மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 26: அன்று நடிகை... இன்று புராஜெக்ட் மேனேஜர்!

ஜெயஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயஸ்ரீ ( அவள் விகடன் )

`என்னுடன் நடிக்க மாட்டேன்னு அட்வான்ஸைத் திருப்பிக்கொடுத்த ஒரே நடிகை நீங்கதான்னு ரஜினி சார் கேட்டாரு...

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்கள் வெற்றிக்கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், ஜெயஸ்ரீ.

`டிரெண்டு செட்டர்’ இயக்குநர் சி.வி.ஸ்ரீதரின் அறிமுகம் ஜெயஸ்ரீ. சினிமா துறை மீது விருப்பம் இல்லாமலே, புகழ் வெளிச்சத்தை உணராமலே ஏராளமான படங்களில் நாயகியாக நடித்துப் புகழ்பெற்றவர். மூன்றரை ஆண்டுகள் மட்டுமே நடித்தாலும், 80’ஸ் நட்சத்திரப் பட்டாளத்தில் தவிர்க்க முடியாத அடையாளமானார். சினிமா புகழைத் தவிர்த்துவிட்டு, 20 ஆண்டுகளாக ஐ.டி நிறுவன ஊழியராக அமெரிக்காவில் பணியாற்றும் ஜெயஸ்ரீ, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

குடும்பப் படம்... தாத்தாவின் சினிமா கதைகள்!

பூர்வீகம் சென்னைதான். சுதந்திரம் கிடைக்கும்முன் பேசும் படங்கள் வெளியான காலத்துல புகழ்பெற்ற நடிகையாகவும் பாடகியாகவும் திகழ்ந்தாங்க, என் பாட்டி எஸ்.ஜெயலட்சுமி. அவரும், சகோதரர்கள் எஸ்.ராஜம், வீணை எஸ்.பாலச்சந்தர், அப்பா சுந்தரம் ஐயர் ஆகிய நால்வரும் 1934-ம் ஆண்டு வெளியான `சீதா கல்யாணம்’ படத்துல இணைந்து நடிச்சாங்க. ஆச்சர்யமான விஷயம்... அண்ணன் தங்கையான ராஜம் மற்றும் ஜெயலட்சுமி இருவரும் அந்தப் படத்துல ராமர்-சீதை தம்பதியாக நடிச்சாங்க. தியாகராஜ பாகவதருக்கு ஜோடியாக நடிச்சிருக்கும் பாட்டி ஜெயலட்சுமி, திருமணமான பிறகும் சினிமாவில் வேலை செய்திருக்காங்க. நான் சிறுமியா இருந்தப்போ தூர்தர்ஷன்ல ஸ்ரீதர் சார் உட்பட சில இயக்குநர்களின் படங்களைப் பார்க்க மட்டும் பெற்றோர் என்னை அனுமதிச்சாங்க.

ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ
அவள் விகடன்

பாட்டி அரவணைப்பில் வளரும் பாக்கியம் எனக்குக் கிடைச்சது. நடிகர் மற்றும் இசையமைப்பாளரான என் தாத்தா வீணை எஸ்.பாலச்சந்தர், `அந்த நாள்’, `பொம்மை’ உட்பட பல படங்களைக் கொடுத்த புகழ்பெற்ற இயக்குநரும்கூட. இந்திய சினிமாவின் பெரிய ஆளுமைகள் பலருடனும் அவர் எடுத்துகிட்ட போட்டோக்கள் வீட்டில் இருக்கும். அதன் பின்னணி சுவாரஸ்யங்கள், சினிமா அனுபவங்கள், பயணங்கள் குறித்தெல் லாம் அவர் சொல்வார். இதனால சினிமா உட்பட பல்வேறு கலைகளின் மீது எனக்குச் சின்ன வயசுலயே மதிப்பு உண்டாச்சு.

கல்யாணத் திட்டம்... ஜெயலலிதாவும் பாராட்டும்!

ஜெயலலிதா அம்மா படிச்ச சென்னை சர்ச் பார்க் ஸ்கூல்லதான் நானும் படிச்சேன். அப்போ நடிகை ஹேமமாலினி தொடங்கிய டான்ஸ் ஸ்கூல்ல நானும், நடிகர் கார்த்திக்கும் முதல் பேட்ச் மாணவர்கள். வெளிநாட்டு வேலைக்குப் போகணும்கிற ஆசைக்காகவே, ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிச்சேன். படிப்பு முடிச்சதுமே எனக்குக் கல்யாணம் செய்துவைப்பது பெற்றோரின் திட்டம். இந்த நிலையில, `தென்றலே என்னைத் தொடு’ படத்துக்கு சுமார் 40 பேரைப் பரிசீலனை செய்தும் எந்த நடிகையும் தேர்வாகலை. அந்தப் படக்குழுவினர் மூலம் என் போட்டோவைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீதர் சார், என்னை நடிக்கக் கேட்டார். `பொண்ணு அதிகம் பேச மாட்டா; சினிமாவில் நடிக்க வைக்கிறது சிரமம்’னு என் பெற்றோர் சொல்லியும் ஸ்ரீதர் சார் விடவே இல்லை.

ஒருநாள் என் வீட்டுக்கே வந்தவர், என்கிட்ட சில கேள்விகள் கேட்டார். அவரின் புகழ் தெரியாமலேயே, நானும் இயல்பா பதில் சொன்னேன். அவர் நடிக்கக் கேட்டதுக்கு மறுத்துட்டேன். என் வீட்டாரை ரொம்பவே வலியுறுத்தி, `தென்றலே என்னைத் தொடு’ படத்துல என்னை நடிக்க சம்மதிக்கவெச்சார். அந்தப் படத்துல ஸ்ரீதர் சார் சொல்லிக்கொடுத்ததுபோல நடிச்சேன். `ஜெயலலிதாவை `வெண்ணிற ஆடை’ படத்துல அறிமுகப்படுத்தினேன். அப்போ அவரும் நான் சொல்லிக்கொடுக்கிறதை சீக்கிரமே உள்வாங்கிட்டு சரியா நடிப்பார். அதுபோலவே நீயும் நல்லா நடிக்கிறே’ன்னு முதல் நாளிலேயே என்னைப் பாராட்டினார். அந்தப் படத்துக்காக கார் டிரைவிங், நீச்சல் உட்பட பல விஷயங்களைக் கத்துகிட்டேன். அதற்கான பலன்களையெல்லாம் பிற்காலத்துலதான் என்னால உணர முடிஞ்சது.

ரசிகைகள்சூழ் மோகன்... சுஜாதாவின் பாசம்!

அந்தப் படத்துல எனக்கு ஜோடி அப்போ பிரபல ஹீரோவா இருந்த மோகன் சார்தான். அவரைப் பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நிறைய ரசிகைகள் வருவாங்க. அதையெல்லாம் பார்த்து ஆச்சர்யப்படுவேன். என்மேல் ஸ்ரீதர் சாருக்கு கோபம் வந்தா, `என்னம்மா...’ன்னுதான் சொல்வார். மத்தபடி அவர் திட்டும்படி நான் நடந்துகலை.

அந்தப் படத்தில் நடிச்சு முடிக்கும்போது, என் படிப்பும் முடிஞ்சது. இத்துடன் சினிமா நடிப்பு போதும்னு பெற்றோர் முடிவெடுத்தாங்க. `உன் முதல் படம் ஹிட்டாகி, நிறைய பட வாய்ப்புகள் உனக்கு வரும்னு எனக்கு நம்பிக்கையிருக்கு.

 நடிகை ராதாவுடன்  `மனிதனின் மறுபக்கம்’ படத்தில்...
நடிகை ராதாவுடன் `மனிதனின் மறுபக்கம்’ படத்தில்...
அவள் விகடன்

அதனால, சில வருஷமாவது நடி. ஹீரோயின் வாய்ப்பு எல்லோருக்கும் அமையாது’ன்னு ஸ்ரீதர் சார் சொன்னார்.

`தென்றலே என்னைத் தொடு’ படத்தின் வெற்றியால, அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் வந்துச்சு. மேற்கொண்டு சில காலம் நடிக்க லாம்னு முடிவெடுத்து, `இரண்டு மனம்’, `ஆனந்தக்கண்ணீர்’, `விடிஞ்சா கல்யாணம்’ உள்ளிட்ட பல படங்கள்ல நடிச்சேன். மிகப் பெரிய ஹிட்டான `விடிஞ்சா கல்யாணம்' படத்தில் என் தாயாக நடிச்ச சுஜாதா அம்மா, தன் கணவரிடம் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி, இரவு நேர படப்பிடிப்பில் கலந்துக்குவார். அமைதியான குணம்கொண்ட அவர், என்னிடம் மனம்விட்டுப் பேசுவார். வீட்டுல சமைச்சுக்கொண்டுவந்து எனக்குப் பாசமா பரிமாறுவார்.

சிறைக் கைதிகளுடன் சந்திப்பு... ரஜினி, கமல் படங்கள்!

`மனிதனின் மறுபக்கம்’ படத்துல சிவகுமார் சார்கூட நடிச்சேன். அந்தப் படத்துக்காக பெங்களூர்ல நிஜ சிறைச்சாலையில ஷூட்டிங் எடுத்ததும், அங்கே கைதிகளைச் சந்திச்சதும் மறக்க முடியாத அனுபவம். மீண்டும் ஸ்ரீதர் சார் இயக்கத்துல `யாரோ எழுதிய கவிதை’ படத்துல நடிச்சேன். `பிரேமாயணம்’ படத்தின் மூலம் தெலுங்கிலும் என்னை ஹீரோயினா அறிமுகப் படுத்தினார் ஸ்ரீதர் சார்.

`புன்னகை மன்னன்’ படத்துல ரேகா ரோல்ல நான் கமிட்டானேன். ஆனா, அந்த முத்தக்காட்சியில நடிக்க விருப்பமில்லாம, அந்தப் படத்திலிருந்து விலகிட்டேன். `உதயகீதம்’ படத்தில் ரேவதி ரோல்ல நடிக்கும் வாய்ப்பு வந்தும் என்னால நடிக்க முடியலை. எனக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிருந்த நேரத்துல தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் சார், `குரு சிஷ்யன்’ படத்துல ரஜினி சாருக்கு ஜோடியா என்னை கமிட் பண்ணி என் அம்மாகிட்ட அட்வான்ஸ் கொடுத்துட்டார். அதன்பிறகு என் கல்யாண வேலைகள் தொடங்கிடுச்சு. ஒருநாள் முக்தா சாரை சந்திச்சு, `ஒரு குட் நியூஸ் மற்றும் பேட் நியூஸ் சொல்றோம்’னு சொன்னோம். எனக்குக் கல்யாணம் முடிவானதைக் சொன்னதும் சந்தோஷப்பட்டவர், `உங்க படத்தில் நடிக்க வாய்ப்பில்லை’னு சொன்னதும் அதிர்ச்சியாகிட்டார். பின்னர் வாங்கிய அட்வான்ஸை அவரிடம் திருப்பிக்கொடுத்துட்டோம்.

ரஜினியின் கிண்டல்... மீண்டும் படிப்பு!

கல்யாணத்துக்குப் பிறகு வெளிநிகழ்ச்சிகளில் ரஜினி சாரை சந்திக்கும்போதெல்லாம், `என்னுடன் நடிக்க மாட்டேன்னு அட்வான்ஸைத் திருப்பிக்கொடுத்த ஒரே நடிகை நீங்கதான்’னு கிண்டல் பண்ணிட்டே இருப்பார். அவர்கூட அந்த ஒரு படத்துல மட்டும் நடிச்சிருக்கலாம்னு பிற்காலத்துல நினைச்சதுண்டு. குடும்ப வாழ்க்கையில செட்டில் ஆகிறது மட்டும்தான் அப்போ எனக்கும் குடும்பத்தினருக்கும் ஆசையா இருந்துச்சு. ஆனா, நிறைய பட வாய்ப்புகளால், ஒரே நாளில் மூணு ஷிஃப்ட் நடிச்சேன். `காலமெல்லாம் உன் மடியில்', `தாலி தானம்’, `வரம்’, `திருமதி ஒரு வெகுமதி’ உட்பட பல வெற்றிப் படங்கள் எனக்கு அமைஞ்சது.

மூன்றரை வருஷத்துல 30 படங்கள்ல மட்டுமே நடிச்சேன். இந்த நிலையில 1988-ம் ஆண்டு, கல்யாணமானதும் உடனே அமெரிக்காவில் குடியேறிட்டேன். கணவர் சந்திரசேகர், வங்கி அதிகாரி. கணவர் வேலைக்குச் சென்ற பிறகு நான் தனிமையில் இருந்தப்போ வெறுமையை உணர்ந்தேன். சின்ன பசங்களுடன் நானும் மாணவியா கூச்சம் பார்க்காம, கணினி பயிற்சியில் சேர்ந்தேன். பிறகு, படிப்படியா எம்.எஸ் டிகிரி வரை முடிச்சுட்டு, ஐ.டி வேலையில் சேர்ந்தேன். இப்போ புராஜெக்ட் மேனேஜரா இருக்கேன். திருமணத்துக்குப் பிறகு ஸ்ரீதர் சாரை சந்திச்சேன். மறுபடியும் நடிக்கலாம்கிற என் எண்ணத்தை தெரிஞ்சுக்கிட்டவர், `இப்போ குடும்ப வாழ்க்கையில மட்டும் கவனம் செலுத்து. சில காலம் கழிச்சு, உன் வயசுக்கு ஏத்த பட வாய்ப்புகள் நிச்சயம் வரும். அப்போ மீண்டும் நடி’ன்னு சொன்னார். அவர் சொன்னதுபோலவே நடந்துச்சு.

ரீ-என்ட்ரி நடிப்பு... ஐ.டி ஊழியர்!

வருஷத்துக்கு ரெண்டு முறைதான் அமெரிக்காவிலிருந்து சென்னை வருவேன். எனக்கான அடையாளத்தைக் கொடுத்த சினிமா துறையிலிருந்து நான் முழுமையா விலகிடக் கூடாதுன்னுதான், சென்னை வரும்போதெல்லாம் தேடிவரும் வாய்ப்புகளில் நடிக்கிறேன். அப்படித்தான், `விவசாயி மகன்’, `பிஸ்தா’ உள்ளிட்ட சில படங்கள்ல நடிச்சேன்.

பெரிய பையன் அர்ஜுன், சின்ன பையன் கிருஷ்ணா - இருவரும் காலேஜ் படிக்கிறாங்க. சமையல்தான் என் பொழுதுபோக்கு. மொதந்த்துல மனநிறைவான வாழ்க்கை அமைஞ்சிருக்கு!

- நாயகிகள் பேசுவார்கள்!

இப்போதும் தயார்தான்!

ன் டி.வி-யில் ஒளிபரப்பான `திருவாளர் திருமதி’ நிகழ்ச்சி பெரிய ஹிட்டாச்சு.

அந்த நிகழ்ச்சியை தயாரிச்ச நடிகை ராதிகா, கல்யாண வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டா இருக்கிற ஒரு நடிகையைத் தொகுப்பாளராக்க முடிவெடுத்து என்னை கமிட் பண்ணினாங்க. அமெரிக்காவிலிருந்து நான் அடிக்கடி சென்னை வர முடியாதுன்னு, 13 எபிசோடுகளை ஒரே நாள்ல படமாக்கினாங்க. அதேபோல 26 எபிசோடுகளை 10 நாளில் படமாக்கியது, கின்னஸ் சாதனைக்கு இணையானதுன்னு பேசிக்கிட்டாங்க. நீண்ட காலத்துக்குப் பிறகு அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களின் அன்பைப் பெற்றதை பெருமையா நினைக்கிறேன். இதுபோன்ற டி.வி ரியாலிட்டி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இப்போதும் தயாராக இருக்கேன்.

என் வீட்டில் சினிமா தோழிகள்!

ன் ஸ்கூல் மற்றும் சினிமா தோழிகளுடன் தொடர்ந்து நட்பில் இருக்கேன். கடல்கடந்து கலிஃபோர்னியா மாகாணத்துல வசிச்சாலும், என் மனம் எப்போதும் தமிழ்நாட்டில்தான் இருக்கும். அமெரிக்கா வரும் சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் என் வீட்டுக்குத் தவறாமல் வருவாங்க. அதில், ராதிகா, அம்பிகா, சுமலதா, நதியா, சுஹாசினி ஆகியோர் முக்கியமான தோழிகள். அதேபோல நான் சென்னை வரும்போதெல்லாம் எங்க 80’ஸ் குரூப் நட்சத்திரங்கள் பலரையும் சந்திச்சுடுவேன். எங்களுடைய 80’ஸ் நட்சத்திரங்களின் சந்திப்பிலும் கலந்துக்குவேன். கடந்த நவம்பர்ல நடந்த மீட்டிங்ல கலந்துக்கறதுக்காகவே சென்னை வந்தேன்.