மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 10 - காதல் கொடுத்த துணிச்சலால் தப்பிச்சு வந்தேன்!

நிரோஷா
பிரீமியம் ஸ்டோரி
News
நிரோஷா

- நிரோஷா

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், நிரோஷா.

`நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவின் இளைய மகள். நடிகை ராதிகாவின் அன்புத் தங்கை. முதல் படத்திலேயே முத்திரை பதித்து, ஹிட் நாயகியாக வலம்வந்தவர். பல்வேறு திருப்பங்களையும் சுவாரஸ்யங்களையும் கடந்து நடிகர் ராம்கியை காதல் மணம் புரிந்த நிரோஷா, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

அப்பாவின் செல்ல மகள்!

குழந்தைப் பருவத்துல எப்போதும் அப்பாகூடவே இருப்பேன். அவர் நாடகத்தில் அடிவாங்கும் காட்சிகளை உண்மைனு நினைச்சு அழுவதுடன், `அப்பாவை அடிக்காதீங்க’ன்னு சத்தம்போட்டிருக்கேன். அப்பாவை `நைனா’ன்னுதான் செல்லமா கூப்பிடுவேன். நான் கேட்டு, எதுக்குமே அவர் மறுப்பு சொன்னதில்லை. அதனால, வீட்டில் பலருக்காகவும் அப்பாகிட்ட நான் தூது போவேன். என் மூணு வயசுல, `தாலி பெண்ணுக்கு வேலி’ படத்துல அப்பாவுக்கு மகளா நடிச்சேன். என் அஞ்சு வயசுல அப்பா இறந்துட்டார். அந்தச் சின்ன வயசுலயும் அவர் இழப்பு என்னை ரொம்பவே பாதிச்சது. தொடர்ந்து எட்டு மாசங்கள் உடல்நிலை சரியில்லாம இருந்தேன்.

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 10 - காதல் கொடுத்த துணிச்சலால் தப்பிச்சு வந்தேன்!

ராதிகா எடுத்த போட்டோ... மணிரத்னம் பட வாய்ப்பு!

நடிக்கணும்னு ஆசையில்லா விட்டாலும், சினிமா உலகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால ஹீரோயின்கள் போலவே மேக்கப், டிரஸ் பண்ணிப்பேன்; டான்ஸ் ஆடுவேன். சென்னை, இலங்கை, லண்டன்னு மூணு இடங்கள்ல படிச்சேன். நான் டாக்டராக ஆசைப்பட்டேன். நான் வக்கீலாகணும்னு அக்கா ஆசைப்பட்டாங்க. அக்கா முன்னணி ஹீரோயினா உயர்ந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்; பெருமைப்பட்டேன். பள்ளி விடுமுறைன்னா, உடனே அக்காவுடன் ஷூட்டிங், ஷாப்பிங், சினிமா நிகழ்ச்சிகள், அவுட்டிங்னு போயிடுவேன். அதனால சினிமா பிரபலங்களுடன் எனக்கு அப்பவே நல்ல பழக்கம் இருந்தது. `நாயகன்’ படத்துக்காக மணிரத்னம் சாரும், இன்னும் சில படங்களுக்காக பிற இயக்குநர்களும் என்னை ஹீரோயினா நடிக்கக் கேட்க, நான் மறுத்துட்டேன். வீட்டில் அக்கா என்னை அப்பப்போ போட்டோ எடுப்பாங்க. அப்படி அவர் என்னை எடுத்த போட்டோ, தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் அட்டைப்படமா வெளியாச்சு. அந்த நேரம், `அக்னி நட்சத்திரம்’ படத்தில் என்னை நடிக்கவைக்க, மணிரத்னம் சார் மறுபடியும் அக்காகிட்ட பேசினார். நான் எப்பவும் அக்காவின் பேச்சை மட்டும் மீற மாட்டேன். `நடிடீ’னு அக்கா சொல்ல, அடுத்த நாளே ஷூட்டிங் கிளம்பிட்டேன்.

அப்போ நான் கொஞ்சம் திமிராத்தான் நடந்துப்பேன். அதனால `செந்தூரப்பூவே’ பட ஷூட்டிங்ல எனக்கும் ராம்கி சாருக்கும் நிறைய சண்டை நடக்கும்.
நிரோஷா

கமல் ரசிகை... முத்த சர்ச்சை!

முதல் நாளே, `ஒரு பூங்காவனம்’ பாடல் ஷூட்டிங். நடிப்புக்குப் புதுசுனாலும் சினிமா சூழல் பழகியிருந்ததால பயமில்லாம நடிச்சேன். என் விருப்பப்படி நடிக்கவிட்டு, அழகா காட்சிப் படுத்தினார் மணி சார். கேரளா வில் `செந்தூரப்பூவே’ ஷூட்டிங்ல இருக்கேன். அன்னிக்கு ரிலீஸான `அக்னி நட்சத்திரம்’ படத்தைப் பார்த்துட்டு, `என்னடீ... சூப்பரா நடிச்சிருக்க! நான் எதிர்பார்க்கவேயில்லை’ன்னு அக்கா போன்ல வாழ்த்தினாங்க. ஷூட்டிங்ல பர்மிஷன் கேட்டு சென்னை வந்து படம் பார்த்தேன். ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து அசந்துபோயிட்டேன்.

நிரோஷா
நிரோஷா

நான் சின்ன வயசுலயிருந்தே கமல் சார் ரசிகை. `கிழக்கே போகும் ரயில்’ படவிழா ஒன்றில் என்னைப் பார்த்த கமல் சார், `இந்தப் பொண்ணுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு’ன்னு வாழ்த்தினார். நடிக்க வந்து 10 வருஷங்கள் கழிச்சுதான், என் அக்காவுக்குக் கமல் சாருக்கு ஜோடியாகும் வாய்ப்பா ‘ஸ்வாதி முத்யம்’ படம் அமைஞ்சது. நான் `அக்னி நட்சத்திரம்’ படத்தில் நடிச்சுக்கிட்டிருக்கும்போதே கமல் சாருடன் `சூரசம்ஹாரம்’ படத்தில் நடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல, அவர் சினிமாவுக்கு வந்தது, நடிப்பு உட்பட நிறைய விஷயங்களை என்னிடம் பகிர்ந்துப்பார். அந்தப் படத்தில் கமல் சாருடன் எனக்கு எக்கச்சக்க முத்தக்காட்சி இருந்துச்சு. ஒரு கட்டத்துல அதனாலேயே பெரிய சர்ச்சைகளும் பிரச்னைகளும் உண்டாச்சு. அதுக்கெல்லாம் நான் பயப்படலை.

ராம்கியுடன் மோதல் டு காதல்!

அப்போ நான் கொஞ்சம் திமிராத்தான் நடந்துப்பேன். அதனால `செந்தூரப்பூவே’ பட ஷூட்டிங்ல எனக்கும் ராம்கி சாருக்கும் நிறைய சண்டை நடக்கும். அவர் என்னைத் தண்ணியில இருந்து தூக்கும் சீன்ல, `கமல் சார்கூட என்கிட்ட சொல்லிட்டுதான் மேல கைவைப்பார். நீங்க உங்க இஷ்டத்துக்குக் கைவைக்கிறீங்க’ன்னு எல்லோர் முன்னிலையிலும் அவரைத் திட்டிட்டேன். எங்க சண்டையால் இயக்குநர் ஆபாவாணன் உட்படப் பலரும் புலம்புவாங்க. ஒருமுறை ஷூட்டிங்ல, எதிர்பாராத விதமா ரெண்டு ரயில்களுக்கு இடையில் நான் சிக்கிக்க, கொஞ்சம் விட்டிருந்தாலும் நசுங்கியிருப்பேன். அப்போ ரியல் ஹீரோ மாதிரி ராம்கி சார் என்னைக் காப்பாத்தினார். பிறகு, ஆஸ்பத்திரிக்குப் போறப்ப என் கை மேல அவர் கையை வெச்சு, `நான் இருக்கேன், ஒண்ணும் ஆகாது... தைரியமா இரு’ன்னு சொன்னார். அப்போதான், என் மனசை அவரிடம் பறிகொடுத்தேன்.

பிறகு சண்டைகள் நீங்கி, ஒருத்தரை இன்னொருத்தர் தேட ஆரம்பிச்சு, காதலர்களானோம். `செந்தூரப்பூவே’ படம் பெரிய ஹிட். `இவ்ளோ ஃபேமஸாகிட்டோமே’ன்னு எனக்கே ஆச்சர்யம். அதனால மேற்கொண்டு படிக்கிறதைப் பத்தி யோசிக்கவேயில்லை. பல மொழிப் படங்கள்லயும் வாய்ப்புகள் வர, பரபரப்பா நடிச்சுக்கிட்டிருந்தேன். அக்கா ராதிகாவுடன் `கைவீசு அம்மா கைவீசு’ படம் மற்றும் சிவாஜி சாருடன் `பாரம்பரியம்’ படத்துல நடிக்கும்போது மட்டும்தான் பயந்தேன்.

100 படங்கள்... அந்த மூன்று வாய்ப்புகள்!

1990-களில் குறிப்பிட்ட ஒரு வருஷத்தில், ‘அதிகப் படங்களில் நடிச்ச ஹீரோ ராம்கி, ஹீரோயின் நிரோஷா’ என்கிற அளவுக்கு நாங்க புகழ்பெற்றோம். அப்போ அஞ்சு ஷிஃப்ட் நடிச்சேன். `வெற்றிப் படிகள்’, `மனித ஜாதி’, `பாண்டி நாட்டு தங்கம்’ உட்பட நிறைய வெற்றிப் படங்கள் அமைஞ்சது. என் டஸ்கி ஸ்கின்தான், எனக்கு ப்ளஸ்ஸா அமைஞ்சது. ஒன்பது வருஷங்கள்ல, ஐந்து மொழிகளில் 100 படங்களுக்கு மேல ஹீரோயினா நடிச்சேன். இதற்கிடையே, `வருஷம் 16’ படத்தில் நடிக்க கமிட்டாகி, பட பூஜைவரைக்கும் போனேன். பிறகு விலகிட்டேன். `கரகாட்டக்காரன்’ படத்துக்காக கங்கை அமரன் சாரும், `என் ராசாவின் மனசிலே’ படத்துக்காக ராஜ்கிரண் சாரும் ஹீரோயினா நடிக்கக் கேட்டும், கால்ஷீட் பிரச்னையால் அந்தப் படங்கள்ல நடிக்க முடியாம போயிடுச்சு. இப்படி நிறைய வெற்றிப் படங்களை மிஸ் பண்ணிட்டேன். ஒருவேளை இந்த மூணு படங்கள்லயும் நடிச்சிருந்தா, என் வளர்ச்சி எங்கேயோ போயிருக்கும். அதை நினைச்சு அப்போ நான் வருத்தப்படலை. ஆனா, `ரஜினி சாருடன் நடிக்க முடியலையே’ என்கிற ஏக்கம் உண்டு. `நரி நரி நடுமா முராரி’ங்கிற தெலுங்குப் படத்தில் இரட்டை வேடத்துல நடிச்ச பாலகிருஷ்ணா சாருக்கு ஜோடியா நானும் ஷோபனாவும் நடிச்சோம். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்ல ரஜினிக்கு சாருக்கு ஜோடியா நானும் கெளதமியும் கமிட்டானோம். அப்போ `அதிசயப் பிறவி’ படம் ரிலீஸாகி சரியா ஓடாததால, அந்த டூயல் ரோல் படத்தை ரீ-மேக் செய்றதைக் கைவிட்டுட்டாங்க.

லக்கி ஜோடி... காதலுக்கு எதிர்ப்பு!

`செந்தூரப்பூவே’ வெற்றியால், என்னையும் ராம்கி சாரையும் லக்கி மற்றும் வெற்றி ஜோடினு சொன்னாங்க. அதனால, நாங்க ஜோடியா பல படங்கள்ல நடிச்சோம். எங்க காதலுக்கு என் வீட்டில் பயங்கர எதிர்ப்பு. `சினிமா நபரைக் கல்யாணம் செய்துக்கக் கூடாது’ன்னு எங்க வீட்டில் உறுதியா சொல்லிட்டாங்க. மேலும், ராம்கி சாருடன் சேர்ந்து நடிக்கவும் அனுமதிக்கலை. அதனால், நான் ஹீரோயினா நடிக்க வேண்டிய அவருடைய பல படங்கள்ல மற்ற நடிகைகள் நடிக்கிறதைப் பார்க்கும்போது ஆதங்க மாயிருக்கும். ஆனாலும், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வலியுறுத்த, என் வீட்டாரின் எதிர்ப்புகளையெல்லாம் மீறி, தமிழ் மற்றும் தெலுங்கில் 10 படங்களுக்கு மேல நாங்க ஜோடியா நடிச்சோம். ஷூட்டிங்ல அவருடன் நான் பழகுறதைத் தடுக்க, என் அம்மா அல்லது அண்ணன் எப்போதும் பக்கத்துலேயே இருப்பாங்க. அதனால நாங்க பர்சனலா பேசிக்க முடியாது. எங்க வீட்டுல எல்லோரும் இரவு தூங்கின பிறகு, லேண்ட்லைன் போன்ல அவர்கிட்ட ரகசியமா பேசுவேன். இப்படித்தான் எங்க காதல் வளர்ந்துச்சு. இந்த விஷயத்தை ஒருநாள் என் வீட்டார் கண்டுபிடிக்க, அண்ணன் என்னை பெல்ட்டால செமத்தியா அடிச்சார்.

ராம்கியுடன்...
ராம்கியுடன்...

ஒருநாள் `மருது பாண்டி’ பட ஷூட்டிங்ல என் வீட்டார் யாருமில்லை. அன்னிக்கு அவருடன் லிப் கிஸ் சீன்ல பயமில்லாம நடிச்சுட்டேன். பிறகு, இருவரும் வேற பட ஷூட்டிங் கிளம்பிட்டோம். வழியில், இந்தக் காட்சிப் படத்துல வந்தால் என் குடும்பத்தார் பெரிய பிரச்னை பண்ணிடுவாங்கன்னு அவருக்குப் போன் பண்ணிச்சொன்னேன். அவர் அன்னிக்கு இரவே அந்தக் காட்சியை கட் பண்ண ஏற்பாடு செய்தார். அந்த ரீல் என்கிட்ட பத்திரமா இருக்கு. `இணைந்த கைகள்’ படத்தில் நான் ராம்கி சாருக்கு ஜோடியா நடிக்க வீட்டில் அனுமதிக்கலை. பிறகு, நான் நடிச்சா போதும்னு இயக்குநர் ஆபாவாணன் சார் வலியுறுத்தி, என்னை அருண்பாண்டியனுக்கு ஜோடியா நடிக்க வெச்சார். படம் பெரிய ஹிட். அதில் நாங்க ஜோடியா நடிக்காத வருத்தம் இன்னும் எனக்கிருக்கு.

த்ரில் கல்யாணம்... ரீ-என்ட்ரி!

`செந்தூரப்பூவே’ ஷூட்டிங்ல, நீர்வீழ்ச்சியில நான் மூழ்கி செத்துப் பிழைச்சேன். குறிப்பா, சேர்ந்து நடிச்சபோதும், மற்ற படங்களிலும் எங்க இருவருக்கும் எக்கச்சக்க ஆக்ஸிடென்ட்ஸ் ஏற்பட்டிருக்கு. `மனித ஜாதி’ பட ஷூட்டிங்... சிவப்பு நிற டிரஸ் போட்டிருந்த என்னை மாடு முட்ட வர, லாகவமா இழுத்துப் பிடிச்சுக் காப்பாத்தினார், ராம்கி. ஒருநாள் அந்தப் படத்தின் ஷூட்டிங் இரவில் நடந்துச்சு. அவர் போர்ஷன் முடிஞ்சு, 12 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஹோட்ட லுக்குப் போயிட்டார். அப்போ அவர் கால்ல பெரிசா அடிபட்டிருந்துச்சு. அவர்கிட்ட ஆறுதலா பேசணும்னு ஆசைப் பட்டேன். ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமிகிட்ட முன்கூட்டியே பேசி வெச்சிருந்தேன். அதன்படி அவர் என் அம்மாகிட்ட என்னை அவுட்டிங் கூட்டிட்டுப்போறதா பொய் சொல்லிச் சம்மதம் வாங்கினார். நான் ராம்கி சார் ரூமுக்குப் போய் இன்ப அதிர்ச்சி கொடுத்தேன். கிடைச்ச அஞ்சு நிமிஷமும் அவர்கிட்ட மகிழ்ச்சியா பேசிட்டு, ஷூட்டிங் வந்துட்டேன். அப்போ எனக்கு சிவகுமார் சாருடன் நடிக்கிற காட்சிங்கிறதால, அம்மா பயப்படாம வீட்டுக்குப் போயிட்டாங்க. அப்போ, ராம்கி திடீர்னு நொண்டிகிட்டே என்னைப் பார்க்க ஷூட்டிங் ஸ்பாட் வந்து எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். எனக்குச் சாப்பாடு ஊட்டிவிட்டார். எங்க பிறந்த நாளுக்கு, யாருக்கும் தெரியாம பரிசுகள் கொடுத்துப்போம்.

நிறைய பிரச்னைகளுக்குப் பிறகு 1996-ல், எங்க கல்யாணத்துக்கு என் வீட்டில் ஒப்புக்கிட்டாங்க. கடைசிநேரத்தில் எங்க கல்யாணம் நின்னுடுச்சு. நான் நடிக்கவும் வீட்டில் தடைபோட்டுட்டாங்க. என்னைக் கட்டாயப்படுத்தி இலங்கைக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. ஆறு மாசங்கள் அங்கேயிருந்தேன். ஒருநாள் யாருக்கும் தெரியாம பாஸ்போர்ட்டை எடுத்துக்கிட்டு, எப்படியோ தப்பிச்சு சென்னை வந்துட்டேன். பிறகு போலீஸ் கேஸ்னு பிரச்னை பெருசாகிடுச்சு. நான் அவர்கூட போய், ரெண்டு வருஷங்கள் இருந்தேன். அந்தக் கோபத்தில் என் வீட்டார் எங்ககிட்ட பேசவேயில்லை. அப்போ நான் நடிக்கவுமில்லை. பிறகு, என் வீட்டார் சமாதானமாகி, 1998-ம் ஆண்டு எங்க கல்யாணம் நடந்துச்சு. அப்புறம் நடிக்க வேண்டாம்னு நினைச்சேன். ஆனா, அப்பதான் அக்கா, `சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியலைத் தயாரிச்சாங்க. என்னை நடிக்கக் கேட்டதால், நடிச்சேன். அதேநேரம் `கந்தா கடம்பா கதிர்வேலா’ படத்திலும் நடிச்சேன். அப்படியே இப்போதுவரை சினிமா, சீரியல்னு தொடர்ந்து நடிச்சுட்டிருக்கேன். என் வாழ்க்கையில என் கணவர்தான் எனக்கு எல்லாமே. அவர் தோற்றத்திலும் உற்சாகத்திலும் இன்னும் அப்படியேதான் இருக்கார். என்னை நல்லா பார்த்துக்கிறார். வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கு!

- நாயகிகள் பேசுவார்கள்!

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 10 - காதல் கொடுத்த துணிச்சலால் தப்பிச்சு வந்தேன்!

அக்காவின் அன்பு!

நான் ஹீரோயினா நடிச்சப்ப, என் அம்மாதான் கதை கேட்பார். அவர்தான் என் கால்ஷீட் விஷயங்கள் மற்றும் சம்பள விஷயங்களையும் கவனிச்சுக்கிட்டார். அப்போ, எனக்கான பணத் தேவைகளுக்கு அக்காகிட்டயும் அம்மாகிட்டயும்தான் கேட்பேன். அப்போதிலிருந்து இப்போது வரை, அக்கா வெளியூர், வெளிநாடு எங்க போனாலும் ஷாப்பிங் பண்ணும்போது எனக்கு வீடியோ கால் பண்ணுவாங்க. `உனக்கு இதுதான் பொருத்தமா இருக்கும்; இது சரியா இருக்காது’ன்னு இப்போதுவரை அவங்களேதான் எனக்கானதைத் தேர்வு செய்றாங்க. அக்காவுக்கு என் மேல எப்போதும் பாசம் அதிகம்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன் சார் என் ரசிகர்!

ஒருமுறை எனக்கு ஆக்ஸிடென்ட்டாகி காலில் அடிபட்டிருந்துச்சு. மும்பையிலுள்ள ஒரு டாக்டர்கிட்ட சிகிச்சையெடுக்க ராம்கி ரெஃபர் பண்ண, அங்கே போனேன். அப்பதான் அக்கா `ஆஜ் கா அர்ஜுன்’ இந்திப் படத்தில் அமிதாப் பச்சன் சார்கூட மும்பையில் நடிச்சுட்டிருந்தாங்க. அப்போ, `நடிகை நிரோஷா செம அழகு, உயரம். நடிப்பும் சூப்பர். அவங்களுடைய பெரிய ரசிகர் நான். அதனாலேயே `அக்னி நட்சத்திரம்’ படத்தை நூறு முறைக்கும் அதிகமாவே பார்த்து, கேசட்டே தேய்ந்துடுச்சு. இப்படியொரு நடிகையை நான் பார்த்தேயில்லை’ன்னு அமிதாப் சார் அக்காகிட்ட சிலாகிச்சிருக்கார். `இவ என் தங்கச்சிதான்’னு அக்கா சொல்ல, அவர் என்னைப் பார்க்கணும்னு சொல்லியிருக்கார். `கால்ல அடிபட்டிருப்பதால என்னால ஷூ, செப்பல் எதுவும் போட முடியாது. என்னை இந்தக் கோலத்தில் பார்த்தால் அமிதாப் சார் ஷாக் ஆகிடுவார்’னு சொன்னேன். அக்கா என்னைக் கட்டாயப்படுத்தி வரச் சொல்ல, போனேன். செருப்பு போடாம போக, குள்ளமா இருந்த என்னைப் பார்த்து அமிதாப் சார் ஷாக் ஆகிட்டார். ஆனாலும், `நான் உங்க கிரேட் ஃபேன்’னு அவர் சொன்ன நிமிஷம், எனக்குப் பயங்கர சந்தோஷம். பிறகு அவரைப் பலமுறை சந்திச்சிருக்கேன். குறிப்பா, சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகிட்ட அவரை நான் பேட்டி எடுத்தேன். அப்போ, `நிரோஷா, எப்படி இருக்கீங்க!’னு பழைய நினைவுகளுடன் மகிழ்ச்சியா பேசினார்.