மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 28: கடலில் மூழ்கி உயிர் பிழைத்தேன்!

நடிகை அருணா
News
நடிகை அருணா ( அவள் விகடன் )

என் நடிப்பில் எனக்குப் பிடிக்காத ஒரே படம் அதுதான்...

மிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்கள் வெற்றிக்கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், அருணா.

முதல் படத்திலேயே இயக்குநர் பாரதிராஜா மீதான ஆழமான காதலை வெகுளித்தனமும் பயமும் கலந்த பரிமாணத்தில் வெளிப்படுத்தி அசத்தினார், அருணா. அந்த யதார்த்தமான கிராமத்துப் பெண் சோலையைத் தமிழ் நெஞ்சங்கள் இன்றளவும் மறக்கவில்லை. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர், காதல் திருமணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகினார். இப்போதுவரை நடிக்காமல் இருப்பவர், கணவருடன் பிசினஸில் பிஸி. 32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பிரத்யேகமாகப் பேட்டியளிக்கும் அருணா, தனது வெற்றிப் பயணம் குறித்து மனம் திறக்கிறார்.

எனக்கு நடிக்கத் தெரியாது!

என் பூர்வீகம் ஆந்திரா. ஹைதராபாத்தில் விவசாயக் குடும்பம். அதிகாரம் நம்மகிட்ட இருந்தா நல்ல விஷயங்களைச் செய்ய முடியும்னு கலெக்டராக ஆசைப்பட்டேன். படிப்பில் சராசரிதான். தவிர, சில விளையாட்டுகளில் கவனம் செலுத்தியதுடன் என் இளமைக் காலத்தை ரொம்பவே சந்தோஷமா கழிச்சேன். அபூர்வமாகத்தான் பெற்றோர் சினிமா பார்க்க அழைச்சுட்டுப்போவாங்க.

‘கல்லுக்குள் ஈரம்’ ஹீரோயின் தேர்வுக்காகப் படத்தின் இயக்குநர் நிவாஸ் சாரும், நாயகனாக நடிச்ச பாரதிராஜா சாரும் ஹைதராபாத் வந்திருந்தாங்க. பலகட்ட தேடலுக்குப் பிறகு, நான் படிச்ச ஸ்கூல்ல என்னைப் பார்த்திருக்காங்க.

நடிகை அருணா
நடிகை அருணா
அவள் விகடன்

அவங்க இருவரும் ஒருநாள் என்னைப் பின்தொடர்ந்து என் வீட்டுக்கு வந்து, என்னை சினிமாவில் நடிக்கக் கேட்டாங்க. நான் மறுத்தேன். சிலநாள் கழிச்சு மீண்டும் வந்து அவங்க வலியுறுத்தவே, சினிமாத் துறையில் இருந்த எங்க தூரத்துச் சொந்தக்காரர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டோம். அவர், பாரதிராஜா சாரின் பெருமைகளை எடுத்துச் சொல்லவும் நடிக்க ஒப்புக்கிட்டோம். ‘எனக்கு சினிமாவைப் பத்தி எதுவுமே தெரியாது’ன்னு நிவாஸ், பாரதிராஜா சார்கிட்ட சொன்னேன். ‘எங்களுக்கு அதுதான் வேணும். உன்னை நடிக்கவைக்கிறது எங்க பொறுப்பு’ன்னு சொன்னாங்க. அப்படித்தான் பத்தாவது படிக்கும்போது, ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் ஹீரோயினா கமிட் ஆனேன்.

விஜயசாந்தியுடன் நட்பு!

போட்டோ ஷூட் மற்றும் படக்குழுவினரின் அறிமுக விழா சென்னையில் நடந்துச்சு. அங்கேதான் படத்தின் ரெண்டாவது ஹீரோயின் விஜயசாந்தியைப் பார்த்தேன். முதல் சந்திப்பிலேயே நாங்க தோழிகள் ஆனோம். மைசூரு தலைக்காட்டில் ஷூட்டிங். பாரதிராஜா சார் தமிழில் நடிப்பு சொல்லிக்கொடுப்பது எனக்குப் புரியாது. அதை, நிவாஸ் சார் எனக்கு இந்தி அல்லது ஆங்கிலத்தில் புரியவைப்பார். டயலாக் சொல்லிக் கொடுக்கறப்போ, பாரதிராஜா சார் என்னைப் பலமுறை திட்டினார். மொழி பிரச்னையால எனக்கு அது புரியாது. அதனால எப்படித் திட்டினாலும் வருத்தப்பட மாட்டேன். டேக் போறதுக்கு முன்னாடி சிரமப்பட்டாலும், ‘ஆக்‌ஷன்’னு சொன்னதும் தடுமாற்றமில்லாம சிறப்பா நடிச்சிருவேன். அதனால, ‘உன் திறமைக்கு நீ பெரிய நடிகையா வருவே’ன்னு பாரதிராஜா சார் அடிக்கடி என்னைப் பாராட்டுவார்.

நிவாஸ் சாரும் பாரதிராஜா சாரும் நடிச்சுக் காட்டியதைப் பார்த்து அப்படியே நடிப்பேன். ‘சிறு பொன்மணி அசையும்’ பாடலில் வெறும் முக பாவனைகளிலேயே என்னைச் சிறப்பா நடிக்க வெச்சாங்க. கவுண்டமணி சார் என் கன்னத்தில் அடிக்கிற காட்சி... அவர் வேகமா கை ஓங்கும்போது நான் தலையைத் திருப்பணும். அது தெரியாம நான் அப்படியே நிற்க, மூணு முறை அவர் என் கன்னத்தில் பளார்னு அடிக்க, வலி தாங்காம அலறினேன். அந்த அளவுக்கு வெகுளித்தனமா இருந்தேன்.

நடிகை அருணா
நடிகை அருணா
அவள் விகடன்

விஜயசாந்தி அர்ப்பணிப்புடன் நடிப்பாங்க. ஷாட் இல்லாதப்போ நாங்க சின்னக் குழந்தை மாதிரி விளையாடுவோம். பாரதிராஜா சாரின் உதவி இயக்குநர்களான மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்ட சிலர், எனக்குத் தவறா தமிழ் சொல்லிக்கொடுத்து சிலரிடம் சொல்லச் சொல்வாங்க. விளையாட்டுக்கு அவங்க செய்றதை விஜயசாந்திதான் புரியவெச்சு என்னைக் காப்பாத்துவாங்க!

பதற வைத்த தூக்கம்!

ஒருநாள் இரவு படப்பிடிப்பு. களைப்பில் தற்காலிக மேக்கப் அறையிலேயே தூங்கிட்டேன். எல்லோரும் பதறிப்போய் விடியவிடிய என்னைத் தேடியிருக்காங்க. அதிகாலை 4 மணிக்குத் தூக்கம் கலைஞ்சு வெளியே வந்தேன். அப்போதான் என் அம்மா உட்பட படக்குழுவினர் எல்லோருக்கும் நிம்மதி வந்துச்சு.

அந்தப் படத்தில் நடிச்சு முடிச்சதும் மீண்டும் ஹைதராபாத்ல படிப்பைத் தொடர்ந்தேன். ‘கல்லுக்குள் ஈரம்’ ரிலீஸாகி பெரிய ஹிட். ‘அந்தப் படத்துல நீ அதிகம் பேசலை. உன் கண்கள்தான் அதிகம் பேசியது; நடிச்சது’ன்னு சிரஞ்சீவி சார் என்னைப் பாராட்டினார். இதுபோல நிறைய பாராட்டுகளோடு, பட வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா, நான் எதையுமே ஏத்துக்கலை.

அப்போ, ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தையும், அதன் தெலுங்கு வெர்ஷன் ‘சீதாகொகா சிலுகா’ படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கினார் பாரதிராஜா சார். அவர் வலியுறுத்தியதால, தமிழில் ராதா நடிச்ச ரோல்ல, தெலுங்கில் நான் ஹீரோயினா நடிச்சேன். ரெண்டு வெர்ஷனிலும் கார்த்திக் தான் ஹீரோ.

தாய்மொழி தெலுங்கு என்பதால, கதைகளை உள்வாங்கி திருப்தியா நடிச்சேன். கன்னியாகுமரியில ஷூட்டிங். கடற்கரையில ஒரு பாறை மேல நானும் கார்த்திக்கும் படுத்திருப்போம். எங்க மேல அலை அடிக்கிற காட்சியைப் படமாக்கினார் பாரதிராஜா சார். திடீர்னு பெரிய அலை வந்து எங்கமேல அடிக்க இருவரும் கடலில் மூழ்கிட்டோம். எல்லோரும் பதறிப்போயிட்டாங்க. கொஞ்ச நேரத்தில் மறுபடியும் இன்னொரு பெரிய அலையில் நாங்க பாறைக்கு வந்துசேர்ந்து, தடுமாறி மேல ஏறி உயிர் பிழைச்சோம். என்ன நடந்துச்சு, எப்படித் தப்பிச்சோம்னு புரியாம நானும் கார்த்திக்கும் அதிர்ச்சியில் உறைஞ்சுட்டோம். கொஞ்சநேரம் கழிச்சு இயல்புநிலை திரும்பியதும் ஷூட்டிங் தொடர்ந்துச்சு.

கடற்கரையில் சூரிய உதயம் வரும்போது நான் கால்தூக்கி அபிநயம் பண்ற ஒரே ஒரு காட்சி அந்தப் படத்தில் வரும். அதுக்காக, மொத்தப் படக்குழுவும் அதிகாலையில ஒருமணிநேரம் நடந்து கடற்கரைக்குப் போவோம். முதல் மூணுநாள் பாரதிராஜா சாருக்கு திருப்தியில்லை. நாலாவது நாள்தான் அந்தக் காட்சி ஓகே ஆச்சு. அந்தப் படம் தெலுங்கிலும் பெரிய ஹிட். நிறைய பட வாய்ப்புகள் குவிஞ்சது. ஆனாலும், படிப்புதான் முக்கியம்னு இன்டர்மீடியேட் கோர்ஸ் முடிச்சுட்டு பி.ஏ படிச்சேன். காலேஜ்ல இயல்பாக இருக்க முடியாத அளவுக்கு, என்னை செலிபிரிட்டியாகவே எல்லோரும் அணுகினாங்க. பசங்க தொந்தரவும் அதிகம் இருந்துச்சு. அதனாலயே முதல் வருஷத்துலேயே படிப்பை நிறுத்திட்டு, மீண்டும் நடிக்க ஆரம்பிச்சேன்.

‘நீதி பிழைத்தது’ உட்பட சில படங்கள்ல விஜயகாந்த் சாருக்கு ஜோடியா நடிச்சேன். தவிர, ‘நாடோடி ராஜா’, ‘ஆனந்த ராகம்’, ‘சட்டம் சிரிக்கிறது’, ‘கேள்வியும் நானே பதிலும் நானே’, ‘கைநாட்டு’ உட்பட பல தமிழ்ப் படங்கள்ல நடிச்சேன். அதில் பல படங்கள் பெரிசா ஹிட்டாகலை. அதேநேரம் தெலுங்கிலும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, மோகன் பாபு, ராஜேந்திர பிரசாத் உட்பட அப்போதைய முன்னணி ஹீரோக்கள் பலருடனும் ஜோடியா நடிச்சேன். தமிழை ஒப்பிடும்போது தெலுங்கில் அதிகம் புகழ் கிடைச்சுது. மம்முட்டி மற்றும் மோகன்லால் ஜோடியா சில மலையாளப் படங்கள்லயும் நடிச்சேன்.

என் முடிவில்தான் தவறு!

அப்போ எனக்கு ஆலோசனை கொடுக்க சினிமா துறை நண்பர்கள் யாருமில்லை. ‘இந்தப் படத்தில் நடிக்கலாமா, வேண்டாமா?’னு முடிவெடுக்க ரொம்பவே சிரமப்பட்டேன். தவறான முடிவெடுத்து சில படங்கள்ல நடிச்சு, அவை பெரிசா ஹிட்டாகலை. நான் நடிக்க மறுத்த படங்கள் பலவும் பெரிய ஹிட்டானது. வாய்ப்புகள் சிலநேரம்தான் நம்மைத் தேடி வரும். அதைச் சரியா பயன்படுத்திக்கணும். இல்லைனா, எது நடந்தாலும் வருத்தப்படக்கூடாதுன்னு அனுபவத்தில் உணர்ந்தேன். ஷூட்டிங்கு முன்னாடி எனக்குச் சொல்லப்பட்டதைவிடவும், ‘பெண்மணி அவள் கண்மணி’ படத்துல என்னுடையது அதிக நெகட்டிவான கேரக்டரா இருந்துச்சு. அதனால, தொடர்ந்து நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லைனாலும், என்னால ஷூட்டிங் பாதிக்கக்கூடாதுன்னு வருத்தத்துடனே நடிச்சு முடிச்சேன். என் நடிப்பில் எனக்குப் பிடிக்காத ஒரே படம் அதுதான். தவறு என் முடிவில்தான். எனவே, என் மனவருத்தத்தை இயக்குநர் விசு சார்கிட்டகூட நான் சொல்லலை. அந்தப் படம் ஹிட்டாகி, அதுபோன்ற நெகட்டிவ் கேரக்டர்களுடன் நிறைய புதுப்பட வாய்ப்புகள் வந்துச்சு. நடிக்காம இருந்தாலும் பரவாயில்லை. இதுபோன்ற கேரக்டர் வேண்டாம்னு எதையும் ஏத்துக்கலை.

எட்டு வருஷங்களில் தென்னிந்தியாவின் நாலு மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சேன். பெரும்பாலும் ஹீரோயின் ரோல்தான். இதுக்கிடையே எங்க குடும்ப நண்பரான பஞ்சாப் மாநிலத்தவரான மோகன் குப்தா, அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவார். நாங்க நண்பர்களாகப் பழகி காதலர்களானோம். இருவீட்டு சம்மதத்துடன் 1987-ம் ஆண்டு, எங்களுக்குக் கல்யாணமாச்சு. கணவர் வேண்டுகோள்படி குடும்பத்தைக் கவனிச்சுக்க சினிமாவிலிருந்து விலகினேன்.

33 வருஷமா நடிக்காம இருந்தாலும், என் 80’ஸ் சினிமா தோழிகளுடன் நட்புடன் இருக்கிறேன்.

மகிழ்ச்சியான வாழ்க்கை!

கல்யாணத்துக்குப் பிறகும்கூட எனக்குச் சுத்தமா சமையல் தெரியாது. கணவருக்கான வடஇந்திய உணவுகளைச் செய்யும் அனுபவம் வீட்டு வேலையாட்களுக்கும் இல்லை. அதனால், பிசினஸை கவனிச்சுக்கிட்டு, கணவரே எங்க இருவருக்கும் சமையல் செய்வார். அப்போ நாங்க வசிச்ச பெங்களூர்ல மூணு வருஷம் சமையல் கோர்ஸ் போனேன். வடஇந்தியா, தென்னிந்தியா, வெஸ்டர்ன் உணவுகளைச் சமைக்கக் கத்துக்கிட்டேன். அப்போதிலிருந்து இப்போவரை வீட்டுல வேலையாட்கள் இருந்தாலும், நானும் சிறப்பா சமைப்பேன். இதுக்கிடையே எங்க நாலு பெண் குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனிச்சுக்கவே நேரம் சரியா இருந்துச்சு.

டீலர்ஷிப் முறையில், அமெரிக்காவி லிருந்து மருத்துவ உபகரணங்களை வாங்கி, இந்தியாவில் விற்பனை செய்யும் நிறுவனத்தைச் சென்னையில் நடத்திட்டிருக்கோம். அதில் 500-க்கும் மேற்பட்டோர் வேலை செய்றாங்க. கணவர், நான், மூத்த மகள் மற்றும் மருமகன் ஆகியோரும் நிறுவனப் பொறுப்புகளை கவனிச்சுக்கிறோம். அதனால, சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து வந்தாலும் ஏற்க முடியலை. குடும்பப் பொறுப்புக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டதால, என் திருமண வாழ்க்கை மிகச் சிறப்பா அமைஞ்சிருக்கு. ‘எங்களுக்காக இவ்வளவு வருஷம் நடிக்காம இருந்தது போதும். நல்ல வாய்ப்பு கிடைச்சா இனி நடி’ன்னு கணவரும் மகள்களும் சொல்றாங்க. நானும் நடிக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்!

- நாயகிகள் பேசுவார்கள்!

பாரதிராஜாவின் வருத்தம்!

ருமுறை பாரதிராஜா சாரும் நானும் யதேச்சையா சந்திச்சோம். ‘என் படத்தில் சின்ன ரோல் இருக்கு. விருப்பம் இருந்தால் நடி’ன்னு சொன்னார். என் குருநாதர் சொல்லி மறுக்க முடியுமா? அவருக்காகவே ஈகோ பார்க்காமல், ‘முதல் மரியாதை’ படத்துல வடிவுக்கரசியின் மகளா சின்ன ரோல்ல நடிச்சேன்.

 ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில்...
‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில்...
அவள் விகடன்

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பாரதிராஜா சாரை சந்திச்சப்ப, ‘உன் திறமைக்கு, ‘சீதாகொகா சிலுகா’ மாதிரி தமிழிலும் நான் உனக்குப் பெரிய வெற்றிப் படம் ஒண்ணு கொடுத்திருக்கணும். அந்த வருத்தம் எனக்கு இருக்கு. இனி நான் இயக்கும் படத்தில் நடிப்பியா?’ன்னு கேட்டார். ‘நிச்சயம் நடிப்பேன்’னு சொன்னேன். எனக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதான் மீண்டும் நடிக்கிற ஆசை வந்திருக்கு!

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 28: கடலில் மூழ்கி உயிர் பிழைத்தேன்!
அவள் விகடன்

வெட்கப்பட வைக்கிறார்!

எம்.பி.ஏ படிச்ச மூத்த பொண்ணு ஷிகா குப்தா கணவருடன் சென்னையில் வசிக்கிறா. ஆர்க்கிடெக்ட்டான ரெண்டாவது பொண்ணு யாஸ்வி குப்தாவும் டாக்டர் மாப்பிள்ளையும் அமெரிக்காவில் வசிக்கிறாங்க. மூணாவது பொண்ணு சோபிகா குப்தா வழக்கறிஞர். கடைக்குட்டி ரியா குப்தா எம்.பி.பி.எஸ் படிக்கிறா. பொண்ணுங்க நால்வரும் என்னுடைய ஒரு படத்தைக்கூட பார்த்ததில்லை. நானும் பார்க்கச் சொல்லி வலியுறுத்தினதில்லை. ‘இப்போ மீண்டும் நடிம்மா. உன் நடிப்பைப் பார்க்கிறோம்’னு மகள்கள் சொல்றாங்க. கணவர் மோகன் குப்தாவோ, ‘நீ ஹீரோயினா நடிச்சப்போ இருந்த மாதிரியே இப்போதும் இருக்கே’ன்னு கிண்டல் செய்து வெட்கப்பட வைக்கிறார்!