மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 23 - முழுநேர இயற்கை விவசாயி ஆக ஆசை! - ரோஹிணி

ரோஹிணி
பிரீமியம் ஸ்டோரி
News
ரோஹிணி ( அவள் விகடன் )

திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் தமிழ் சினிமாவுல எனக்குக் கிடைக்கலைங்கிற ஆதங்கம் இப்போவரை எனக்குண்டு...

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்கள் வெற்றிக்கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், ரோஹிணி.

தெலுங்கு சினிமாவால் கண்டெடுக்கப்பட்டு, மலையாள சினிமாவால் வளர்க்கப்பட்டு, தமிழ் சினிமாவால் மெருகேற்றப்பட்ட யதார்த்த நடிகை, ரோஹிணி. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர், 45 ஆண்டுகளாகியும் இன்றும் இளமைத் துடிப்புடன் நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகை, சிங்கிள் பேரன்ட், டப்பிங் கலைஞர், பாடலாசிரியர், இயக்குநர், சமூக ஆர்வலர் எனப் பல தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் ரோஹிணி, தன் வெற்றிப் பயணம் குறித்து மனம் திறக்கிறார்.

அதிகாலை ஷூட்டிங்… சீனியர்களுக்கு மரியாதை!

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள்
80’ஸ் எவர்கிரீன் நாயகிகள்
அவள் விகடன்

பூர்வீகம் ஆந்திர மாநிலம். என் அஞ்சு வயசுல அம்மா இறந்துட்டாங்க. அடுத்த சில மாதங்களிலேயே அப்பா ராவு நாயுடு தன் பஞ்சாயத்து அதிகாரி பணியை ராஜினாமா செய்துட்டார். பிறகு, சென்னை வந்துட்டோம். அப்பா இன்னொரு கல்யாணம் செய்துகிட்டார். அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை. அதுக்காக அவர் வாய்ப்பு தேடி போகும்போதெல்லாம் என்னையும் அழைச்சுட்டுப் போவார். அப்பாவுக்குப் பதிலா எனக்கு வாய்ப்பு கிடைச்சதுதான் சுவாரஸ்யம். என் ஆறு வயசுல, `யசோதா கிருஷ்ணா’ங்கிற தெலுங்குப் படத்துல குழந்தை நட்சத்திரமா அறிமுகமானேன். மைசூர்ல ஷூட்டிங். அதிகாலை 5 மணிக்கு எழுப்பிவிட்டு, என் உடம்புல ப்ளூ கலர் பெயின்ட் அடிப்பாங்க. குழந்தை கிருஷ்ணரா நடிச்ச எனக்கு, சாப்பிட நிறைய வெண்ணெய் கொடுப்பாங்க.

கம்சனாக நடிச்ச எஸ்.வி.ரங்கா ராவ் என் மேல ரொம்பவே அன்பு காட்டுவார்; அடிக்கடி ஜூஸ் கொடுப்பார். சீக்கிரம் நடிச்சு முடிச்சுட்டா, என்னை விளையாட விடுவாங்க. அதனால, அப்பா சொல்லிக்கொடுக்கிறதை கவனமா கேட்டு, கிளிப்பிள்ளை மாதிரி சரியா டயலாக் பேசுவேன். அப்போதைய லைவ் ரெக்கார்டிங்ல சமத்தா நடிப்பேன்.

என்.டி.ராம ராவ், நாகேஸ்வர ராவ், ஜமுனான்னு தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களின் குழந்தையாக 150 படங்களுக்கு மேல நடிச்சேன். `மேயர் மீனாட்சி’, `முருகன் அடிமை’னு சில தமிழ்ப் படங்கள்லயும் நடிச்சேன். அப்போ என்னுடன் நடிச்ச பெரிய நடிகர்கள் பத்தி யெல்லாம் தெரியாவிட்டாலும், அப்பா சொல்லிக்கொடுத்தபடி சீனியர் கலைஞர்கள் யார் வந்தாலும் எழுந்து நின்று வணக்கம் சொல்வேன்.

அப்பாவுக்குக் கடிதம்… மீண்டும் நடிப்பு!

விருப்பமில்லாம ஒருவிதமான அழுத்தத்துடன்தான் குழந்தை நட்சத்திரமா நடிச்சேன். படிக்கணும், நண்பர்களுடன் விளையாடணும்னு ரொம்பவே ஏங்குவேன். அதெல்லாம் தொடர்ச்சியான நடிப்பால் சாத்தியமாகலை. எனக்கு ஷூட்டிங் இல்லாதப்போ, வீட்டுக்கே ஒரு மாஸ்டர் வந்து, தமிழ் மற்றும் தெலுங்குப் பாடங்கள் சொல்லிக்கொடுத்தார். அப்படித்தான் நாலாவதுவரை படிச்சேன். பிறகு, நடிப்பை நிறுத்திட்டு, அஞ்சாவதிலிருந்து ரெகுலர் ஸ்கூல் போனேன். நல்லா படிச்சதால, அடுத்து நேரடியா ஏழாவதுக்கு மாத்தினாங்க. அப்போ சினிமா விநியோகஸ்தரா வேலை செய்த அப்பா, வெளியூர்களுக்கு அதிகம் பயணம் செய்வார். ஏழாவது முடிச்சதும் அடுத்த வகுப்புக்குப் போக ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்னு அப்பாவுக்கு நிறைய கடிதம் அனுப்பினேன். பதிலே வரலை!

ரோஹிணி
ரோஹிணி
அவள் விகடன்

பிறகு ஒருநாள் வந்தவர், தன் தொழில் நஷ்டமாகிடுச்சுன்னு, மீண்டும் என்னை நடிக்கச் சொன்னார். அவர் பேச்சை மீற முடியலை. படிப்பை நிறுத்திட்டு, விருப்பமில்லாமலே மீண்டும் நடிக்க ஆரம்பிச்சேன். அப்போதான், `பார்வையின் மறுபக்கம்’, `இளமைக் காலங்கள்’ உட்பட பல மொழிப் படங்கள்ல, என் வயசுக்கு ஏற்ற தங்கச்சி உள்ளிட்ட கேரக்டர் ரோல்கள்ல நடிச்சேன். கூடவே, கரஸ்ல ஸ்கூல் படிப்பையும் முடிச்சேன். அப்போ, என் விருப்பத்தை யாரும் கேட்கலை. `நீ ஹீரோயினா புகழ்பெறணும்’னு என்மேல ஒரு திணிப்பு இருந்துட்டே இருந்துச்சு. அந்த 1982-ம் ஆண்டு, `கக்கா’ மலையாளப் படத்துல ஹீரோயினா அறிமுகமானேன். அந்தப் படத் தின் வெற்றிக்குப் பிறகு, செய்ற வேலையை திறம்படச் செய்யணும்கிற பொறுப்புணர்வும், நடிகராகும் பாக்கியம் எல்லோருக்கும் அமையாதுங்கிற தெளிவும் எனக்கு உண்டாச்சு.

ஹீரோயின் புகழ்… விக்ரமின் இன்றைய வளர்ச்சி!

பிறகு, மலையாளம் கத்துக்கிட்டேன்; நானே கதைகள் கேட்டேன்; டான்ஸ் கத்துக்கிட்டேன்; அர்ப்பணிப்புடன் செயல் பட்டேன். அப்போதைய மலையாள முன்னணி இயக்குநர்கள் பலரின் படங்கள்ல நடிச்சேன். அதுவும், சினிமாவை உயிர் மூச்சாக நினைக்கிற மூத்த கலைஞர்களுடன் இணைந்து நடிச்சபோது கத்துக்கிட்ட விஷயங்களும் தாம் என் சினிமா பயணத்துக்குப் பெரிய அஸ்திவாரம். நடிகையா என்னை மெருகேத்திட்டு, சினிமாவை என் கரியரா தேர்வு செய்தேன். `பரன்னு பரன்னு பரன்னு’, `ஒழிவுக்காலம்’, `அகலத்தே அம்பிளி’ன்னு நிறைய வெற்றிப் படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். மலையாளத்துல முன்னணி நடிகையா புகழ்பெற்றேன்.

தமிழில், `அண்ணி’ படத்துல ஹீரோயினா அறிமுகமானேன். பெரிய இடைவெளிக்குப் பிறகு, ஸ்ரீதர் சார் இயக்கத்துல `தந்துவிட்டேன் என்னை’ படத்தில் நடிச்சது பெரிய அனுபவம். ஸ்ரீதர் சாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், சவாலா எடுத்துகிட்டு ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாகப் படமாக்கினார். என் ஜோடியா நடிச்ச விக்ரமுக்கு அது அறிமுகப் படம். இப்போதைய அவரின் வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படறேன். `பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம்தான் எனக்குத் தமிழ்ல நல்ல அடையாளம் கிடைச்சது. ரொம்ப நல்ல படம் அது. க்ளைமாக்ஸ்ல நான் மனநலம் பாதிச்ச மாதிரி ஆகிடுவேன். அதுக்காக, டல் மேக்கப் போட்டு, ரயில் நிலையத்துல நாள் முழுக்க என்னை அலையவிட்டார், இயக்குநர் பாக்யராஜ் சார். யாருமே என்னைக் கண்டுபிடிக்கலை. ஒருத்தர் எனக்குப் பிச்சை போட்டார்!

வாய்ப்பு கேட்ட படங்கள்… என் இயல்பே போதும்!

எல்லோரும் கஷ்டப்பட்டு உழைச்சிருந்தாலும், `பவுனு பவுனுதான்’ படம் ஹிட்டாகலை. அதனால, எனக்கும் பாக்யராஜ் சாருக்கும் பெரிய வருத்தம். இப்போவரை என்னை `பவுனு’ன்னுதான் பாக்யராஜ் சார் கூப்பிடுவார். அந்தப் படம் ஹிட்டாகியிருந்தால், அதுபோன்ற பல அழுத்தமான ரோல்கள் எனக்குக் கிடைச்சிருக்கும். ஆனாலும், மனம் தளராமல் தொடர்ந்து நடிச்சேன். யதார்த்தமான நடிப்பை எதிர்பார்க்கும் பாலு மகேந்திரா சார்கிட்ட வாய்ப்பு கேட்டு நடிச்சதுதான் `மறுபடியும்’ படம். 90-களில், கமல்ஹாசன் சார் `பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்க முயன்றார். `அந்தப் படம் எடுத்தா, எனக்குப் பிடிச்ச பூங்குழலி கேரக்டர்ல நடிக்கிறேன்’னு கமல் சார்கிட்ட சொன்னேன். அந்தப் படம் எடுக்க முடியாவிட்டாலும், `மகளிர் மட்டும்’ படத்தைத் தயாரிச்சவர் அதில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இதுவரை நடிப்புக்காக நான் வாய்ப்பு கேட்டது, இந்த இருவரிடம் மட்டுமே!

நான் உயரம் குறைவா இருக்கிறதையும் என் மூக்கு கொஞ்சம் பெரிசா இருக்கிறது சரியா இல்லைன்னும் சினிமா துறையில பலரும் சொல்லியிருக்காங்க. `ஸ்ரீதேவி செய்து கிட்டதுபோல, நீயும் ஆபரேஷன் செஞ்சு மூக்கின் வடிவத்தை மாத்திக்கோ’ன்னு எங்கப்பா சொன்னார். நான், `என் இயல்புலதான் நடிப்பேன்’னு உறுதியா சொல்லிட்டேன். `நட்சத்திர நாயகன்’, `புது பிறவி’, `தாமரை’ன்னு நிறைய வெற்றிப் படங்கள்ல நடிச்சேன். `ஸ்த்ரீ’ என்ற தெலுங்குப் படத்தில் நடிச்சு, தேசிய விருதும் வாங்கினேன். அதுக்காக, இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜி போன் பண்ணி என்னைப் பாராட்டியது மிகப்பெரிய பெருமை. ஆனாலும், திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் தமிழ் சினிமாவுல எனக்குக் கிடைக்கலைங்கிற ஆதங்கம் இப்போவரை எனக்குண்டு.

ரீ-என்ட்ரி நடிப்பு... நல்ல பெற்றோர்!

ரகுவரனும் நானும் காதல் திருமணம் செய்துகிட்டோம். ஒருகட்டத்தில் எங்க மகனுக்காக, நியாயமான காரணத்துக்காகவே நான் ரகுவிடமிருந்து பிரிஞ்சேன். பிறகு, பொருளாதாரத் தேவைக்காக மீண்டும் நடிக்க முடிவெடுத்தேன். நான் தொகுப்பாளரா வேலை செய்த `கேள்விகள் ஆயிரம்’ நிகழ்ச்சி பிரபலமாச்சு. அதைப் பார்த்துத்தான், `விருமாண்டி’ படத்துல எனக்கு ரீ-என்ட்ரி வாய்ப்பு கொடுத்தார் கமல் சார். பிறகு, `ஐயா’, `தாமிரபரணி’ படங்கள் உட்பட இப்போவரை தொடர்ந்து கேரக்டர் ரோல்கள்ல நடிக்கிறேன்.

ரகுவும் நானும் பிரிந்திருந்தாலும், நல்ல நண்பர்களாகவும் ரிஷிக்கு நல்ல பெற்றோராகவும் இருந்தோம். ஒரு படத்தின் ஷூட்டிங் முடிஞ்சு நான், ஆச்சி மனோரமா, மகன் ரிஷி ஆகியோர் ரயில்ல வந்திட்டிருந்தோம். எங்களின் டிக்கெட் தொலைந்துபோனது, டி.டி.ஆர் வந்தப்போதான் தெரிஞ்சது. எவ்வளவோ சொல்லியும் கேட்காத டி.டி.ஆர், `அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிடுங்க’ன்னு கோபமா சொல்லிட்டார். அப்போ யதேச்சையா போன் செய்த ரகுவரன்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். அவர் டி.டி.ஆர்கிட்ட பேசணும்னு சொல்ல, நான் போனைக் கொடுத்தேன். ரகு என்ன பேசினார்னு தெரியலை. `நீங்க இதே ட்ரெயின்ல டிராவல் செய்யலாம்’னு சொல்லிட்டு, டி.டி.ஆர் அமைதியா போயிட்டார். பிரிந்திருந்தாலும், எங்களுக்குள் அன்பு குறையாததுக்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்!

ரகுவரன், மகன் ரிஷி, ரோஹிணி
ரகுவரன், மகன் ரிஷி, ரோஹிணி
அவள் விகடன்

மகன் ரிஷியின் ஒன்பது வயசுலேருந்து நான் சிங்கிள் பேரன்ட். அவனைச் சரியான பாதையில் வளர்த்திருக்கேன். அப்பாவின் பிரிவிலிருந்து அவனை மீட்டெடுக்க ரொம்பவே மெனக்கெட்டேன். இப்போ 21 வயதிலிருக்கும் ரிஷி, ரொம்ப ஸ்மார்ட். பக்குவத்துடன் அவனுடைய எதிர்காலத்தை தீர்மானிச்சுக்கிறான். அமெரிக்காவில் வரும் மே மாதத்தில் நான்காம் வருட மெடிசின் படிப்பை முடிக்கிறான். பிறகு, ஸ்காலர்ஷிப்ல மேற்படிப்பை அவனே பார்த்துப்பான். இவ்வளவு வருஷமா பொருளாதாரத் தேவைக்காக நான் ஓடிய ஓட்டமெல்லாம் ரிஷியின் படிப்புக்காகத்தான். இனி அந்த ஓட்டத்துக்கு அவசியமில்லை.

நிதானமான நடிப்பு… வருத்தமில்லாத தனிமை!

இந்தி உட்பட ஐந்து மொழிகளில், 500 படங்களுக்கு மேல நடிச்சிருப்பேன். அதில், 100 படங்களுக்கும் மேல் ஹீரோயின்! ஹீரோயினா நடிச்சப்போ தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வரலைன்னு வருத்தப்பட்டேன். ஆனா, `பாகுபலி’ உட்பட பல நல்ல தெலுங்குப் பட வாய்ப்புகள் இப்போதான் அதிகம் வருது. அதனால, உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, இளமைத் தோற்றத்துல என்னைப் பராமரிச்சுக்கிறேன். நல்ல கதைகளைத் தேர்வு செஞ்சு, நிதானமா நடிக்கிறேன். இயக்குநராக ஆக்டிவா வேலை செய்யணும்னு, அதற்கான முயற்சிகளையும் செய்துட்டிருக்கேன்.

நிறைய பயணம் செய்து, புதுப்புது மனிதர் களைச் சந்திக்கிறேன். வீட்டுல நூலகம் இருக்கு. வாசிப்புக்கு அதிக நேரம் செலவிடுவேன். பல மொழிப் படங்களையும், தியேட்டருக்குப் போய்ப் பார்ப்பேன். இளைய தலைமுறைக்கு ஊக்கம் கொடுக்கிற சிறுகதைகளை யூடியூப் மற்றும் ரேடியோ வாயிலாகக் கொண்டுபோகிற எண்ணம் இருக்கு. இயற்கை விவசாயத்துல எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. எதிர்காலத்துல முழுநேர இயற்கை விவசாயி ஆகணும், குழந்தைகளுக்கான ஸ்கூல் நடத்தணும்னு நிறைய ஆசைஇருக்கு. கடந்த நாலு வருஷமா தனிமையில் வசிச்சாலும், கொஞ்சம்கூட வருத்தமில்லாம எதிர்கால இலக்குகளை நோக்கி உற்சாகமா இயங்கிட்டிருக்கேன்!

- நாயகிகள் பேசுவார்கள்!

என் குரலில் ஐஸ்வர்யா ராய்!

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய்
அவள் விகடன்

`இதயத்தைத் திருடாதே’ படத்துல ஹீரோயினுக்கு என்னை டப்பிங் பேச வெச்சார், மணிரத்னம் சார். பிறகு, நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. டப்பிங் ஆர்டிஸ்ட்டுன்னு முத்திரைக் குத்திடுவாங்கன்னு நினைச்சு, பல டப்பிங் வாய்ப்புகளை மறுத்தேன். ஆனா, பல இயக்குநர்கள் வலியுறுத்தினதாலும், இது சிறப்பான வேலைன்னு உணர்ந்ததாலும் தொடர்ந்து நிறைய படங்கள்ல நல்ல கேரக்டர்களுக்கு டப்பிங் கொடுத்தேன். அந்த வேலை, என் ஆக்டிங் வாய்ப்புகளை பாதிக்கலை. ஐஸ்வர்யா ராய், மனிஷா கொய்ராலாவுக்கு அதிகம் டப்பிங் பேசியிருக்கேன். டப்பிங் பணியில, என் நிஜக் குரல் பிறருக்குத் தெரியாம இருக்கணும்னு மெனக்கெட்டுதான் பேசுவேன்!

உற்சாகத்தை அதிகரிக்கும் மல்டி டாஸ்க்!

`மறுபடியும்’ படத்தில் நடிக்கும்போது, பாலு மகேந்திரா சார் சொல்லி, பிலிம் அப்ரிஸியேஷன் கோர்ஸ்ல கலந்துகிட்டேன். அப்போ, நிறைய உலக சினிமா படங்களைப் பார்த்து வியந்து இயக்குநராக முடிவெடுத்தேன். அதுக்கு என்னைத் தயார்படுத்திக்கிட்டு, `அப்பாவின் மீசை’ படத்தை இயக்கினேன். இதுக் கிடையே,`வேருக்கு நீர்’ நாவலை நடிகை ரேவதி தூர்தர்ஷன்ல டெலி பிலிமாக எடுக்க, அதற்கு நான் திரைக்கதை எழுதினேன். ஒருநாள், `பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்துக்கு ஜோதிகாவுக்கு நான் டப்பிங் பேசிட்டிருந்தேன். அப்போ போன் செய்த ரேவதி, `வேருக்கு நீர்’ டெலி பிலிமுக்கு சில வரி தமிழ்ப் பாடலை உடனே எழுதித்தரச் சொன்னாங்க. எழுதிக்கொடுத்தேன்! என் பக்கத்துல இருந்த இயக்குநர் கெளதம் மேனன் ஆச்சர்யப்பட்டு, `பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்துக்கு ஒரு பாடல் எழுதச் சொன்னார். அப்படித்தான், `உனக்குள் நானே’ பாடலை எழுதினேன். தொடர்ந்து சில படங்கள்ல பாடல்கள் எழுதினேன். பாடலாசிரியர்கள் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில், நாம இதை ஒரு பிரதான வேலையா செய்யக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். தவிர, நவீன மேடை நாடகங்கள்ல நடிக்கிறேன். திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் எடுக்கிறேன். முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் துணைத் தலைவராகவும் பணியாற்றுகிறேன். இப்படி மல்டி டாஸ்க் பணிகள், என் உற்சாகத்தை அதிகரிக்குது!

பயப்பட மாட்டேன்!

அம்மா இல்லாத வெறுமை, படிப்பை இழந்ததெல்லாம் என்னை அதிகம் பாதிச்சிருக்கு. பெற்றோர் இல்லாத மனக்குறையுடன் வளரும் குழந்தைகளின் உணர்வுகள் எனக்குப் புரியும். அப்படியான ரெண்டு குழந்தைகளுக்கு, என் 18 வயசுல ஸ்பான்ஸரானேன். மாதம்தோறும் அவங்களைச் சந்திச்சு அன்பு செலுத்தினேன்.

படிப்புக்காகப் பல்வேறு குழந்தைகளுக்கு அமைதியா உதவிகள் செய்துட்டிருக்கேன். மனநலம் பாதித்த, ஹெ.ஐ.வி பாதித்த, ஆதரவற்ற பெண்களின் நிலையை நேரில் உணர்ந்து அதற்கு என்னாலான உதவி செய்யறேன். பல இடங்கள்ல அதைப் பத்திப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தறேன்.

மக்களுக்காகப் பணி செய்றதும், அதற்காக ஆக்கபூர்வமாகச் செயல்படுறதும்தான் அரசியல். ஆட்சியாளர்கள் செய்ற பல விஷயங்கள் மக்களை நேரடியா பாதிக்குது. அது பத்தி குரல் கொடுத்து, ஆட்சியாளர்களுக்குப் புரியவைக்க வேண்டியது குடிமக்களின் கடமை. அதை மக்களில் ஒருத்தியா செய்றேன். கவனம் ஈர்க்க வேண்டிய விஷயங்களுக்குக் குரல் கொடுக்கிறேன். அதற்கான எதிர்வினைகள் வந்தாலும் பயப்பட மாட்டேன்!