மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 20: நடிகைகளுக்கு காமெடி வராதுன்னு யார் சொன்னது? - நடிகை ஊர்வசி

நடிகை ஊர்வசி
பிரீமியம் ஸ்டோரி
News
நடிகை ஊர்வசி ( அவள் விகடன் )

குணச்சித்திர வேடங்களில் அசத்திவரும் ஊர்வசி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

மிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்கள் வெற்றிக்கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், ஊர்வசி.

`இன்றைய நடிகைகளே, உஷார்! உங்கள் அத்தனை பேரையும் `ஓவர் டேக்’ செய்யக்கூடிய திறமை ஊர்வசியிடம் ஒளிந்திருக்கிறது!’ - `முந்தானை முடிச்சு’ திரைப்படத்துக்கு ஆனந்த விகடன் எழுதிய விமர்சனத்தை உண்மையாக்கினார், ஊர்வசி. யதார்த்த நடிப்பால், சக நடிகர், நடிகைகளை மிரளவைத்தார்; `இரசிகர்களை மகிழ்வித்தார். நகைச்சுவை அவதாரம் எடுத்து அதிலும் வெற்றி கண்டவர். இப்போது குணச்சித்திர வேடங்களில் அசத்திவரும் ஊர்வசி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

அரசுப் பள்ளி படிப்பு... சினிமாமீது வெறுப்பு!

பூர்வீகம், கேரளா. சென்னையில் பிறந்தேன். அப்பா மேடை நாடகக் கலைஞரா இருந்ததால், ஒடிசா மற்றும் கேரள மாநிலங்கள்ல வசிச்சோம். மூத்த அக்கா கலா ரஞ்சனியோட உடல்நலப் பிரச்னைக்கு சிகிச்சைபெற சென்னையில் குடியேறினோம். கோடம்பாக்கம் மாநகராட்சி ஸ்கூல்ல ஐந்தாம் வகுப்பிலிருந்து படிப்பைத் தொடர்ந்தேன். மூத்த அக்கா, இளைய அக்கா கல்பனா, நான், ரெண்டு தம்பிகள்னு அஞ்சு பேரும் குழந்தை நட்சத்திரங்களா நடிச்சோம். ஒருகட்டத்துல பெண்பிள்ளைகள் நடிக்க வேண்டாம்னு அப்பா தடைபோட்டார். `கலைத்துறையில இருந்துகிட்டே பெண்கள் நடிக்கிறதை தடைபோடுறீங்களே. உங்க குறுகிய மனப்பான்மை சரியா?’ன்னு அப்பாவின் நண்பர்கள் கேட்கவே, பிறகுதான் அப்பா எங்களைத் தொடர்ந்து நடிக்க அனுமதிச்சார்.

நடிகை ஊர்வசி
நடிகை ஊர்வசி
அவள் விகடன்

அப்பாவோட நிழல்ல வாழ்ந்ததனால வெளியுலகத்தைப் பத்தியே தெரியாம வளர்ந்தோம். என் 12 வயசுல அப்பா இறந்துபோக, தவிச்சுப்போயிட்டோம். சின்ன வயசுல கூட்டம்னா எனக்குப் பிடிக்காது. அதனாலயும் கற்பனையான, பொய்யான உலகம்னு நினைச்சும் சினிமாவை வெறுத்தேன். குழந்தையாவும் சிறுமியாவும் நான் சில படங்கள்ல நடிச்சாலும், என்னை நடிக்க வைக்க படக்குழுவினர் படாதபாடுபட்டாங்க.

பாக்யராஜ்மீது பரிதாபம்... நடிக்க மறுத்த அக்கா!

தமிழில் ஹீரோயினா என் முதல் படம், `தொடரும் உறவு’. என் இயற்பெயர் கவிதா ரஞ்சனி. அந்தப் பெயர்ல ஒரு நடிகை இருந்ததால, சிறந்த நடிகைக்காக வழங்கப்படும் தேசிய விருது பெயரையே எனக்குச் சூட்டினார் அந்தப் படத்தோட தயாரிப்பாளர்.

`குமரிப் பெண்ணின் உள்ளத்திலே’ படத்துல பாவமா நடிச்சிருந்தார் பாக்யராஜ் சார். அவரை நேரில் பார்க்கணும் ஆசைப்பட்டேன். அப்போ பிஸியான ஹீரோயினா இருந்த கலா ரஞ்சனி அக்காதான், `முந்தானை முடிச்சு’ படத்துல முதலில் கமிட்டானாங்க. பாக்யராஜ் சாரைப் பார்க்க அக்காவுடன் நானும் போனேன். அங்கே அவர், எல்லோரையும் அதட்டி வேலை வாங்கிட்டிருந்தார். சினிமாவுக்கும் ரியல் லைப்புக்கும் உள்ள வித்தியாசத்தை அங்கே புரிஞ்சுக்கிட்டேன். சினிமாமீது வெறுப்பு அதிகமாச்சு.

அந்த நிலையிலே, அவர் கொடுத்த வசனத்தை, தமிழ் சரியா தெரியாத அக்கா தடுமாற்றத்துடன் பேச, ஏதோ ஓர் ஆவேசத்துல பேப்பரைப் பிடுங்கி கடகடன்னு நான் டயலாக் பேச தொடங்கினேன். என்னைத் திட்டி ஓரமா உட்கார வெச்சுட்டார் பாக்யராஜ். கோபம் தலைக்கேறி, `நீ இந்தப் படத்துல நடிக்கவே வேண்டாம்'னு அக்காகிட்ட சொன்னேன்.

மேலும், அந்தப் படத்துக்கு பாக்யராஜ் சார், மொத்தமா 80 நாள்கள் கால்ஷீட் கேட்க, `அவ்வளவு நாள் நடிக்க வாய்ப்பில்லை. நாங்க கேரளாவுக்கே குடியேறப்போறோம்’னு யதார்த்த நிலையைச் சொன்ன அக்கா, அந்தப் படத்துல நடிக்கவும் மறுத்துட்டாங்க. அதோடு, கல்பனா அக்காவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலில்தான் ரஞ்சனி அக்காவுக்குப் பதிலா, சின்ன ரோல்னு சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தி நடிக்க வெச்சாங்க.

கதை, கவிதை எழுதுறது, புத்தக வாசிப்பு, சமையல், இயற்கை விவசாயம், இயற்கை வாழ்க்கைமுறைன்னு பல விஷயங்கள்ல கவனம் செலுத்தறேன்.

`சூஸ்’ காமெடி... பாக்யராஜ் கோபம்!

இரவு ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுட்டு, தூங்கிடுறது என் வழக்கம். `நீ இப்படி சீக்கிரமே தூங்கினா, எப்படி ஷூட்டிங் முடிக்கிறது?’ன்னு பாக்யராஜ் சார் திட்டுவார். புரொடக்‌ஷன்ல எனக்குச் சீக்கிரமா டின்னர் தரமாட்டாங்க. பக்கத்துல இருக்கிற ஏதாவதொரு வீட்டுல சாப்பிட்டுட்டு, அங்கேயே தூங்கிடு

வேன். உதவி இயக்குநர்கள் என்னைத் தேடிவந்து எழுப்பி கூட்டிட்டுப்போவாங்க. படத்துல என்னுடன் சுத்திட்டிருக்கிற பசங்களோடு சேர்ந்து விளை

யாடுறது, சேட்டை பண்றதுன்னு கலாட்டா பண்ணுவேன். என்னோட அந்த 13 வயசுல, பரிமளம் கேரக்டர் மாதிரியேதான் நிஜத்துலயும் நடந்துப்பேன்.

அப்போ நான் ரொம்ப ஒல்லியா இருப்பேன். என் கேரக்டருக்குக் கொஞ்சம் வெயிட் போடணும்னு சொல்லி, புரொடக்‌ஷன்ல தினமும் காலை, மதியம் மட்டும் எனக்கு நிறைய சாப்பாடு தருவாங்க. அசைவம், இரவுல வெண்ணெய், அடிக்கடி ஜூஸ்னு செம கவனிப்பு நடக்கும்.`பண்றதெல்லாம் பண்ணிட்டு, இந்தப் பொண்ணு எப்படி `சூஸ்' குடிக்குது பாருங்க’ன்னு பாக்யராஜ் சார் திட்டுவார். `சூஸ்’னு சொல்றாரேன்னு நான் சத்தம் போட்டுச் சிரிக்க, அவர் மேலும் கோபப்படுவார்.

புடவையால் அவமானம்... எம்.ஜி.ஆர் அணிவித்த தங்க மோதிரம்!

பாக்யராஜ் சாரும் நானும் சினிமாவுக்குப் போகும் சீன். புடவை கட்டிகிட்டு, நகையெல்லாம் போட்டுக்கிட்டு, நளினத்துடன் நான் நடிக்கிறதுக் குள்ள பாக்யராஜ் சார் நொந்துட்டார். `நடிப்பே வேண்டாம். இந்தப் பட ஷூட்டிங் முடிஞ்சதும், படிக்கப் போயிடணும்’னு தினமும் நினைப்பேன். ஆனா, அந்தப் படத்துக்கு டப்பிங் கொடுக்கக் கூட எனக்கு நேரமில்லாம ஓடுற அளவுக்கு பிஸியாகிட்டேன்.

`முந்தானை முடிச்சு’ படம் பெரிய ஹிட். என் நடிப்பைப் பாராட்டினாலும், பலரும் என்னைச் சின்ன பொண்ணுன்னு சொன்னது எனக்குப் பிடிக்கலை. அதனால், கோயம்புத்தூர்ல நடந்த படத்தின் 100-ம் நாள் வெற்றி விழாவுக்கு, `புடவைலதான் போகணும்'னு அடம்பிடிச்சேன். தியேட்டர் நிர்வாகி ஒருவரின் மனைவி, நான் உடுத்தியிருந்த பாவாடை, சட்டை மேல அவங்க பட்டுப் புடவையைக் கட்டிவிட்டாங்க. மேடையில் பாக்யராஜ் சார் என்னைப் பத்தி பெருமையா பேசுறப்போ, எழுந்து நின்னு எல்லோருக்கும் வணக்கம் சொன்னேன். திடீர்னு இடுப்புல செருகியிருந்த புடவை மடிப்பு கீழே சரிந்து குடை மாதிரி ஆகிடுச்சு. எல்லோரும் சிரிக்க, எனக்கு அவமானமா போச்சு.

`சிரிக்காதீங்க! சின்னப் பொண்ணு ஆசையா புடவை கட்டியிருக்கு’ன்னு சொல்லி, என் பக்கத்துல உட்கார்ந்திருந்த கோவை சரளாவை புடவையைச் சரிபண்ணிவிடச் சொன்னார் பாக்யராஜ் சார். அவமானத்துல நான் அழுது அந்த மேடையில பேச மறுத்துட்டேன். அந்தப் படத்துக்குச் `சிறந்த அறிமுக நடிகை'க்கான தமிழக அரசின் விருதினை வழங்கிய எம்.ஜி.ஆர், எனக்கு அஞ்சு பவுன்ல தங்க மோதிரம் அணிவிச்சார்.

கமலின் அட்வைஸ்... நகைச்சுவை அவதாரம்!

கமல் சார் அட்வைஸ்படி, மலையாளத்துல நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள படங்கள்ல அதிகம் நடிச்சேன். கேரளாவில் பல கலைஞர்கள் அர்ப்பணிப்புடன் நடிக்கிறதை நேரில் பார்த்து வியந்தேன். `சினிமாவில் நடிக்க, போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கணும்’னு அவங்க அனுபவரீதியா சொன்னாங்க.

100 படங்களுக்கு மேல் நடிச்சிருந்த அந்தத் தருணத்துலதான், சினிமாமீது எனக்குப் பெரிய மதிப்பு உண்டாச்சு. பிறகுதான், முழு ஈடுபாட்டுடன் நடிச்சேன். நடிப்பில் நான் செய்த தவறுகளைச் சரிசெய்துகிட்டதுடன், தமிழிலும் முக்கியத்துவமுள்ள நிறைய படங்கள்ல நடிச்சு புகழ்பெற்றேன்.

நடிகை ஊர்வசி
நடிகை ஊர்வசி
அவள் விகடன்

`நடிகைகளுக்கு காமெடி வராது'ன்னு சொல்லுவாங்க. அதை முறியடிக்கவும் எனக்குப் பிடிக்காத கிளாமருக்கு மாற்றாகவும்தான் நகைச்சுவை நடிப்பைத் தேர்ந்தெடுத்தேன். ஒரு ஹீரோயின் இந்த முடிவெடுக்கிறது, அப்போ பெரிய சவால். என் எல்லா படங்களிலும் நகைச்சுவையைப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். மலையாள சினிமாவுலதான் முதல்ல வரவேற்பும் வெற்றியும் கிடைச்சுது. அதன் பிறகே தமிழிலும் என் நகைச்சுவை நடிப்பை ஏத்துக்கிட்டாங்க.

வாலியுடன் வாக்குவாதம்... டேக் இட் ஈஸி!

`மகளிர் மட்டும்’ படத்தைப் பத்திப் பேச ஒருநாள் போதாது. மூணு பெண்கள் கேரக்டரையும் விளக்கிய கிரேஸி மோகன் சார், எனக்குப் பிடிச்ச ரோலை தேர்வு செய்துக்க சொன்னார். ரோகிணி நடிச்ச கேரக்டர்ல நடிக்க ஆசைப்பட்டேன். என் நிறத்துக்கு டல் மேக்கப் போட்டு நடிக்கிறது சிரமம்னு, ஜானகி கேரக்டர்ல நடிச்சேன். `கரவமாடு மூணு’ பாடல் ஷூட்டிங். `வேலை செய்ற பெண்களை கரவமாடுனு கிண்டலா கிராமங்கள்ல சொல்வாங்க. எங்களை நாங்களே அப்படி சொல்லிக்கிறது நியாயமா’ன்னு கோபப்பட்டு, நடிக்க மறுத்தேன். `குடும்பத்துக்காக உழைக்கும் பெண்களை அடையாளப்படுத்தத்தான் அந்த வார்த்தை’ன்னு போன்ல ரொம்ப நேரம் பேசி என்னைச் சமாதானப்படுத்தினார், பாடலாசிரியர் வாலி சார். அதன் பிறகுதான் நடிச்சேன்.

பின்னர், `ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி’ பாடல் வெளியான பிறகு, வாலி சாரை நிகழ்ச்சி ஒன்றில் சந்திச்சேன். `உனக்காகத்தான் இந்த வரிகளைப் பயன்படுத்தினேன். எல்லாத்தையும் டேக் இட் ஈஸியா எடுத்துக்கணும்’னு சொல்லி அவர் சிரிக்க, நானும் சிரிச்சுட்டேன்.

பாலசந்தரின் பாராட்டு... ஒலிக்கும் குரல்!

`அழகன்’ உட்பட பாலசந்தர் சாரின் பல படங்கள்ல நடிக்கும் வாய்ப்பு கிடைச்சும் என்னால நடிக்க முடியலை. `வனஜா கிரிஜா’ படம் பார்த்தவர், தியேட்டரில் இருந்தபடியே என்னைப் பாராட்டி, கடிதம் அனுப்பினார். `உத்தமவில்லன்’ படத்துல நடிக்கிறப்போ அவர்கூட பழக அதிக வாய்ப்பு கிடைச்சுது. ஒருமுறை, `சர்வர் சுந்தரம் படத்துல கே.ஆர்.விஜயா அம்மாவின் திருமணத்துல வாழ்த்தும் நாகேஷ் சார், `நல்ல ஆம்பளப் புள்ளையைப் பெத்தெடுங்க’ன்னு சொல்வார். `பொம்பளப் புள்ளையைப் பெத்தெடுக்க சொல்லியிருக்கலாமே? அங்கேயே உங்க ஆணாதிக்கம் வெளிப்பட்டுடுச்சு’ன்னு படார்னு அவர்கிட்ட சொன்னேன்.

அதிர்ச்சியானவர், `அடிப்பாவி! பெண் களுக்கு முக்கியத்துவமுள்ள படங்களை அதிகம் எடுத்திருக்கிறதா நானே நினைச்சுக் கிட்டிருக்கேன். இத்தனை வருஷத்துல என்னை ஆணாதிக்கவாதின்னு சொன்ன முதல் ஆள் நீதான். இனி என் படத்துல நீ நடிப்பியா?’ன்னு அவர் கேட்க, எனக்கு வருத்தமாகி, `நிச்சயம் நடிப்பேன் சார்’னு சொன்னேன்.

இப்படித்தான், `தாய்க்குலமே தாய்க்குலமே’ படக் கதையில மாற்றம் செய்யச் சொல்லி நான் விவாதம் செய்ய, அதை ஏத்துகிட்டார் படத்தின் கதாசிரியர் பாக்யராஜ் சார். இப்படி, உடன்பாடு இல்லாத விஷயங்களுக்கு எதிரா தைரியமா குரல் கொடுப்பதுதான் என் வழக்கம்.

ரஜினி பட வாய்ப்பு... நடிப்பு ராட்சசி!

நடிப்புங்கிறது பொய்ங்கிற எண்ணம் இப்போதும் எனக்கு உண்டு. அதனால, நடிக்கிற கேரக்டருக்கு உயிர் கொடுக்கவே ஆசைப்படுவேன். இதுவரை நடிப்புக்காகப் பயிற்சி எடுத்துகிட்டதேயில்லை. யார்கிட்டயும் வாய்ப்பு கேட்டதுமில்லை.

80, 90-களில் தூக்கத்தை நிறையவே இழந்து, ஓய்வில்லாம ஓடியாடி நடிச்சேன். `நாம் இருவர்’, `வீரப்பதக்கம்’, `வனஜா கிரிஜா’, `மாயா பஜார்’, `இரட்டை ரோஜா’ன்னு நிறைய வெற்றிப் படங்கள் அமைஞ்சது. டூயல் ரோல்ல அதிகம் நடிச்சேன். ரெண்டு இந்திப் படம் உட்பட ஐந்து மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சிருப்பேன். அதில், 400-க்கும் மேற்பட்ட படங்கள்ல ஹீரோயின்.

பல மொழி சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடியா நடிச்சிருக்கேன். ஆனா, ரஜினி சாருக்கு ஜோடியா பல படங்கள்ல நடிக்கும் வாய்ப்பு கிடைச்சும், அது நடக்கலை. தேசிய விருது, பல மாநில அரசுகளின் விருது உட்பட நிறைய விருதுகள் வாங்கியிருக்கேன். அதையெல்லாம்விட, `நடிப்பு ராட்சசி’ன்னு கமல் சார் எனக்குப் பட்டம் கொடுத்ததை உயரிய விருதா நினைக்கிறேன்.

40 வயதில் இளமை... மல்டி டாஸ்க்!

ஆக்டிவா நடிச்சுட்டிருந்த நிலையில், தனிப்பட்ட வாழ்க்கையில சில சிக்கல்கள் ஏற்பட, சோர்ந்துபோனேன். என் வாழ்க்கைத்துணையாக இணைந்த கணவர் சிவபிரசாத்தான் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கினார். 40 வயதைத் தாண்டிய பிறகு, எனக்கு இளமையைக் கொடுத்தது என் மகன் இஷான். அவன் பிறந்தப்போ, தாயாக நானும் மறுபடியும் பிறந்தேன். குழந்தையை கவனிச்சுக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பதைத் தவிர்த்தேன். அதனால, எடை அதிகமாகிருச்சு. எடையைக் குறைச்சு, மீண்டும் ஆக்டிவா நான் நடிக்க ஊக்கப்படுத்துறார் என் கணவர். அதனால, இப்போ நாலு தென்னிந்திய மொழிகள்லயும் ஆக்டிவா நடிக்கிறேன்.

நடிகை ஊர்வசி
நடிகை ஊர்வசி
அவள் விகடன்

நடிப்பு தவிர, கதை, கவிதை எழுதுறது, புத்தக வாசிப்பு, சமையல், இயற்கை விவசாயம், இயற்கை வாழ்க்கைமுறைன்னு பல விஷயங் கள்ல கவனம் செலுத்தறேன். வீட்டில் இருந்தா, காலையில பழைய சோறுதான் சாப்பிடுவேன். வீட்டில் ரொம்பவே எளிமையாகத்தான் இருப்பேன்.

யாரையும் என் போட்டியாளரா நினைச்சதில்லை. எந்த இலக்கும் இல்லாமல் தொடர்ந்து நடிப்பேன்; மக்களை மகிழ்விப்பேன்!

- நாயகிகள் பேசுவார்கள்!

டீச்சர் எப்படியிருக்கீங்க?

ஸ்கூல் படிக்கும்போது. ஒருமுறை இங்கிலீஷ் டீச்சர், `உங்களுக்கு எதிர்காலத்துல என்னவாக ஆசை?’ன்னு கேள்வி கேட்டு, எல்லா மாணவர்களையும் பேப்பர்ல பதில் எழுதச் சொன்னாங்க.

டீச்சராகணும்கிறது என் ஆசை. அதை எழுதினா, என் டீச்சர் கோபப்படுவாங்களோன்னு பயந்து, `I would like become a...’ மட்டும் எழுதியிருந்தேன். என் ஆசை என்னன்னு டீச்சர் பலமுறை கேட்டும் நான் பதில் சொல்லலை. அதனால் அவரே `an actress’னு எழுதியவர், அதற்கான அர்த்தத்தையும் சொன்னார். சின்ன வயசுல நடிப்பை வெறுத்ததால, `நடிகையாக மாட்டேன்’னு அழுது அடம்பிடிச்சேன். ஆனா, டீச்சர் சொன்னதுபோலவே, நடிகையாகி புகழ்பெற்றேன். டீச்சர் எப்படியிருக்கீங்க? நீங்க இந்தப் பேட்டியைப் படிச்சா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்!

மனோரமா கொடுத்த தன்னம்பிக்கை
மனோரமா கொடுத்த தன்னம்பிக்கை
அவள் விகடன்

மனோரமா கொடுத்த தன்னம்பிக்கை!

ச்சி மனோரமாவுடன் நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். அவங்களை `ஆத்தா’ன்னுதான் கூப்பிடுவேன். மனோரமா உட்பட என் நெருங்கிய வட்டாரத்தினர், என்னை `பொடி’ன்னு (கடைக்குட்டி) கூப்பிடுவாங்க. தன் பர்சனல் விஷயங்கள் பத்தி ஆச்சி என்கிட்ட பலமுறை மனம்விட்டுப் பேசியிருக்காங்க. ஒரு ஷூட்டிங்குக்காக அவங்க சொந்த ஊரான பள்ளத்தூருக்கு என்னைக் கூட்டிட்டுப்போனாங்க. போராட்ட வாழ்க்கையிலும், சினிமாவில் வெற்றி பெற்றது குறித்தும் கண்ணீருடன் பகிர்ந்துகிட்டாங்க. `உனக்கு சினிமா வெற்றி உட்பட எல்லாமே சுலபமா கிடைச்சுடுச்சு. அதைச் சரியா பயன்படுத்திகோ’ன்னு அவங்க சொன்னது பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்துச்சு. அதன் பிறகு, என் பொறுப்புணர்வு அதிகமாச்சு.