மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 30: என் கணவரும் மகனும் அரசியலுக்கு வர வேண்டும்! - சுஹாசினி

சுஹாசினி
பிரீமியம் ஸ்டோரி
News
சுஹாசினி ( அவள் விகடன் )

எனக்குள் சினிமா ஆர்வத்தை விதைச்சவங்க பாட்டியும் கமலும்தான்...

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்கள் வெற்றிக்கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், சுஹாசினி.

தென்னிந்திய சினிமாக்களின் யதார்த்த நாயகிகளில் முக்கியமானவர், சுஹாசினி. ஆரம்பக்காலத்தில் கமல்ஹாசன் வாயிலாக சினிமா அனுபவங்களைக் கற்றவர், ஒளிப்பதிவாளராகும் ஆர்வத்தில் திரைத்துறையில் நுழைந்தார். ஆனால், எதிர்பாராத வகையில் நடிகையானார். குடும்பப் பாங்கான, பெண்ணியம் பேசும் படங்களில் அதிகம் நடித்துப் புகழ்பெற்றார். இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியானார். இப்போது ‘நாம் ஃபவுண்டேஷன்' மூலம் சமூக சேவைப் பணிகளையும் செய்துவரும் சுஹாசினி, தனது வெற்றிப் பயணம் குறித்து விரிவாகப் பேசுகிறார்.

ஸ்கூல் முடிந்ததும் சினிமா!

மூணு பெண் குழந்தைகளையும் சுதந்திரமாகவும் பிறரை எதிர்பார்க்காமல் தன்னிச்சையாகச் செயல்படவும் ஊக்கம்கொடுத்து வளர்த்தனர் பெற்றோர். நான் பிறந்த பரமக்குடியிலும், பிறகு மதுரையிலும் 13 வயதுவரை வளர்ந்தது என் பொற்காலம். மதுரையில் பெரிய வழக்கறிஞராக இருந்த என் தாத்தாவைப் பார்க்க ராஜாஜி, காமராஜர் உட்பட பல தலைவர்கள் அடிக்கடி வருவாங்க. குடும்பத்திலுள்ள பலருக்கும் எதிர்காலத்துக்கான நம்பிக்கையை விதைத்தார் தாத்தா. நான் ரெண்டாவது படிக்கும்போது, ‘சிலர் நடிப்பார்; சிலர் படிப்பார்; என் பேத்தி படித்துக்கொண்டே நடிப்பாள்’னு சொன்னார். அதை நான் பெரிசா எடுத்துக்கவேயில்லை. என் பெற்றோர் உடல்நிலை சரியில்லாம மதுரையில் சிகிச்சையில் இருந்தாங்க. அப்போ கமல் என்னைச் சென்னைக்குக் கூட்டிட்டுவந்தார்.

சுஹாசினி
சுஹாசினி
அவள் விகடன்

சினிமாத் துறையின் மீது பெரும் ஆர்வம்கொண்ட பாட்டிதான் என்னை வளர்த்தாங்க. அவங்க, மாலையில் என்னை ஸ்கூல்ல இருந்து நேரா ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப்போய் டிபன் வாங்கிக்கொடுப்பாங்க. பிறகு, சினிமாவுக்குக் கூட்டிப்போவாங்க. நடிகராக இருந்த கமல், சினிமா படப்பிடிப்புக்கு என்னைக் கூட்டிட்டுப்போய், நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார். பாட்டியும் கமலும்தான் எனக்குள் சினிமா ஆர்வத்தை விதைச்சாங்க.

தமிழ்நாடு தடகள அணியின் கேப்டனாக இருந்ததுடன், கிரிக்கெட் வீராங்கனையாகவும் நிறைய பரிசுகள் வாங்கினேன். ஸ்கூல் படிப்பு முடிச்சதும் வீட்டு எதிர்ப்பை மீறி, கமல்தான் என்னை அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்த்துவிட்டார். ஒளிப்பதிவாளராகும் இலக்கில் அதற்கான கோர்ஸில் சேர்ந்தேன்.

5,000 ரூபாய் சம்பளம்!

காலேஜ்ல என் சீனியர்களான பி.சி.ஶ்ரீராம், இயக்குநர் ராபர்ட் உட்பட பல நண்பர்களுடன் நிறைய விவாதங்கள் செய்துதான், சினிமா ரொம்பவே சீரியஸான விஷயம்னு புரிஞ்சுக்கிட்டேன். அப்போ, ‘உதிரிப்பூக்கள்’ படப்பிடிப்பில் கடைசி மூணுநாள்கள் வேலை செய்யும் வாய்ப்பு கிடைச்சுது. பிறகு, ‘ஜானி’ படத்துலயும் உதவி ஒளிப்பதிவாளராக முறைப்படி வேலை கொடுத்தார், மகேந்திரன் சார். என் சம்பளம் 5,000 ரூபாய்! எனக்குத் தெரியாமலேயே என்னை ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்துட்டு, என் அப்பாகிட்டயும் சம்மதம் வாங்கினார், மகேந்திரன்சார். பிறகு, ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மூலம் ரொம்பவே வலியுறுத்தி, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் என்னை ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார். சம்பளம் 15,000 ரூபாய்!

 ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படப்பிடிப்பில்...
‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படப்பிடிப்பில்...
அவள் விகடன்

அந்தப் படத்தின் பாதி ஷூட்டிங் முடிஞ்ச நிலையில, நான் நடிக்கிறதைக் கேள்விப் பட்ட பாரதிராஜா சார், என் வீட்டுக்கு வந்து போட்டோஷூட் பண்ணினார். ‘புதிய வார்ப்புகள்’ தெலுங்கு ரீமேக்கான ‘கொத்த ஜீவிதலு‘ படத்தில் என்னை ஹீரோயினாக்கினார். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் ஹிட்டான நிலையில், நண்பர்கள் ராபர்ட் - ராஜசேகருக்காகவே ‘பாலைவனச் சோலை’ படத்தில் ஹீரோயினாக நடிச்சேன். ஷூட்டிங், படிப்புன்னு பிஸியா இருந்தேன். ஒரு பெண், தோழி, சகோதரி, வழிகாட்டி உட்பட பலவிதங்களில் ஐந்து ஆண்களுடன் கண்ணியமாகப் பழகுவதுபோல காட்சிப்படுத்தினார்கள், இரட்டை இயக்குநர்கள். அந்தப் படமும் பெரிய ஹிட்.

திசைமாறிய பயணம்!

தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தும் மறுத்துட்டு, ஆறு மாதங்கள் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் படிப்பைத் தொடர்ந்தேன். படிப்புடன், ‘காளி, ‘மெட்டி’ உட்பட மகேந்திரன் சார் இயக்கிய ஏழு படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக வேலை செய்த அனுபவம் எனக்குப் பெரிய கொடுப்பினை. அந்த நேரத்துல ‘ஒரு ஓடை நதியாகிறது’, ‘சில்க் சில்க் சில்க்’ படங்களின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் வாய்ப்புவந்தும், போதிய அனுபவம் இல்லாததால மறுத்தேன். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்காக, 1980-ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது எனக்குக் கிடைச்சது. சிறந்த நடிகராக கமலும், இயக்குநராக கே.பாலசந்தரும், துணை நடிகைக்கான விருதை சுஜாதாவும் வாங்க, ‘இவங்களோடு நானும் விருது வாங்குறேனே’ன்னு ஆச்சர்யப்பட்டேன்.

இந்த வெற்றிதான்
உன் வாழ்க்கை

ஒருநாள் என்னை அழைச்சுக்கிட்டுப்போன இயக்குநர் ராபர்ட், செங்கல்பட்டில் நடந்த ‘பாலைவனச்சோலை’ படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தைக் காட்டினார். ‘இந்த வெற்றிதான் உன் வாழ்க்கை. இதை மிஸ் பண்ணிடாமல் தொடர்ந்து நடி’ன்னார். காதலுக்காக உருகுவதுன்னு நடிகைகளைச் சிறு வட்டத்துக்குள்ளேயே சுத்தவிடுறதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. ‘அந்த வரையறைக்குள் இல்லாம படம் எடுக்கிறேன்’னு எனக்காகவே ‘கல்யாண காலம்’ படத்தை இயக்கினாங்க, ராபர்ட் - ராஜசேகர் இணை. அப்போது, ஒருநாள் நடிகர் மனோபாலாகிட்ட பேசும்போது, ‘ஒளிப்பதிவாளர் இலக்கில் இருந்து இனி திசைமாறி நடிகையாகப் பயணிக்கப் போறேன்’னு அழுதுகிட்டே சொன்னேன். தொடர்ந்து பல மொழிகளிலும் நடிச்சேன்.

கமலின் எதிர்ப்பு!

அப்போது ஒரே வீட்டில் வசிச்ச அப்பா, நான், கமல் மூவருமே பிஸியான நடிகர்கள். காலையில 7 மணி கால்ஷீட்டுக்கு அவசரமா கிளம்பும் கமல், தூங்கிட்டு இருக்கும் என்னை எட்டி உதைச்சு, ‘முன்கூட்டியே ஷூட்டிங் போய் பழகு’ என்பார். எங்க வீட்டுக்கு வரும் தெலுங்கு தயாரிப்பாளர்களை அன்போடு கமல் வரவேற்பார். ‘நாங்க சுஹாசினியை புக் பண்ண வந்திருக்கோம்’னு அவங்க சொல்ல, கமல் என்னை கிண்டலாகப் பார்ப்பார். ‘நீயும் சுஜாதாவும் கிளிசரினைப் பயன்படுத்தியே நடிச்சுடுறீங்க.

கே.ஆர்.விஜயா மாதிரி தலையில கிரீடம்கூட வெக்க மாட்டீங்கிறீங்க’ன்னு நிறைய கிண்டல் செய்வார். அதனாலயே நடிப்பில் வித்தியாசம் காட்ட, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்துல அருக்காணி ரோல்ல நடிச்சேன். ‘பொண்ணுங்க ஸ்கிரீன்ல எப்போதுமே அழகா தெரியணும். இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம்’னு கமல் சொன்னதை நான் ஏத்துக்கலை.

நீளமான என் முடியைக் கட் பண்ணி அதில் கம்பிவெச்சு கட்டி, முடி தூக்கி இருக்கிற மாதிரி செய்தாங்க. டல் மேக்கப் அலர்ஜியை ஏற்படுத்தியும்கூட மகிழ்ச்சியாகவே நடிச்சேன். அந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்லயும் நானே நடிச்சேன். ரெண்டு படமும் பெரிய ஹிட். இதுக்கிடையே, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நடிக்கிற நேரம், ‘சினிமாவில் நடிக்கிற ஆர்வம் இருந்தா என்கிட்ட சொல்ல மாட்டீயா?’ன்னு உரிமையுடன் கேட்ட கே.பாலசந்தர் சார், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் கன்னட ரீமேக்ல என்னை ஹீரோயினாக்கினார். அந்தப் படத்தில் பஸ் கண்டக்டர் ரோலில் கமல் நடிச்சார்.

என் முடிவே சிந்துவின் முடிவு!

‘சிந்து பைரவி’ படத்தில் உதவி இயக்குநராக வேலை செய்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு ரெண்டு மனைவிகள். ‘சிந்துவும் பைரவியும் ஒப்புக்கொண்டால் இருவரும் ஒரே வீட்டில் கணவருடன் சேர்ந்து வாழலாம்’னு தனது அனுபவத்தில் சொன்னார். அதோடு, ‘பெற்ற குழந்தையைக் கொடுத்துவிட்டு பாதியில் வந்தவள் பாதியிலேயே செல்வது’ன்னு ரெண்டாவது க்ளைமாக்ஸும் சொல்லியிருக்கார். இதை என்கிட்ட சொன்ன கே.பாலசந்தர் சார், ‘நீ இந்தத் தலைமுறை பொண்ணு. உன் முடிவு என்ன?’ன்னு கேட்டார். ‘மனைவி இருக்கும்போது இன்னொரு பெண்ணுடன் ஒருவர் குடும்பம் நடத்துறது சட்டப்படி தவறு. மேலும், உங்க படம் தவறான கருத்தை வலியுறுத்துவதாக அமையக் கூடாது. ரெண்டாவது முடிவுதான் சரி’ன்னு சொன்னேன். அதையே ஏத்துகிட்டார் பாலசந்தர் சார்.

 ‘சிந்து பைரவி'யில்...
‘சிந்து பைரவி'யில்...
அவள் விகடன்

‘சிந்து பைரவி’ படத்தில் என் கதாபாத்திரத் துக்கு சாதக, பாதக விமர்சனங்கள் கிடைச்சுது. அதேநேரம் நடிகை ஜெயசுதா உட்பட பலரும் என் நடிப்பைப் பாராட்டியதுபோலவே, அந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றேன். அதனாலயே, ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ ஷூட்டிங்ல சத்யராஜும் ரகுவரனும் என்னுடன் போட்டிபோட்டு நடிச்சாங்க. இதை இயக்குநர் பாசில் என்கிட்ட பெருமையா சொன்னார். கண்ணியமான கதாபாத்திரம், நோ கிளாமர், விரசமில்லாத வசனங்கள்னு யதார்த்தமானப் பெண்களைப் பிரதிபலிக்கிற ரோல்ல மட்டுமே நடிக்கிறதுன்னு உறுதியா இருந்தேன். ‘ஆகாய கங்கை’, ‘வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன்’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ உட்பட நிறைய வெற்றிப் படங்கள் அமைஞ்சது.

மணிரத்னத்தின் மன மாற்றம்!

சிரஞ்சீவியுடன் ‘பாலைவனச்சோலை’ படத்தின் தெலுங்கு ரீமேக் உட்பட பல படங்கள்ல ஜோடியா நடிச்சேன். தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் பிஸியா நடிச்சு, நிறைய வெற்றிப் படங்கள் அமைஞ்சது. இதுவரை நான்கு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சிருக்கேன். அதில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயின். ‘திருடா திருடா’, ‘தளபதி’ உள்ளிட்ட சில படங்கள்ல ஹீரோயின்களுக்கு டப்பிங்கும் பேசினேன்.

என் கணவர் மணிரத்னம் இயக்கிய முதல் படமான ‘பல்லவி அனுபல்லவி’ கன்னடப் படத்தில் என்னைத்தான் ஹீரோயினா நடிக்கக் கேட்டார். லட்சுமி மேடத்துக்கு ஈடுகொடுத்து என்னால நடிக்க முடியாதுன்னு அந்தப் படத்தில் நடிக்க மறுத்தேன். பிறகு, மணியின் ‘திவ்யா’ங்கிற கன்னடப் படத்துல நடிக்க நான் ஒப்புகிட்டாலும், தயாரிப்பாளர் கிடைக்காததால அந்தப் படம் உருவாகலை. அந்தப் படம்தான் தமிழில் ‘மெளன ராக’மாக உருவானது.

மணி எனக்குக் கணவராக அமைந்தால் நல்லா இருக்கும்னு என் அப்பா முடிவெடுத்து, அவர்கிட்ட பேசியிருக்கார். ஒருநாள் என்னைப் பார்க்க வந்தார். வீட்டில் என் பெற்றோர் இல்லை. கல்யாணத்தில் விருப்பமில்லைனு சொல்லவந்தவர், என்னிடம் உரையாடிய பிறகு முடிவைக் கொஞ்சம் மாத்திக்கிட்டார். ‘நாம பழகிப்பார்த்து முடிவெடுக்கலாம்’னு சொன்னவர், ‘சாப்பிட என்ன இருக்கு?’னு கேட்டார். ‘ரச சாதம், உருளைக்கிழங்குப் பொரியல் மட்டும்தான் இருக்குது’ன்னு சொன்னேன். விரும்பிச் சாப்பிட்டார்.

32 வருடக் காதல் வாழ்க்கை!

நான் எழுதிக்கொடுத்த போன் நம்பரை அன்னிக்கு இரவு பார்த்தவர், இந்தக் கையெழுத்துடன் வாழ்நாள் முழுக்க இருக்க முடியும்னு முடிவெடுத்திருக்கார். ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் ரஜினி இறந்த பிறகான காட்சிக்கு டப்பிங் கொடுத்திட்டிருந்தேன். அங்கேயே எனக்கு போன் பண்ணியவர், ‘நல்ல நாளில் இப்படியான காட்சிக்கு டப்பிங் கொடுக்க வைக்கிறாங்களே’ன்னார். அப்போதே அவர் முடிவைத் தெரிஞ்சுக்கிட்டேன். பிறகு, அவர் விருப்பத்தைச் சொன்னார். அவர் பொண்ணு பார்க்க வந்தப்பவே அவர்மீது எனக்கு இருந்த விருப்பத்தைத் தாமதமாக நானும் சொன்னேன்.

 கணவருடன்...
கணவருடன்...
அவள் விகடன்

கல்யாணமான புதுசுலயே, ‘உன் விருப்பம் போல செயல்படு’ன்னு ஊக்கம் கொடுத் தார். இதுவரை எதுக்குமே கட்டுப்பாடுகள் விதிக்கலை. மிகத் திறமையான கலைஞர் என்பதை உணர்ந்து அவர் எதிர்பார்க்காவிட்டா லும் அவருக்கான மரியாதையை சரியாகக் கொடுக்கிறேன். இந்த இரண்டு குணங்களும்தாம் திருமணத்துக்குப் பிந்தைய எங்க 32 வருடக் காதல் வாழ்க்கையைச் சிறப்பாக்குது.

அவர் முற்போக்கானவர். ‘பெண் விடுதலை பத்தி நீயெல்லாம் பேசக் கூடாது. உனக்கு இல்லாத விடுதலையா? ஆனா, உன் சுதந்திரத்தை முழுமையா நீ பயன்படுத்திக்கிறதே இல்லை’ன்னு சொல்வார். அவ்வப்போது அன்புச் சண்டைகள் போட்டுக்குவோம். முதலில் அவர்தான் விட்டுக்கொடுப்பார். அரசியல் குறித்து அதிகம் விவாதிப்போம். நடுநிலைமையுடன் அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசுவார். அரசியலும் தமிழ் சினிமாவும் பிணைப்புடன் இருந்ததை அடுத்த தலைமுறை தெரிஞ்சுக்கணும்னுதான், ‘இருவர்’ படத்தைத் தைரியமாக இயக்கினார்.

அரசியல் குறித்து அதிகம்
விவாதிப்போம்

இரண்டு பாகங்களாகப் ‘பொன்னியின் செல்வன்’ லண்டனில் பிஹெச்.டி படிக்கிற எங்க மகன் நந்தனுக்கும் அரசியலில் அதிக ஆர்வம் உண்டு. இலக்குக்காக நடிப்பு வாய்ப்புகளை மகன் தவிர்க்கிறார். கணவரும் மகனும் நேரடி அரசியலில் இறங்கினால் நிச்சயம் நியாயமான அரசியலை மேற்கொள்வாங்க. எனவே, இருவரும் அரசியலுக்கு வந்தால் ரொம்பவே சந்தோஷப்படுவேன்.

தூர்தர்ஷனில் ‘பெண்’ தொடரை இயக்கினேன். அதற்கு என்னை ஸ்கிரிப்ட் எழுத வெச்சு, நம்பிக்கையை ஏற்படுத்தியது என் கணவர்தான். என் உறவினர் பெண் தன் அப்பாவுக்குக் கொள்ளிவைத்த நிஜ நிகழ்வை அடிப்படையா வெச்சுதான், ‘இந்திரா’ படத்தை இயக்கினேன். வீட்டுல பெரிய இயக்குநர் இருக்கும்போது அவருக்கு உதவுறதுதான் சரின்னு உணர்ந்து படம் இயக்குவதை கைவிட்டுட்டேன். ‘திருடா திருடா’, ‘இருவர்’, ‘ராவணன்’ படங்களுக்கு முழுமையா திரைக்கதை எழுதினேன். தவிர, கணவரின் பெரும்பாலான படங்களின் திரைக்கதை உருவாக்கத்திலும் பங்களிப்பு செய்திருக்கேன்.

எங்களுக்குக் கல்யாணமான தருணத்துலயே ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப்போவதாகச் சொன்னார். அது இப்போதுதான் சாத்தியமாகியிருக்கு. ரெண்டு ஷெட்யூல் முடிஞ்சுடுச்சு. படத்தின் ரெண்டு பார்ட் ஷூட்டிங்கையும் ஜூலையில் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இரண்டாவது இன்னிங்ஸ்ல ‘சாக்லேட்’, ‘ஏகன்’, ‘ராமானுஜன்’ உட்பட பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிச்சேன். பிடிச்ச கதைகளில் தொடர்ந்து நடிப்பேன். தனித்து வாழும் பெண்களின் மேம்பாட்டுக்காக, 2010-ம் ஆண்டு ‘நாம் ஃபவுண்டேஷ’னைத் தொடங்கினேன். பெண்களுக்குத் தன்னம்பிக்கை, தொழில் பயிற்சி, சமூகத்தில் மதிப்புள்ள நிலையில் வாழ்வதற்கான வழிகாட்டுதல் உட்பட பல்வேறு விஷயங்களைச் செய்கிறோம். இந்தப் பணிகளுக்குத் தினமும் நேரம் செலவிடறேன். 80’ஸ் காலகட்ட நடிகர்களின் நட்பும் அன்பும் எப்போதுமே தொடரணும்னு கூட்டு முயற்சியுடன் ஆண்டுதோறும் எங்க குரூப் நடிகர்களின் சந்திப்பை நடத்துறோம். நடிகையானதால்தான், என்னால நிறைய மனிதர்களுடன் பழகவும், பயணம் செய்யவும், நிறைய புது முடிவுகள் எடுக்கவும், மக்களுக்கு உதவவும் முடிந்தது. அனுபவம் கூடக்கூட புதிய முயற்சிகளைத் தொடர்ந்து செய்வேன்!

- நிறைவு பெற்றது

கமலைச் சித்தப்பான்னு கூப்பிட்டதில்லை!

சித்தப்பா என்றாலும், கமலுக்கும் எனக்கும் சில ஆண்டுகள்தானே வயசு வித்தியாசம்... நாங்க நண்பர்கள் போலவே பழகியதால், அவரை நான் சித்தப்பான்னு கூப்பிட்டதில்லை. என் சின்ன வயசுல இளம் நடிகரா இருந்த கமலுக்கு மேனேஜர் மாதிரி எல்லா உதவிகளையும் செய்தேன்.

அப்போ அவர் படங்களின் ஷூட்டிங் பார்க்கப் போவேன். ‘ரொமான்ஸ் காட்சியில நடிக்கிறேன். மகளெல்லாம் பார்க்கக் கூடாது'ன்னு என்னை அனுப்பிவிடுவார்.

கல்யாணத்துக்குப் பிறகு எங்க வீட்டுக்குப் பக்கத்துலேயே தனி வீட்டில் குடியேறினார். அப்போ, ஏவி.எம் ஸ்டுடியோவுல கமல் உள்ளிட்ட ஒருசில பெரிய ஹீரோக்களுக்கு பிரத்யேக ரூம் இருக்கும். மற்ற நடிகர்களுக்குத் தனியா நார்மல் ரூம் இருக்கும். எனவே, ஸ்பெஷல் அனுமதி வாங்கி கமல் ரூம்ல அவர்கூட மதியம் சாப்பிடுவேன். மகள் முறை என்பதால் அவருடன் நான் ஜோடியா நடிக்க முடியாது. ‘நாயகன்’ படத்துல கமலின் மகள் ரோல்ல நான் நடிக்க முடிவானாலும், கடைசியில் அந்த வாய்ப்பு அமையலை.

தனிப்பட்ட வாழ்க்கையில் கமல் எடுத்த சில முடிவுகளால் அவருக்கும் எங்களுக்குமான பந்தத்தில் 25 வருஷமா இடைவெளி இருந்துச்சு. மனஸ்தாபங்களையெல்லாம் சரிசெய்யும் இணைப்புப் பாலமாகச் செயல்பட்டு, இப்போது மீண்டும் குடும்பத்தில் எல்லோருக்குள்ளும் பழைய பந்தத்தைத் தொடரச் செய்திருக்கிறேன்.

என்னைத் தொகுப்பாளராக்கிய ஜெயலலிதா!

ஜெயலலிதா அ.தி.மு.க-வின் கொள்கைப்பரப்புச் செயலாளராக இருந்தபோது, அவரைப் பற்றிய ஆவணப்படத்தைக் கோவை தம்பி `செல்வி'ங்கிற பெயரில் எடுத்தார். அதில், ஜெயலலிதாவாக என்னை நடிக்கக் கேட்டாங்க. பேராசிரியரான என் தங்கை சுபாஷினியின் கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்க, நானும் அக்கா டாக்டர் நந்தினியும் ஜெயலலிதா மேடத்தைச் சந்திக்கப் போனோம். `ஆவணப்படத்துல நடிக்க எனக்கு விருப்பமில்லை'ன்னு சொன்னேன். அதை ரொம்பவே யதார்த்தமா எடுத்துக்கிட்ட ஜெயலலிதா, `கமல் குட் ஆக்டர். ஆனா, உங்க அப்பாதான் ஹேண்ட்சம் மென்'னு புன்னகையுடன் சொன்னார்.

அவர் முதன்முறையாக முதலமைச்சர் ஆன காலகட்டத்துல, சென்னையில் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சி நடந்துச்சு. அப்போதும், அதன் பிறகு அவருக்குத் தமிழ் சினிமா சார்பில் நடந்த பாராட்டு விழாவிலும், செவாலியர் விருது பெற்றபோது சிவாஜி சாருக்கு நடந்த பாராட்டு விழா உட்பட பல்வேறு அரசு விழாக்களில் தொகுப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தார் ஜெயலலிதா. பின்னர், அவர் விருப்பப்படி ஜெயா டி.வி-யில், `ஹாசினி பேசும் படம்', `ஆட்டோகிராப்' நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வேலை செய்தேன். பிறகு, `பாடவா டூயட் பாடலை', `வீக்எண்டு வித் ஸ்டார்ஸ்' உட்பட பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகப் பணியாற்றினேன்.