் பொண்ணான எனக்கு, கேரளாவில் நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்ததில் பெரிய சந்தோஷம். எப்போதும் குடும்பம்தான் எனக்கு முக்கியம். `ரேவதி கலா மந்திர்’ என்கிற எங்க படத் தயாரிப்பு நிறுவனம் நல்லபடியா போகுது. எங்க பொண்ணுங்க இருவரும் சினிமா துறைக்கே வந்தாங்க. என் கணவர் மற்றும் மகள்களின் வேலைகளுக்கு ஊக்கம் கொடுத்து, அவங்க வெற்றிகளில் மகிழ்கிறேன். கீர்த்தியின் முதல் நான்கு படங்களுக்கு மட்டும் நான் கதை கேட்டேன். பிறகு, கீர்த்தி தன் திறமையால் பெரிய அளவுக்கு உயர்ந்திருக்கா. என் பெரிய பொண்ணு ரேவதி இயக்குநராகிப் பெயர் வாங்கணும்னு ஆசைப்படுறேன்.இப்போ எங்க மொத்தக் குடும்பத்துக்கும் சினிமாதான் கடவுள்!
- நாயகிகள் பேசுவார்கள்!
வியக்கவைத்த சிவாஜி சார்!
`நீதிபதி’ படத்தில் சிவாஜி சாருக்கு மகளா நடிச்சேன். அந்நேரத்துலதான் என் அப்பாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆனது. சிவாஜி சார் என்கிட்ட ரொம்ப ஆறுதலா பேசினார். ஒருநாள் ஷூட்டிங்குக்கு, எனக்கு ரொம்ப சராசரியா மேக்கப் பண்ணியிருந்தாங்க. அப்போ நான் `அப்கமிங் ஆர்ட்டிஸ்ட்' என்பதால, நானும் எதையும் கேட்டுக்க மாட்டேன். என்னைப் பார்த்த சிவாஜி சார், `என் பொண்ணுக்கு இதுதான் காஸ்ட்யூமா? இன்னும் பத்தே நிமிஷத்துல இந்தப் பொண்ணுக்கு கிராண்டா காஸ்ட்யூம் பண்ணிவிடணும்’னு படக்குழுவினர்கிட்ட கோபமா பேசினார். அடுத்த பத்து நிமிஷத்துல, என் லுக்கே மாறியிருந்தது. ஜூனியர் நடிகர்களும் ஸ்க்ரீனில் நல்லா தோன்றணும்னு அக்கறையெடுத்துக்கிட்ட சிவாஜி சாரின் மனசு என்னை வியக்க வெச்சது!
ஆச்சர்யம் தந்த ரேகா!
ஒருமுறை படப்பிடிப்புக்காக கேரளா உட்லண்ட்ஸ் ஹோட்டல்ல தங்கியிருந்தேன். அப்போ கேரளாவில் நடந்த ஓர் இந்திப் பட ஷூட்டிங்கில் பாலிவுட் நடிகை ரேகா, மலையாளி ரோல்ல நடிச்சாங்க. ஷூட்டிங் இடைவேளையில், மூணு மணிநேரம் ஓய்வெடுக்க நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்திருக்காங்க. அப்போ அதே ஹோட்டலில் நான் தங்கியிருப்பதைக் கேள்விப்பட்டு, `மேனகா ரூம்லயே நான் கொஞ்சநேரம் ஓய்வெடுத்துட்டு கிளம்பிடுறேன்’னு என் ரூமுக்கு வந்துட்டாங்க. எனக்கு பயங்கர ஆச்சர்யம்!
என் ரூமுக்கு வந்து ஓய்வெடுத்த ரேகா, என்னுடன் ரொம்ப ஃப்ரெண்ட்லியா பேசினாங்க. ரேகாவுடனான என் முதல் மற்றும் கடைசி சந்திப்பு அதுதான்.