மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 27: தினமும் எனக்கு இரண்டு மூட்டைக் கடிதங்கள் வரும்! - நடிகை அனுராதா

நடிகை அனுராதா
News
நடிகை அனுராதா ( அவள் விகடன் )

சில்க் ஸ்மிதாவைக் காப்பாற்ற தவறிட்டேன்!

மிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்கள் வெற்றிக்கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், அனுராதா.

திரைப்படங்களில் கதாநாயகியாகப் புகழ்பெற ஆசைப்பட்ட அனுராதாவுக்குக் கிடைத்தது பெரும் ஏமாற்றம். பிறகு, கவர்ச்சி வேடங்களில் களமிறங்கி ரசிகர்களிடம் பெரிதும் புகழ்பெற்றவர். வில்லியாகவும் அசத்தியவர், காதல் கணவருக்குத் தாயாகி, குடும்பச் சுமைகளையும் திறம்பட எதிர்கொண்டார். இன்றும் நடிப்பைத் தொடரும் அனுராதா, தன் வெற்றிப் பயணம் குறித்து மனம் திறக்கிறார்.

ரஜினி, கமலுடன் விளையாட்டு... விஜயசாந்தியுடன் டான்ஸ்!

பூர்வீகம் சென்னைதான். சினிமா டான்ஸ் மாஸ்டரான அப்பா கிருஷ்ணகுமார்கிட்ட, அஞ்சு வயசுல டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சேன். மேடை நாடக நடிகையாயிருந்தவர் என் அம்மா சரோஜா. அவர் `ஊர்வசி’ சாரதா, எஸ்.வரலட்சுமி, ஸ்ரீதேவி போன்ற நடிகைகளுக்கு பர்சனல் சிகை அலங்காரக் கலைஞராகவும் இருந்தார். இயக்குநர் கே.பாலசந்தர் சாரின் ஏராளமான படங்களிலும் சிகை அலங்காரக் கலைஞராக வேலை செய்தார்.

பள்ளி விடுமுறை நாள்கள்ல பெற்றோருடன் ஷூட்டிங் பார்க்கப் போவேன். என் சின்ன வயசுல ரஜினி, கமல் உள்ளிட்ட பல கலைஞர்களுடன் விளையாடி மகிழ்ந்த நினைவுகள் மனசுல பசுமையா இருக்கு.

படிப்பில் நாட்டமில்லாத எனக்கு, சினிமாவில்தான் அதிக ஆர்வம். பனகல் பார்க் பக்கத்துல இருந்த குச்சுப்புடி அகாடமியில் விஜயசாந்தி, நளினி, நான் உட்பட பலரும் டான்ஸ் கத்துக்கிட்டோம். கே.பாலசந்தர் சார் படங்களில் நடிக்கணும்னு ரொம்பவே ஆசைப்பட்டேன். அவருடைய `அக்னிசாட்சி’ படத்துக்காக எனக்கு மேக்கப் டெஸ்ட் செஞ்சாங்க. `ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்கா... சில காலம் போகட்டும்’னு அம்மாகிட்ட சொல்லிட்டார்.

நடிகை அனுராதா
நடிகை அனுராதா
அவள் விகடன்

ஹீரோயின் வாய்ப்பு... ஏமாற்றமும் வருத்தமும்`நிழல் நிஜமாகிறது’ படத்தின் தெலுங்கு வெர்ஷன்ல டான்ஸ் கத்துகிற குழந்தையா சின்ன ரோல்ல நடிச்சேன். ஒருநாள் அம்மாவுடன் ஏவி.எம் ஸ்டூடியோவில் விளையாடிட்டு இருந்தேன். நடிகை சாரதா மேடத்தைப் பார்க்க வந்திருந்த மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ், அவருடைய படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். சாரதா மேடம், `அவர் பெரிய இயக்குநர். உன் மகளை நடிக்க வை’னு என் அம்மாவிடம் வலியுறுத்த, `இனி அவள் உறங்கட்டும்’ படத்தில் நடிச்சேன். அம்மா - மகள் உறவை அழகா வெளிப்படுத்திய அந்தப் படத்தில் என் கேரக்டர் நல்லா பேசப்படவே, அடுத்தடுத்து சில மலையாளப் படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். அதனால, பள்ளிப் படிப்பைக்கூட முறையா முடிக்க முடியலை.

பத்திரிகைகளில் என் படங்களைப் பார்த்த `செம்மீன்’ ஷீலா மேடம், அவர் தயாரித்து இயக்கிய `காதலிக்க 90 நாள்’ தமிழ்ப் படத்துல என்னை ஹீரோயினா அறிமுகப்படுத்தினாங்க. அந்தப் படத்தில் எனக்கு ஜோடி ரவிச்சந்திரன் சார். அவர் நண்பராக நாகேஷ் சார். என் அப்பாவாக ஜெமினி கணேசன் சார். என் அத்தைகளாக மனோரமா, சுகுமாரி, எஸ்.வரலட்சுமி அம்மாக்கள். ஏராளமான நட்சத்திரப் பட்டாளத்துடன் பெரிய பட்ஜெட்ல அந்தப் படம் எடுக்கப்பட்டது. ஆனா, ரிலீஸாகிற நேரத்துல சில பிரச்னைகளால் அந்தப் படம் வெளியே வரலை.

தொடர் தோல்விகள்... பாதையை மாற்றிய படம்!

என்மேல் இருந்த பாசத்தால் நாகேஷ் சார் சிபாரிசு செய்ய, `மோகனப் புன்னகை’ படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவரா நடிச்சேன். அடுத்தடுத்து நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 32 படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். என்ன காரணம்னு தெரியலை... நான் ஹீரோயினா நடிச்ச படங்கள் பெரிசா ஹிட்டாகலை.

அப்போதான் மலையாள ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் சார், அவர் பணியாற்றிய `காளியாமர்த்தம்’ படத்தில் கிளப் டான்ஸர் ரோலை எனக்கு வாங்கி கொடுத்தார். அதில் என் கவர்ச்சி நடனம் அதிகம் பேசப்பட, அப்படிப்பட்ட வாய்ப்புகளே தொடர்ந்தன. `கிளாமர் ரோல்ல நடிக்கிறது அவ்வளவு எளிதில்லை. உனக்கு வர்ற வாய்ப்புகளை பயன்படுத்திகோ'ன்னு நம்பிக்கை கொடுத்தார் புகழ்பெற்ற நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர்.

ஹீரோக்களின் வில்லி... இரண்டு மூட்டை கடிதங்கள்!

`ராசியில்லாத நடிகை’னு என்மேல் குத்தப்பட்ட முத்திரையை உடைக்க வில்லி, கிளாமர் ரோல், சண்டைக் காட்சினு கிடைச்ச கேரக்டர்கள்ல நூறு சதவிகித உழைப்பைக் கொட்டினேன். மலையாளத்தில் மோகன்லால் சார் மற்றும் தமிழில் சத்யராஜ் சார்கூட அதிக படங்களில் வில்லியாக நடிச்ச பெருமையும் எனக்குண்டு.

ஆரம்ப நேரத்தில் என்னைப் புறக்கணிச்ச வங்ககூட, `நீங்க ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினாலே படம் ஹிட்டாகிடும். கால்ஷீட் கொடுங்க’ன்னு என்னைத் தேடி வந்தாங்க. அப்போ ரசிகர்கள்கிட்ட இருந்து தினமும் ரெண்டு மூட்டைக் கடிதங்கள் எனக்கு வரும். அதுக்கெல்லாம் நானே கைப்பட பதில் எழுதுவேன். அப்போதைய புகழை ரொம்பவே ரசிச்சேன்.

காதல் திருமணம்... என் குழந்தையான கணவர்...

`ராகங்கள் மாறுவதில்லை’, `மாமன் மச்சான்’, `பிரியமுடன் பிரபு’, `நேர்மை’, `முத்து எங்கள் சொத்து’ உட்பட நிறைய வெற்றிப் படங்கள் அமைஞ்சது. ரஜினி, கமல் உட்பட ஐந்து மொழி சூப்பர் ஸ்டார்களுடன் பல படங்கள்ல நடிச்சேன்.

நடிகை அனுராதா
நடிகை அனுராதா
அவள் விகடன்

இந்தக் காலகட்டத்தில குரூப் டான்ஸராக இருந்து டான்ஸ் மாஸ்டரானார், சதீஷ்குமார். நண்பர்களான நாங்க காதலிச்சு திருமணம் செய்துகிட்டோம். பிறகு, டான்ஸ் மாஸ்டர்களாக இணைந்து வேலை செய்தோம். 1996-ம் வருஷம் ஷூட்டிங் முடிச்சுட்டு வரும் வழியில் நடந்த சாலை விபத்தில் சுயநினைவை இழந்துட்டார் சதீஷ். அடுத்த மூணாவது மாதத்துல, எல்லாமுமாக இருந்த அம்மாவும் இறந்துட்டார். ரொம்பவே தவிச்சுப்போனேன்.

குளிப்பாட்டி விடுறது, சாப்பாடு ஊட்டுறது, கதை சொல்றதுனு என் கணவரை குழந்தை மாதிரி 11 வருஷங்கள் பார்த்துக்கிட்டேன். பொருளாதார ரீதியா ரொம்பவே சிரமப்பட்டேன். இந்த நிலையில, 2007-ம் ஆண்டு மாரடைப்பால் என் கணவர் இறந்துட்டார். அதற்கு முன்பே சிங்கிள் பேரன்ட் வாழ்க்கைக்குப் பழகியதால், அதன் பின்னரும் எதற்கும் கலங்காம வாழ்வதற்கு என்னைப் பக்குவப்படுத்திகிட்டேன்.

என் வருத்தம்... கலங்காத உள்ளம்!

கஷ்டம், நஷ்டம், புகழ், போராட்டம்னு வாழ்க்கையில எல்லாத்தையும் சரிநிகரா பார்த்திருக்கேன். எதுக்குமே நான் கலங்கியதில்லை. எதற்கும் பயப்படவும் மாட்டேன். `தங்கம்’, ‘தெய்வமகள்’னு சீரியல்களிலும் என் திறமையைக் காட்டினேன். இப்ப, என் பொண்ணு நடத்துற `அபி டான்ஸ் கம்பெனி'ல அவளுக்கு உதவுவதோடு, நடிப்பிலும் கவனம் செலுத்தறேன். இதுவரை 700 படங்களுக்கு மேல் நடிச்சிருக்கேன். என் உடல் ஒத்துழைக்கிற வரை நிச்சயம் நடிப்பேன். போராட்டக் குணத்துடன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாத்திக்கிட்டதில் அளவற்ற பெருமை எனக்கு!

- நாயகிகள் பேசுவார்கள்!

மரணத்தை வென்று உருவான படம்!

புகழ்பெற்ற தெலுங்கு இயக்குநர் டி.கிருஷ்ணா சார், ஒருநாள் என் வீட்டுக்கு வந்து அவர் படத்தில் நடிக்கக் கேட்டார். ஏழு வயசு குழந்தைக்கு அம்மா ரோல் என்பதால, அந்த வாய்ப்பை நிராகரிச்சார் என் அம்மா. எப்போதும் தாடியுடன் இருப்பவர், பத்து நாள்கள் கழிச்சு மொட்டையடிச்சு தாடியில்லாத தோற்றத்துல மீண்டும் எங்க வீட்டுக்கு வந்தார். `பாலியல் தொழில் செய்யும் பெண் தன் வாழ்க்கையையே இழந்து, தன் பிள்ளைக்கு நல்ல எதிர்காலத்தை அமைச்சுக்கொடுக்கிற ரோல். ஜெயமாலினி உட்பட பலரைத் தேர்வு செய்து பார்த்தும் எனக்குத் திருப்தியில்லை. நீ நடிச்சாதான் நல்லா இருக்கும். புற்றுநோய் பாதிப்பில், வாழ்வின் கடைசிக் கட்டத்துல இருக்கேன். இதுதான் என் கடைசிப் படம். இந்த கேரக்டரால் உனக்குப் பெரிய புகழ் கிடைக்கும்’னு உருக்கமாகச் சொன்னார், கிருஷ்ணா சார். அவருக்காகவே அந்தப் படத்தில் நடிச்சேன்.

அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்ததால, நான் நடிச்ச முக்கியமான நீதிமன்றக் காட்சிகளை உதவி இயக்குநர்கள்தான் படமாக்கினாங்க. அதைப் பார்த்தவருக்குத் திருப்தியில்லை. வீல்சேரில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கும் நிலையிலும்கூட, அவரே நேரில் வந்து, எனக்கு வலுவான வசனங்களை எழுதி, படத்தை இயக்கினார். படம் ரிலீஸாவதற்குள் கிருஷ்ணா சார் இறந்துட்டார். அந்த `ரேபட்டி பொர்ருலு’ படம் பெரிய ஹிட்டாகி, எனக்கும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துச்சு.

சில்க் ஸ்மிதாவைக் காப்பாற்ற தவறிட்டேன்!

ச்சப் உதவியாளராக இருந்து, டான்ஸராகவும் நடிகையாகவும் ஸ்மிதா தனி டிரெண்ட்டை உருவாக்கினா. `அனுராதாவின் வருகையால் சில்க் ஸ்மிதாவின் மார்கெட் குறைஞ்சுடுச்சு’ன்னு பலரும் பேசினாங்க. இதனால, ஆரம்பத்துல அவ என்கிட்ட பேசவே மாட்டா. பிறகு, என்னைப் புரிஞ்சுகிட்டா. பிறகு, அவ தயாரிச்ச படங்கள்ல என்னை நடிக்க வெச்சா. இருவரும் நெருங்கிய தோழிகளானோம். ஆனாலும், பர்சனல் விஷயங்களை யார்கிட்டேயும் பகிர்ந்துக்க மாட்டா.

சில்க் ஸ்மிதா
சில்க் ஸ்மிதா
அவள் விகடன்

என் கணவர் நடன இயக்குநரா வேலை செய்த கன்னடப் படத்தில், ஸ்மிதாவுக்கு நான் வாய்ப்பு வாங்கிக்கொடுத்தேன். ஷூட்டிங் முடிச்சு அவ முன்கூட்டியே சென்னை வந்துட்டா. ஒருநாள் இரவு எனக்கு போன் பண்ணி, `என் வீட்டுக்கு வா... உன்கிட்ட அவசரமா பேசணும்’னு ஸ்மிதா ரொம்பவே வலியுறுத்திக் கூப்பிட்டா. `கர்நாடகாவுல இருந்து சதீஷ் வீட்டுக்கு வந்திட்டிருக்கார். அவருக்குச் சாப்பாடு ரெடி பண்ணணும். போன்லயே விஷயத்தைச் சொல்லு. ரொம்ப அவசரம்னா வீட்டுக்கு வர்றேன்’னு அவகிட்ட சொன்னேன். `பரவாயில்லை, நாளைக்கு வா...’னு சொன்னா. அதனால நானும் அமைதியா விட்டுட்டேன்.

அடுத்த நாள் ஸ்மிதா தற்கொலை நியூஸ் பார்த்துட்டு அலறியடிச்சு அவ வீட்டுக்கு ஓடினேன். அவ உடலை நேரில் பார்த்து கதறி அழுதேன். முந்தின இரவில் நான் அவளைச் சந்திக்கப் போயிருந்தா, பிரச்னையைக் கேட்டு தற்கொலை எண்ணத்தைத் தடுத்திருக்க முடியும். அந்தக் குற்ற உணர்வில் இப்போவரை தவிக்கிறேன்...