மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 29: விஜய், சூர்யாவுடன் நடனமாட ஆசைப்படுகிறேன்! - ‘டிஸ்கோ’ சாந்தி

 ‘டிஸ்கோ’ சாந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
‘டிஸ்கோ’ சாந்தி ( அவள் விகடன் )

‘சினிமா வேண்டாம்’னு அம்மாகிட்ட சொல்லி அழுத நாள்கள் நிறைய உண்டு...

மிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்கள் வெற்றிக்கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், ‘டிஸ்கோ’ சாந்தி.

குடும்பப் பொருளாதாரச் சிக்கலால் விருப்பமின்றி நடிக்க வந்த சாந்தியை, கவர்ச்சி நடிகையாக மாற்றியது சினிமா உலகம். விருப்பமில்லை என்றாலும், அந்த வேடங்களில் அர்ப்பணிப்புடன் நடித்தார். ரசிகர்களும் கொண்டாடினர். நடனம் தெரியாமல் எதிர்கொண்ட புறக்கணிப்புகளைச் சவாலாக ஏற்றுக்கொண்டு தேர்ந்த நடனக் கலைஞரானார். தெலுங்கு நடிகர் ஶ்ரீஹரியைக் காதல் திருமணம் செய்துகொண்டு, சினிமாவிலிருந்து விலகினார். கணவர் மறைவுக்குப் பிறகு, சிங்கிள் பேரன்டாக இருப்பவர், கணவர் வழியில் சமூக சேவைகளையும் தொடர்கிறார். ஹைதராபாத்தில் வசித்துவரும் சாந்தி, தனது வெற்றிப் பயணம் குறித்து மனம் திறக்கிறார்.

பறிபோன சொத்துகள்!

அப்பா சி.எல்.ஆனந்தன், புகழ்பெற்ற குணச்சித்திர நடிகராக இருந்தவர். என் உடன்பிறந்தவர்களில் குழந்தைப் பருவத்துலயே இறந்துபோன மூவரைத் தவிர, மற்ற ஏழு பேரும் மகிழ்ச்சியா வளர்ந்தோம்.

 கணவருடன்...
கணவருடன்...
அவள் விகடன்

ஒருமுறை மட்டுமே அப்பாவுடன் ஷூட்டிங் பார்க்கப் போனேன். அப்போ குழந்தை நட்சத்திரமா இருந்த ஶ்ரீதேவியும் நானும் கீழே கிடக்கும் ஃபிலிம் ரோலைச் சேகரிச்சு விளையாடினோம். எப்போதாவது ஹாலிவுட் படங்களுக்கு மட்டும் அப்பா கூட்டுட்டுப்போவார். ரசிகர்கள் கூடிடுவாங்கன்னு படம் ஆரம்பிச்ச பிறகு அழைச்சிட்டுப் போய், படம் முடியறத்துக்குள் எங்களைக் கூட்டிட்டுவந்திடுவார். நிறைய படங்கள்ல நடிச்சு புகழ் பெற்றாலும், அப்பாவின் படிப்பறிவின்மையைப் பயன்படுத்தி பலரும் எங்க சொத்துகளை அபகரிச்சுக்கிட்டாங்க.

1980-ம் ஆண்டு தொடக்கத்துல உடல்நிலை சரியில்லாம இருந்த அப்பாவுக்கு சினிமா வாய்ப்புகளும் குறைஞ்சுது. அதனால, ரெண்டு நாளைக்கு ஒருவேளை மட்டும் சாப்பிடுற அளவுக்குப் பொருளாதாரச் சூழல் மோசமாச்சு. அதுவும் கஞ்சிதான். அதுவரை தனியார் ஸ்கூலுக்கு பிளைமோத் கார்ல போன நிலைமாறி, மாநகராட்சி ஸ்கூல்ல சேர்ந்து நெடுந்தூரம் நடந்துபோனேன். அங்கு படிச்ச எளிய பின்னணியிலுள்ள பிள்ளைகள் பலரும் என் நண்பர்களாகி, அவங்க வீட்டுச் சாப்பாட்டை எனக்கு அன்போடு கொடுப்பாங்க. வகுப்பு லீடராகி, நல்லா படிச்சுக்கிட்டிருந்த நான் டாக்டராக ஆசைப்பட்டேன். இந்த நிலையில தான் எனக்கு சினிமா வாய்ப்பு வந்துச்சு. நான் எவ்வளவோ மறுத்தும், குடும்பக் கஷ்டத்தைச் சொல்லி நடிக்க வலியுறுத்தினார் அப்பா. பத்தாவது படிக்கிறப்போ, ‘லால் இன் அமெரிக்கா’ மலையாளப் படத்துல மோகன் லால் சாருக்கு ஜோடியா நடிச்சேன்.

எதிர்கொண்ட புறக்கணிப்புகள்...

பாதி ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்த நிலையில் டிராப் ஆன அந்தப் படம், மூணு வருஷத்துக்குப் பிறகு ரிலீஸாச்சு. இதுக்கிடையே, நான் ஹீரோயினா நடிச்ச தமிழ்ப் படம் ஒன்றும் பாதியிலேயே டிராப் ஆகிடுச்சு. அப்போ, எனக்குச் சுத்தமா டான்ஸ் ஆடத்தெரியாம ரொம்பவே கஷ்டப்பட்டேன். ‘காதுல பூ’ என்ற படத்துல ஹீரோயினா கமிட் பண்ணிட்டு, வெறும் சோலோ பாடலுக்குக் கவர்ச்சி டான்ஸ் ஆடவெச்சாங்க. அதிர்ச்சியா இருந்தாலும், குடும்பச் சூழலுக்காக நடிச்சேன். அடுத்து நடிச்ச ‘ஊமை விழிகள்’ படத்தில் ‘ராத்திரி நேரத்து பூஜையில்’ பாடல் பெரிய ஹிட்டானது. அதைப் பக்திப் பாடல்னு நினைச்சு கோயில் திருவிழாக்களில் ஒலிபரப்பு செய்யவே சர்ச்சைகள் உருவானது. குடும்பமாக அந்தப் படத்தைத் தியேட்டர்ல பார்த்தோம்.

என் கவர்ச்சி நடனத்தைப் பார்த்து நானே முகம் சுளிச்சு, கோபத்துடன் வேதனை யடைந்தேன். அதன் பிறகு என் படங்களைப் பார்க்க வேண்டாம்னு குடும்பத்தினரிடம் சொல்லிட்டேன். பிறகு, நாங்க ஒண்ணா சினிமா பார்க்கவே போகலை. ஹீரோயின் அல்லது கேரக்டர் ரோல்களில் நடிக்க ஆசைப் பட்ட எனக்கு, தொடர்ந்து கவர்ச்சி டான்ஸ் ரோல்களே குவிஞ்சது. அப்போ சரியா டான்ஸ் ஆடத்தெரியாம, நிறைய டேக் எடுத்து நடன இயக்குநர்கள்கிட்ட திட்டுவாங்கினேன். ஒரு கன்னடப் படத்துல, நான் சரியா டான்ஸ் ஆடலைனு அவமானப்படுத்தித் திருப்பி அனுப்பிட்டாங்க. இதனால, ‘சினிமா வேண்டாம்’னு அம்மாகிட்ட சொல்லி அழுத நாள்கள் நிறைய உண்டு.

அச்சப்பட்ட ஆண்கள்!

நான் கஷ்டப்பட்டாலும், என்னுடன் பிறந்தவங்களை நல்ல நிலைக்கு உயர்த்தணும்கிற எண்ணம் மட்டுமே எனக்கு இருந்துச்சு. அதனால், விருப்பமில்லாவிட்டாலும் சினிமாவை என் கரியரா ஏத்துக்கிட்டேன். ரகுராம் மாஸ்டர்கிட்ட தனியா டான்ஸ் கிளாஸ் போனேன். அவர் பிஸியா இருக்க, அவரின் உதவியாளர் கலா மாஸ்டர்தான் எனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தாங்க. வைராக்கியத்துடன் பயிற்சி எடுத்தேன். ஒரே டேக்ல டான்ஸ் ஆடி, என்னைத் திட்டினவங்களே பாராட்டுற அளவுக்குச் சிறந்த டான்ஸராப் பெயரெடுத்தேன். என் கால்ஷீட்டுக்காகப் பல மொழி சினிமா பிரபலங்களும் காத்திருக்கும் நிலை உருவானது. என் நிஜப்பெயர் சாந்தகுமாரியைச் சுருக்கி, வீட்டில் சாந்தினு கூப்பிடுவாங்க. டிஸ்கோ பாடல்களுக்கு அதிகம் டான்ஸ் ஆடினதால, ‘டிஸ்கோ’ சாந்தியாகப் புகழ்பெற்றேன்.

 ‘டிஸ்கோ’ சாந்தி
‘டிஸ்கோ’ சாந்தி
அவள் விகடன்

வெளியூர், வெளிநாடுகளில் ஷூட்டிங் நடந்தாலும், என் உதவியாளர்களுடன் தனியாகவே பயணம் செய்வேன். என்னிடம் தவறான கண்ணோட்டத்துல அணுகினாலும், டபுள் மீனிங்ல பேசினாலும் யாரா இருந்தாலும் கண்டபடி அடிப்பேன். ஒருமுறை ஊட்டி ஷூட்டிங்ல என்னிடம் தப்பா பேசின அப்போதைய எம்.எல்.ஏ-வின் மகனை செமத்தியா அடிச்சேன். பெரிய நட்சத்திரங்கள் முன்னிலையிலேயே, என்னிடம் தவறா அணுகின சில ஆண்களை செருப்பால அடிச்சிருக்கேன். இதுபோன்ற நிறைய சம்பவங்களால், என்னிடம் சகஜமா பேசவே சினிமா துறை ஆண்கள் பலரும் பயப்படுவாங்க. என் பாதுகாப்புக்காகத் தைரியமான குணத்துடன் நான் இருந்ததால், குடும்பத்தினரும் பயமில்லாமல் இருந்தாங்க.

காத்திருந்த பிரபலங்கள்!

ரஜினி, கமல், என்.டி.ராம ராவ், நாகேஸ்வர ராவ், ஷாரூக் கான், திலிப்குமார், அனில் கபூர், விஷ்ணுவர்தன், மம்மூட்டி உட்பட பல மொழி முன்னணி ஹீரோக்களுடனும் நடிச்சிருக்கேன்; நடனமாடியிருக்கேன். ‘உங்க பாடலுக்காகவே என் படங்கள் பெரிய ஹிட்டாச்சு’ன்னு சிரஞ்சீவி உட்பட பல நடிகர்கள்

என்னைப் பாராட்டியிருக்காங்க. ஒரியா மற்றும் வங்காள மொழியில் தலா ஒரு படத்தில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியா நடிச்சேன். அந்த மாநிலங்களில் கடுகு எண்ணெயில்தான் உணவு சமைப்பாங்க. அந்தச் சுவை எனக்குப் பிடிக்காததால, அந்த மொழிகளில் தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புகள் வந்தும் மறுத்தேன். ஹாலிவுட், பிரெஞ்சு பட வாய்ப்புகள் வந்தும் மறுத்தேன். மொத்தத்தில்... சில படங்களில் ஹீரோயினாக நடிச்சது உட்பட 900-க்கும் மேற்பட்ட படங்கள்ல பங்கெடுத்தேன்.

 மகன்களுடன்...
மகன்களுடன்...
அவள் விகடன்

என் சினிமா வாய்ப்புகளை புக் பண்ணும் அம்மாதான், சம்பளத்தையும் வாங்குவாங்க. அவை எல்லாமே கவர்ச்சி வேடங்கள் என்பதால, குற்ற உணர்வில் நிறைய நாள்கள் அம்மா அழுதாங்க. அதேநேரம் இரவு பகலா ஓய்வில்லாம நடிச்சு நிறைவாகச் சம்பாதிச்சேன். என் சம்பள விஷயங்கள், சேர்த்திருக்கும் சொத்து விவரங்கள் எதையும் நான் அம்மாகிட்ட கேட்டதில்லை. அவங்க சென்னை வளசரவாக்கத்துல மூணு கிரவுண்டுல இடம் வாங்கிப்போட்டு பெரிய வீட்டைக் கட்டி முடிக்கிறப்போதான், எங்க நிலத்துக்குப் பக்கத்துல இருந்த இன்னொருத்தரின் இடத்துல வீட்டைக் கட்டியிருப்பது தெரிஞ்சுது. படிப்பறிவு இல்லாத அம்மாவுக்கும் அந்த அளவுக்குத்தான் வெளியுலக அனுபவம் இருந்துச்சு. வேறு வழியில்லாம, அந்த வீட்டை நிலத்தின் உரிமையாளருக்கே இலவசமா கொடுத்துட்டோம்.

இரண்டு முறை திருமணம்!

என்னை ஒருதலையா காதலிச்சுக்கிட்டிருந்த ஶ்ரீஹரி, அடிக்கடி போன் பண்ணுவார். கண்டபடி திட்டுவேன். ஒருநாள் அவர் காதலை வெளிப்படுத்த, என் அம்மாகிட்டப் பேசச் சொன்னேன். அடுத்தநாளே வீட்டுக்கு வந்துட்டார். வீட்டில் எல்லோருக்கும் அவரைப் பிடிச்சுப்போக, பிறகு காதலர்களானோம். 1992-ம் ஆண்டு, கோயிலுக்குப் போயிருந்தோம். சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்கும்போது, திடீர்னு எனக்குத் தாலி கட்டிட்டார். எனக்கும் குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி. கல்யாணமானதும் தாலியை உண்டியலில் தானமாகப் போடுவதாக வேண்டியிருந்தேன். அதன்படி செய்துட்டு, தாலிக்குப் பதிலாக நான் சொன்னதுபோல ஒரு கருகமணியை என் கழுத்தில் கட்டினார் கணவர். என்னுடன் பிறந்த ஆறு பேருக்கும் சிறப்பா கல்யாணம் செய்து முடித்த பிறகே, 1996-ம் ஆண்டு, மீண்டும் முறைப்படி கல்யாணம் செய்துக்கிட்டோம். நடிப்பை விட்டுட்டு, கணவர், குழந்தைகள்னு கண்ணியமான குடும்ப வாழ்க்கையை வாழவே ஆசைப்பட்டேன். அந்த அழகான வாழ்க்கையை அமைச்சுக்கொடுத்தார் கணவர்.

நான் நடிக்காவிட்டாலும், கணவரின் நடிப்புக்கு சப்போர்ட்டிவா இருந்தேன். வில்லன், குணச்சித்திர நடிகர், ஹீரோனு தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக உயர்ந்தார் கணவர். என்னுடன் பிறந்தவங்க எல்லோரும் என்மேல உயிரையே வெச் சிருக்காங்க. எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா, உடனே ஓடிவந்திடுவாங்க. 2013-ம் ஆண்டு, அவரின் மறைவுக்குப் பிறகு, இயல்புநிலைக்கு நான் திரும்ப சில ஆண்டுகள் ஆனது. அப்போதும், எப்போதுமே என்னுடன் பிறந்தவங்க எனக்குப் பக்கபலமா இருக்காங்க. எஞ்சிய என் வாழ்நாளை மகன்களுக்கு அர்ப்பணிச்சிருக்கேன். வாழ்நாள் முழுக்க நாங்க மூவரும் யாரிடமும் எதுக்காகவும் கையேந்தி நிற்கக் கூடாதுன்னு, எங்களுக்குத் தேவையான பொருளாதாரத் தேவைகளை கணவர் ஏற்படுத்தி வெச்சிருக்கார். பெரியவன் ஷஷாங்க் ஶ்ரீஹரி, இயக்குநர் மற்றும் நடிகராக முயற்சிகள் செய்திட்டிருக்கான். சின்னவன் மெஹாங்ஷ் ஶ்ரீஹரி, இளம் நடிகர். இருவரும் திறமையால் பெரிய உயரங்களை அடைய ஆசைப்படறேன். நானும் ரீ-என்ட்ரி கொடுத்து, விஜய், சூர்யாவுடன் டான்ஸ் ஆட ஆசைப்படறேன்!

- நாயகிகள் பேசுவார்கள்!

தினமும் ஐந்நூறு ரூபாய்!

நாலரை மணிக்கு எழுந்து, தி.நகர்ல இருந்து பீச் வரை சைக்கிளிங், ரன்னிங், ஜிம், நீச்சல் மற்றும் டான்ஸ் பயிற்சிகள், டயட்னு நடிக்கும் காலத்தில் என் உடலைக் கட்டுக்கோப்பா வெச்சிருந்தேன். பழங்கள், ஜூஸ் தவிர பெரிசா எதுவுமே சாப்பிட மாட்டேன். வறுமையால், முன்பு எங்களுக்கு நல்ல சாப்பாடு கொடுக்கமுடியாத ஏக்கத்துல, அப்போ அம்மா ஆசையா சமைப்பாங்க. சாப்பிட மறுத்து, அம்மாகிட்ட பல வருடங்கள் அடிவாங்கினேன்.

தினமும் அம்மாகிட்ட ஐந்நூறு ரூபாய் வாங்கிட்டுப் போய், ஷூட்டிங்ல சிறப்புக் கவனிப்புகள் கிடைக்காத வர்களான ஆரம்பக்காலத்துல எனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்த குரூப் டான்ஸர்கள் மற்றும் என் உதவியாளர்கள் சிலருக்கு பிரியாணி உட்பட பிடிச்ச உணவுப் பொருள்களை வாங்கிக்கொடுத்து மகிழ்வேன்.

மகளின் நினைவாக சமூகப் பணிகள்!

கஷ்டம்னு நாடிவரும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்றது கணவர் என் வழக்கம். என் தாலியைத் தவிர, மற்ற செல்வங்களையெல்லாம் கொடுத்து உதவிய காலங்களும் உண்டு. இளைய மகள் அக்‌ஷராவின் மரணம் எங்களை ரொம்பவே பாதிச்சது. பொண்ணு பெயர்ல ஃபவுண்டேஷன் ஆரம்பிச்ச கணவர், ஏழைக் குழந்தைகளைப் படிக்க வெச்சார். நல்ல குடிநீர் இல்லாம ஊனமாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிட்டே இருந்த ஹைதராபாத் அருகிலுள்ள மூணு கிராமங்களைத் தத்தெடுத்தார். அந்த மக்களுக்குத் தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கியதுடன், அவங்க குழந்தைகளுக்குப் பள்ளிச் சீருடை, புத்தகம், மதிய உணவு, சுகாதாரத் தேவைகளுக்கும் உதவினார்.

கணவரின் மறைவுக்குப் பிறகு, அவர் தொடங்கிய சேவைப் பணிகளை நான் செய்கிறேன். நடிக்க வந்த காலம் முதல் இப்போவரை, என் சம்பாத்தியத்தில் மூன்றில் ஒரு பகுதியை சேவைக்குன்னு செலவிடுறேன். நாங்க படிக்க வெச்ச பலரும் டாக்டர், வக்கீல், ஐ.டி வேலைனு நல்ல பொறுப்பில் இருக்காங்க. செய்ற உதவியை யாருக்கும் சொல்லக் கூடாதுன்னுதான் நினைப்பேன். இப்போ நீங்க வலியுறுத்தி கேட்டதாலதான் சொல்றேன்.

மரணம் வரை நீடித்த ஏமாற்றம்...

அப்பாவைப்போல உழைப்பால் சேர்த்த சொத்துகள் பலவற்றை நானும் இழந்தேன். பல தயாரிப்பாளர்களால் நான் ஏமாற்றப்பட்டதுபோல, என் கணவரும் நிறைய சம்பளப் பணத்தை இழந்தார். ‘இன்னிக்கு செலவுக்குப் பணம் வேணும்’னு என்னிடம் கேட்டு வாங்கிட்டுப்போவார். பிறகு, அவர் சினிமாவில் உயர்ந்ததும் செல்வங்கள் சேர்த்தோம்.

ஷூட்டிங் விஷயமா மும்பையில் தங்கியிருந்தோம். திடீர்னு கணவருக்கு உடல்நிலை சரியில்லாம போக, உடனே லீலாவதி ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். உடல்நிலை சரியாகி சகஜமா பேசினார். ஓய்வில் இருந்த வருக்கு ஏதோ ஊசி போட்டாங்க. கொஞ்ச நேரத்தில் அவர் மூக்கிலும் வாயிலும் ரத்தம் வரவே, நான் கதறினேன். என்னை வெளியே அனுப்பவே, மணிக்கணக்கான தனியா படிக்கட்டில் உட்கார்ந்து அழுதுட்டிருந்தேன். என் கணவர் இறந்துபோனதாகச் செய்திகள் வெளியாகவே, என் தங்கையும் நடிகையுமான லலிதாகுமாரியும் தம்பி அருண்மொழிவர்மனும் உடனே ஆஸ்பத்திரிக்கு வந்தாங்க.

தவறான சிகிச்சையால் என் கணவர் இறந்து போனதால், நாங்க அழுதுகொண்டிருந்ததைப் பார்த்து, அங்கு கூடியிருந்த தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் ஆஸ்பத்திரியில் இருந்த பொருள்களை அடிச்சு நொறுக்க ஆரம்பிச்சாங்க. செய்த தவற்றுக்கு என்னிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்பத்திரி நிர்வாகம், இழப்பீடாகப் பணம் கொடுப்பதாகச் சொன்னாங்க. அவங்களைக் கண்டபடி திட்டிட்டு, எந்த இழப்பீடும் வாங்காமல், சிகிச்சைக்கான பணத்தைக் கட்டிட்டு அமைதியா வந்துட்டேன்.

கணவரின் இறுதிச்சடங்கின்போது ரசிகர்கள் கூட்டத்தால் ஆந்திராவின் பல பகுதிகள் ஸ்தம்பிச்சுப் போனது. எங்க மூணாவது மகளை அடக்கம் செய்த எங்களின் நிலத்துலதான் கணவரையும் நல்லடக்கம் செய்தேன்.

படங்கள் உதவி: ரகுநாத்