மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 17: வாழ்க்கை மிக அழகாக மாறியிருக்கிறது! - நடிகை ரேவதி

1980s evergreen heroins - actress Revathi
பிரீமியம் ஸ்டோரி
News
1980s evergreen heroins - actress Revathi ( Aval Vikatan )

20 வயசுக்குள்ளேயே நிறைய சவாலான ரோல்களில நடிச்சுட்டேன். சினிமாத்துறை மேல பெரிய காதலும் மதிப்பு வரக் காரணமே அந்த சவால்தான்...

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், ரேவதி.

தமிழ் சினிமாவின் யதார்த்த நாயகியாகக் கொண்டாடப்பட்டவர், ரேவதி. 1980-களில் பவர்ஃபுல் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்த நாயகி. அப்போதைய முன்னணி இயக்குநர்கள் அனைவரின் இயக்கத்திலும் நடித்து, அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறி மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர். இந்தி மற்றும் மலையாள சினிமாக்களிலும் புகழ்பெற்ற ரேவதி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

ராணுவ அதிகாரியின் மகள்... இரண்டு கனவுகள்!

கேரளாவில் கொச்சியில பிறந்தாலும், ஒரு மாதத்துக்குள் வேறு ஊருக்குக் குடியேறிட்டோம். அப்பா ராணுவத்துல வேலை செய்ததால், என் குழந்தைப் பருவத்துல இந்தியாவின் பல மாநிலங்கள்ல வசிச்சேன். நான் ஏழாவது படிச்சப்ப சென்னைக்குக் குடியேறிட்டோம். அப்பாவுக்கு வருஷத்துல ஒருமுறை, மொத்தமா 40 நாள்கள் விடுமுறை கிடைக்கும். அந்த நாள்கள் அளவில்லா மகிழ்ச்சியா இருக்கும்.

1980s evergreen heroins - actress Revathi
1980s evergreen heroins - actress Revathi
Aval Vikatan

அம்மா தனியாளாக என்னையும் தங்கச்சி யையும் வளர்த்தாங்க. ஏதாவதொரு கலையை கத்துகிட்டா, ஒழுக்கத்தையும் கத்துக்கலாம்னு எங்கம்மா நினைச்சாங்க. எனக்கு ஆர்வமுள்ள டான்ஸ் வகுப்புக்கு அனுப்பினாங்க. டான்ஸர், டாக்டர்னு ரெண்டு எதிர்கால கனவுகளுடன் இருந்தேன். சின்ன வயசுல ராணுவக் குடியிருப்புகளில் வசிச்சப்ப, அங்கே உணவகத்துல இருக்கும் டி.வி-யில வாரத்துக்கு ஒரு படம் திரையிடுவாங்க. குழந்தைங்க பார்க்க உகந்த படம் இல்லைன்னா, எல்லா குழந்தைகளையும் ஒரே வீட்டுல விட்டுட்டுப் பெற்றோர் எல்லோரும் படம் பார்ப்பாங்க.

`மண்வாசனை’ வாய்ப்பு... கண்டிப்பான டீச்சர்!

நான் ப்ளஸ் டூ முடிச்சிருந்த நேரம். என்னைப் பத்தி தெரிஞ்சுக்கிட்ட பாரதிராஜா அங்கிள், `மண்வாசனை’ படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். அந்த 16 வயசுல, `நான் நடிகையா?’ன்னு மிரண்டுபோய் ‘அதெல்லாம் வேண்டாம்’னு சொன்னேன். என் மாமாதான் என்னை கன்வின்ஸ் பண்ணினார். `எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது’ன்னு பாரதிராஜா அங்கிள்கிட்ட சொல்ல, `ரொம்ப நல்லதா போச்சு. உன்னை நடிக்க வைக்கிறது என் பொறுப்பு’ன்னு சொன்னார். பாரதி அங்கிள் சொல்லிக்கொடுக்கிறதை உன்னிப்பா கவனிச்சு, அப்படியே நடிச்சேன்.

அதுவரை மாடர்ன் டிரஸ்லயே வளர்ந்த நான், படத்துக்காக முதன்முறையா புடவை கட்டினேன். கிராமத்துச் சூழலை முதன்முதலா பார்த்தேன். `ஆஷா கேளுண்ணி'ங்கிற என் பெயரை, ‘ரேவதி’ன்னு மாத்தினார் பாரதி அங்கிள். கேந்திரிய வித்யாலயா பள்ளியில படிச்சதால, அப்போ இந்தி, இங்கிலீஷ்தான் எனக்கு சரளமா வரும். நான் பேசிய ஒரு டய லாக்கை எனக்கு ப்ளே பண்ணிக் காட்டினார், பாரதி அங்கிள். எனக்கே சுத்தமா புரியலை. `அப்புறம் மக்களுக்கு எப்படிப் புரியும்?’னு பக்குவமா எடுத்துச் சொன்னவர், என்னை நல்லா தமிழ் பேச வெச்சார். டப்பிங் அப்போ ஒரு வாரமும் என் கூடவேயிருந்து, என்னைச் சிறப்பா டப்பிங் கொடுக்க வெச்சார். நான் ஏதாச்சும் கேள்வி கேட்டுட்டே இருப்பேன். வேலை டென்ஷன்ல பாரதி அங்கிள் கண்டிப்பான டீச்சர்போல கோபப்படுவார். சாஃப்ட் டீச்சரான ஒளிப்பதிவாளர் கண்ணன் சார், பொறுமையா எனக்குப் பதில் சொல்வார். பாண்டியன் என்னை அடிக்கிற மாதிரியான ஒரு காட்சி, பல டேக் போச்சு. ஒருகட்டத்துல அவர் கோபமாகி என்னை அடிக்க, என் கன்னம் சிவந்துபோச்சு. அந்த அடியை என்னால மறக்கவே முடியாது.

ஒரே நேரத்தில் ரஜினி, கமல் ஜோடி!

`மண்வாசனை’ முடிச்சதுமே, மலையாளத்தில் பரதன் சாரின் `காற்றத்தே கிளிக்கூடு’ படத்தில் நடிச்சேன். ரெண்டு படமும் பெரிய ஹிட். நிறைய பட வாய்ப்புகள் வர, குழப்பமாயிடுச்சு. குடும்பமா உட்கார்ந்து பேசியதில், கொஞ்ச நாள் நடிக்கலாம்னு முடிவெடுத்தோம். அப்போ சினிமாவில் எங்களுக்கு யாரையும் தெரியாது. அதனால, பாரதிராஜா அங்கிள்கிட்டதான் ஆலோசனை கேட்பேன். `கதை கேளு. உனக்குப் பிடிச்சிருந்தா மட்டும் நடி’ன்னு சொல்லுவார். தமிழில் என் மூணாவது படம், ரஜினி சார் கூட `கை கொடுக்கும் கை’. ஷூட்டிங் தொடங்கும் முன்பு, என் கண்களைக் கட்டிக்கிட்டு சில நாள்கள் வீட்டுல நடந்து பார்த்தேன். நடிப்புக்காக நான் முதலும், கடைசியுமா எடுத்துக்கிட்ட ஒரே பயிற்சி அதுதான்!

1980s evergreen heroins - actress Revathi
1980s evergreen heroins - actress Revathi
Aval Vikatan

முதல் நாள் ஷூட்டிங்ல, `கண்ணு தெரியாத பொண்ணுதானே. கண் மை உட்பட எந்த மேக்கப்பும் வேண்டாமே’னு மகேந்திரன் சார்கிட்ட சொன்னேன். `சூப்பர்!’னு சொன்னவர், `முகம் மட்டும் கழுவிக்கோ போதும்’னு சொன்னார். படம் முழுக்க மேக்கப் இல்லாமதான் நடிச்சேன். கண்ணை அசைக்காம நடிச்சது பெரிய சவாலா இருந்துச்சு. `கண்ணுக்குள்ளே யாரோ’ங்கிற பாடலை என்னால மறக்கவே முடியாது. கஷ்டமே தெரியாம என்னை நடிக்க வெச்சார், மகேந்திரன் சார். அப்போ, `ஒரு கைதியின் டைரி’ படத்துல நான் கமிட்டானேன். `நீ கமல்கூடவும் நடிக்கப்போற... சூப்பர்!’னு வாழ்த்தினார், ரஜினி சார்.

17 வயதில் வெள்ளைப்புடவை ரோல்... சினிமா மீது காதல்!

மீண்டும் என் குருநாதர் பாரதிராஜா அங்கிள் இயக்கத்துல, `புதுமைப் பெண்’, `ஒரு கைதியின் டைரி’ படங்கள்ல நடிச்சேன். எனக்கு சவாலான ரோல்னா ரொம்பப் பிடிக்கும். உடனே ஒப்புக்குவேன். அப்போதைய இயக்குநர்கள், என் வயசைப் பத்தி யோசிக்கலை. என்னால நடிக்க முடியும்னு நம்பி வாய்ப்புகள் கொடுத்தாங்க. 17 வயதில், `வைதேகி காத்திருந்தாள்’ படத்துல கணவனை இழந்த பெண்ணா நடிச்சேன். அந்த வயசுல, கைம்பெண், மறுமணம்னு இதைப்பத்தியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. ஆனா, அந்தக் கதாபாத்திரமா நடிக்கிறதுதான் எனக்குப் பிடிச்ச சவால்! என் படங்கள் தொடர்ந்து ஹிட்டாகி, எங்க போனாலும் மக்கள் கொண்டாடும்போது சந்தோஷமா இருக்கும். நடிப்புக்கு இடையே கிளாஸிக்கல் டான்ஸ் கத்துக்கிட்டேன். படங்களில் டான்ஸ் பாடல்கள்னா ரொம்பவே சந்தோஷப்படுவேன். `வைதேகி காத்திருந்தாள்’ படத்துல `அழகு மலராட’ பாடலுக்கு ரொம்ப மெனக்கெட்டு வேலைசெய்தோம். அது எவர்கிரீன் பாடலாக ஒலிச்சுக்கிட்டே இருக்கிறதில் மகிழ்ச்சி.

1980s evergreen heroins - actress Revathi
1980s evergreen heroins - actress Revathi
Aval Vikatan

என் முதல் ஏழு படங்களுக்குள், பாரதிராஜா, மகேந்திரன், பரதன், பாபுன்னு நாலு பெரிய இயக்குநர்களின் வெவ்வேறு ஜானர் படங்கள்ல நடிச்சதுதான், என் நடிப்புக்கான அஸ்திவாரம். 20 வயசுக்குள்ளேயே நிறைய சவாலான ரோல்களில் நடிச்சுட்டேன். சினிமாத்துறை மேல பெரிய காதலும் மதிப்பும் உண்டாகிடுச்சு. சினிமாவை என் கரியரா முடிவெடுத்தது அப்போதான். பாலசந்தர் சார் இயக்கத்துல நான் நடிக்கணும்னு எங்கப்பா ஆசைப்பட்டார். அது, `புன்னகை மன்னன்’ மூலம் நிறைவேறிச்சு. நடிப்பு, டான்ஸ்னு கமல் சாருக்குப் போட்டியா நானும் சிறப்பா பர்ஃபார்ம் பண்ண ஊக்கப்படுத்தினார் பாலசந்தர் சார்.

`திவ்யா’வும் ‘மாஷா’வும்!

மணிரத்னம் சார் தமிழில் இயக்கிய முதல் படம் `பகல் நிலவு’. அவர், நான், முரளின்னு பலரும் ஜூனியர்ஸ். அதனால, செம ஜாலியா கலகலப்பா வேலைசெய்தோம். மணியுடன் அப்போ ஆரம்பிச்ச நட்பு, அவரின் பல படங்கள்ல நடிச்சு ரொம்பவே பலமாகிடுச்சு. பகல் நிலவு முடியுற நேரம் `மௌன ராகம்’ கதையை மணிரத்னம் சார் மேலோட்டமாக என்னிடம் சொன்னார். அப்பவே ஒப்புக்கிட்டேன். இதுபோன்ற படங்கள் ஒரு நடிகைக்கு அரிதாகவே கிடைக்கும். மிஸ் பண்ண முடியுமா? ‘மௌன ராகம்’ பட திவ்யாவுக்கு, கல்லூரிக்கால காதல் ஒரு பக்கம், கல்யாணமாகி மூணாவது நாளே கணவர்கிட்ட விவாகரத்து கேட்கிற இறுக்கமான மண வாழ்க்கை ஒரு பக்கம்னு ரொம்ப வித்தியாசமான ரோல். அந்த ‘திவ்யா’வை எனக்கு பர்சனலா ரொம்பப் பிடிக்கும்.

ஆரம்பக்காலத்துல சீரியஸான ரோல்கள்தான் எனக்கு அதிகம் வந்துச்சு. இந்த நிலையில, `அரங்கேற்ற வேளை’ படத்துல ‘மாஷா’வா காமெடியிலும் கலக்கினப்போ, ரேவதியால எல்லாவித ரோல்கள்லயும் நடிக்க முடியும்னு பேச ஆரம்பிச்சாங்க. மாடர்ன் கேர்ளா `மகளிர் மட்டும்’, கிட்டத்தட்ட அம்மன் லுக்ல `கிழக்கு வாசல்’னு விதவிதமாக கேரக்டர்கள் செஞ்சு நிறைய புகழுடன் நான் வலம்வந்த காலம் அது.

`அஞ்சலி’ படம் இன்னொரு மைல்கல். ஷூட்டிங் ஸ்பாட்ல அந்தக் குழந்தைகளோடு குழந்தையா நானும் விளையாடிட்டிருப்பேன். ``இதுல யார் நடிகை, யார் குழந்தைன்னு எனக்குக் குழப்பமா இருக்கு’ன்னு சொல்லி மணி சார் சிரிப்பார். ஆனா, அதே நேரம் அவர் சொல்லிக்கொடுப்பதை உள்வாங்கி, அந்த அம்மா கேரக்டரின் தவிப்பை நடிப்பில் கொண்டுவந்தேன். க்ளைமாக்ஸ்ல அஞ்சலி இறந்துபோன காட்சியைப் படமாக்கும்போது பேபி ஷாம்லி தூங்கிட்டு இருந்தா. ரொம்ப சத்தம்போட்டால் குழந்தையின் தூக்கம் கலைந்திடும்னு, அந்த எமோஷனலான சீனை கேர்ஃபுல்லா படமாக்கினோம்.

அம்மாவின் அட்வைஸ்... நோ கிளாமர்!

நிறைய வாய்ப்புகள் வந்துட்டே இருந்தாலும், ஒருநாளைக்கு ஒரு கால்ஷீட்தான் கொடுப்பேன். அதனால ஈடுபாட்டுடன் நடிக்க முடிஞ்சது. அந்த பிஸியான தருணத்துல, எங்கம்மா சொன்ன அட்வைஸ்படி, ஒரு ஷெட்யூல் முடிஞ்சதும் ரெண்டு நாள் எனக்காக ஒதுக்கிடுவேன். குடும்பம், நண்பர்கள், டீன் ஏஜ் சந்தோஷம், டிராவல், என் உடல்நலம்னு அவசியமான விஷயங்களுக்கு நேரம் ஒதுக்கினேன். என் எல்லாப் படங்களையும் தியேட்டர்ல பார்த்து, என் நடிப்பை நானே மதிப்பீடு செய்தேன்.

என் ரெண்டாவது படத்துல இருந்து நானேதான் கதை கேட்பேன். மனசுக்குப் பிடிச்ச கதையா இருந்தா உடனே ஒப்புக்குவேன். வெற்றி, தோல்விகளைப் பத்தி கவலைப்பட மாட்டேன். சொல்லப்போனா, என் முக்கால்வாசி படங்களில் சவாலான ரோல்கள்தாம். என் காஸ்ட்யூம் எல்லாத்தையும் நானேதான் தேர்வு செய்வேன். எனக்கு செட் ஆகாது என்பதால், கிளாமர் ரோல்களைத் தவிர்த்துட்டேன். `உதய கீதம்’, `இதய தாமரை’, `மறுபடியும்’, `தேவர் மகன்’, `பிரியங்கா’ன்னு நிறைய ஹிட் படங்கள் அமைஞ்சது.

கதைதான் முக்கியம்... பாலசந்தர் சார் பாராட்டு!

இந்த ஹீரோவோடு நடிக்கணும்னு நினைக்கிறதைவிட, கதை மற்றும் இயக்குநர் களைத்தான் முக்கியமா பார்ப்பேன். இதுவரை ஐந்து மொழிகளில் 150 படங்களுக்கு மேல நடிச்சிருப்பேன். அதில் முக்கால்வாசி படங்களில் ஹீரோயின் ரோல். என் படங்களுக்கு நானே டப்பிங் பேசினதோடு, சில இயக்குநர்கள் கேட்டுக்கொண்டதால பிற நடிகைகளுக்கும் டப்பிங் கொடுத்திருக்கேன்.

1980s evergreen heroins - actress Revathi
1980s evergreen heroins - actress Revathi
Aval Vikatan

இதுக்கிடையே புது அவதாரம் எடுத்து, நான்கு படங்களை இயக்கியிருக்கேன். கே.பாலசந்தர் சார், `நீ இயக்கின `பிர் மிலேங்கே’ படம் பார்த்தேன்’னு சொல்லி, அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியைப் பத்தியும் நீண்ட நேரம் பாராட்டிப் பேசினார். இதுதான், இயக்குநரா எனக்குக் கிடைச்ச பெரிய பெருமை.

மஹி, என் உலகம்!

என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம். அப்போ கொஞ்சம் நிதானமா முடிவெடுத்திருந்தால், என் சினிமா ட்ராக் வேறு மாதிரி மாறியிருக்கும். இன்னும்கூட நிறைய நல்ல படங்கள்ல நடிச்சிருப்பேன். தியேட்டர் நாடகங்கள்ல கொஞ்சம் காலம் நடிச்சேன். இப்போ சில ஆண்டுகளாகத்தான் மீண்டும் நல்ல ரோல்கள் வர ஆரம்பிச்சிருக்கு. ஆக்டிவ்வா நடிக்கிறேன். காலம் நம்மை எப்படியெல்லாம் இயக்குதுன்னு பார்ப்போம். விவரம் புரிஞ்ச காலத்துல இருந்து, சமூகத்துக்கு என்னாலான பங்களிப்பைக் கொடுக்கணும்னு நினைப்பேன். அதனாலதான் ஆறு வருஷங்கள் அரசியலிலும் ஈடுபட்டேன். ஆனா, அது எனக்குப் பொருத்தமான களம் கிடையாது என்பதால் அதிலிருந்து விலகிட்டேன். இருந்தாலும் தொடர்ந்து சமூகப் பணிகளில் கவனம் செலுத்துறேன். வாழ்க்கையில் நான் ஆசைப்பட்டு, பல வருஷங்களுக்குப் பிறகு கிடைச்ச வரம், என் மகள் மஹி. அவ வந்த பிறகு வாழ்க்கை மிக அழகாக மாறியிருக்கு.

- நாயகிகள் பேசுவார்கள்!

இயக்குநர் ரேவதி கம்பேக்!

ஹீரோயினா நடிச்சபோது கிடைச்ச சவாலான ரோல்கள் இப்போ மிக அரிதாகவே கிடைக்குது. அதனால இன்னும் சில ஆண்டுகளில், இயக்குநர் பணியில் அதிக கவனம் செலுத்தலாம்னு முடிவெடுத்திருக்கேன். இப்போ ரெண்டு இந்திப் படங்களுக்கான ஸ்கிரிப்ட் தயார் பண்ணியிருக்கேன். வெப் சீரிஸ் பண்ற யோசனையும், பயோபிக் படத்துல நடிக்கிற ஆசையும் இருக்கு.

நிறைவேறாத ஆசைகள்!

கே.விஸ்வநாத் சார் இயக்கத்தில் நடிக்கணும்கிற என் ஆசை நிறைவேறலை. வங்காள மொழிப் படங்கள் மீது எனக்குப் பெரிய பிரியம் உண்டு. அந்த மொழி சினிமாவில் சிறந்த இயக்குநரான ரிதுபர்னோ கோஷ், எட்டு வருடங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தபோது அவரைச் சந்திச்சேன். நல்ல கதையிருந்தால், உங்க இயக்கத்தில் நடிக்கிறேன்னு சொன்னேன். 2013-ல் அவர் என்னை அழைச்சு, `உங்களுக்காக ஒரு கதை தயார் பண்ணியிருக்கேன்’னு சொன்னார். அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கலை. அடுத்த சில மாதங்களிலேயே அவர் இறந்துட்டார்.