மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 25 - என் பெயர் இல்லாமல் ரஜினி, கமல் சரித்திரத்தை எழுத முடியாது!

ஸ்ரீப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீப்ரியா ( அவள் விகடன் )

ரஜினி, கமல் இருவருடனும் அதிக படங்கள்ல நடிச்ச நடிகை நான்தான்..!

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 25
80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 25
அவள் விகடன்

அவள் அப்படித்தான்

மிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்கள் வெற்றிக்கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், ஸ்ரீப்ரியா.

தமிழ் சினிமாவின் `டாம்' கேரக்டர் நாயகி. துடிப்பான, சவாலான ரோல்களில் அதிகம் நடித்து புகழ்பெற்றவர். ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த ஸ்ரீப்ரியா, இயக்குநராகவும் மிளிர்ந்தவர். இப்போது அரசியல் களத்திலும் பணியாற்றிவருகிறவர், தன் வெற்றிப் பயணம் குறித்து விரிவாகப் பேசுகிறார்.

`ஆலு’ கிண்டல்... 13 வயதில் கைம்பெண்!

பாரம்பர்ய இசைக் குடும்பம். பெற்றோர் பரதநாட்டிய ஆசிரியர்கள். என் அக்காவுக்கும் தம்பிக்கும்தான் நடனம், இசையில் அதிக ஆர்வம். நெட் பால், த்ரோ பால் உட்பட பல விளையாட்டுகளிலும் துடிப்புடன் பங்குபெற்ற நான் படிப்பில் சராசரிதான். `அலமேலு’ங்கிற என் பெயரையும், என் உருவத்தையும் பார்த்து ஸ்கூல்ல என்னை `ஆலு’ன்னு (உருளைக்கிழங்கு) சொல்லி கிண்டல் பண்ணுவாங்க. அந்தப் பெயரை ஏன் வெச்சாங்கன்னு வருத்தப்பட்டிருக்கேன். பிறகு, பெற்றோருக்குப் பிடிச்ச `ஸ்ரீப்ரியா’ ராகத்தின் பெயரை எனக்கு வெச்சாங்க. முதலில் அக்காவைத்தான் நடிக்கவைக்க முயற்சி செய்தாங்க. புகழ்பெற்ற சினிமா போட்டோகிராபர் நாகராஜராவ் மற்றும் ஒப்பனைக் கலைஞர் தனகோட்டி மாமாவை வெச்சு போட்டோஷூட் பண்ணினாங்க. கடைசியா ஒரு ஃப்ரேம் இருக்க, எனக்கும் மேக்கப் போட்டு போட்டோ எடுத்தாங்க.

நடன இயக்குநர் சலீம் மூலமா என் போட்டோவைப் பார்த்த இயக்குநர் மாதவன் சார், `மாணிக்கத்தொட்டில்’ படத்துல வரும் ஐந்து பெண்கள்ல ஒருத்தியா நடிக்க என்னைத் தேர்வு செய்தார். ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட் போனேன். `சின்ன கேரக்டர் வேண்டாம்; ஹீரோயின் ரோல்லதான் நடிப்பேன்’னு மாதவன் சார்கிட்ட சொல்ல அவர் கோபப்பட்டார். ஆனா, ரெண்டு மாதம் கழிச்சு என்னைக் கூப்பிட்டு, `உன்னோட துணிச்சலான பேச்சு எனக்குப் பிடிச்சிருந் துச்சு’ன்னு பாராட்டினார். `முருகன் காட்டிய வழி’ படத்துல என்னை அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்திலேயே, `அவள் ஒரு தொடர்கதை’ படத்துல கைம்பெண் பாத்திரத்திலும் எந்தத் தயக்கமும் இல்லாமல் நடிச்சேன்.

சுஜாதாவின் அழுகை... ஆசிரியர் கமல்!

மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போயிட்டு பாலசந்தர் சார் ரெண்டு மணிக்குத்தான் மறுபடியும் செட்டுக்கு வருவார். அப்போது, அந்தப் படத்துல சுஜாதாவுக்கு சொல்ற மாதிரி, `சட்டாம்பிள்ளை வந்தாச்சு’ன்னு சாரை கிண்டல் பண்ணி எல்லோருக்கும் எச்சரிக்கை செய்வேன். அதை ஒருநாள் கண்டுபிடிச்ச சார் என்னைச் செல்லமாகக் கண்டிச்சார்.

சரியா நடிக்கலைனா, பாலசந்தர் சார் ரொம்பவே திட்டுவார். அதனால, படத்தின் நாயகி சுஜாதா சிலநேரத்துல அழுதிடுவாங்க. நான் வருத்தப்படாம அசால்டா இருப்பேன். என் நன்மைக்காகவே திட்டுறார்னு உணர்ந்த பிறகு, அவர் திட்டும்படி நான் நடந்து கொள்ளவில்லை. இதுக்கிடையே, நான் சினிமாவில் நடிக்கிறது தெரிஞ்சு ஸ்கூல்ல கண்டிச்சதால ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கிட்டேன்.

ஸ்ரீப்ரியா
ஸ்ரீப்ரியா
அவள் விகடன்

ஆங்கிலவழிப் பள்ளியில படிச்சதால, ஆரம்பகால சினிமா நடிப்பில் தமிழ்ல சரளமா பேச, எழுத வராது. அதற்காகப் பிற்காலத்துல வெட்கப்பட்டேன். எதற்கெடுத்தாலும் கமல் சாரைதான் பாலசந்தர் சார் உதாரணமா சொல்வார். நடிப்பில் அவருக்கு இணையா வருவது கடினம்னு உணர்ந்து தமிழ் உச்சரிப்பு, டான்ஸ், நடிப்புன்னு பல விஷயங்களைக் கூச்சம் பார்க்காம கமல் சாரிடம் கத்துக்கிட்டேன். நண்பர் என்பதைவிடவும் ஆசிரியராகவே அவர்மீது அதிக மதிப்பு வெச்சிருக்கேன். பல்வேறு படங்கள்ல நடிச்சிருந்த நிலையில், `ஆண் பிள்ளை சிங்கம்’ படத்துல சிவகுமார் சாருக்கு ஜோடியா ஹீரோயினானேன். அப்போதெல்லாம் எனக்கு வெட்கப்படவே தெரியாது.

அதிகரித்த சம்பளம்... ரஜினியின் முதல் ஜோடி!

தேவர் ஃபிலிம்ஸுக்கு அப்போதைய சில படங்கள் சரியா போகலை. அதனால, `இந்தப் படமும் ஹிட்டாகலைனா, இனி படமே எடுக்க மாட்டேன்’னு தேவர் முடிவு பண்ணி, `ஆட்டுக்கார அலமேலு’ படத்துல என்னை நடிக்க வெச்சார். அதன் தெலுங்கு வெர்ஷன் `பொட்டேலு புண்ணம்மா’விலும் நான்தான் ஹீரோயின். ரெண்டு படமும் பெரிய ஹிட்! அதன்பிறகு முன்னணி ஹீரோயின் ஆனதுடன், என் சம்பளமும் கணிசமா உயர்ந்துச்சு. அந்தப் படத்துக்குப் பிறகு, தேவர் ஃபிலிம்ஸ்ல நான் நடிச்ச படங்கள்ல ரஜினி, கமல் உட்பட யார் ஹீரோவா நடிச் சாலும், சென்டிமென்ட்டா முதல் காட்சியில என்னைத்தான் நடிக்கவைப்பாங்க.

இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் சாரோட புகழ் தெரியாமலேயே அவருடைய, `இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்துல நடிச்சேன். `அவள் அப்படித்தான்’ படத்துல நடிக்க முதலில் எனக்கு விருப்பமே கிடையாது. அந்தக் கதையை தீர்க்கதரிசனத்துடன் உள்வாங்கின கமல் சார்தான் என்னை வலியுறுத்தி நடிக்க வெச்சார். அந்தப் படம் மூலம்தான் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது எனக்குக் கிடைச்சுது.

 `இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில்...
`இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில்...
அவள் விகடன்

ஆரம்பக் காலத்துல பெரிசா ஆர்வம் இல்லாம நடிச்ச நிலையில, பின்னர் பொறுப்புணர்வு டனும் அர்ப்பணிப்புடனும் நடிச்சேன். சினிமாவை என் கரியராக ஏத்துக்கிட்டேன். நிறைய வெற்றிப் படங்கள்ல நடிச்சு குறுகிய காலத்துலயே முன்னணி நடிகையானேன். அப்போதைய என் அமைதியான குணம், சினிமா தொழிலுக்கு சரிவராதுன்னு உணர்ந்தேன். என் பாதுகாப்புக்காக போல்டான பெண்ணாக என்னை மாத்திக் கிட்டேன். `அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் தெலுங்கு ரீ-மேக் `அந்துலேனி கதா’ படத்துல என் அண்ணனாக நடிச்சார், ரஜினி. பல படங்களுக்குப் பிறகு, `பைரவி’ படத்துல அவர் ஹீரோ ஆனார். அப்போ முன்னணி நடிகையா இருந்த என்னிடம், `நீ கால்ஷீட் கொடுத்தால்தான் இந்தப் படத்தைத் தயாரிப்பேன்’னு கலைஞானம் சார் சொன்னார். ரஜினிக்காக வேறு சில படங் களின் கால்ஷீட்டை மாத்திக்கிட்டு அவருக்கு ஜோடியா அந்தப் படத்துல நடிச்சேன்.

உப்பு கலந்த காபி... வீட்டுக்கு வந்த ரஜினி!

நான் நடிக்கவந்தப்போ, பிரபலமா இருந்த நடிகர் ஸ்ரீகாந்த் என்னுடன் ஜோடியா நடிக்கமாட்டேன்னு சொல்லியிருந்தார்னா, `முருகன் காட்டிய வழி’ படத்தின் மூலம் நான் நடிகையாகியிருப்பேனான்னு தெரியாது. அதனால, யாருடன் நடிக்கிறோம் என்பதைவிட, என் கேரக்டர் பேசப்படக்கூடியதா இருக்கணும் என்பதில்தான் கவனமா இருந்தேன். எங்களுக்கு ஸ்கிரிப்ட் படிச்சுக்காட்டுறப்போ, ரஜினியை கவனிக்கவிடாம சேட்டை பண்ணுவேன். அவருக்கு காபி கொடுக்கிற காட்சிகள்ல உப்பு கலந்து கொடுத்துடுவேன். சமாளிச்சு நடிச்சு முடிச்சுட்டு என்னிடம் செல்லமா சண்டை போடுவார். பெற்றோரைப் பிரிஞ்சு நான் தனியா வசிப்பதாக ஒருமுறை பத்திரிகை ஒன்றில் பொய்யான செய்தி வெளியாச்சு. அதைப் படிச்சுட்டு ஸ்கூட்டர்ல என் வீட்டுக்கு வந்த ரஜினி, நீண்டநேரம் ஆலோசனை கொடுத்துட்டுப் போனார். இப்படி எங்க நட்புக்கு நிறைய உதாரணங்கள் உண்டு.

நான், கமல், ரஜினி மூவரும் சினிமாவில் ஒரே காலகட்டத்துல ஒண்ணாவே வளர்ந்தோம். மூவரும் ஓர் இடத்தில் இருந்தால் செம ரகளை, கிண்டல்தான். `பில்லா’, `அன்னை ஓர் ஆலயம்’ உட்பட ஏறத்தாழ 30 படங்களில் ரஜினியுடன் நடிச்சேன். `ராம் லட்சுமண்’, `சட்டம் என் கையில்’ உட்பட 25-க்கும் அதிகமான படங்கள்ல கமல்கூட நடிச்சேன். ரஜினி, கமல் இருவருடனும் அதிக படங்கள்ல நடிச்ச நடிகை நான்தான்!

 `பில்லா' படத்தில்...
`பில்லா' படத்தில்...
அவள் விகடன்

ஒருமுறை ஒரு பத்திரிகைக்காக ரஜினியைப் பேட்டி எடுத்தேன். அவருடைய திரைப்பயணத்துல முக்கிய பங்காற்றிய பெண்ணாக என்னைக் குறிப்பிட்டார். அதேபோல, சமீபத்துல கமல்ஹாசன் சாரின் 60 ஆண்டுக்கால சினிமா பயண பாராட்டு விழா நடந்துச்சு. அதில் அவர் திரைப்பயணத்தில் முக்கியமான 60 பேரில், உடன் நடித்த நடிகைகள் என்ற முறையில் இரண்டு பெண்களாக சாவித்ரி அம்மாவையும் என்னையும் மட்டுமே குறிப்பிட்டார். ரஜினி, கமலின் வெற்றிச் சரித்திரத்தை என் பெயர் இல்லாமல் எழுதவும் முடியாது; முடிக்கவும் முடியாது. இந்தப் பெருமையே எனக்குப் போதும்!

சிவகுமாருடன் சண்டை... என் தமிழ் ஆசான்கள்!

அழுகாச்சி கேரக்டர்கள் எனக்கு செட் ஆகாது. `டாம் பாய்’ ரோல்கள்தாம் எனக்கு செட் ஆகும். அப்போதைய முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் நடிச்சேன். அதிக படங்கள்ல நடிச்ச நடிகைனு பல வருஷம் பெயர் பெற்றேன். கன்னடம், தெலுங்குப் படங்கள்லயும் அதிகம் நடிச்சேன். `நீயா’, `திரிசூலம்’, `நட்சத்திரம்’, `தீ’ உட்பட நிறைய வெற்றிப் படங்கள் அமைஞ்சது. நான்கு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருப்பேன். அவற்றில்,

150-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயின். சிவகுமார் சார்கூட 15 படங்களுக்குமேல் நடிச்சேன். சின்ன மனஸ்தாபத்தால் நாங்க நீண்டகாலம் பேசிக்காமலே 10 படங்கள்ல ஜோடியா நடிச்சோம். தனிப்பட்ட விருப்பு வெறுப்பையும், சினிமா பயணத்தையும் ஒரே கோட்டில் வெச்சு நாங்க குழப்பிக்கலை. பிறகு, சமாதானமாகி நண்பர்களாகிட்டோம். சிவாஜி சார், ஜெய்சங்கர் சார் உட்பட அந்தக் காலத்து ஹீரோக்களுடன் ஜோடியா அதிகமான படங்கள்ல நடிச்ச நடிகைகளில் என் பெயரும் உண்டு.

1985-ம் ஆண்டு வரை ஹீரோயினா நடித்து, பிறகு கேரக்டர் ரோல்களில் நடிச்சேன். `சாந்தி முகூர்த்தம்’, `நானே வருவேன்’, `த்ரிஷ்யம்’ (தெலுங்கு) உட்பட சில படங்களையும் இயக்கி னேன். என் நெருங்கிய தோழி ராதிகாவுக்காக அவர் தயாரிச்ச `சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல்லயும், `கண்ணாமூச்சி ஏனடா’ படத்துலயும் காமெடி ரோல்ல சந்தோஷமா நடிச்சேன்.

பாலு மகேந்திரா சார் பலமுறை வலியுறுத்தியும், நேரமின்மையால் `மூன்றாம் பிறை’ படத்துல ஸ்ரீதேவி நடிச்ச ரோல்ல என்னால நடிக்க முடியலை. பிற்காலத்துல நான் இயக்கிய `சாரதா’, ‘மறக்க முடியுமா?’ சீரியல்களின் ஒவ்வொரு எபிசோடையும் பார்த்துட்டு அவர் என்னை மனதாரப் பாராட்டினார்.

கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி, வாலி, கமல்ஹாசன் ஆகியோர் மூலம்தான் தமிழ் கத்துகிட்டேன். `தன் வசனங்களைச் சிறப்பாகப் பேசும் நடிகைகள்’னு ஐவரில் என் பெயரையும் குறிப்பிட்டார் கலைஞர். அது எனக்குப் பெரிய பெருமை! தமிழில் எனக்கு எந்த சந்தேகம்னாலும், முன்பு கவிஞர் நா.முத்துக்குமார்கிட்ட கேட்பேன். அவர் மறைவுக்குப் பிறகு, எப்ப வேண்டுமானாலும் கமல் சார்கிட்ட சந்தேகம் கேட்பேன்.

பெண் சுதந்திரம்... அம்மாவாக நடிக்க மாட்டேன்!

பெண்களுக்கு உரிய முக்கியத்துவமும் சுதந்திரமும் சினிமா உட்பட எந்தத் துறையிலும் கிடைக்கவில்லை என்பதே என் கருத்து. மக்களை பாதிக்கும் பல்வேறு விஷயங்களுக்கு எதிராகத் தைரியமா குரல்கொடுக்கிறேன். உருவ கேலி மற்றும் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான கருத்துத் தாக்குதல்களுக்கு நானும் ஆளாகியிருக்கேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளால் பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்க, ஓர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். மேலும், ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் இன்றி, சமூக வலைதளப் பக்கங்களைத் தொடங்க முடியாதுங்கிற நிலையை ஏற்படுத்தி, பெண்களுக்கு எதிரான சமூகவலைதளக் குற்றங்களைக் குறைக்கலாம்.

மலையாள சினிமாவில் புகழ்பெற்ற நடிகரா இருந்த என் கணவர் ராஜ்குமார், இப்போ பிசினஸ் பண்றார். என் எல்லா விருப்பங்களுக்கும் ஆதரவு கொடுப்பார். மகள் சிநேகா இப்போதான் சட்டப்படிப்பு முடிச் சாங்க. மகன் நாகார்ஜுனன் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படிக்கிறார்.

கமல் சாரும் நானும் இணைந்து நடிச்ச காலத்துலயே சமூக நிகழ்ச்சிகள் குறித்து விவாதிப்போம். அவரின் அழைப்பை ஏற்று, அவரது கட்சியில் இணைந்து பதவிகளுக்கு ஆசைப்படாமல் பணியாற்றுகிறேன்.

குடும்பச் சூழலால் இளமைக்காலத்துல இருந்தே சிக்கனமா வாழப் பழகின நான் அதை இப்போதும் கடைப்பிடிக்கிறேன். வாய்ப்பு வேண்டி யாரையும் நான் அணுகியதில்லை. பிடிச்ச கதைகள் வராததால, சினிமாவில் நீண்டகாலமா நடிக்காம இருக்கேன். நான் ஜோடியா நடிச்ச நடிகர்களுக்கு அம்மாவா நடிக்கிறதில் எனக்கு உடன்பாடில்லை. சீரியல் களில் பெண்களைத் தியாகச் சுடராக அல்லது வில்லியாகத்தான் காட்டுவாங்க. அதனால, அதில் நடிக்கவும் எனக்கு விருப்பமில்லை. வாழ்க்கையில எப்போதும் எனக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்ததில்லை. அதனால, ஏமாற்றமும் கிடைச்சதில்லை!

- நாயகிகள் பேசுவார்கள்!

ஜெயலலிதாவின் அன்புக்கு ஏங்கினேன்!

புகழ்பெற்ற நடன இயக்குநரான என் பெரியப்பா தண்டாயுதபாணி மற்றும் அத்தை கே.ஜே.சரசாகிட்ட ஜெயலலிதா அம்மா சின்ன வயசுல டான்ஸ் கத்துக்கும்போது அதைப் பார்த்து ரசிப்பேன். அவர்கூட நடிக்கலாம்னு நினைச்சு, `பாட்டும் பரதமும்’ படத்துல சின்ன ரோல்ல நடிக்க ஒப்புக்கிட்டேன். ஆனா, இருவரும் தனித்தனியாகத்தான் நடிச்சோம். `பில்லா’ படத்துல அவங்கதான் முதலில் ஒப்பந்தமானாங்க. என் கல்யாணத்துக்கு அவருக்கு அழைப்பிதழ் கொடுக்க நிறைய முயற்சி செய்தும் நிறைவேறலை.

வீனஸ் காலனியில சிலகாலம் வசிச்சேன். வாக்கிங் போகும்போது, போயஸ்கார்டன்ல ஜெயலலிதா கார்ல போகும்போது நின்னு பார்ப்பேன். அவர் என்னைப் பார்க்கவே மாட்டார். கலைஞர் கருணாநிதியின் குடும்பத்துக்கும் எங்க குடும்பத்தும் நல்ல நட்பு இருந்துச்சு. இதனால் ஜெயலலிதா என்னைப் பார்க்கத் தவிர்க்கிறார்னு பலரும் சொன்னாங்க. அது உண்மையான்னு தெரியாட்டியும், அவங்க மேல எனக்குப் பெரிய மரியாதை உண்டு. ஜெயலலிதா படிச்ச சர்ச் பார்க் ஸ்கூல்லதான் நானும் என் பொண்ணும் படிச்சோம். அந்த ஸ்கூல்ல, ஜெயலலிதாவின் பெயரில் `பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடண்ட்’ ட்ராஃபி வாங்கினார் என் மகள். அப்பவும் ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்தேன். ஆனா, பலன் கிடைக்கலை!

என் குணத்தை மாத்திக்க மாட்டேன்!

என் ஆறு வயசுல `திருவிளையாடல்’ படத்துல முருகன் ரோல்ல நடிக்க, 3,000 குழந்தைகளில் நான் தேர்வானேன். பாதி ஷூட்டிங் முடிஞ்ச நிலையில, திடீர்னு என்னைப் படத்திலிருந்து நீக்கிட்டாங்க. அதனால இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் படங்கள்ல நடிக்கக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். அவர் ரொம்பவே வலியுறுத்தி, `நவரத்தினம்’ படத்துல எம்.ஜி.ஆர் உடன் நடிக்கவெச்சார். எம்.ஜி.ஆர் அரசியலுக்கு சென்றதால, அவருடன் ஜோடியா நடிக்க முடியலை. இசை அரசர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராம மூர்த்தி, இயக்குநர் ஸ்ரீதர், பத்மினி அம்மா, நாகேஷ் உள்ளிட்ட பலருக்கும் மத்திய அரசின் எந்த விருதுகளும் அங்கீகாரமும் கிடைக்காததில் எனக்குப் பெரிய வருத்தம் உண்டு. இதற்காக, இவர்கள் வழிவந்தவர்கள் குரல் கொடுக்காததிலும் எனக்கு ஆதங்கம் உண்டு. மத்தபடி என் சினிமா பயணம் மகிழ்ச்சியானதாகவே அமைந்தது.

`அண்ணாமலை’ பட ப்ரிவியூ ஷோ. அரங்கத்தில் ரஜினி நுழைந்ததும் எல்லோரும் எழுந்து நின்னாங்க. நான் எழுந்திரிக்கலை! நேரா என் பக்கத்துல வந்தார். நான் எழுந்தேன். என்னிடம் நலம் விசாரிச்சுட்டு நகர்ந்தார். `நீ மட்டும் ஏன் எழுந்திரிக்கலை’னு என் பக்கத்துல உட்கார்ந்திருந்த ஆச்சி மனோரமா கேட்டாங்க. `சீனியர் நடிகையான நீங்க ஏன் எழுந்திரிச்சீங்க? ரஜினி என் நெருங்கிய நண்பர். நான் உட்பட இங்க இருக்கிற யாருமே தான் வர்றப்போ எழுந்திரிச்சு நிற்கணும்னு அவர் எதிர்பார்க்கமாட்டார்’னு சொன்னேன். இப்படி, என் மனசுக்குச் சரின்னுபட்டதை வெளிப்படையா பேசுவேன்; செய்வேன். அது பிறருக்குத் திமிராகத் தெரியலாம். நான் யாருக்காகவும் என் இயல்பை மாத்திக்க மாட்டேன்.

சூர்யா, தனுஷ், நயன்தாராவை இயக்க நான் ரெடி!

`அவள் அப்படித்தான்’ படத்தின் ரீமேக் உரிமையை எனக்குத் தர்றீங்களா’ன்னு இயக்குநர் ருத்ரய்யாகிட்ட கேட்டேன். `ரஜினி, கமல் ரோல்ல யார் நடிப்பாங்க’ன்னு கேட்டவர், உரிமையைத் தர மறுத்துட்டார். ஆனா, அவர் மறைவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு அனுமதி கொடுத்தார். அப்போ `த்ரிஷ்யம்’ (தெலுங்கு) படத்தை இயக்கிட்டிருந்ததால, அந்த வாய்ப்பை பயன்படுத்திக்க முடியலை. கமல் சார் ரோல்ல சூர்யாவையும், ரஜினி சார் ரோல்ல தனுஷையும், நான் நடிச்ச ரோல்ல நயன்தாரா அல்லது த்ரிஷாவையும் நடிக்கவைக்க இப்போதும் எனக்குள் யோசனை இருக்கு... பார்ப்போம்!