மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 19: இனியும் தனியாகவே வாழ விரும்புகிறேன்! - நடிகை சீதா

1980s evergreen heroins - Actress Seetha
பிரீமியம் ஸ்டோரி
News
1980s evergreen heroins - Actress Seetha ( Aval Vikatan )

‘குரு சிஷ்யன்’ படத்துல கொஞ்சம் கிளாமரா நடிச்சதால சினிமா மற்றும் குடும்ப நண்பர்கள் பலரும் என்னைத் திட்டினாங்க.

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், சீதா.

அழகும் நடிப்பும் ஒருங்கே அமைந்த சீதா, ஹோம்லி கேரக்டர்களில் நடித்துப் புகழ்பெற்றவர். நான்கரை ஆண்டுகள் மட்டுமே கதாநாயகியாக நடித்தாலும், மக்களின் அன்பை அதிகம் பெற்றார். வாழ்க்கையில் இவர் பயணித்த தடங்கள் பலவும் திருப்பங்கள் நிறைந்தவை. இன்றும் நடிப்பைத் தொடரும் சீதா, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

செல்லக் குழந்தை... சினிமா வாய்ப்பு!

என் பூர்வீகம், சென்னைதான். எப்போதும் எங்க வீட்டில் உறவினர் கள் உட்பட 25 பேர் இருப்பாங்க. எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுறதே அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதில் ஒரே பெண் குழந்தை யான என்னை, கஷ்டம் தெரியாம செல்லமா வளர்த்தாங்க. அமைதி மற்றும் வெகுளித்தனம்கொண்ட நான், யாராச்சும் அதட்டினாக்கூட அழுதுடுவேன்.

அப்பா மோகன் பாபு, தமிழ் சினிமாவில் கேரக்டர் ரோல்களில் நடிச்சிட்டிருந்தார். வீட்டில் சினிமா பத்தி பேச மாட்டோம். சினிமா தியேட்டருக்கும் கூட்டிட்டுப்போக மாட்டாங்க. எனக்குப் பிடிச்ச மசால் தோசை மற்றும் ரோஸ் மில்க் சாப்பிட மட்டும் எப்பவாச்சும் அவுட்டிங் கூட்டிட்டுப்போவாங்க. நல்லா படிப்பேன். டாக்டராகணும்னு ஆசைப்பட்டேன்.

ஒரு கல்யாண நிகழ்ச்சியில் நான் கலந்துகிட்டதை வீடியோ கேசட்டில் பார்த்த இயக்குநர் பாண்டியராஜன் சார், என் அப்பா மூலமா என்னை நடிக்கக் கேட்டார். அப்போ பத்தாவது படிச்சுகிட்டிருந்த எனக்கு நடிக்க விருப்பமில்லை. `வர்ற வாய்ப்பை ஏன் வேண்டாம்னு சொல்லணும்? இந்த ஒரு படத்தில் மட்டும் நடி. பிறகு, உன் விருப்பம்’னு அப்பா சொன்னார்.

‘உன்னால் முடியும் தம்பி’ - கமலுடன்...
‘உன்னால் முடியும் தம்பி’ - கமலுடன்...
Aval Vikatan

ஒருநாள் எங்க வீட்டுக்கு வந்த பாண்டிய ராஜன் சார், `நீ பயப்படாம நடிக்கலாம். உன்னை யாரும் தொட்டுப் பேச மாட்டாங்க. உனக்கு எந்தத் தொந்தரவும் இல்லாம நான் பார்த்துக்கிறேன்’னு சொன்னார். வெளிநாட்டில் வேலை செய்துட்டிருந்த எங்கம்மாவும் வலியுறுத்தி னாங்க. பிறகுதான், `ஆண் பாவம்’ படத்துல நடிக்க சம்மதிச்சேன்.

வருத்தம் தெரிவிச்ச பாண்டியராஜன்... சிரிப்புதான் வருது!

ஏவி.எம் ஸ்டூடியோவில் ஷூட்டிங். படுத்துக்கிட்டே காலை ஆட்டுவதுதான், நான் நடிச்ச முதல் காட்சி. ஷாட் முடிஞ்சதுகூட எனக்குச் சொல்லப்படலை. நான் திரும்பிப் பார்த்தப்போ, எல்லோரும் லொக்கேஷனை மாத்திட்டு வேறு பக்கம் போயிட்டாங்க. இப்படி அப்பாவியா இருந்தேன். தண்ணீர் நிரம்பிய கனமான குடத்தை நான் தூக்கும் காட்சி. அஞ்சு டேக் மேல போயிடுச்சு. `இதைக்கூட தூக்க மாட்டியா?’னு சத்தம்போட்ட பாண்டியராஜன் சார், என் கையில பட்டுன்னு அடிச்சுட்டார். பயங்கர கோபத்தில், எங்கப்பாவைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். மூணு நாள்கள் கழிச்சு எங்க வீட்டுக்கு வந்த பாண்டியராஜன் சார், என்கிட்ட வருத்தம் தெரிவிச்சார். அதோடு, `உன்னை ஹீரோயினா புக் பண்ணது என் தப்புமா’ன்னு அவர் சொல்ல, `மறுபடியும் திட்டுறார்’னு வருத்தப்பட்டேன். நான் செல்லமா வளர்க்கப்பட்டதை இயக்குநர்கிட்ட எங்கப்பா விளக்கிச் சொன்னார். `இனி திட்டமாட்டேன்’னு சொல்லி, என்னை ஷூட்டிங் வரச்சொன்னார் பாண்டியராஜன் சார்.

என்னால மூணு நாள்கள் ஷூட்டிங் நடக்காத நிலையில், மீண்டும் ஷூட்டிங் போனேன். தண்ணியில்லாம வெறும் குடத்தை மட்டும் தூக்கி நடிச்சேன். எடிட்டிங்ல, தண்ணீருடன் தூக்குற மாதிரி மாத்திட்டாங்க. இதுக்கிடையே, திடீர்னு ஒருநாள், `நீங்க சொல்ற மாதிரி நடிக்கிறேன். ஆனா, பெரிசா என்னோட இன்வால்வ்மென்ட் இருக்கிற மாதிரி தெரியலையே. நான் நல்லா நடிக்கிறேனா?’ன்னு இயக்குநர்கிட்ட கேட்டேன். எனக்குக் கைகொடுத்து, `எரும மாடு மேல மழை பெய்த மாதிரி இருக்கியேன்னு நினைச்சேன். பரவாயில்லை! இனிமேல் நீ நல்லா நடிச்சு, பெயர் வாங்கிடுவே’னு பாராட்டினார். அப்புறம்தான் ஆர்வத்துடன் நடிச்சேன். அந்தப் படத்தில் நடிச்சு முடிக்கிறதுக்குள், பாண்டியராஜன் சாரை ரொம்ப படுத்தி எடுத்துட்டேன். அதையெல்லாம் நினைக் கிறப்போ இப்போ சிரிப்புதான் வருது.

சம்பளத்துக்குப் பதிலாக கார்... நோ கிளாமர் ரோல்!

`ஆண் பாவம்’ ரிலீஸான நாள், ஸ்கூட்டர்ல எங்கப்பாவுடன் தியேட்ட ருக்குப் படம் பார்க்கப்போனேன். ரசிகர்களின் ஆதரவினால், படம் பெரிய ஹிட்னு தெரிஞ்சது. அங்க இருந்த பாண்டியராஜன் சார் மற்றும் தயாரிப்பாளர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கினேன். அந்த முதல் படத்தில் எனக்குச் சம்பளம் கிடையாது. அதனால், தயாரிப்பாளர் எனக்கு அம்பாசிடர் கார் ஒன்றைப் பரிசாகக் கொடுக்க, அதன் சாவியை பாண்டியராஜன் சார் என்கிட்ட கொடுத்தார். அந்த கார்லதான் தியேட்டரிலிருந்து நானும் அப்பாவும் வீட்டுக்கு வந்தோம். அந்தப் படத்தின் வெற்றி மற்றும் மக்கள் அன்பினால் ரொம்ப சந்தோஷப்பட்டேன். தொடர்ந்து நடிக்க முடிவெடுத்து, படிப்பை நிறுத்திட்டேன்.

1980s evergreen heroins - Actress Seetha
1980s evergreen heroins - Actress Seetha
Aval Vikatan

தெலுங்கிலும் நல்ல படங்கள் அமைஞ்சது. அப்போ புதுமுகங்கள் நல்லா நடிச்சா, சுத்தியிருக்கிற எல்லோரும் கைதட்டி ஊக்கப்படுத்துவாங்க. எனக்கு சாக்லேட், ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுப்பாங்க. இதுக்கெல்லாம் ஆசைப்பட்டு ஆர்வத்துடன் நடிச்சேன். என் படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனதால், நடிக்க வந்த ஒரு வருஷத்துலயே முன்னணி நடிகையாகிட்டேன். ஆனாலும், தயாரிப்பாளர்கள் நலன் கருதி என் சம்பளத்தை எங்கப்பா உயர்த்தாமல் இருந்தார்.

`குரு சிஷ்யன்’ படத்துல கொஞ்சம் கிளாமரா நடிச்சேன். அதனால், சினிமா மற்றும் குடும்ப நண்பர்கள் பலரும் என்னைத் திட்டினாங்க. `நல்ல ரோல்களில் நடிச்சுட்டிருக்கிற நீ, கிளாமர் ரோல்களில் எதுக்கு நடிக்கிறே?’ன்னு கே.பாலசந்தர் சார் அக்கறையுடன் கேட்டார். `உனக்குப் பெரிய எதிர்காலம் இருக்கு. கிளாமர் ரோல்ல நடிச்சு, உன் மதிப்பைக் குறைச்சுக்காதே’ன்னு சொன்னார் விசு சார். அதன்பிறகு ஹோம்லி ரோல்களில் மட்டுமே நடிச்சேன்.

கே.பாலசந்தரின் ஊக்கம்... ராமராஜன் வலியுறுத்தல்!

ஒருநாள் கே.பாலசந்தர் சார் போன் பண்ணி, `என் அடுத்த படத்துல நீ ஹீரோயின்’னு சொன்னார். எந்த விவரமும் கேட்காம, `சரிங்க சார்’னு சொல்லிட்டேன். அவருடைய அசோசி யேட் இயக்குநரா இருந்த வசந்த், எங்க வீட்டுக்கு வந்து கதை சொன்னதுடன், `உன்னால் முடியும் தம்பி’ படத்துல நான் கமல்ஹாசன் சாருக்கு ஜோடியா நடிக்கிறதாகவும் சொன்னார். பாலசந்தர் சார் இயக்கத்துல எந்தச் சிரமமும் இல்லாம நடிச்சேன். கமல் சாரும் நடிப்பு, டான்ஸ்னு பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார். அப்பல்லாம் என் குரல் ரொம்பவே சாஃப்டா இருக்குன்னு பலரும் கிண்டல் பண்ணுவாங்க. அதனால என் படங்களுக்கு டப்பிங் கொடுக்காம இருந்தேன். `உன் குரல் நல்லா இருக்கு’ன்னு ஊக்கப்படுத்தி, `உன்னால் முடியும் தம்பி’ படத்தில் டப்பிங் பேச வெச்சார் பாலசந்தர் சார். நான் சாஃப்டான பர்சன். எனக்கு ஆக்ரோஷமா டயலாக் பேச, சண்டை போட தெரியாது. என்னைத் தேடிவந்த குடும்பப்பாங்கான ரோல்களில்தான் நடிச்சேன்.

நான் நடிச்ச படங்களைக்கூட தியேட்டரில் பார்க்க நேரமிருக்காது. தினமும் மூணு ஷிஃப்ட்ல ஓய்வில்லாம நடிச்சேன். `பெண்மணி அவள் கண்மணி’, `சங்கர் குரு’, `ராஜ நடை’, `ஆடி வெள்ளி’, `வீடு மனைவி மக்கள்’, `மருது பாண்டி’, `படிச்ச புள்ள’னு நிறைய வெற்றிப் படங்கள் அமைஞ்சது. தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் புகழ்பெற்றேன். ஆனா, முன்னணி நடிகைங்கிற எண்ணம் எனக்குள் ஏற்பட்டதேயில்லை. `கரகாட்டக்காரன்’ படத்துல என்னை நடிக்கச் சொல்லி ராமராஜன் சார் ரொம்பவே வலியுறுத்தினார். அந்தப் படம் உட்பட பல வாய்ப்புகளை கால்ஷீட் பிரச்னையால் இழந்தேன்.

`புதிய பாதை’... காதல் பாதை!

`புதிய பாதை’ படத்துல என்னை நடிக்கக் கேட்டார், பார்த்திபன் சார். அவர் அறிமுக இயக்குநர் என்பதால, `அந்தப் படத்துல நடிக்க விருப்பமில்லை’னு எங்கப்பாகிட்ட சொன்னேன். அவர், `நல்ல கதை! இந்தப் படம் உனக்குப் பெரிய புகழைக் கொடுக்கும்’னு சொல்லி என்னை வலியுறுத்தி நடிக்க வெச்சார். ஆனா, இயக்குநரா, நடிகரா பார்த்திபன் சாரின் திறமையைப் பார்த்து, அறிமுக இயக்குநர்னு குறைச்சு மதிப்பிட்டது தப்புன்னு உணர்ந்தேன். படம் நல்லபடியா உருவாச்சு. பாதி படம் எடுக்கப்பட்ட நிலையில, நாங்க இருவரும் காதலிக்க ஆரம்பிச்சுட்டோம். காதல் விஷயம் எங்க வீட்டுக்குத் தெரியவர, பெரிய பிரளயமாகிடுச்சு.

1980s evergreen heroins - Actress Seetha
1980s evergreen heroins - Actress Seetha
Aval Vikatan

`நல்ல கதைன்னு படத்துல நடிக்க மட்டும்தானே சொன்னேன். உன்னை யார் லவ் பண்ண சொன்னா?’ன்னு எங்கப்பா என்னைத் திட்டினார். `முதல்லயே நான் நடிக்க மாட்டேன்னு சொன்னேன்ல. என் பேச்சை நீங்க கேட்டிருந்தா இப்போ இந்தப் பிரச்னை வந்திருக்குமா?’ன்னு எங்கப்பாகிட்ட நான் சண்டை போட்டேன்.

அவர் நினைப்பிலிருந்து என் கவனத்தைத் திசை திருப்பணும்னு, எங்கப்பா நிறைய படங்களில் என்னை நடிக்க கமிட் பண்ணினார். அப்பா என் நல்லதுக்காக அப்படிப் பண்றார்னு உணர முடியாத வயசு எனக்கு. பணத்துக்காக என்னை நிறைய படங்கள்ல நடிக்கச் சொல்றார்னு தப்பா நினைச்சதுடன், நான் எடுத்த முடிவுதான் சரின்னு நம்பினேன். என் மனசு வேற இடத்துல இருந்ததால என்னால உண்மையான ஈடுபாட்டுடன் நடிக்க முடியாம ரொம்ப சிரமப்பட்டேன்.

ஒருநாள் வீட்டைவிட்டு வெளியேறி, பார்த்திபன் சாரை கல்யாணம் செய்துகிட்டேன். பிறகு, ஆன்பிராசஸ்ல இருந்த `மல்லுவேட்டி மைனர்’ படத்துல மட்டும் நடிச்சு முடிச்சேன். மிதுன் சக்கரவர்த்தியுடன் நடிக்கவிருந்த ஓர் இந்திப் படம் உட்பட பல படங்களுக்கான அட்வான்ஸ் தொகையைத் திருப்பிக்கொடுத்தோம். அத்துடன் என் ஹீரோயின் பயணம் முடிவுக்கு வந்துச்சு. நான்கரை வருடத்துல, மூணு மொழிகளிலும் 80 படங்களுக்கு மேல ஹீரோயினா நடிச்சேன்.

மனக்கசப்பு... ரீ-என்ட்ரி... கைகொடுத்த சினிமா!

கல்யாணத்துக்குப் பிறகும்கூட, எனக்கு நிறைய நல்ல பட வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, நான் மேற்கொண்டு நடிப்பதில் அவருக்கு விருப்பமில்லை. அவர் விருப்பப்படி நடந்துக்கிறதுதான் சரின்னு 13 வருஷம் நடிக்காமல் இருந்தேன். நான் முழுமையா நம்பி, பெற்றோரை எதிர்த்துட்டுப் போன இல்லற வாழ்க்கையில் நிறைய மனக்கசப்புகளையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டேன். கல்யாண விஷயத்தில் நான் எடுத்த முடிவு தவறுன்னு உணர்ந்தேன். திருமணப் பந்தத்திலிருந்து இருவரும் சுமுகமா விலகி, விவாகரத்து பெற்றோம். அதுமாதிரி ஒரு நாளை யாருமே எதிர்கொள்ளக் கூடாது. அவ்வளவு அழுகை, அவ்வளவு தவிப்பு... அதன் பிறகுதான் என் பெற்றோர் வீட்டுக்கே போனேன்.

என் வாழ்க்கையை மீண்டும் பூஜ்யத்துல இருந்து தொடங்கினேன். பொருளாதார ரீதியா சிரமப்பட்டேன். எதிர்கால வாழ்க்கைக்கு சினிமா தவிர எனக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. அதனால், மீண்டும் நடிக்க முடிவெடுத்தேன்.

பெரிய இடைவெளிவிட்டு நடிக்க ஆரம்பிச்சது, சிரமமா இருந்துச்சு. மன ரீதியா கொஞ்சம் ரிலாக்ஸ்டா நடிக்கணும்னு, முதலில் `வேலன்’ சீரியல்ல நடிச்சேன். அதேநேரம், சினிமாவிலும் நடிக்க ஆரம்பிச்சு, `மாறன்’, `மதுர’, `வியாபாரி’ உட்பட பல படங்கள்ல குணச்சித்திர ரோல்களில் நடிச்சேன். மலையாளம் உட்பட நாலு தென்னிந்திய மொழிகளிலும் திருப்தியான படங்கள் அமைஞ்சது. மீண்டும் சினிமாதான் என்னை வளர்த்துவிட்டது. இதுவரை 200 படங்களுக்கு மேல் நடிச்சிருப்பேன்.

வாழ்நாள் துயரம்... அமைதியான வாழ்க்கை!

ரீ-என்ட்ரி நடிப்புக்கு இடையே, சிங்கிள் பேரன்ட் சவாலை எதிர்கொண்டேன். தாய்ப் பாசத்தால், ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய போராட்டங்களை எதிர் கொண்டேன். அந்த வலியைப் பிறரால் உணர்ந்துகொள்ள முடியாது. ஆனாலும், மகள் அபிநயாவை நல்லபடியா வளர்த்து ஆளாக்கினேன். மற்ற என் இரண்டு குழந்தைகளுக்கும் முழுமையான அன்பை யும் அரவணைப்பையும் என்னால் கொடுக்க முடியாதது, வாழ்நாள் துயரம். முன்பு, தனிமையில் அழுது என் கவலைகளையெல்லாம் தீர்த்துப்பேன். இப்போ கலங்கி உட்காராமல், துணிச்சலா செயல்படும் அளவுக்குப் பக்குவம் வந்திடுச்சு.

திருமணத்துக்குப் பிறகு, நீண்டகாலம் நடிக்காமல் இருந்ததில் எனக்கு வருத்தம் உண்டு. இனி என்ன ஆனாலும் நடிப்பைக் கைவிடக்கூடாதுன்னு முடிவெடுத்து, தொடர்ந்து செலக்டிவா நடிக்கிறேன். சீனியர் ஆகிட்டதால, சினிமா துறையிலும் மரியாதையுடன் நடத்துறாங்க. நடிப்பு தவிர, மன அமைதிக்காக ஓவியம், ஃப்ளவர் மேக்கிங், மாடித்தோட்டம்னு பல விஷயங்களில் கவனம் செலுத்தறேன். வாழ்க்கைப் பாடங்கள் கொடுத்த அனுபவத் தில், மறுமலர்ச்சியுடன் அமைதியா வாழ்ந்துட்டிருக்கேன்.

- நாயகிகள் பேசுவார்கள்!

1980s evergreen heroins - Actress Seetha
1980s evergreen heroins - Actress Seetha
Aval Vikatan

வருத்தத்தை உண்டாக்குது!

ன் வாழ்க்கையில எப்போதும் யார்கிட்டயும் நான் எந்த உதவியும் கேட்டு நின்னதில்லை. என் குடும்ப வாழ்க்கை பற்றி சில தவறான வதந்திகள் இணையதளத்தில் வெளியாகிட்டே இருக்குது. அது எனக்கு பெரிய வருத்தத்தை உண்டாக்குது. யாரைப் பற்றி இருந்தாலும், உறுதிசெய்யப்படாத தகவல்களை பகிராமல் இருப்பது தான் மனிதநேயம். பிரிந்த திருமணப் பந்தத்தில், இனி இணைந்து வாழும் எண்ணமே எனக்கில்லை. இவ்வளவு நாள் வாழ்ந்ததுபோல, இனியும் தனியாகவே வாழ விரும்புறேன். இரண்டு மகள்களின் கல்யாணத் தையும் நல்லபடியா நடத்தியாச்சு. பையனுக்கு நல்ல வாழ்க்கை அமையணும் என்கிற ஆசை மட்டும்தான் எனக்குப் பாக்கியிருக்கு!